வானுயர்ந்த கட்டிடக்காடுகளைக் கொண்டிருந்த அந்தப் பெருநகரத்திற்கு வாழ்வின் முதன்முதலாக சென்றிருந்த வேளை அது. கிழக்கு லண்டனின் கிழக்கு அப்போது கதிரவனால் ஒளியூற்றப்பட்டிருந்தது.
என்னோடு தோழமை கொண்டிருந்த திருகோணமலையின் தோழி ஒருத்தி அவள் தங்கிருந்த பார்க்கிங் நகரத்திற்கு அழைத்திருந்தாள். பனிபோர்த்திக் கிடந்த குளிர்காலத்தின் விடியற்பொழுதில் கழுத்துவரை மூடிக்கொண்ட ஆடையுடுத்தி ஆயத்தமாகிக் கொண்டு அங்கு போயிருந்தேன்.
கரிசல்மண்ணின் கருவேலங்காட்டு சாமானியன், கதிரவன் மறையாதப் பேரரசைக் கட்டியாண்ட ஆங்கிலதேசத்தின் தெருக்களில் பயணமாகிக் கொண்டிருந்தபோது வியப்புகளுக்கு அப்பால் மனித உழைப்பின் பயன்பாடே கண்ணுக்கு புலனாகியது.
அவள் நிற்கச் சொல்லிருந்த அந்த வெதுப்பக கடையினோரம் காத்திருந்த போது புறாவொன்று நகர்ந்து வந்தாற்போல் ஒரு மகிழுந்து என்முன் வந்து நின்றது. உள்ளிருந்து குழந்தைமணம் மாறாத முகத்தோடு சேலையுடுத்திய அழகுப்பதுமை ஒருத்தி இறங்கினாள். அதிக ஒப்பனையேற்றாத அழகுடன் அளவான உதட்டுச்சாயம் பூசிய அவளது முகம் எவரையும் சற்று திரும்பிடத் தூண்டுமென்பதில் ஐயமேதுமில்லை.
உற்றுப்பார்த்த போது அவதானித்துவிட்டேன் அவள் தான் அவளே தான்!
தேனூறிய குரலில் ஈழத்து மொழியில் "உதய் இஞ்ச வாங்க" என்றழைத்த போது செவிப்புலனைவிட விழிப்புலனே அந்தழைப்பைக் கேட்டுக்கொண்டிருந்தது.
என் வியப்பைக் கண்டு அவள் உதிர்த்த அந்தப் புன்னகையை அன்றுவரை அந்த ஆங்கிலதேசத்து பூக்கள் கூட புரிந்திருக்காது.
அந்தத் தேன்குரலழைப்பின் திசைநோக்கி பெருமகிழ்வோடு நகர்ந்தேன். அருகில் வந்ததும் காத்திருந்தமைக்கு நன்றி நவின்றது அந்தப் பேசும் பூவை. இருக்கட்டும் என வெட்கங்கலந்து மறுத்துக்கொண்டே நலமா இருக்கீங்களா? என வினவினேன்.
நலம் நீங்க எப்படி?
நான் எப்பவும் நலமாவே இருப்பேன்
முகம் முழுக்க விருந்தோம்பலின் மலர்ச்சியும் அந்த மெல்லிய இதழ்விரித்து அடிக்கடி புன்னகையும் என்னைப் பேசவிடாமல் தடுத்தன.
மயிலமர்ந்து கொள்ளும் மாண்போடிருந்த மகிழுந்தின் கதவைத் திறந்து கொடுத்துவிட்டு ஓட்டுநர் இருக்கையிலமர்ந்தாள் அரம்பையர் கூட்டத்தின் அடுத்த பிறப்பெடுத்தவள்!
அங்கிருந்து நாற்பது நிமிட பயணத்து தொலைவிலிருந்த தேம்சு ஆற்றை நோக்கி என்னை அழைத்துப்போனாள். அந்த ஐக்கிய அரசாட்சியகத்தின் (United Kingdom) மதிப்பமைந்த மக்களாட்சியைப் படித்திருந்தது நினைவின் பரணிலிருந்து நிகழ்வுக்கு வந்தது.
சியாபி என்றோர் அயர்லாந்து கட்சியின் தமிழகத்து பரிமாணம் தான் நாம்தமிழர் கட்சி என்பதை அந்த நேரத்தில் அவளுக்கு பாடமெடுத்துக்கொண்டிருந்தேன்.
அறிவைப் பெருக்கிக்கொள்ள ஆயிரம் வினாக்களை விடாமல் வினவுமளவுக்கு அவள் ஆவல் கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். அதேபோலவே புன்னகை மாறாத முகத்தோடு என்னைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென பேச்சை நிறுத்தச் சொல்லி இந்த நிமிடத்து உணர்வைச் சொல்லுங்கள் என்றாள்.
நான்கே நொடிகளைக் கடத்திவிட்டு கதைத்தேன்
"மொழிபெயர்த்தவனுக்கு நன்றி
உண்மை தான்!
என்னை
என் நிமிடங்களை
என் இதயத்தை
என் ஐம்புலன்களை
இவ்வளவு மகிழ்வித்து
ஏந்திச் செல்வதால்
இது மகிழுந்து தான்"
என்றேன்.
வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தபோது கீழே விழுந்த குழந்தைபோல முகத்தை வைத்துக்கொண்டிருந்த என்னிடம் என்னாச்சு? எனக் கேட்டாள்.
நான் என்ன நகைச்சுவையா சொன்னேன் இப்படிச் சிரிக்கிறீங்க? என்று கோபித்துக்கொள்வதுபோல் கேட்டதும்
மேலும் சிரித்துக்கொண்டே
"ஏன் எண்டு தெரியயில்ல உதய்! நீங்கள் கதைக்கேக்க நான் சிரிச்சுகொண்டே ரசிக்கிறன். பிழையா நினைக்காதீங்கோ. நான் உங்கட ரசிகை"
என்று ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த, நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட மொழியை அவள் குரலொலியால் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.
எனக்கு ரசிகையா? ஏன் இப்படி? எனக் கேட்டதுக்கு
மீண்டும் அதிராததொரு அழகியல் நகைப்பெய்தி ஆம் என்றசைந்து விளம்பியதவள் விழிகள்.
அக்குவசு குயூமர், விட்ரியசு குயூமர் என்ற அறிவியல் புத்தகத்தின் பக்கங்கள் கற்றுத் தந்ததைத் தாண்டி விழிகள் என்பவை பார்த்தல் என்ற தொழிலுக்கானவை மட்டுமென்றே எண்ணியிருந்ததைச் சற்று திருத்திக்கொள்ளும்படி செய்தது கயலொத்த அந்தக் கண்கள்!
மனத்துள் சொல்லிக்கொண்டேன்
ஓ பெண்ணே! கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்சொற்கள் எண்ணப் பயனும் இல என்றொருவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயம்பியதன் தெளிவுரையை இவ்வளவு தெளிவாக கற்பிக்க உன்னால் மட்டுமே முடிந்ததெப்படி?
நீண்ட நெடுங்காலமாய் நிறைந்து கிடக்கின்ற இலக்கியப் பெருங்கடலெங்கும் தேடினாலும் இத்தகு ஈர்ப்புள்ள கண்களை எந்தப் பாட்டுடைத்தலைவியிடம் எந்தப் புலவன் புலம்பிய உவமைகளிடமும் கண்டெடுக்க முடியாது...
இளவேனிற்காலத்தின் இடைக்காலப் பருவத்தில் மலர்கின்ற அல்லிபோல, மேற்குவானம் தன்மேனியெங்கும் மருதாணிப் போட்டுக்கொண்டாற்போல் சிவந்துகிடக்கும் செம்மாலைப்பொழுதில் உச்சிவானப்பரவலில் முளைத்துக்கிடக்கும் விண்மீன் போல, நுண்கலை நுணுக்கத்தின் பேரறிவில் தீட்டிய ஓவியம்போல அவளது கண்கள் ஆகச்சிறந்த அழகோடிருந்ததை அடிக்கடி பார்த்து அவளறியாதபடி பரவசப்பட்டுக்கொண்டேன்.
பாதையையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டும் இதழ்களைப் பிரிக்காமல் சிரித்துக்கொண்டும் நேர்த்தியாக மகிழுந்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.
அட பெண்ணே! அடிக்கடி நோக்காதே என்னை. நொந்து போகிறேன்... குளிரொளி வீசுகின்ற பனிக்கட்டி கண்கள் தான் எனினும் அது என் விழிகளுக்குள் நுழைந்து முதுகுத்தண்டின் வழி ஏதோ ஏதேதோ செய்வதை என்னால் நெடுநேரம் மறைத்துக்கொள்ள இயலாதென்பதை எப்படி நானுனக்குச் சொல்வேன்?
என் மனத்திற்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணத்தின் நிழலை அவளெப்படித்தான் கண்டறிந்தாளோ அறிந்திலேன். ஆனால் கேட்டுவிட்டாள்.
"என்ன உதய் ஏதோபோல் இருக்கிறனீங்கள்? பாட்டு போடுறன் கேட்குறீங்களா?"
"அதெல்லாம் வேணா. நீங்க ஏதாவது பேசுங்க. எனக்கு ரெண்டும் ஒன்னுதான்" என்றேன்
மீண்டும் அந்த அழகுமயில் அகவலாய்ச் சிரித்தாள்!
என் காதுக்குள் காந்தார இசை கேட்டாற்போல் சொக்கிப்போனேன்.
"உதய்! இலண்டனுக்கும் உங்கட ஊர்க்குமான வேறுபாடு எப்படிருக்கிறது?" எனக் கேட்டாள்
"உங்கள் அழகுக்கும் என் அழகுக்குமான வேறுபாட்டளவிலிருக்கிறது" என்றேன்.
"அப்படியெண்டால் உங்கட ஊர் ரெம்ப வடிவா இருக்குமோ?" என வினவினாள்.
சிரித்துக்கொண்டே ஆம் ஆம் எனத் தலையாட்டினேன்.
"சொல்லுங்கோ உதய்"
" இலண்டன்! தமிழ்ப்புத்தாண்டிற்கு அணியமாகும் வீடுகளைப்போல எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது. எங்கள் ஊரெங்கும் புழுதியும் மழைபெய்தால் சகதியுமாக இருக்கும். நீண்ட நாள்களுக்குப்பிறகு பொழியும் முதல்மழையில் வெளிப்படும் மண்வாசத்தோடு எங்கள் ஆட்கள் தாய்மண்ணோடு கால்களால் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். அதனால் தான் கொஞ்சமேனும் மண்பற்று மிச்சமிருக்கிறது.
இங்கே சிற்றூர்கள் நகரத்தின் வசதிகளோடு வாழ்கின்றன. மனித உழைப்பும் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கே சிற்றூர்களோ மாற்றாந்தாய் பிள்ளைகளைப்போல அரசின் அக்கறையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு கிடக்கின்றன. எங்கள் ஆட்கள் உயர்ந்த உழைப்பாளிகளாயினும் அவர்களின் உழைப்போடு வாழ்க்கையும் களவாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இங்கே எல்லோர்க்கும் ஒரு மகிழுந்து இருக்கிறது. அங்கே எங்கள் வாழ்வியலின் மகிழுந்தாயிருந்த மாட்டுவண்டிகள்கூட கடந்த இருபதாண்டுகளில் காணாமற்போயின.
இருந்தாலும் இங்கிருக்கும் வாழ்வைவிட அங்கிருக்கும் வாழ்வு தான் உயிர்த்தன்மையோடு இருப்பதாக உணர்கிறேன். அந்தழகிய வாழ்வை உலகின் எந்த மூலையிலும் துய்ப்பதரிது" என்றேன்
"அப்படியா? அதைச் சொல்லுங்கோ " எனக் கேட்டாள்
"காட்டைக் கழனியாக்கி கல்லுக்குள் நீர் கொணர்ந்து ஏறு கொண்டு ஏர் பூட்டி உழவாண்மை செய்கின்ற மண் அது! கலையும் மொழியும் வாழ்வாடோடு கலந்துபோன இலக்கியங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பரண் நிறைத்த மண் அது! வேளாண்மை உருவான பின்பே உலக நாகரிகங்கள் தோன்றியதென்றதற்கு முன்பே மலையும் மலைசார்ந்த குறிஞ்சி வாழ்வையும் காடும் காடு சார்ந்த முல்லை வாழ்வையும் வேலோடும் வாளோடும் வேட்டையாடி வாழ்ந்த மண் அது! ஆப்பிரிக்க காடுகளிலும் ஐரோப்பிய மலைகளிலும் மனிதர்கள் வேட்டையாடிக்கொண்டிருந்த போது கடற்கடந்து போய் போரிட்டும் கல்லணை கட்டியும் நாகரிகத்தைத் தோன்றுவித்த தொட்டில் மண் அது!
செலவுக்குச் சில்லரைகள் தரப்படாத வீட்டுக்குழந்தைகள் தங்கள் பள்ளிப் பருவத்தில் காடு கழனி திரிந்து நொறுக்குத்தீனிக்கு உணவு வேட்டை புரிய எங்கள் கண்மாய்க் கரைகளில் நிறைந்து கிடக்கும் இலந்தம்பழங்களின் சுவையை இந்த ஊரின் அங்காடிகள் விற்கும் செம்புற்றுப்பழம்(Strawberry) தருவதில்லை.
முறைப்பெண், முறைமாமன் என்ற பருவத்து நொதிமாற்றங்களை ஊக்குவிக்கும் பார்வை பரிமாற்றங்கள் அந்த மண்ணில்தான் காவியங்களாக காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
தாய்மொழிக்கல்வியின் முதலேற்பாடான தாலாட்டு பாடலைக் கொண்டிருக்கும் தேசம் அது! மார்பகப் புற்றுநோய்கள் மலிந்துகிடக்கும் ஐரோப்பிய கண்டத்திற்கு அந்த மண்ணின் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதை மருத்துவச் செய்தியாக சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்!
உலகத்தின் மிக நீளமான உடைக்கலைச்சாரத்தைக் கொண்ட சேலைகள் அந்த மண்ணில் தான் இருக்கின்றன. உலகத்தின் அதிகப்படியான தாவரப்பயிர்கள் வளரக்கூடிய வளமான மண்பரப்பைக் கொண்ட தக்காணபீடபூமியின் மடி தான் தமிழகம்! உலகமொழிகளில் அரிசியைக்குறிக்கும் சொற்களுக்கெல்லாம் வேர்ச்சொல்லோடு அரிசியையும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள்! ஆனால் இன்று இலவச அரிசிக்காக இரவுபகலென பிச்சையெடுக்கும் நிலையில் காத்திருக்கிறது. இதை மாற்றுகின்ற காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியத்துணைக்கண்டத்திலேயே படித்த இளைஞர்கள் அதிகமாக சேர்கின்ற கட்சியாகவும் தமிழர்கள் பரவி வாழ்கின்ற உலகநாடுகளிலெல்லாம் கிளைகளைக் கொண்டு ஒருங்கிணைக்கும் கட்சியாகவும் நாம் ஒரு கட்சியைக் கட்டியமைக்கிறோம். ஒருநாள் அந்த மண்ணின் ஆட்சியதிகாரம் எங்கள் கையில் கிட்டும். அன்றைக்கு இந்த ஊரின் சிற்றூர்களைவிட எங்கள் சிற்றூர்கள் வசதியோடு வாழும்."
நான் பேசப் பேச கேலிச்சித்திரத் திரைப்படத்தைக் கவனமாக பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைபோல என்னையே கவனித்துக்கொண்டிருந்தாள் அந்தச் சேலை கட்டிய மழலை.
சாலையின் வழிகாட்டி விளக்கில் சிவப்பு தெரிந்ததும் மகிழுந்தை நிறுத்திக் காத்திருந்தாள். அந்தச் சாலையின் குறுக்கே யாரும் கடக்காதபோதும் பச்சை விளக்கெரியும்வரை அவள் மட்டுமல்ல, எவருமே தங்களின் ஊர்திகளை இயக்கவில்லை.
"இதோ! இந்த ஒழுங்கு எங்கள் ஊரில் காண்பதரிது. இதுவும் உருவாகும் ஒருநாள்" என்றேன்.
"உங்கட அண்ணை மீது நம்பிக்கை இருக்கு. எங்கட அத்தானின்ர , நண்பர்கள் அந்தக் கட்சியில் இருக்குவினம். கெதியா மாற்றத்த கொண்டுவருவனீங்கள்" எனப் பதில் சொன்னாள்.
"உறுதியாக. சரி தேம்சு ஆற்றங்கரை போய்ச்சேர இன்னும் எவ்ளோ நேரமாகும்?" எனக் கேட்க
"பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்" என்றாள்.
பத்துநிமிட இடைவெளியில் இருக்கையில் சாய்ந்தவாறு அவளைப்பற்றி நானறிந்ததையெல்லாம் மனத்திற்குள் நினைவால் மீட்டுக்கொண்டிருந்தேன்.
கடலலைகள் கொஞ்சும் துறைமுகம் கொண்ட தமிழீழத்தலைநகர் திருகோணமலையின் தங்கமகள் இவள்! வீட்டுக்கொரு புலிப்பிள்ளை கேட்ட புலித்தலைவன் படைக்கு தாயக விடுதலைப்போரில் மாவீரனாக தன்பிள்ளை ஒன்றைத் தந்த குடும்பத்தின் குழந்தை இவள்!
இயற்கைப் பெருங்காடு ஈன்று புறந்தந்த மனிதப்பேரினத்தில் இடக்கை பழக்கமுள்ளவர்கள் பத்து விழுக்காடு. அந்தப் பத்துவிழுக்காட்டில் இரு கை பழக்கமுள்ளவர்கள் ஒரு விழுக்காடு. அவர்களில் ஒருத்தி இவள்! வியப்பேற்றும் விந்தைகளின் விழுதுகளைப் பிடித்தாடிக்கொள்ளுமளவிற்கு வியப்பிற்கினிய பொக்கிசம் இவள்!
இயற்கை அரிதினும் அரிதானவற்றை ஆங்காங்கே விட்டுச்செல்லுமெனில் அந்த அரிதானவற்றிற்கு உரித்தானவள் இவள்! எதிர்மறை குருதிவகையொடு பிறந்திருக்கும் ஆறு விழுக்காட்டு மனிதர்களில் இவளும் ஒருத்தி! இதுகாறும் நான் பேசிப்பழகிய பெண்கள் கூட்டத்தில் இடக்கை பழக்கத்தோடு பிறந்து இரு கை பழக்கம் பழகி எதிர்மறைக் குருதிவகை உள்ள ஒரே ஒருத்தி இவளென எண்ண எண்ண எனக்குள் உயர்ந்தமர்ந்து பொக்கிசமாக தெரிந்தாள்!
அன்பும் அறிவும் அழகும் ஓரிடத்தில் இருப்பதில்லை என்ற இயல்பினை இவள் மட்டுமெப்படி மாற்றியிருக்கிறாள் என்பதை எளிதாக கடந்துபோக இயலவில்லை.
தேம்சு ஆற்றங்கரையை நெருங்கிக் கொண்டிருந்தோம்.
தேம்சு ஆற்றங்கரையின் வின்ட்சர் நகரத்திற்குள் நுழைந்தபோது எங்களை
வில்லியம் அரண்மனை விழிகளில் வியப்பேற்றி வரவேற்றது. மகிழுந்தை ஓரமாக
நிறுத்துவிட்டு என்னோடு வந்த எழிலழகி புன்னைகையோடு பெருமூச்சுவிட்டாள்!
இஃதென்ன இசை? செவிகளுக்குள் கவிபாடுதே! காற்றுக்கு வியர்க்கின்றதென்றா
உன் மூச்சுக்காற்றால் இப்படி விசிறிவிடுகிறாய்? பனிக்காலத்தின்
குளிர்காற்றை உன் வெப்பத்தால் விம்மிடச்செய்கிறாயே!
ஏ பேரழகே! நேற்று உன்னோடுதான் உளறிக்கொண்டிருந்தேனா? எவ்வளவு வாஞ்சை,
எவ்வளவு கொஞ்சல் அவ்வளவையும் அள்ளித்தந்தவள் நீ தானோ?
நேற்றப்படி நிகழ்ந்திருக்குமென்பதை நானுணர்வதற்கு காலதாமதமானது.
முன்னிரவின் பிற்பாதிப்பொழிதில் மெல்லிய சொற்களால் மேவிய நிமிடங்களில்
பரிமாறப்பட்ட பேரன்பின் விளக்கத்தை என் விரல்கள்கூட அறிந்திருக்க
வாய்ப்பில்லை. போடா என்ற சொல்லுக்கு வேறுபொருளேதுமுளதொவென அகராதி புரட்டி
அருஞ்சொற்பொருள் தேடினேன். அடிக்கடி நீ அனுப்பிய அந்தச்
சொல்லுக்குப்பின்னால் ஒளிந்து கொண்டிருக்கின்றன நானனுப்பிய சீண்டல்கள்
நிறைந்த கொஞ்சுமொழிச்சொற்கள்.
வட்டமிடும் வானத்து கழுகு தூரத்துநிலத்தில் ஊர்ந்திடும் இரையை
உற்றுநோக்குவதைப் போலல்லவா இமையசைக்காமல் உன்னைப் பார்க்க வைக்கிறாய்!
"பார்த்தது போதும் இறங்குங்கோ" என்றாள்.
கண்ணாடிவிட்டு பிம்பம் பிரிவதைப்போல அவள் அத்துணை மென்மையாய் வெளியேறினாள்.
மகிழுந்தின் முன்நின்று எனைப்பார்த்து கையசைத்து "உதய் இஞ்ச வாங்கோ"
என்றழைக்கையில் எனக்கென்னவோ "கொஞ்ச வாங்கோ" என்றேதான் எண்ணத்தோன்றியது.
கதிரவன் மறையாப் பேரரசைக் கட்டியாண்ட தேசத்தின் வரலாற்றுவேர்களுக்குள்
நுழைந்து நோக்கினால் சோழப்பேரரசைக் காட்டிலும் குறைவென்றாலும் இரண்டாம்
பெரும்பேரரசாக இறுமாப்போடிருக்கிறது வின்ட்சர் நகரத்தின் அரண்மனை!
முதன்முறையாக அருகில் ஓர் அழகுப்பேரரசியோடு அரண்மனை நுழையும் சூழலுக்கு
அந்தப் பொழுதின் கணங்கள் ஆனந்தயாழை மீட்டி எங்களை இயக்குவதாக
உணர்ந்துகொண்டே அந்த அரண்மனையை நோக்கி நடந்தோம்.
இடப்பக்கம் என் இனியவள் நடக்க அரண்மனை நோக்கி போய்க்கொண்டிருந்தோம்.
அரண்மனையின் அழகைவிட நிமிர்ந்து நின்ற மானுட உழைப்பின்
பிரம்மாண்டத்தைதான் நான் உணர முடிந்தது. இன்னும் இந்தக் கட்டிடம் கீறல்
விழாமல் இருப்பதற்குக் காரணம் விழுந்து பரவிய பலரின்
வியர்வைப்பசையாகத்தான் இருக்கக் கூடும்.
"என்ன உதய்? ஏளனமாக பாக்குறிங்கள்?"
"நான்கே ஆண்டுகளில் வானுயர்ந்தபடி கட்டிய கற்சிலைக்கோயிலைத் தஞ்சையில்
கண்ட கண்களுக்கு உலகின் எந்தக் கட்டிடமும் வியப்பைத் தருவதில்லை."
"ஓமோம் நாம் அங்கை போனோம் அல்லோ? தமிழனெண்டால் உழைப்பு மட்டுமில்ல
அறிவும்தான் எண்டு நிரூபிச்சிருப்பாங்கள்!"
அரண்மனையினுள் நுழைந்தபோது இணையிணையாக இளங்காதலர்கள் நிறைந்திருந்தனர்.
அந்தக் கொஞ்சும் புறாக்களின் கொஞ்சல்களினால் அரண்மனை ஆனந்தக்கோலமாக
தெரிந்தது. காதலைப் போற்றுகின்ற, காதலைக் கொண்டாடுகின்ற சமூகம்
அன்பிற்சிறந்த சமூகமாக தம்மை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளும்.
ஓ காதலர்களே! கர்வத்தோடு காதலியுங்கள்! இந்தச் சமூகத்தைப்
புதுப்பித்துக்கொள்கிற ஆற்றல் உங்கள் பேரன்பிற்கே உண்டு.
மரங்களின் கிளைகளைவிட்டு இலைகள் கீழே விழுவதைப்போல, மாலைநேரத்துப்
பறவைகள் கூடுதிரும்பும் நிகழ்வைப் போல அங்கே காதலிணைகள்
கட்டியணைத்துக்கொள்வதை இயல்பாக கண்டும் காணாமல் நகர்ந்து செல்கிற நாகரிக
மனிதர்கள் அந்தக் காதல் பறவைகளின் விளையாட்டைக் கண்டுகொள்ளவில்லை.
நானும் இயல்பாய்க் கடந்துபோக எண்ணிப் பார்வையைத் திருப்பியபோது என்னைப்
பார்த்துக்கொண்டிருந்தவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்
"என்ன உதய்? இஞ்ச வந்த நோக்கம் பிசகிட்டதோ?"
கொஞ்சம் அப்பிடித்தான் எண்டு மறுமொழி சொன்னனான்.
வாசற்பக்கம் நகர்ந்து வந்தபோது தேம்சு ஆற்றின் தென்றல் காற்று தேகம்
தொட்டதுபோல் உணர்ந்தோம்.
அவள்:ஏ கள்வரே! உங்கள் கை பற்றிக்கொள்ளட்டுமா?
நான்: கை பற்றுதல்; கைப்பற்றுதல்; மெய் பற்றுதல் யாவும் அன்பின்
செயல்கள்! அன்பு செய விரும்பு! அன்பு செய அனுமதி வேண்டுமோ?
நெருங்கி வந்து தன் பனிமலர் விரலால் என் உள்ளங்கை பற்றிக்கொண்டாள்.
ஓ குறும்புப்பெண்ணே! குளிர்தேசத்தில் இதென்ன குழப்படி? உள்ளங்கை
இரேகைகளுக்கு உணர்வூட்டும் சேட்டை சரியோ? தயவுசெய்து என்னைத்
தழுவிவிடாதே! என் தாகம் பெருத்துவிடும். உள்ளங்கை தொட்டு உயிருக்குச்
சொடுக்கெடுக்கத் தெரிந்தவளே! என் முதுகெலும்பின் முடிச்சுகளில் உருவாகிற
மின்னியல் அதிர்வுகளை உனக்கு பரிமாறத் தெரியாத பாமரன் நான்!
அகத்தின் அதிர்வுகளை முகத்தில் காட்டாமல் அவள் வேல்விழி நோக்கி வினவினேன்.
காதல்விழிகளால் ஈர்ப்பின் தழுவல் தா!
அவள் நாணத்தின் சவுக்கெடுத்துச் சொடுக்கினாள். ஐயோ! ஆண்மைத்திமிரின்
அடியாழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு என் முகமெங்கும் தெறித்தது என்
நாணம்!
மௌனம் நிறைந்த நேரம்! அது அத்துணை அழகானது! ஆம் மௌனம். அகராதியில்
அச்சிலேறா அருஞ்சொற்களைக் கொண்டிருக்கிற மொழி! விரல்களும் விழிகளும்
பேசிக்கொண்டிருக்கையில் உதடுகள் கொஞ்சம் ஊமையாயிருப்பதில்
ஒருபிழையுமில்லை!
மாலை நேரத்தின் மயக்கப்பொழுது எங்கள் மௌனத்திற்கு இதமாய் இருந்தது.
தேம்சு ஆற்றங்கரை போகலாமா? என்று நான் கேட்க, போகலாமே என்பதுபோல்
மென்மையாய்த் தலையாட்டித் தவிப்பேற்றினாள்.
தோளுரசிக்கொண்டே என்மேல் தலைசாய்த்து என்னோடு மெல்ல நடந்துவந்தாள்.
ஓ பெண்ணே! நீ சாய்வதன் வசதிக்கேனும் என் தோள்கள் பரந்திருக்க வேண்டும்.
காதல்சுகத்தோடு உன் சாயலை பார்க்க கவியரசு கண்ணதாசனின் வரியொன்று
நினைவுக்கு வருகிறது.
"பெண்ணை விட்டென்ன
பேரின்பம்?-காட்டும்
கண்ணை விட்டென்ன
கடவுள் நெறி?"
என் பெண்ணும் நீயே என் கடவுளும் நீயே என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும்
எனக்காக எழுதிருப்பதாக உணர்கிறேன்!
என் கடவுளே!
காலம் முழுக்க
கட உள்!
மகிழுந்தின் அருகில் வந்துவிட்டோம்!
இந்தமுறை மகிழுந்து மேலும் மகிழ்வேந்தியபடி காத்திருந்தது. அருகில்
சென்றதும் அவளை எழுப்பிட அசைத்தேன். சாய்ந்திருந்த தலைநிமிர்த்தி
பட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு மகிழுந்திற்குள் நுழைந்துவிட்டாள்!
அந்த முத்தத்தின் அதிர்வில் சிலநொடிகள் அத்வைதம் போல் உணர்ந்தேன்.
மகிழுந்தை இயக்கிவிட்டு
"வாங்கோ உதய்! ஆற்றங்கரை போகலாம்" என்றழைத்தாள். காந்தம் அழைக்கையில்
இரும்புத்துண்டு தாமதிக்குமா? விரைந்தோடி ஏறிக் கொண்டேன். அந்தப்
பேரழகுப்பெட்டையைப் பார்த்தபடி அமர்ந்துகொண்டேன்.
"உப்பிடி எல்லாம் காண கூடாது. அடி வேண்ட போறிங்கோ!"
"அடிதானே வேண்டிக்கிறன் அம்மா. மயில்தோகை விழுந்து மண்ணுக்கு வலிக்குமோ?"
"அப்படியெண்டால் நீங்கள் மண்ணோ?"
"இருக்கலாம். ஆனால் நீ மயில்!"
"ஹாஹா உமக்கு விசர் கூடிப்போச்சுதப்பா!"
"உது ஒண்டும் பிழை இல்ல தானே!"
"விடுங்கோப்பா! உங்களிட்ட கதைச்சு செயிக்க ஏலாது".
பேசிக்கொண்டே அந்த ஆற்றினருகே வந்துவிட்டோம்.
தேம்சு ஆறு! ஐக்கிய அரசாட்சியத்தின் இரண்டாவது பெரிய ஆறு! முழுமையும்
இங்கிலாந்தின் உள்ளேயே ஓடுகின்ற ஆறு! பிரம்மாண்ட நகரத்தின் நடுவே அந்தப்
பேராறு படுத்துக்கிடந்தது! அடேயப்பா! அந்த அகலம் இமைகளை இன்னும் அகல
வைத்தது! அங்கிருந்த தடுப்பு வேலியின் முன்வந்து நின்றோம்.
இப்படிப்பட்ட தடுப்புவேலிகளில்லாமல் தான் நம் மண்ணின் ஆறுகள் காணாமல் போய்விட்டன.
ஆற்றின் ஆழம் 360 அடி என்றும் அதன் நீளம் 346 கி.மீ என்றும் படித்ததாக
நினைவு இருக்கிறது. இவ்வளவு அடிகள் ஆழத்தோடும் இந்த ஆறு அமைதியாக
இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"உது பாக்கேக்க என்ன நினைக்கிறிங்கள்?" என்று அவள் கேட்க
அழுத்தமான மனத்தோடு பதில் இருப்பதாய் உணர்ந்து மறுமொழி சொல்ல விழைந்தேன்
"இந்த ஆற்றைப் பார்க்கும்போது தமிழ்மண்ணின் ஆறுகள் களவாடப்பட்ட கதைகள்
கண்ணீர் பெருக்கேற்றுகின்றன. சந்ததிப்பிள்ளைகள் எங்கள் சட்டைப்பிடித்து
கேட்பார்களே! எதிர்காலத்தலைமுறை எங்கள்மீது எச்சில் உமிழக்கூடுமே!
காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி என்று பாட்டில் ஆறுகள் இருக்கின்றனவே! நாட்டில்
காணோமே எங்கே? மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண்
என்று வள்ளுவப்பெருந்தகை வாயுரைத்த அன்னையர் தேசத்தின் அரண்களை
அந்நியர்களை ஆள வைத்து அபகரிக்கவிட்டீர்களே! என்று கேட்கப்பட போகிற
கேள்விகளுக்கு யாரிடம் பதில் இருக்கிறது?
சமைத்த உணவு சந்தைக்கு வருமென்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் யார்
எதிர்பார்த்தது? தண்ணீரை விற்பனை செய்வார்கள் என்று இருபதாண்டுகளுக்கு
முன்னால் கற்பனை செய்திருப்போமா? அடுத்த பத்தாண்டுகளில் காற்றையும்
காசுக்கு வாங்கும் நிலை வரக்கூடும் என்ற அச்சத்தை யார் போக்குவது?
பணவேட்டைக்குப் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்கும் பல பேருக்கும் தெரியுமே
பூமியில் மட்டும்தான் மனிதன் வாழமுடியும் என்று.
மீட்டெடுக்கணும் நிச்சயமா மீட்டெடுக்கணும்" என்று மறுமொழி கூற
"ஓமப்பா அதிகாரத்தை வென்றெடுத்தால் அத்தனையும் எளிதாகிவிடும். நம்ம
அண்ணைன்ர கரத்தை வலுப்படுத்துங்கோ!" என்றாள்.
"வா! உங்கு அமர்ந்து கதைக்கலாம்."
கதிரவன் தன் கரங்களைச் சுருக்கிக் கொண்டிருந்தான். மேற்குவானம்
தன்மேனிக்கு மருதாணி பூசிக்கொண்டதுபோல் சிவந்து கொண்டிருந்தது. புல்வெளி
ஒன்றில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தோம்.
அமர்ந்து ஒருவரையொருவர் மென்புன்னகையால் தழுவிக்கொள்ள பெருங்காதல்
நிகழப்போவதை உணராமல் காலப்பனிக்கட்டி நிமிடத்துளிகளாக
உருகிக்கொண்டிருந்தது.
நான்: காற்று நிரம்பிய இடைவெளியில் காதல் நிரம்பட்டும். நெருங்கி வா!
அவள்: புலவனே! வண்டு தேடி பூ நகர்வதில்லை. புரியாதோ உமக்கு?
இலவம்பஞ்சின் இழைத்தாற்போல்கொண்ட இடையைப் பற்றி என்னருகே இழுத்துக்கொண்டேன்.
நான்: வண்டுக்கு வகுப்பெடுக்குமளவிற்கு பூவுக்குப் புலமை கூடிவிட்டதே?
அவள்: எனக்கா? என்ன நக்கலா? புத்தகத்திற்கு என்ன புகட்ட முடியும்?
நான்: உன்னை அல்லவா நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இடை பற்றியிருந்த நகவிரல்கள் நகரத்தொடங்கின...
அவள்: ஏ கள்வா! கைவிரல் எடு! காதல்மேகம் கொட்டிவிடக்கூடும்.
நான்: அதில் நனைவதற்குத்தானே நாடு கடந்து வந்தேன்!
அவள்: பெருங்கடலைச் சிற்றாறு நனைப்பதோ? நகைப்பூட்டாதே!
நான்: ஆறு கலக்காமல் கடல் பெருக்காதே!
அவள்: ம்ம். உம்மிடம் கேள்விகள் சில கேட்க வேண்டும். கேட்கலாமா?
நான்: வெல்லம் வேண்டுமாவென எறும்பிடம் என்ன கேள்வி? கேள்விகளை
நேசிக்கிறேன்! கேள்!
அவள்: கேள்விகளை நேசிப்பவனே! கேள்விகளின் பயனென்ன?
நான்: வினாக்களால் விளைகின்ற அறிவே விரும்பத்தக்கது! வினாக்கள் அறிவை
மட்டுமல்ல, அனுபவத்தையும் தரக்கூடும்.
அவள்: தவறான அனுபவம் நேராமல் தவிர்ப்பதெப்படி?
நான்: நீ சந்தித்து அனுபவிக்கும் சூழ்நிலைகளைத் தவிர்த்திருக்கலாமென்றால்
அந்த அனுபவத்தைக் கற்றுத் தருவது யார்? சரியோ தவறோ சந்திப்பதே
சாலச்சிறந்தது!
அவள்: விரும்பும் நெஞ்சத்திடம் நீ விடுக்கும் வேண்டுகோள் என்ன?
நான்: என் பிழைகளும்கூட பிடிக்க வேண்டும். என்னுடனான நெருடல்களை நேசிக்க
வேண்டும். இந்த இலக்கணம் எனக்கும் பொருந்தும்.
அவள்: தவறுகளையும் நேசிப்பதில் தர்க்கம் உண்டல்லவா?
நான்: பேரன்பின் பார்வையில் பிழைகள் புலப்படுவதில்லை!
அவள்: என் இம்சைகள் உனக்கு இடையூறாயிருக்குமோ?
நான்: இதயத்துடிப்பை யாரேனும் இடையூறென்போமா?
அவள்: அடடா! சரி. என் சேட்டைகளை நீ எடுத்துக்கொள்வதெப்படி?
நான்: என் சிந்தனையின் சிறகுகளுக்கு சிக்கெடுக்கும் விரல்கள் நீ கொண்டவை!
உன் குறும்புகளூறிய ஊடல்தானே என் தனிமையின் தாகம் தீர்ப்பவை! உன்
சேட்டைகளால் சினப்பட ஏதுமில்லை. அவைதாம் என்னைச் செதுக்குகின்றன.
அவள்: என் திட்டும் சொற்களை எப்படி உணர்வாய்?
நான்: பனிமலர் பட்டா பாறைக்கு வலிக்கும்? இமை அடித்து கண் கலங்காது!
அவள்: விரும்பும் உள்ளம் விலகி நிற்கையில் விம்முதலுண்டோ?
நான்: தாகம் தான் தண்ணீரின் காதல் பெருக்கும். விலகி நிற்கும் வேளைகள்
பழகும் பருவத்தின் பாடம் நடத்தும்!
அவள்: நான் பேசாமலிருந்தால் என்ன செய்வாய்?
நான்: பேசாமலிருக்கும் மௌனப்பள்ளத்தாக்கை வெகுவிரைவிலேயே கொஞ்சும்
சொற்களால் நிரப்பிவிடுகின்ற நேர்த்தி தெரிந்தவள் நீ என்று அறிவேன்!
அவள்: அந்த வேளையில் அன்பின் அழைப்பு உண்டோ?
நான்: உண்டு
அவள்: எப்படி?
நான்: ஏ பறவையே! உன் கூடு குலையுமுன்னே குடியிருக்க வந்துவிடு!
அவள்: காதலின் எதார்த்த தேவை எதுவென்று சொல்வாயா?
நான்: கைகளும் கால்களும் கட்டியணைப்பதும் கவிதைமொழியால் காதலுறுவதும்
காமத்தின் கயறுகளால் கட்டப்படுவதும் பொழுது கழிக்க அல்ல! பொழுதைக்
களிக்க! உன்னோடு உழன்று உறைந்து உருகி உன்னையே பருகி நொடிகளே நொடிந்து
போகுமளவிற்கு வியப்பின் விழுதுகள் பற்றி பொழுதைக் களிக்க!
அவள்: காதலுக்கு இலக்கணம் ஏதுமுண்டா?
நான்: இலக்கணம் மீறிய இலக்கியம்தானே காதலுக்கு அழகு! காதல் இருவருக்குள்
இலக்கணம் எழுதுவது. அடுத்தவர் அசைத்திட அனுமதியில்லை!
அவள்: காதலில் மரபுகாத்தல் வேண்டுமே மன்னவா?
நான்: மரபெனப்படுவது மரித்த மனிதர்களின் அரித்த வாழ்க்கை தானே? அதை
மதிப்பது மாண்பு! அப்படியே பின்பற்றுதல் பிழை!
அவள்: காதலைக் காயப்படாமல் காப்பாற்றுதலெப்படி கள்வ?
நான்: காதலுக்குக் கர்வம் கற்றுத்தரலாம். கர்வம்! ஆகச்சிறந்த கவசம்.
அவள்: கர்வம் கற்பிக்கும் கலை என்னவோ?
நான்: பேரன்பும் பெருநம்பிக்கையும் காதலின் கர்வத்திற்கு பேராசிரியர்கள் பெண்ணே!
அவள்: மறுமொழிகளால் மதிக்க வைக்கிறாயடா! உள்ளுக்குள்ளிருந்து ஓர்
அழுத்தம் அழ வைக்கத் தூண்டுகிறது.
நான்: அழுவதனால் அணுவும் மாறுவதில்லை! அழாதே! காரணம் என்ன?
அவள்: கடந்தகாலத்தின் குற்றவுணர்வு குடியிருக்கிறதே!
நான்: காலத்தையே கடந்தபின்பு காரணம் மட்டுமென்ன? விட்டுவிடு!
அவள்: குற்றவுணர்வோடு கூடுதல் கடினம். எப்படிக் களைவது இக்குறையை?
நான்: முட்டை ஓடுடைத்து வெளிவரும் குஞ்சு குற்றவுணர்வு கொள்வதுண்டோ?
தாயின் உறுப்பைப் பிளந்து பிறக்கும் குழந்தை குற்றவாளி ஆவதுண்டோ?
குற்றவுணர்வை கூட்டிச்செல்வது நிகழ்காலத்தில் நின்றுகொண்டு
எதிர்காலத்தின்மேல் எச்சில் உமிழ்வதற்குச் சமம். பிழைகளில் பிறக்கும்
பேரறிவுக்கு கைதட்டிக்கொள்ளாமல் கவலைப்படுவதேன்?
அவள்: உண்மைதான். உணர்ந்து புரிகிறேன். நீ அத்தனைக்கும்
அயராதிருக்கிறாயே! உம்மையும் அழவைக்கும் உறுபொருளுண்டோ?
நான்: அன்பின் மிகைதான் அழவைக்க இயலும்!
அவள்: முரட்டு முத்தமிட்டு மூர்ச்சை செய்ய தோனுது. கிட்ட வா கெட்டவனே!
வலிக்கும்படி வாய்ப்பு தருகிறேன்.
நான்: முத்தம் வலிக்குமென முதலில் சொன்னது நீ தான்!
அவள்: அட கள்வா! காதல் கரையாமல் இருக்கட்டும் கவனம்!
நான்: என் நெருப்பு நினைவுக்குள் பனிக்கட்டி வீசியவளே! காலப்பெருவெளி
கடந்தாலும் அது கரையாமலேதான் இருக்குமடி!
அவள்: மீசை மழித்தலேனடா?
நான்: இதழுண்ணும் வேளையில் இடைஞ்சலைத் தவிர்ப்பதற்கு!
அவள்: ஓ! சரி. கலவி என்பதை உன் கவிமொழியால் கதைக்க இயலுமா?
நான்: கலவி என்பது கால்களுக்குள் கொள்கிற கலவரம் மட்டுமா? தொடையிடுக்கில்
செய்கிற தொல்லை மட்டுமா? இல்லையே! உயிர்ப்பெருக்கத்தின் உயர்ந்த
இயக்கத்தை உருப்படாமல் செய்வது பெரும்பிழைதான்! உணர்ச்சிகள்
உற்சாகமாகின்ற உறவின் வேளையில் உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும்
பொறுப்புகளுண்டு! காதல்வழிய கண்கள் மயங்கி களவாடும்பொழுதில் கலந்து
இயங்கி வில்லாய் விறைத்து அம்பெய்திடும் ஆனந்தப் போர்க்கோலம்தான்
கலவிக்களம்!
அவள்: வரிகளால் வசியப்படுத்தத் தெரிந்தவனே! எனக்கும் கற்றுத்தருவாயா?
நான்: காலம் முழுக்க என் கவிதைகளுக்கு உவமை தரப்போகிறவள் நீதான்!
உவமையாய் இருக்கப் போகிறவளும் நீதான்! உன்னிடம் தான் நானே கற்றுக்கொள்ளப்
போகிறேனம்மா!
அவள்:உன் பாட்டின் பாடுபொருளாயிருப்பது சுகம்! எடுத்துக்கொள் என்னை!
நான்: மொழிப்பெருங்கடலில் மூழ்கிக்குளிப்போம் வா! இதோ உனக்கொரு பரிசு!
சிறு கதைப்பதிவொன்று!
அவள்: என்ன?கதைப்பதிவா? காட்டுங்களேன்.
வாங்கி வாசித்தாள்
"காதலாற்றுப்படை".
முற்றும்