ஞாயிறு, 22 டிசம்பர், 2013

::: போராட வந்தவன்...!!! :::

எனக்குள்
பேச்சாகி
மூச்சாகி
காதலுமிழும்
கதிர்வீச்சாகி
உயிரெங்கும் நிறைந்து
உடலெங்கும் உறைந்து
செல்களுக்குள் நுழைந்து
தசைகளில் வளைந்து
எனக்குள் எல்லாமுமாக
இருந்து
எல்லாவற்றையும் எனக்காக‌
கொடுத்து
என்னைச்
சிறைடுத்தியவளே...!

உனக்கு தெரியுமா...?

நான்
உன் விடுதலைக்கும் சேர்த்து
போராட வந்தவன்...!

வியாழன், 21 நவம்பர், 2013

::: காதலிக்க கற்றுக்கொடு...!!! :::

நான்

கருவேலங்காட்டில்

சுற்றித்திரிந்தவன்..!

கலை இலக்கியமெல்லாம்

கல்லூர்க்குபின் தான்...!

கோர்வையாய்ப்

பேசத்தெரியாது...!

பார்வையில்கூட‌

முரட்டுத்தனம்தான் உண்டு...!

பதின்மப்பருவம் வரை

அம்மாவைத்தவிர

அடுத்த பெண்களைத் தெரியாது...!

சொற்களில்

தூயவை, தீயவை

பிரித்துபார்த்து பேசியதில்லை...!

சொடுக்கும் நேரத்தில்

கொடுக்கினைப்போல்

கோபம் வரும்...!

கொஞ்சுவதற்கும்

கெஞ்சுவதற்கும்

இடம் பொருள் பார்த்ததில்லை...!

இப்படியும் ஒரு ஆண்மகனென்று

பெயரெடுத்த பிள்ளை நான்...!

இருந்தும்

இதயத்தில்

அன்பிற்கான தேடல் இருந்தே வருகிறது..!

எதையும் சந்திக்கும்முன்

சிந்திப்பவன்...!

சிந்தித்துவிட்டேன்...!

இனி

நன்றும் தீதும் உன்னுடனே...!

இனி

நாளைகள் அனைத்தும் உனக்கெனவே...!

கவிதைகள் வாசித்தேனும்

காதலை நேசித்தேனும்

இன்னுமவை

கைப்படவும் இல்லை...!

மெய்ப்படவும் இல்லை...!

நான் உனக்கு மாணவன்...!

நான் உனக்கு குழந்தை...!

நான் உனக்கு தொண்டன்...!

நான் உனக்கு பணியாள்...!

அதனால், அன்பே..!

ஏதுமறியா எளியவனுக்கு

காதலிக்க கற்றுக்கொடு...!

புதன், 20 நவம்பர், 2013

:::காத்திருக்கும் எனக்குள்..!:::

புலரும் பொழுதுக்குக்

காத்திருக்கும் குயிலைப்போல...

மலரும் பூவுக்குக்

காத்திருக்கும் வண்டைப்போல...

வளரும் புல்லுக்குக்

காத்திருக்கும் முயலைப்போல...

உலரும் முகிலுக்குக்

காத்திருக்கும் மயிலைப்போல...

உனக்காக

காத்திருக்கும் எனக்குள்

நொடிகள்தோறும்

நொதிகளின் தூண்டல்...

மூளைக்கும் மூச்சுக்கும்

மூளும் சண்டை...

நீ வரும்வரைக்கும்

எந்த இரைக்கும்

இசையாது என் மனம்...!

வா...! வரம் தாங்கி வா...!

வரமாகவே வா...!

தவங்களைத் தள்ளிப்போட்டுவிட்டு

வரங்களைத் தர‌

விரைவாக வா...!

காத்திருப்பது

நான் மட்டுமில்லை...!

என் கற்பனையும் தான்..!!!

:::அவளுக்காகத்தான்...!:::

யாரவள்...?

என்

அதிகார ஆளுமையைத்

தளைபடுத்தி வலைபோடப் போறவள்...!

என்

ஆண்மைக் கயிற்றினை

இழுத்து முடிகொள்ளப் போறவள்...!

என்

இடவலதோள்களுக்கு

இடம்பிடிக்கப் போறவள்...!

என்

எழுத்துகளனைத்தையும்

இலக்கிய எடைபோடப் போறவள்...!

என்

கோதிய சிகையினைக்

கைவிரல்கள் கொண்டு

கலைத்திடப்போறவள்...!

என்

தனிமைத் தவத்தினை

இன்சொற்களால் இனிமையாக்கப் போறவள்...!

என்

வறண்டுக்கிடக்கும் வாழ்க்கையில்

கார்காலமாய் சூழப்போறவள்...!

என்

எதுவும் இல்லா எல்லாவற்றிற்கும்

எல்லாமுமாய் இருக்கப் போறவள்...!

யாரவளோ

அவளுக்காகத்தான்

என்

எண்ணங்களையெல்லாம்

கனவுகளையெல்லாம்

விருப்பங்களையெல்லாம்

எதிர்பார்ப்புகளையெல்லாம்

புழுதி கிளம்ப‌

எழுதிக்கொண்டிருக்கிறேன்...!!!

செவ்வாய், 19 நவம்பர், 2013

:::அலைகள் கற்றுத்தரும்...!:::

உயிர் வற்ற‌

உடல் இற்ற‌

நிகழ்ந்தேறும்

உன் உதட்டின்

ஈரத்தழுவலுக்காக‌

காத்திருக்கிறேன்...!

முப்பாலின்

மூன்றாம் பாலில்தான்

அன்பின் கடல்

அலையாடுதாம்...!

நீச்சல் தெரியாது...!

அதனாலென்ன...?

அலைகள்

கற்றுத்தரும்...!

நீ வா...!

திங்கள், 18 நவம்பர், 2013

:::அன்பை அரவணையுங்கள்...!!! :::

அன்பின் ஆழம்
என்பார் சிலர்...!

அன்பின் உயரம்
என்பார் சிலர்...!

அன்பென்பது
அளக்கமுடியாத காற்று...!

அதை எப்படி
நீளத்தால்
அகலத்தால்
உயரத்தால்
ஆழத்தால்
அளக்க முடியும்...?

அளக்க முடியும்...!

கண்ணீரின் அடர்த்தியால்
தேடலின் தவிப்பால்
எதிர்பார்ப்பின் விளைவால்
விருப்பங்களின் நிறைவால்

அளக்க முடியும்...!

ஆனால்

அன்பை
அளக்காதீர்கள்...!

அரவணையுங்கள்...!

:::அப்படியா...? அச்சோ...!!!:::

நெருப்பை
நீருக்குள்
அடைகாக்கும்
கலைதான்
காதலோ...?

எவ்வளவு
சுட்டாலும்
அணைக்க‌
நினைக்கவில்லையே...!


:::******க! :::


கெஞ்சுக!
கெஞ்சிக் கேளாவிடில்
கொஞ்சுக!
கொஞ்சிப் பாராவிடில்
மிஞ்சுக!
மிஞ்சி மீளாவிடில்
துஞ்சுக...!
துஞ்சினால்
கெஞ்சவும்
கொஞ்சவும்
மிஞ்சவும்
ஆற்றல் பிறக்கும்..!
அன்பு
சிறகை
விரித்து பறக்கும்...!!!

:::இனியவை நான்கு...!:::

கெஞ்சுதல்
கொஞ்சுதல்
மிஞ்சுதல்
துஞ்சுதல்


இவையாவும்
இனியவை நான்கு...!


:::என் குழந்தைகளே...! :::

என்னிலிருந்து
பிறப்பவை யாவும்
என் குழந்தைகளே...!

கருத்தோ
கவிதையோ
எவையாயினும்
என் குழந்தைகளே...!

கருத்தென்றால்
ஆண் குழந்தை...!

கவிதை என்றால்
பெண் குழந்தை...!

எனக்கு
பிடித்த குழந்தை
பெண் குழந்தை தான்...!

கருத்தை அதுதான்
அழகாய்ச் சொல்லும்...!!!

:::உங்களுக்காக சில வரிகள்...!:::

நிலம்...!
----------------
உலகமே
தூங்கும்
மண்மெத்தை...!
----------------

நீர்...!
----------------
எம் இனம்
நன்னீராகக்
கொண்டதைவிட‌
கண்ணீராக‌ செந்நீராகவே
உன்னைக் கொண்டுள்ளது...!
----------------

நெருப்பு...!
----------------
மாசுபடுத்தவியலா
பூதம் நீ...!
அதனால்
உன்னைத்தான்
நாங்கள்(தமிழ் மறவர்கள்)
அதிகம் முகர்ந்து
குளித்துள்ளோம்..!
----------------

காற்று...!
----------------
உலகம்
சுற்றும் வளி(பன்)...!
உயிர்
சுமக்கும்
உயிர்தாங்கி...!
----------------

வானம்...!
----------------
பகலில்
நீல, வெள்ளைத்
தொலைக்காட்சி...!
இரவில்
கருப்புத்தொலைக்காட்சி...!
புவியின் பலகணி(சன்னல்)...!
----------------

மரங்கள்...!
----------------
இயற்கையின்
மண்விசிறிகள்...!
காற்றின் காதலிகள்...!


----

உதயகுமார் தமிழன்

:::ஈர்ப்பு..!!!:::


என்னை நோக்கி
எவரையும் ஈர்க்க‌
எதுவும் செய்வதில்லை...!

நான் ஒரு காந்தம்...!

இரும்புத்துண்டங்கள்
என்னிடம்
ஈர்க்கப்படுவதில்
வியப்பொன்றுமில்லை...!

என்னைப் போன்ற‌
காந்தங்களும் வரலாம்...!

இரும்புகளும் உடனிருந்தால்
காந்தவிசையைக்
கடன் வாங்கலாம்...!

ஏனெனில்

நான் ஒரு காந்தம்...!


:::புகை! பகை!! நகை!!!:::

பெண்களிடம்
புகை
பகை
நகை
கூடாது!

புகையிலை,
பொய்களைப்
புகைக்கக் கூடாது!

உடலால்
உணர்வால்
பகைக்கக் கூடாது!

அழும்போதும்
விழும்போதும்
நகைக்கக் கூடாது!