புதன், 10 அக்டோபர், 2018

கலிங்கத்துப்பரணி பற்றி வைரமுத்து

ளம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; பாலை நிலம் பாடியவன்; சொல்லில் சிலம்பாடியவன் என்ற அத்துணை மிகுமொழிகளுக்கும் தகுமொழியாளரே கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார்.
வரையறுக்கப்பட்ட 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் பரணியும் ஒன்று. ஆனால், தமக்கு நிகராய் ஒரு புலவரை ஒக்கவைக்கக் கருதாத சொக்கநாதப் புலவர் போன்றவர்களால் ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’ என்று பாடப்பட்ட தக்க புகழ்மிக்க கவி செயங்கொண்டார் ஒருவரே.
இறைவனைத் தொடர்ந்து அரசனையும் பாடு பொருளாக்கும் பகிர்வுரிமையை வழங்கியது சிற்றிலக்கியம் செய்த சிறு புரட்சி. குறவஞ்சி - பள்ளு போன்ற வடிவங்களில் விளிம்புநிலை மக்களையும் பாடி முடித்தது சிற்றிலக்கியம் செய்த பெரும் புரட்சி. கோவை - உலா - பிள்ளைத்தமிழ் - அந்தாதி - கலம்பகம் - தூது - குறவஞ்சி - பள்ளு - மடல் - மாலை என விரியும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் பரணியும் ஒன்று.
தக்கயாகப் பரணி - மோகவதைப் பரணி - பாசவதைப் பரணி - கஞ்சவதைப் பரணி - இரணியவதைப் பரணி - சூரன்வதைப் பரணி எனப் பரணிகள் பலபட விரியினும் பரணிகளுக்கெல்லாம் தலைமை பூணத்தக்கது கலிங்கத்துப்பரணிதான் என்பது செவ்விலக்கியச் சம்மதம் பெற்ற செழுஞ்செருக்காகும்.
பரணி என்பது நாள் விண்மீன்களுள் ஒன்று. அது கொற்றவைக்குரியது என்று குறிக்கப்பெறுவது. கொற்றவை போர்க்கடவுள். ஆதலின் போரில் பெற்ற வெற்றியை அவளுக்கே படையலிட்டுக் கொண்டாடு வது பெருவழக்கு. “காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவ தொரு வழக்கு” என்பார் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியர். அதனால் அந்தக் கொண்டாட்டத்தைப் பாடும் இலக்கியமும் பரணியென்றே பெயர் பூண்டது.
வேறெந்த இலக்கியத்திலும் காணவியலாத தனிச்சிறப்பொன்று பரணியின் தலைப்புக்குண்டு. வென்றவன் பெயரில் விளங்காமல் தோற்றவன் பெயரில் துலங்குவதுதான் பரணியின் தனிச்சிறப்பு. அதனால்தான் வென்றெடுக்கப்பட்ட நாட்டையே கலிங்கத்துப்பரணி தன் தலையில் தூக்கி வைத்துத் தலைப்பாக்கியிருக்கிறது. இது தோற்றவரையும் பெருமைப்படுத்தும் தமிழின் தூய பண்பாடாகும்.
ஈசல் பிடிப்பதெல்லாம் வேட்டையில் சேராது என்பதுபோல, களத்திற்காணும் எல்லா வெற்றி களுமே பரணிக்குப் பாடுபொருள் ஆகா. எவனொருவன் பகைவரின் ஆயிரம் யானைகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்கிறானோ அவன் மீது மட்டுமே பரணி பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற / மான வனுக்கு வகுப்பது பரணி” என்பது இலக்கண விளக்கப் பாட்டியல்.
ஆயின், கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் யார்? முதலாம் குலோத்துங்க சோழனே கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் என்பது வரலாற்று வழக்கு. ஆணையிட்டவன் குலோத்துங்கனாயினும் களத்திலே ஆயிரம் யானை வென்றவன் படைகொண்டு சென்ற கருணாகரத் தொண்டைமான். ஆதலின் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனாகிறான்; பாட்டுடைத் தலைவன் கருணாகரனாகிறான்.
வண்டையர்கோ என்று வழங்கப்படும் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் தோன்றல் என்று பாடுகிறது தாழிசை. பிற்காலச் சோழர்கள் பேரரசுகட்டி எழுந்தபொழுது, பல்லவர் பரம்பரை தேய்ந் தழிந்து போனாலும் ஓய்ந்தொழிந்து போகவில்லை. தங்கத்தின் மூலக்கூறு பிரித்தால் அது இறுதிவரை தங்கமாகவே திகழ்வதுபோல, குறுநில மன்னனாய்க் குறுகிப்போனாலும் பல்லவர் பரம்பரையின் மன்னர்குலத்து மரபணுக்கள் கருணாகரத் தொண்டைமானின் உதிரத்தில் அதிர்ந்துகொண்டேயிருந்தன. குலோத்துங்கனின் தலைமை அமைச்சராகவும், படைத்தலைவனாகவும் இரு தோள்களிலும் இருபெரும் பாரம் சுமந்தவன் கருணாகரத் தொண்டைமான்.
“வண்டை வளம்பதி பாடீரோ / பல்லவர் தோன்றலைப் பாடீரோ” என்ற கவிச்சான்று கொண்டு, அவன் ஊர் காஞ்சி மாவட்டத்தில் சென்னை - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வண்டலூர் என்றே வரலாறு நம்பி வந்தது. ஆனால், ஆராய்ச்சி அறிஞர் மு.ராகவையங்கார் சுட்டிக்காட்டிய ஒரு சரித்திரச் சாசனம் உண்மையான ஊரை மீட்டெடுத்தது. கருணாகரத் தொண்டைமானின் மனையாள், கோவில் ஒன்றுக்குத் திருநுந்தாவிளக்கிட்ட சேதி சாசனம் ஒன்றில் காணக் கிட்டியது.
“சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத் திருநறையூர் நாடு வண்டாழஞ் சேரியுடை யான் வேளான் கருணாகரரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளினி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு” (S.I.S NO: 862) என்பது சாசன வாசகம். இதிலிருந்து வண்டாழஞ்சேரியே கருணாகரன் சொந்த ஊர் என்று விளங்குகிறது.
ஆயின், வண்டாழஞ்சேரி சோழநாட்டில் எங்குளது என்று நிலவியல் நேர்க்கோட்டில் ஆராய்ந்தால் - இன்று கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் சிற்றூரே என்று தெரிகிறது. வரலாற்று நாயகன் பிறந்த மண்ணென்று வண்டுவாஞ்சேரி மக்கள் இந்த ஊரைக் கொண்டாடிக்கொள்ளலாம். இந்த வண்டாழஞ்சேரிக் கருணாகரன்தான் கலிங்கத்துப்பரணிக்குக் கருப் பொருள் தந்தவன். கலிங்கத்துப்பரணி தமிழர் வீரத்தைத் தடவிப் பார்க்கக் கிடைத்த தழும்பு.
கடவுள் வாழ்த்து - கடை திறப்பு - காடு பாடியது - கோயில் பாடியது - தேவியைப் பாடியது - பேய்களைப் பாடியது - பேய்முறைப்பாடு - அவதாரம் - இந்திரசாலம் - இராசபாரம்பரியம் - காளிக்குக் கூளி கூறியது - போர் பாடியது - களம் பாடியது போன்ற உறுப்புகளையும், 54 சந்த வேறுபாடுகளையும், 599 தாழிசைகளையும் கட்டி எழுப்பியது கலிங்கத்துப்பரணி.
யுத்தச் சத்தம் கேட்பதற்கு முன்னால் முத்தச் சத்தம் கேட்கச் செய்கிறது கலிங்கத்துப்பரணியின் கடைதிறப்பு என்னும் கலை உறுப்பு. ஒரு புறத்திணை இலக்கியம் அகத்திணையோடு தொடங்குவதே ஓர் அழகு. களங்காணச் சென்ற கணவன்மார்கள் காலங்கடந்தும் மீளாமை கண்டு காதல் நோயால் மனைவிமார்கள் தவிக்கும் தவிப்பே கடைதிறப்பின் பாடுபொருள். இதுவரை காணாத கலவி இன்பத்தைக் கனவு காணும் ஒரு பெண்ணுக்கும், கண்ட கலவி இன்பத்தை மீண்டும் காணத் துடிக்கும் ஒரு பெண்ணுக்குமான உளவியல் அசைவுகள் வெவ்வேறு. இதில் இரண்டாம் வகைப் பெண்களின் தட்பவெப்பமான மனநிலையைச் செப்ப நுட்பமாகச் சித்திரித்துச் சிலம்பாடுகிறார் செயங்கொண்டார்.
அதோ வந்துவிட்டார் கணவர் என்று ஓடிச்சென்று திறக்கிறார்கள் கதவை. அய்யோ வரவில்லை என்று ஓங்கிச் சாத்துகிறார்கள் அதே கதவை. ஒரு முறையா இரு முறையா விடிய விடிய இதுதான் நிகழ்கிறது. இரவு தேய்ந்து கழிந்ததோ இல்லையோ கதவு தேய்ந்து கழிந்தது. “வருவார் கொழுநர் எனத் திறந்தும் / வாரார் கொழுநர் என அடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ” - என்பது கடைதிறப்பில் ஒரு மடைதிறப்பு.
இதயத்தின் தேய்மானத்தை அளக்கவியலாது. காரணம் அதைக் கண்கொண்டு காணவியலாது. ஆயின் அதை அளப்பதெங்ஙனம்? கண்ணுக்குத் தெரிந்த இரும்பின் தேய்மானத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத இதயத்தின் தேய்மானத்தைக் கணக்கிட்ட கணக்காளன் கவி செயங்கொண்டான்.
கலவியெனும் உயிரின் உன்னதப் பொழுதில் நயத்தக்க நாடகம் ஒன்றை நடத்திக் காட்டவும் தெரிகிறது போர்பாட வந்த புலவனுக்கு. கலவி என்பது, நான் என்ற பொருள் அழிந்து, நாம் என்ற நிலை கடந்து, இரண்டென்ற பொருள் மறந்து, ஒன்றென்று உயிர் உணர்ந்து இறுதியில் இருந்தும் இல்லாத நிலை எய்தும் இயற்கைத் திருச்செயல்; பேரண்டத் தில் தான் என்பது போக, தனக்குள் பேரண்டம் என்று ஒருகணம் உணர்த்திப்போகும் மனோமாயம். மனித வாழ்வில் உணர்வு நிலை கழியாமல் அறிவழியும் கணங்களே உயிரின் உச்சம். அப்படிப்பட்ட உயிரின் உச்சப் பொழுதில் கருத்தழிகிறார்கள் சில காதல் மனையாட்டிகள்.
பாம்பு உரித்த சட்டையைப்போல் உடலுக்கு வெளியே ஓடி விழுந்து கிடக்கிறது அவர்கள் உடுத்த உடை. ஆழ்மனது சொல்கிறது உடையற்ற உடலை மூடு என்று. உடனே கைக்கெட்டும் ஓர் ஆடையை எடுக்கிறது அழிந்து கிடக்கும் அறிவு. அவர்கள் எடுத்து உடுத்த எத்தனித்த ஆடை எது தெரியுமா? அது நெசவுத் தறியில் நெய்ததன்று; நிலாத்தறியில் நெய்தது. ஆடையென்று கருதி நிலாவின் கிரணத்தை இழுத்தணிய நினைத்தார்களாம் அந்த நிர்வாண அல்லிகள். “கலவிக் களியின் மயக்கத்தே / கலைபோய் அகலக் கலைமதியின் / நிலவைத் துகில் என்று எடுத்துடுப்பீர் / நீள்பொற் கபாடம் திறமினோ?” என்று பனை ஓலையில் உழுது போகிறது செயங்கொண்டானின் சிருங்கார எழுத்தாணி.
ளம் பாடுவதற்கு முன்பு காடு பாடுகிறது கலிங்கத்துப்பரணி. கொற்றவை குடியிருக்கும் காட்டின் சுட்டெரிக்கும் வெம்மையைச் சுட்டுவதன் மூலம் களத்துக்கான தளத்தைக் கட்டமைக்கிறார் கவி. இது - ஒரு கொல்லன் ஆயுதஞ் செய்வதற்கு முன் இரும்பைப் பழுக்கக் காய்ச்சும் ஒழுக்கம் போன்றது.
காளி வதியும் காடு கடுங்காடு. சூரியக் கதிர்களால் பூமி என்ற தட்டை ஓட்டில் வறுபடுங்காடு. அங்கே உலர்ந்து கிடக்கும் ஓமை மரங்கள், புகைந்துகொண்டிருக்கும் வீரை மரங்கள்; பொரிந்துகிடக்கும் காரைச்செடிகள்; கரிந்து கிடக்கும் சூரைச்செடிகள்; பிதிர்ந்த முள்ளி; சிதைந்த வள்ளி; உணங்கிய நெல்லி; உதிர்ந்த வெள்ளில் ஆகிய தாவரக் குடும்பம் சரிந்து கிடக்கும். வாகை மரங்களும் கூகை மரங்களும் வற்றிக் கிடக்கும்; வேலமரங்கள் மடிந்துகிடக்கும்; புங்க மரங்கள் உதிர்ந்து கிடக்கும்.
பறந்துபோகும் பருந்தின் நிழல் நிலத்தில் விழு கிறது. பறவை பறக்கும்போது நிழலும் பறக்கிறது. கவி சொல்கிறார் : “அந்த நிலத்தின் வெம்மை தாளாமல் அந்த அனல்காட்டை விட்டு நிழல்கூட அஞ்சி ஓடுவதுபோல் இருக்கிறது”.
நெருப்பைத் தகடு செய்த காடு. அதிலிருந்து கனலும் அனல் நெருப்பாய்த் தெரிகிறது. அங்கிருந்து பறக்கும் புறாக் கூட்டம் தீயில் கிளம்பும் புகையாய்த் தெரிகிறது. “செந் நெருப்பினைத் தகடுசெய்து பார் / செய்த தொக்கும்அச் செந்தரைப் பரப்பு / அந் நிலத்தினில் புகை திரண்டது / ஒப்பிலது ஒப்புறா அதன் இடைப்புறா.”
ஒரு காட்டுக்கே பெய்ய வேண்டிய மழையை ஒரு கழனியில் கொட்டித் தீர்த்துவிடும் மேகம்போல் ஒரு பேரிலக்கியம் படைக்கும் பேராற்றலைச் சிற்றிலக்கியத்துக்குச் செலவிட்டிருக்கிறார் செயங்கொண்டார்.
கொ
ற்றவைக் காட்டில் கூத்தன்தேவி யைச் சுற்றிக் கூத்தாடும் பேய்களைக் கோரச் சித்திரம் தீட்டிப் பயங்காட்டுகிறான் செயங்கொண்டான். பேயும் பேய் சார்ந்த குறிப்புகளையும் எல்லா உலக இலக்கியங்களும் ஏந்தியே வந்திருக்கின்றன. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஓர் உலகத்தைப் பாடிக்காட்டுமொரு படைப்புக் கலை, எல்லா மொழிக் கவிகளுக்கும் இருந்தே வந்திருக்கிறது. மகாகவி ஷேக்ஸ்பியரும்கூட ‘மாக்பெத்’தின் பயணத்தில் சில மாயக்காரிகளை வருணிக்கிறார்.
“இவை என்ன! இவற்றின் ஆடைகள் சருகுபோல் உலர்ந்து அச்சமூட்டுகின்றனவே; மண்ணுயிர் களைப்போல் இல்லையே! உலர்ந்த உதடுகள்; சூம்பிய விரல்கள். நீங்கள் பெண்களாகத்தான் இருக்கவியலும். ஆனால், தாடியோடு திரியும் உங்களை எப்படிப் பெண் என்பது?” - இவ்வளவுதான் பேய்கள் போன்ற மாயக்காரிகள் குறித்து ஷேக்ஸ் பியரின் சித்திரம். ஆனால், பேய்களை வர்ணிக் கிறானே செயங்கொண்டான் என்ற செந்தமிழ்க் கவி! அவன் பேய்பிடித்தவனைப் போல் பெருந்தாழிசை பாடுகிறான்.
“அந்தப் பேய்கள் பனைமரங்களொத்த கையின, காலின; பிலம்போன்ற வாயின; என்பும் நரம்பும் துருத்தித் தோன்றும் உடலின; ஓந்திகள் கோத்த பாம்பினைத் தாலியாய் அணிவன; பாசிபட்ட துளை களையுடைய மூக்கின; ஆந்தையும் வவ்வாலும் உட்புகுந்து உலாவும் செவியின; மண்வெட்டியும் கலப்பையும் கோத்து வைத்தாற்போன்ற பல்லின; வானைத் தட்டித் தகர்க்கும் தலையின; மார்பின் மேலே துவண்டுதொங்கும் உதட்டின.”
அவன் கூறுகிறான், “கொட்டும் மேழியும் கோத்த பல்லின / கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய / தட்டி வானைத் தகர்க்கும் தலையின / தாழ்ந்து மார்பினைத் தட்டும் உதட்டின.”
இந்தப் பேய்களின் கண்கள் வழியாகத்தான் களப்போரைக் கட்டமைக்கிறான் கவி.
லகத்தின் மிகப் பெரிய பாடுபொருள் போர். மண்ணையும் பெண்ணையும் உணவை யும் கவர்வதற்கோ காப்பதற்கோ மீட்பதற்கோ தலைப்பட்ட மனிதன் முதல் போரைத் தொடங்கிவைத்தான். ஆயுதங்களையும் ஆட்களை யும் மாற்றி மாற்றி அதே போர் இன்றும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. உலக இலக்கியத் தின் மிகப் பெருங்காவியம் என்று கருதப்பெறும் ஹோமரின் ‘இலியட்’டில் போர் குறித்த சித்திரமொன்று வீறுணர்ச்சியோடு வெளிப்படுகிறது.
“ஆஷ் மரங்களும் கார்னெல் மரங்களும் அடர்ந்த காட்டைப் பெருமூச்செறியச் செய்து, கிழக்குக் காற்றும் மேற்குக் காற்றும் மலைப் பள்ளத்தாக்கில் பேரோசையோடு சண்டையிட்டுக்கொள்வதைப் போல டிரோஜன்களும் கிரேக்கர்களும் முட்டி மோதினர்”.
செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியோ வேலெறிந்து விண்ணை மறைக்கிறது; அம்பெறிந்து மண்ணை மறைக்கிறது. ஒரு போர்க்களத்தைப் படிம அடுக்குகளால் காட்சிப்படுத்துவது கவிஞர்களுக்குக் கைவந்த கலைதான். ஆனால், போரின் ஒலிகளைக்கொண்டு காட்சிகளைக் கட்டி எழுப்பும் தாழிசைச் சந்தம் செயங்கொண்டானைப் போல முன்னெவர்க் கும் வினைப்பட்டதில்லை என்று ஆயிரம் மன்றங்களில் ஆணையிடலாம். படைகளும் படைகளும் எதிர்கொண்டது கடல்களும் கடல்களும் எதிர்கொண்டது போன்றதாகும். பரியொடு பரிகள் எதிர்கொண்டது அலைகளும் அலைகளும் எதிர்கொண்டது போன்றதாகும். இதை ஒலிச்சித்திரமாய் உணர்த்திக் காட்டுகிறது தாழிசை ஓசை.
“எறிகடலொடு கடல் கிடைத்தபோல் / இருபடைகளும் எதிர் கிடைக்கவே / மறிதிரையொடு திரை மலைத்தபோல் / வருபரியொடு பரி மலைக்கவே” இந்த ஒலி ஊர்வலத்தைக் கடக்குமுன்னே காட்சிப் படிமம் கண்ணை மிரட்டுகிறது. குருதி நதியாகிறது; அதில் மிதக்கும் வெண்கொற்றக் குடைகள் நுரை களாகின்றன. துண்டிக்கப்பட்ட யானையின் கரமோ நதியிருபுறமும் கரையாகிறது.
ஒரே ஒரு தற்குறிப்பேற்றத்தில் உலகக் கவிகளையெல்லாம் ஓரங்கட்டுகிறான் செயங்கொண்டான். வெட்டி வீழ்த்தப்பட்ட யானையின் துதிக்கை சுருண்டு வீழ்கிறது. அதில் பாய்ந்திருந்த அம்பு களெல்லாம் வட்டத் துதிக்கையில் ஆரங்களாய்த் தோன்றுகின்றன. துதிக்கை வட்டமாகிவிட்டது; அம்புகள் ஆரங்களாகிவிட்டன. இப்போது உருமாறிப்போன யானையின் அக்கரங்கள் சக்கரங்களாகிவிட்டன என்று எக்களிக்கிறான் செயங்கொண்டான். “மத்த யானையின் கரம் / சுருண்டு வீழ வன்சரம் / தைத்த போழ்தில் அக்கரங்கள் / சக்கரங் கள் ஒக்குமே.”
ஒலியோடும் பொருளோடும் தமிழோடு போட்டி யிட முடியாது உலகில் யாரும்.
லிங்கத்துப் பரணியின் அறங்கேற்றத்தின்போது செயங்கொண்டான் பாடப் பாட ஒவ்வொரு தாழிசைக்கும் ஒரு பொற்றேங் காய் உருட்டுவானாம் கொற்றவன் குலோத்துங்கன். 550 முதல் 600 கிராம் நிறைகொண்டது ஒரு தேங்காய் எனக் கொள்ளலாம். சற்றொப்ப 12 சொற்கள் கொண்டது ஒரு தாழிசை எனலாம். இது உண்மையாயின் ஒரு சொல்லுக்கு 50 கிராம் தங்கம் பெற்றவன் உலகிலேயே தமிழ்க் கவிஞன் ஒருவன் மட்டும்தான்.
போரில் புறங்கண்ட வடகலிங்க மன்னன் அனந்த வன்மன், மலையொன்றில் ஏறிக் குகை புகுந்தான். அந்த மலையினைச் சோழ வீரர் சூழ நின்றனர் வில்லாலும் வேலாலும் வேலி கோலி. கருணாகரத் தொண்டைமான் அவனைக் கைது செய்து அழைத்து வந்து குலோத்துங்கனைக் கும்பிட வைத்தான். இந்த வெற்றியைக் கொண்டாடித்தான் கொற்றவை காட்டுப் பேய்கள் ஒரு பரணி நாளில் கூழ் அட்டுக் குடித்துக் கொண்டாடிக் கூத்தடிக்கின்றன. “அகோ பேய்களே! கூழ் அடுவதற்கு முன்னால் குருதி ஆற்றிலே குளித்தெழுங்கள். யானையின் ஒடிந்த தந்தமெடுத்துப் பல் துலக்குங்கள். கொழுப்புகளை உலர்த்தி விரித்து உடை உடுத்துங்கள். யானை மதநீரில் தரை மெழுகுங்கள். முத்துப்பொடிகளில் கோலமிடுங்கள். யானை மத்தகத்தில் அடுப்புக் கூட்டுங்கள். யானைப் பானையில் உலையிடுங்கள். குந்தம் - பகழி - கோல் - வேல் கொண்டு அடுப்பெரியுங்கள். பகைவரின் பல்லரிசி எடுத்து முரசமென்ற உரலிலிட்டுத் தந்த உலக்கைகளால் குற்றி எடுங்கள்” என்று ஆணையிட்டுக் கூழ் சமைத்துப் பந்திகொண்ட பிறகு, தாம்பூலம் தரிக்க வேண்டும் என்ற பேராவல் எழுகிறது பேய்களுக்கு.
பேய்களின் பெருநோக்கில் தாம்பூலம் தயாரிக்கப்படுகிறது. குதிரைகளின் செவிச் சுருளே வெற்றிலையாய், குதிரைக் கால்களின் பிளந்த குளம்பே பெரும்பாக்காய், பகைவர்களின் கண்ணின் வெண்மணியே சுண்ணாம்பாய்த் தாம்பூலம் தரிக்கிறது பெரிதினும் பெரிது கேட்கும் பேய்க்கூட்டம்.
இப்போது எழுகிறது ஒரு வினா. இதுவா சிற்றிலக்கியம்?
தலைமகனாய்ப் பிறந்தவனைச் சின்னச்சாமி என்று பெயரிட்டு அழைப்பதொக்கும் கம்பனின் யுத்த காண்டத்துக்கே வழிகாட்டிய இந்தப் பேரிலக் கியத்தைச் சிற்றிலக்கியம் என்று செப்புவது.
போரிலக்கியம் என்பது பேரிலக்கியம் என்று பேசப்பட்டபோதிலும் தமிழ்ச் சமூகம் போர்நெறிச் சமூகமன்றிப் போர்வெறிச் சமூகமன்று. மூண்ட போர்களைக் கொண்டாடும் அதே வேளையில், போர்கள் மூண்டுவிடக் கூடாது என்ற செழுமிய விழுமியம் தமிழச் சாதியால் பெரிதும் பேணப்பட்டே வந்திருக்கிறது. “இருவீர் வேறல் இயற்கையு மன்று / ஒருவர் தோற்பினும் தோற்பது நுங் குடியே” என்று போருக்கு எதிரான குரலே புறப்பாட்டில் கேட்கிறது.
சோழப் பேரரசை வேலாலும் வாளாலும் விரிவு செய்துகொண்டிருந்த போர்ச் சமூகத்திலும் “யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் / போரொடுங்கும் தன் புகழ் ஒடுங்காது” என்ற கம்பன் குரலும் அதையே வழிமொழிகிறது.
இரண்டாம் உலகப்போரில் சேமித்துவைத்த பிணங்களின் கொழுப்பிலிருந்து வழலை (சோப்) செய்தும், தட்டி எடுத்த பிணங்களின் தங்கப்பற்களில் ஆபரணம் செதுக்கியும், எலும்புகளிலிருந்து உரம் தயாரித்தும் ஆதிக்கசக்திகள் அநாகரிகம் நிகழ்த்திய காலையில் - “புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட / போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்ற தமிழ்க் கவியின் உலகக் குரல் நமது பண்பாட்டின் சாரமென்றும் ஈரமென்றும் அறியப்படுகிறது.
கலிங்கத்துப்பரணியும் போர் முடித்த பிறகு ஒரு பொன்னுலகையே கனவு காணுகிறது. பேய்களின் பெருவாழ்த்தோடுதான் பரணி நிறைகிறது. உலகமாந்தர் களிக்கட்டும்; இயற்கையின் இன்னருள் தழைக்கட்டும்; பூதலத்தார் புகழ் பரவட்டும்; வையகம் நிலைக்கட்டும்; வான்மழை சுரக்கட்டும் என்று அமைதியின் ஆட்சியைத்தான் இறைஞ்சு கிறது. “யாவரும் களி சிறக்கவே / தேவர் இன்னருள் தழைக்கவே / பூதலம் புகழ் பரக்கவே / புவி நிலைக்கவே புயல் சுரக்கவே” என்று பேய்கள் வாழ்த்துகின்றன.
பேய்களின் வாழ்த்தோடு நம் வாழ்த்தையும் இணைத்துக்கொள்வோம்.
தரணி உள்ளவரை பரணி வாழும்.
மகத்தான தமிழ் ஆளுமைகளை
ளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக
கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் நேற்று வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

ஞாயிறு, 6 மே, 2018

மறைக்க முடியாத மலை - மறைமலையடிகள் பற்றி வைரமுத்து

மறைமலையடிகளின் வரவு தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு என்றே கட்டுரைக்கிறேன். அவரை ஒரு நூற்றாண்டின் வெடிப்பு என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய்த் தமிழ் மொழியில் அப்பிக் கிடந்த அந்நியப் பாசிகளை முற்றும் களைய வந்த மொழிச் சலவையாளர் என்றும் கணிக்கலாம்.
இப்படிப்பட்ட முத்திரை வாக்கியங்களோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கக் காரணம்

ஒன்பதாம் வகுப்போடு பள்ளியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பைஞ் சிறுவன், பல்கலைக்கழகங்கள் ஆற்ற வியலாத பெரும் பணிகளைப் போற்றி முடித்துப் போந்ததற்கன்று...
தொல்காப்பியம் - திருக்குறள் போன்ற தலைத்தமிழ் நூல்களையும், சிவஞான போதம், சிவஞான சித்தியார், திருச்சிற்றம்பலக் கோவையார், நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் என்ற இடைத்தமிழ் நூல் களையும் 21 வயதுக்குள் நெட்டுருச் செய்து முடித்த நினைவாற்றலுக்குமன்று...
தாமே தோற்றுவித்துக்கொண்ட ‘இந்து மதாபிமான சங்க’த்தின் வாயிலாய் ஆற்றொழுக்கான பேச்சாற்றலைப் பெருக்கிக்கொண்டு ‘நாகை நீலலோசினி’, ‘பாஸ்கர ஞானோதயம்’, ‘திராவிட மந்திரி’ போன்ற இதழ்களில் எழுதிய விருப்பக் கட்டுரைகளாலும் மறுப்புக் கட்டுரை களாலும் தம் எழுத்தாற்றலை இளமைப் பருவத்திலேயே செழுமை செய்துகொண்டதற்குமன்று...
23 வயதிலேயே சென்னை கிறித்துவக் கல்லூரிக்குத் தமிழாசிரியராய் விளங்கும் தகுதி பெற்றமைக்குமன்று...
டி.கே.சி. என்னும் ரசிகமணிக்கும், நாவலர் சோமசுந்தர பாரதிக்கும், வையாபுரிப் பிள்ளைக்கும், திருப்புகழ் கிருஷ்ணசாமி அய்யருக்கும், தணிகைமணி செங்கல்வராய பிள்ளைக்கும் கல்லூரியில் பாடம் பயிற்றுவித்த தமிழா சான் என்ற தகைமைக்குமன்று...
தாம் பாடமாய்ப் பயிற்றுவித்த முல்லைப்பாட்டுக்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரையை மெச்சவியலாமல், 28 வயதில் தாமே ஒரு புத்துரை எழுதி மாணவர்க்குப் பயிற்றுவித்த மாண்புக்காகவுமன்று...
தமிழ் - ஆங்கிலம் சம்ஸ்கிருதம் என்ற மும்மொழி களிலும் முறைபோகிய மூதறிவுக்காகவுமன்று...
வேதாசலம் என்று பெற்றோரிட்ட பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்ட புரட்சிக்காகவுமன்று...
இலக்கியம் - சமயம் - தத்துவம் - வரலாறு - ஆய்வியல் - பண்பாட்டியல் - மருத்துவம் - மறைபொருள் முதலிய துறைகளில் 74 ஆண்டுகளுக்குள் 54 நூல்கள் படைத்த நுண்மாண் நுழைபுலத்துக்குமன்று...
பின் எற்றுக்கு?
தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை என்ற ஆழ்ந்த அடையாளத்திற்காகவே; எம்மொழித் துணையும் இன்றித் தனித்தியங்கவல்ல செம்மொழி என்ற நம்பிக்கை யைத் தமிழுக்குத் தந்ததற்காகவே!
முத்தெடுக்கப்போனவன் பவளப் பாறையைக் கண்டு பிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய் இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.
பன்னூறாண்டுகளாய்த் தமிழ் மீது படிந்து கிடந்த அயன்மொழிச் சாம்பல்களை ஓர் ஊழிக் காற்றாய் அவர் வந்து ஊதிப் பார்த்தபோதுதான் உள்ளிருந்த தணல் “நான்தான் தமிழ் தமிழ் தமிழ்” என்று தகித்தது. சொல் என்பது வெறும் ஒலிச்சுட்டோடு, பொருட்குறிப்போடு ஒழிந்துபோவதில்லை. ஒரு சொல் துலக்கப்படும்போது மறைக்கப்பட்ட வரலாற்றின் - பண்பாட்டின் மீட்டுருவாகவும் அது திகழ்கிறது என்பதும் தெற்றன விளங்கியது.
வேதாரண்யம் என்று சுட்டும்போது அந்த ஊரின் வயது - வரலாறு - பண்பாடு என்ற மூன்றும் நமக்கு முற்றும் விளங்கவில்லை. திருமறைக்காடு என்று சுட்டப்படுமிடத்து அதன் நூற்றாண்டுகளை நம்மால் நுகர முடிகிறது. கபிஸ்தலம் என்ற பெயரை அகழ்ந்து பார்த்தால் உள்ளே ‘குரங்காடுதுறை’ தோன்றுகிறது. அருணாசலம் என்ற சொல்லின் நதிமூலம் தேடி நகர்ந்தால் அது திருவண்ணாமலை’யில் முடிகிறது. ஜம்புகேஸ்வரம் என்ற ஊர்ப் பெயரை ஊடுருவிப் பார்த்தால், உள்ளே ‘திருவானைக்கா’ தென்படுகிறது. இப்படித்தான் தமிழ் மொழியின் மீது வந்து படிந்த பிற மொழிகள் தமிழரின் வரலாற்றைத் துடைத்துவிட்டு, தம்மிலிருந்தே வரலாறு தொடங்கப்பெற வேண்டும் என்று சூழ்வினையாற்றின.
இந்தப் பெயர் மாற்றம் என்ற பெருஞ்செயலைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
மறைமலை என்ற அலை மட்டும் அடித்திராவிடில், காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களின் மூலங்களும்கூட முகம் மாறிப் போயிருக்கலாம். தொல்காப்பியம் ஐந்திர மாகியிருக்கலாம்; தொல்காப்பியர் திரணதூமாக்கினி ஆகியிருக்கலாம்; திருவள்ளுவர் ஸ்ரீவல்லபராய்த் திரிந் திருக்கலாம்; தமிழ்நாடு என்பது வட இந்தியாவின் தென்துண்டு என்று வரலாறு வளைக்கப்பட்டிருக்கலாம்.
சொல்லில் என்ன இருக்கிறது என்று சொல்வார்க்கு ஒன்று சொல்ல வேண்டும். ராமசாமி - ராமஸ்வாமி என்ற பெயர்களின் எழுத்து மாற்றத்தால் ஒருவன் தன் சொத்துகளை இழக்கிறபோது அறிவான் பெயரில் என்ன இருக்கிறது என்ற பேருண்மையை.

சொல்லில் என்ன இருக்கிறது என்று சொல்வார்க்கு ஒன்று சொல்ல வேண்டும். ராமசாமி - ராமஸ்வாமி என்ற பெயர்களின் எழுத்து மாற்றத்தால் ஒருவன் தன் சொத்துகளை இழக்கிறபோது அறிவான் பெயரில் என்ன இருக்கிறது என்ற பேருண்மையை.
மறைமலையடிகளுக்கு எப்படித் தோன்றிற்று இந்தத் தனித்தமிழ்க் கருத்தியல்?
“விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளந்தைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று” என்று மறைமலையடிகள் முன்மொழிந்திருந்தாலும், அவர்தம் தொடக்க காலத்து உரைநடையில் வடசொற்கள் சிலவும் வாராமல் இல்லை. தனித்தமிழ் ஊற்று எப்போது வெடித்து வீறிட்டது என்பதற்குச் சுவையான நிகழ்வொன்று சுட்டப்பெறுகிறது அவரது வாழ்வில்!
அந்திக் கதிரவன் மண்ணைப் பொன் செய்யும் ஒரு மாலைப் பொழுதில், வீட்டு முற்றத்தின் வெளிச் சோலையில், கலைபயில் தெளிவும் கட்டுரை வண்மையுங்கொண்ட தம் நிறைதிருமகள் நீலாம்பிகையோடு உலாவிய காலையில், ‘ஒரு திருப்பாட்டுப் பாடு திருமகளே’ என்று கலைக் கட்டளையிடுகிறார் தமிழ்த்தந்தை.
வள்ளலார் பாட்டுக்கு இசைகூட்டுகிறார் நீலாம்பிகை.
“பெற்றதாய்தனை மகமறந் தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே..”

இந்தப் பாடலைக் கண் மூடி, உயிர் திறந்து உள்வாங்கிக்கொண்டிருந்த அடிகளாரின் நெஞ்சில் ஆழப் பாய்ந்த தொரு மின்னல்.
“நீலா! இப்பாடலில், தேகம் என்றொரு வடசொல் வந்துளது. அவ்வொன்றையும் நீக்கி அவ்விடத்தில் ‘யாக்கை’ என்னும் தமிழ்ச் சொல் பெய்யப் பெற்றிருக்குமானால் இச்செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது. அன்றியும், நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று, அச்சொற்களுக்கு நேரே வழங்கிவந்த நம் அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன” என்றார். அந்த நொடி யில் உடைந்து சிதறியது ஆயிரக்கணக்கான ஆண்டு களாய்த் தமிழை அழுத்திக்கிடந்த அயற்பாறை. அன்று முதல் மறைமலையடிகளின் வாழ்வும் வாசிப்பும் மீள்பார்வைக்குள்ளாயின.
தம் எழுத்திலும் பேச்சிலும் அயற்சொல் விரவாத தனித்தமிழையே வாழ்நாள் முழுவதும் வழங்குவதென்று உறுதிகொண்ட மறைமலையார், தாம் அவ்வண்ணமே வாழ்ந்ததன்றித் தமிழர்களையும் அவ்வண்ணமே பயிற்றுவித்தார்.
‘எழுத்தெண்ணிப் பயின்றவர்’ என்பது ஆழங்காற்பட்ட கல்வியாளர் ஒருவர் அடையும் அதிகப்படியான அடைமொழியாகும். மற்றவர்க்கது பொருந்துமோ இல்லையோ அடிகளார்க்கு மட்டும் அப்படியே பொருந்தும்.
“12 நூற்பாக்களையும் 41 வரிகளையும் 216 சொற் களையும் 624 எழுத்துகளையும் கொண்டது சிவஞானபோதம்” என்று கணக்கிட்டு ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற குறளுக்கு மற்றுமொரு பொருளாய் விளங்கியவர் மறைமலை அடிகளார். சைவப் பொருளாராய்ந்த இந்தப் பெரும் பயிற்சிதான் முல்லைப் பாட்டையும் எண்ணிக் கற்கும் எண்ணம் தந்தது. 103 அடிகளையும் 500 சொற் களையும் கொண்ட முல்லைப்பாட்டில் 9 மட்டுமே வடசொற்கள் 2 மட்டுமே திசைச்சொற்கள் என்று ஆராய்ந்து அறிவித்த அறிஞர் பெருமான், முல்லைப்பாட்டில் இரண்டே விழுக்காடுதான் பிறமொழிச் சொற்கள் என்று அறுதியிட்டு உறுதிசெய்தார். ஆனால் 2,810 முதன்மைச் சொற்கள் கொண்ட திருவாசகத்தில், 373 வடசொற்களை ஆராய்ந்துகண்ட அடிகளார், திருவாசகத்தில் 7 முதல் 8 விழுக்காடு வடசொற்கள் நின்று நிலைத்திருப்பதைக் கண்டு சொன்னார்.
தனித்தமிழ் எண்ணம் தலையெடுத்த பிறகு, தாம் எழுதிய பழைய நூல்களிலும் அயன்மொழிச் சொற்களைக் களைய வேண்டும் என்று கட்டளையிட்டுக்கொண்டார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையின் முதல் பதிப்புக்கும் நான்காம் பதிப்புக்கும் 28 ஆண்டு கால இடைவெளியிருந்தது. நான்காம் பதிப்பின் முகவுரையில் “முற்பதிப்புகளில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து, இவ்வுரை நடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கியிருக்கின்றோம்” என்று எழுதியவரின் ஊட்டம் உணர்தற்குரியது.
அதன் பின்னர், அவரது பேச்சு மடைமாற்றம் கண்டது; எழுத்து நடைமாற்றம் கொண்டது. சுடர்கொண்ட சொல்லும் - உயிரள்ளும் பொருளும் - உணர்ச்சியும் - உண்மையும் கூடிக் கும்மியடிக்கும் இந்தக் கொழுந்தமிழ் நடை தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட ஒரு புரட்சிக்கு வித்திட்டது. அடிகளாரின் எழுத்து புலவர் களுக்கு மட்டுமன்று - தலைவர்களுக்கும் ஒரு கோட்பாட் டுப் பொருளானது.
மறைமலையடிகள் ஊதியத்திற்கு எழுதிய பிழைப் பெழுத்தாளர் அல்லர்; எழுதியே பிழைக்கும் காலமும் அதுவன்று. “பட்டினப்பாலை ஆராய்ச்சியின் முதற்பதிப்பு முதன்முதல் 1906-ல் வெளிவந்தது. அப்போது அதில் 250 படிகளே பதிப்பிடப்பட்டன. அவ்விருநூற்றைம்பது படிகளுஞ் செலவாகப் பதின்மூன்றாண்டுகள் சென்றன” என்று அவர் எழுதுகிறபோது, ‘அச்சோ’ என்று எரிகிறது அடிவயிறு.
தமிழ் ஆட்சி பெறவும் தமிழர் மீட்சி பெறவுமே அவர் எழுத்தும் பேச்சும் மூச்சுள்ளவரை இயங்கின என்று உணர முடிகிறது.
தண்ணீரைத் தேடிப் பயணித்த கடப்பாரை, புதையலில் முட்டிப் பொறி தட்டியதுபோல, மொழி மீட்சிக்குத் தோன்றிய தனித்தமிழ் இயக்கம், இனமீட்சியில் போய் முடிந்தது.
திராவிட இயக்கத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கொள்கைகளுள் ஒருபாதி இனம்; மறுபாதி மொழி. அந்த மொழிக்கொள்கை மறைமலையடிகளின் மூளைக் குழந்தை என்பதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஒருவரைப் பாராட்டுவதில் பணத்தைவிடச் சிக்கனமாய்ச் சொற்களைப் பயன்படுத்துகிற பெரியார், மறைமலையடிகளைத் தன் கரமென்று சொல்லியிருக்கிறார்.
“மறைமலையடிகளும் எம்.எல்.பிள்ளையும் எனக்கு வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். எனக்குப் பகுத்தறிவுப் பாதையில் ஏதேனும் அய்யம் உண்டாகும் போதெல்லாம் அவர்களிடமே தீர்த்துக்கொள்வேன்” என்ற பெரியாரின் கூற்றை நான் பெரிதினும் பெரிதாய்க் கருதுகிறேன்.
தனித்தமிழ் என்ற கருத்தியலைக் கண்டறிந்ததோடு நின்றிருந்தால் மறைமலையடிகளுக்கு இந்த மாண்பு இருந் திருக்காது. தம் செம்மாந்த புலமையால் அதைச் செயற் படுத்தி, நிறுவனமாக்கி நிலைப்படுத்தியதே அவரது மாட்சிக்குச் சாட்சி. அவர் பெற்றிருந்த மும்மொழிப் புலமை என்ற பெருந்தகுதி அவர்கொண்ட கொள்கையை அறிவியல் அடிப்படையில் நிறுவி முடிக்கப் பெருந்துணை புரிந்தது.
ஒரு மொழியை ஊடறுத்துப் பிறமொழிச் சொற்கள் உள்நுழைவது எதனால் நேர்கிறது? ஓர் இனத்தார் தம் மொழிவெளி கடந்து பிறவெளி புகுந்தாலும், பிறமொழி பேசுவார் தம்வெளி கழிந்து உள் நுழைந்தாலும் பண்பாட்டு வணிகப் பரிமாற்றங்கள் எவ்வழியில் நிகழ்ந்தாலும் ஒரு மொழி பிறமொழியை உள்வாங்கியே தீரும். ஆனால், அதன் விழுக்காடு எவ்வளவு - விளைவுகள் என்னென்ன என்பதையே ஒரு மொழி வல்லான் கருதுவான்; கவலை கொள்வான்.
மாற்றம்தானே மானுடக் கோட்பாடு. மொழியும் ஓர் உயிரிதானே! ஆதலால் அதுவும் மாறித்தானே ஆக வேண்டும். பிறமொழிக் கலப்பால் ஒரு மொழி செழுமையுறும்தானே என்று எதிர்மறைச் சிந்தனைகளை உண்மைபோல் தோற்றுவிப்பார் சில உரை வல்லார். இந்தத் தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டும்; அதற்குத் தருக்க அறிவு வேண்டும். கொண்ட கொள்கையை நிறுவத்தக்க தருக்க அறிவு வாய்க்கப்பெறாததால், தமிழர்கள் தங்கள் நீண்ட வரலாற்றில் நிறைய இழந்திருக்கிறார்கள்.
மறைமலையடிகளார் தமிழுக்கு வாய்த்த ஒரு தருக்கப் பேரறிஞர். ‘தனித்தமிழ் மாட்சி’ என்னும் கட்டுரையில் அவர் எழுதுகிறார் :
‘மாறுதல் என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொன்று ஆதலா? அல்லது அது தன் இயல்புக்கு ஏலாதவற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின், இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.
முதலிற் சொன்ன பொருளின்படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுரு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப்பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன. இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குலைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன. இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால், தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன.
தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு, அதன்படி நமது அருமைச் செந்தமிழ் மொழியுந் தனது தூய நிலை குலைந்து மாறுதல் அடையவேண்டும் என்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ?’
தவிர்க்க முடியாத இந்தத் தருக்கம், தமிழ்ப் பகைவர்களைக் கட்டிப்போட்டது. பெய்த பெருமழையின் பேரீரம் வெவ்வேறு தாவரங்களில் காலங்கடந்தும் காட்சிப்படுவதுபோல் மறைமலையடிகள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்புதான் இன்றளவும் வெவ்வேறு திரிகளில் விளக்குகளாய் விளக்கமுற நிற்கிறது.
முதலில் அது ஊடக மொழியை உருமாற்றிப்போட்டது. சில ஏடுகள் ‘ஜல சப்ளை ரத்து’ என்று தலைப்பிட்டுக்கொண்டிருந்தன. இதனுள் ஜலம் - சம்ஸ்கிருதம்; சப்ளை - ஆங்கிலம்; ரத்து - உருது. இது ‘தண்ணீர் வரத்து நிறுத்தம்’ என்று தமிழாகியது மறைமலையடிகளால்.
திராவிட இயக்க மேடைகளும் மறைமலையடிகளின் தாக்கத்தால் ஆக்கமுற்றன. ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. மாநில அலுவல் மொழியாகத் தமிழாவதற்கு ஒரே வழி ஆங்கிலத்தை எழுப்பிவிட்டுத் தமிழ் ஏறி அமர்வதுதான். ‘முனிசிபாலிட்டி’ நகராட்சி ஆயிற்று; ‘கார்ப்பரேஷன்’ மாநகராட்சி ஆயிற்று; ‘கமிஷனர்’ ஆணையாளரானார்; ‘ஜி.ஓ’ அரசாணையானது; ‘சர்க்குலர்’ சுற்றறிக்கை ஆனது. மறைமலையடிகளின் நீண்டு விழுந்த நிழல்களே இவையெல்லாம்.
அறிஞர் அண்ணா இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ்நாட்டுத் தலைநகரத்திற்கு கருணாநிதி ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறை மலையடிகளால் நேர்ந்த மங்கலங்களாகும்.
மாறிவரும் உலகச் சூழலில் முற்றிலும் தனித்தமிழால் இயங்கவியலாது என்பதையும் அடிகளார் அறிவார். அதற்கு ஒரு புறனடையும் வழங்கியிருக்கிறார்.
“இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில் அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம்” என்று ‘தனித்தமிழ் மாட்சி’யில் எழுதுகிற அடிகளார், தாம் உள்ளூர்த் தமிழர் மட்டுமல்லர்; உலக மானுடன் என்பதை உறுதிசெய்கிறார்.
மறைமலையடிகளின் தேவை இன்னும் தீர்ந்துவிடவில்லை. உலகமயமாதல் என்ற ஊழி அலை உலகத்தின் கரைகளிலெல்லாம் விசிறியடிக்கும் இந்த வேளையில் தான் தூணைப்போல் தேவைப்படுகிறது மறைமலை யடிகள் துணை.
தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றுக்கண்களைத் தமிழர் கள் காலந்தோறும் காத்துவர வேண்டும்.
தமிழ் மொழியின் பெயர்ச் சொற்களெல்லாம் தமிழ்தானா என்ற வினாவுக்கு முன்னால், தமிழின மாந்தர்களின் பெயர்களெல்லாம் தமிழ்தானா என்று ஓர் எரியும் வினாவோடு நம்மை எதிர்கொள்கிறது நிகழ்காலம். தமிழ்நாட்டு உழைக்கும் மக்களே தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி வழிவழியாக வழங்கினார்கள். திராவிட இயக்க எழுச்சியில் தனித்தமிழ்ப் பெயர்கள் வீடுகள்தோறும் விளங்கின. தற்காலத்தில் பொருளறியா ஓசைகளும் கிரந்த எழுத்துக்களின்றி இயங்க முடியாத ஒலிக்கூட்டமும் தமிழர்களின் பெயர்களாகத் துலங்கத் தொடங்கியிருப்பது இன வரலாற்றுக்கு எதிர்மறையாகும். ஒலியும் பொருளும் அழகும் கொண்ட நற்றமிழ்ப் பெயர்களை நாடுதோறும் விதைக்க வேண்டும்.
அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஏந்திழை, உறங்காமலர், ஊஞ்சல்நிலா, ஐம்பொன், ஒண்டொடி, ஓவியா என்பன போன்று பெண்பாற் பிள்ளை களுக்கும், அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன், ஒப்பிலான், ஓவியன் என்பன போன்று ஆண்பாற் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டினால் நாளடைவில் அந்த ஓசை மீதே நமக்கு ஆசை வரும்.
உலகச் சந்தையை வென்றெடுக்க வேண்டுமென்ற வேட்கையில் உள்ளூர் அடையாளங்களைத் தொலைத்துவிடக் கூடாது. முத்துக்குளிக்கும் அவசரத்தில் மூச்சை இழந்துவிடக் கூடாதல்லவா?
தமிழர்கள் அனைவரும் தமிழ்ப் பெயர் சூடிக்கொண்டால், பள்ளி - கல்லூரி ஆவணங்களில் - அடையாள அட்டைகளில் - குடும்பக் கோப்புகளில் - வங்கிகளில் - அரசு - தனியார் அலுவலகங்களில் - நீதிமன்றங்களில் - காவல் நிலையங்களில் - ஊடகங்களில் - பயணங்களில் - உலகவழக்கில் எட்டுக் கோடித் தமிழ்ப் பெயர்கள் எல்லா நாட்களிலும் புழங்கப்பெறும். அந்த எட்டுக் கோடிப் பெயர்ச் சொற்களின் மீது ஒரு மொழி தன்னை ஊன்றி நடக்கும் உறுதி கிட்டும்.
தமிழர்காள்! இப்போது துலங்கும் பெயர்கள் இப்படியே துலங்கட்டும்; இனிவரும் தலைமுறைகளுக்குத் தமிழ்ப் பெயர்களே விளங்கட்டும்.
மீண்டும் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்று சுற்றுச்சூழல் சொல்கிறது. மீண்டும் தாய்மொழிக் கல்விக்கே திரும்ப வேண்டுமென்று உலகக் கல்விக்கொள்கை உரக்கக் கூவுகிறது. நாமும் திரும்ப வேண்டும். மறைமலைகள் மீண்டும் வேதாசலங்களுக்குத் திரும்ப வேண்டாம்; வேதாசலங்கள் மறைமலைகளுக்குத் திரும்பட்டும்.

சனி, 10 பிப்ரவரி, 2018

லிங்கனின் கடிதம் (அவர்தம் மகனின் ஆசிரியர்க்கு)

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...  

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள்.

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்... இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

உதயோவியங்கள்



ஓவியமோ, மொழியறிவுக்கப்பால் விழியறிவை விரித்துரைக்கும் கவித்துவம். ஓவியன் கவிதை எழுதுவதும் கவிஞன் ஓவியம் வரைவதும் கலைக்குத் தேவையான பரிணாம வளர்ச்சி.






ஓவியங்கள் மீதான ஆர்வமும் தேடலும் சின்னஞ்சிறு பிள்ளைதொட்டு எல்லோருக்கும் இருப்பதை உணரலாம். எழுத்தின் வழியே உலகத்தை அறிந்ததும் உலகத்திற்கு அறிவித்ததும் இதயத்தின் இயல்பான நடையாகும். எழுதத் தெரிந்த காலம் முதல் எதுகை மோனைக்கு ஏற்றபடி கற்றுக்கொண்டதும் வாசிப்பவர் நேசிக்கும்படி வார்த்தைகளை வார்க்கத் தெரிந்ததும் இதுவரை என்னை ஓரளவுக்கேனும் உயர்த்திக் காட்டியிருக்கிறது. 











ஓவியம் - வாசிப்பின் அயற்சியின்றி அதைப் படைத்தளித்தவனின் எண்ணக்கருத்தைப் புரிய முடிந்த எளிய ஊடகம். ஒரு கவிஞனின் காந்த மனம் தானெண்ணியதை எத்துணை இலகுவாய் இயம்ப முடியுமென்பதில் எப்போதும் ஊக்கத்தோடு ஆக்கங்காணும். மொழியை வழிசெய்யும் மேதைமைக்கு அது உதவியாய் இருப்பதாக அவன் தன்னை ஆற்றுப்படுத்தி போற்றுவான். 




செவ்வாய், 23 ஜனவரி, 2018

யுகத்துக்கு ஒருவன் - வைரமுத்து

ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.
ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.
வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க
வில்லையே! ஏன்?
மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.
பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.
""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில்
பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து
சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.
இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.
கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.
பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.
அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.
சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.
சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.
இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.
ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.
""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.
- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.
இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.
அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.
பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.
""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.
அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.
இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.
கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.
பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.
அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.
காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.
எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.
அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.
""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.
1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.
பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''
சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''
பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?'' சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.
""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.
இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.
பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.
இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.
""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.
""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.
""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.
பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும். ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.
வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.
திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.
""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.
நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.
""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''
பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.
அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:
""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)
மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.
"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா
கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்
கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன?
பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.
சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை.
அது "யுகாக்கினி'.

வெள்ளை வெளிச்சம் - வைரமுத்து

1823. மருதூர் இராமையாபிள்ளையின் ஆறாம் தாரத்தின் ஐந்தாம் மகனாக இராமலிங்கர் பிறந்தபோது தெய்வமகன் பிறந்திருப்பதாய் தேவதைகள் பேசிக்கொண்டதாகவோ, மும்மாரியே பொய்த்துப் போன தேசத்தில் பூமாரி பொழிந்ததாகவோ தகவல் இல்லை. அது மற்றுமொரு பிறப்பு; இந்திய மக்கள் தொகையில் இன்னுமோர் எண்ணிக்கை. அவ்வளவுதான்.

ஆனால், இந்துமதத்தின் தூங்காத ஞானிகளுக்கு மட்டும் தூர தரிசனம் வாய்த்திருந்தால் வைதீகத்தின் ஆணி வேரையே அசைக்கப் போகும் பூகம்பப் பிறப்பு அது என்று புரிந்து கொண்டிருக்க முடியும். அளவில் அது 5.1 ரிக்டர் என்றும் பதிவிட்டிருக்க முடியும்.

இராமலிங்கரும் முன்னோடிகளின் கண்ணீரைக் கடன்வாங்கி பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அறுசீர் விருத்தத்தில் அழுதுபோயிருந்தாலோ, கட்டளைக் கலித்துறையில் கதறிப் போயிருந்தாலோ நெடுஞ்சரித்திரத்தில் அவர் தடம் பதித்திருக்க முடியாது.

ஓர் எளிய குடும்பத்து இராமலிங்கம் 'அருட் பிரகாசர்' என்றானதற்கும் 'வள்ளலார்' என்று வளர்ந்ததற்கும் அவர்தம் ஐந்து திருமுறைகளில் அடங்கியுள்ள பக்திப் பாடல்கள் காரணமல்ல. ஆறாம் திருமுறையின் புரட்சிக் கருத்தே அவரது வாழ்வுக்கே வடிவம் கொடுத்தது; வரலாறு சமைத்தது.

இதை நமது கூற்றாக முன்மொழிவதைவிட தென்னார்க்காடு மாவட்டத்தின் அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.எச்.கார்டின்ஸ் எழுதியதை வழிமொழிவதே தக்கது.

'இராமலிங்கப் பரதேசி கோயில்களில் பாடிய முற்காலப் பாடல்கள் தெய்வங்களின் புகழ்பாடவே அமைந்தன. பின்னாளில் பாடிய பாடல்களே அவர் ஆத்ம வழிகாட்டியாகவும் போதகராகவும் கொண்டாடப்படுவதற்குக் காரணமாயின' உண்மைதான். பிற்காலப் பாடல்கள் என்று அவர் குறிப்பிடுவது ஆறாம் திருமுறையைத்தான் என்பதைக் காலவரிசையின் கணக்கே காட்டுகிறது. தான் வாழ்ந்த 51 ஆண்டுகளின் கடைசிப் பத்தாண்டுகளில்தான் அவர் ஆறாம் திருமுறை எழுதினார். இந்து சமயத்தையும் இந்த சமூகத்தையும் திருத்தியும் எழுதினார்.

இந்து மதத்தின் காவியைச் சலவை செய்து வெள்ளாடை உடுத்துக் கொண்டவர் என்பதனாலும் மனிதகுலத்தின் மீது கொண்ட கருணையைத் தாவர வர்க்கம் முதலிய உயித்தொகுதிவரை நீட்டித்த சன்மார்க்கக் கொள்கையாலும்தான் அந்த ஒளியாளர் இன்னும் உணரப்படுகிறார். இந்தக் கொள்கைக்குத் தடையாக உள்ள எதையும் தள்ளிவிடு என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனால்தான் 'கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக' என்ற சாட்டையடி சமூகம் தாண்டி சமயத்தின் மீதும் விழுகிறது.

வள்ளலாரின் வாழ்வும் செயலும் அவர் வாழ்ந்த காலத்தைத் தாக்குறுத்தின என்று சொல்லவியலாது. அவர் கருத்துகளால் ஊட்டம் பெற்ற அடுத்த தலைமுறையின் ஆளுமைகளால் அவர் அடுத்த நூற்றாண்டில் வெற்றி பெற்றார் என்றே கணிக்க முடிகிறது.

வள்ளலார் மறைந்த ஐந்தாம் ஆண்டில் பெரியார் பிறக்கிறார். எட்டாம் ஆண்டில் பாரதியார் பிறக்கிறார். இருவருக்கும் வயதில் மூன்று ஆண்டுகள் வித்தியாசம். ஆனால் இராமலிங்கரால் பாதிக்கப்பட்டதில் அந்த இருவர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பெரியார் உயர்த்திப் பிடித்த தீப்பந்தத்திற்கான தீயும் பாரதியார் உயர்த்திப் பிடித்த கவிதா தீபத்திற்கான நெருப்பும் இராமலிங்க வள்ளலாரின் அருட்பெருஞ்சோதியில் பற்றவைக்கப்பட்டவை என்று கருத இடமுண்டு. வள்ளலாரின் பாட்டமைதியில் நெஞ்சு பறிகொடுத்தும் சமூக சமயச் சீர்த்ருத்தங்களில் தனக்கு உகந்ததை ஏற்றுக்கொண்டும் பாரதியார் தமிழ்செய்தார். வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தம் என்ற வெளியை மட்டும் பெரியார் உருவிக் கொண்டு விரிவு செய்தார்.

1935-இல் ஆறாம் திருமுறையிலிருந்து வள்ளலார் பாடல்கள் நூறு மட்டும் திரட்டப்பட்டுக் குடியரசுப் பதிப்பகத்தின் மூன்றாம் வெளியீடாக வெளியிடப்பட்டது என்பதே என் கருத்துக்கு ஓரளவு சாட்சி சொல்லும்.

'வேதாக மங்கள்என்று வீண்வாதம்
ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?'

என்று வள்ளலார் எழுதிய வெண்பாவின் விளக்கமும் துலக்கமும் விரிவும் செறிவும்தான் பெரியாரின் மொத்த வாழ்க்கையின் முழுத் திரட்டாகும்.

'நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலை அத்தனையும் பிள்ளை விளையாட்டே'

- என்ற வள்ளலாரின் பொன்வரிகளை வாங்கித்தான்

'மேலவர் கீழவர் என்றே - வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்'

- என்று பாரதி புடம் போடுகிறான்.

வள்ளலார் மறைந்து மரித்தாரா - மரித்து மறைந்தாரா என்ற கேள்வி இன்னும் நிலை கொண்டிருக்கிறது. 'மரணமிலாப் பெருவாழ்வு' என்ற அவரது கருதுகோள் உளவியல் வெளி சார்ந்ததேயன்றி உடலியல் வெளி சார்ந்ததன்று. பௌதிகச் சேர்மானமுள்ள எவ்வுடலும் இந்நாள்வரை மரித்தலில்தான் முடிந்திருக்கிறது. ஆனால் தனக்குப் பிறகும் அவர் தம் கருத்தால் இரண்டு உடல்களில் இயங்கியிருக்கிறார். ஓருடல் பெரியார். இன்னோருடல் பாரதியார். ஆகவே வள்ளலாரின் வாழ்வு வெற்றியா தோல்வியா என்ற வினாவெழுந்தால் இருந்தபோது தோல்வி-மறைந்த பிறகு வெற்றி என்று காலம் எழுதக்கூடும். வள்ளலாரின் காலவெளி மீது பறந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தாலன்றி அவரை விளங்கிக் கொள்ள இயலாது. இந்துமதம் இருக்க அவர் சன்மார்க்க சங்கம் கண்டதும், ஓராயிரம் கடவுளர் இருக்க அவர் உருவ வழிபாட்டை வெறுத்து ஒளி வழிபாடு கண்டதும் வெறும் அடையாளத்திற்கு மட்டும் ஆசைப்பட்டு அன்று.

இந்தியாவின் வரலாறு என்பதென்ன என்ற கேள்வியை எழுப்பி 'இந்தியர் அல்லாதாரின் அரசுகள் எழுந்ததும் விழுந்ததும்தான் இந்தியாவின் வரலாறு' என்ற கடும் விடையையும் முன் வைக்கிறார் காரல் மார்க்ஸ்.
பதினோராம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரை இந்தப் பரந்த நாடு இஸ்லாமியர்களின் இறுகிய பிடிக்குள் கிடந்தது. இன-மொழி கலாசாரக் காப்புக்கும் மீட்புக்குமான போரில் இந்த நாடே 750 ஆண்டுகள் ரத்தத்தில் நனைந்து கிடந்தது.

சிவந்தும் சிதறியும் கிடந்த தேசம் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தது. 1757 முதல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழிருந்த இந்தியா சரியாக 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1858-இல் விக்டோரியா மகாராணியின் நேரடி ஆளுகைக்கு இடம் மாறியது. வள்ளலார் வாழ்ந்த காலத்தையும் உள்ளடக்கிய காலமது.

கிழக்கிந்தியக் கம்பெனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் இராமலிங்கரின் மனமாற்றத்திற்கும் உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது.

மதமாற்றம் இந்த மண்ணில் எந்த வழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்? வருணங்களென்றும் குலங்களென்றும் சாதிகளென்றும் பிளந்துவைத்த இந்து மதத்தின் சந்துவழி புகுந்தனர். அந்நியரை ஓட்ட வேண்டும் - அதற்கு முன்னால் அந்நியர் வருவதற்கு வழிவகுத்த மதச் சண்டைகளின் பிற்போக்குத்தனத்தைப் பிடரிபிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சித்துறவி வள்ளலார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று திருவள்ளுவரும், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று திருமூலரும், 'பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா இறைச்சித் தோல் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ' என்று சித்தர்களும் தமிழ்ப்பரப்பில் நீண்டநாள் ஒலித்த குரல்களைத்தான் வள்ளலாரும் வாங்கி ஓங்கி ஒலித்தார். ஆனால் தன்னையே அடையாளப்படுத்தித் தன் கருத்துக்களையும் நிறுவனப்படுத்தியதுதான் வள்ளலாரின் வரலாற்றுச் செயல் என்று கருதலாம்.

இந்து மதத்தை எதிர்க்கவோ தகர்க்கவோ அவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் காணவில்லை. ஆன்மநேய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கவே அவர் தனித்தியங்கத் தலைப்பட்டார். இந்து மதத்திற்கு எதிர்த்திசையிலும் இயங்கினார். இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது; வள்ளலாரோ வெள்ளை என்றார். இந்து மதம் உருவ வழிபாடு என்றது; வள்ளலாரோ ஒளிவழிபாடு என்றார். இந்து மதம் மக்கள்தொகைபோல் கடவுள் தொகை சொன்னது; வள்ளலாரோ ஒரே கடவுள் 'அருட்பெருஞ் சோதி' என்றார். இந்துமதமோ நால்வருணப்பிரிவைக் கட்டிக்காத்தது; சன்மார்க்க சங்கமோ சாதிமத வேறுபாட்டை வெட்டிச் சாய்த்தது. இந்துமதத்தில் மூடப்பழக்கங்கள் மண்டிக் கிடந்தன சன்மார்க்க சங்கமோ கண்மூடி வழக்கங்களைக் கண்டித்தது. இந்துமதம் மொழிபுரியாத சுலோகங்களைச் சொன்னது; சன்மார்க்க சங்கமோ மக்கள் மொழியே கடவுள் மொழி என்றது. இந்து மதமோ கீதைபோதித்தது; வள்ளலாரோ திருக்குறள் வகுப்பெடுத்தார். இந்துமதமோ பரத்தின் சுகங்களுக்காக இகத்தின் துன்பங்களை ஏற்றுக்கொள் என்றது; சன்மார்க்க சங்கமோ பரத்தின் சுகங்கள் என்று கற்பிக்கப்பட்டவைகளையெல்லாம் இகத்திலேயே எய்துவோம் என்றது. இந்துமதமோ எரித்தலை வற்புறுத்தியது; சன்மார்க்க சங்கமோ புதைத்தலைப் போற்றிச் சொன்னது.

இப்படிப் புரட்டிப்போட்ட வள்ளலாரை எப்படி ஏற்றுக்கொள்ளும் வழிவழி வந்த வைதீகம்?

ஒரு தத்துவம் - ஓர் உண்மை - ஒரு கட்சி - ஒரு கண்டடைவு - ஒரு மாற்றம் முதலிய எந்தக் கருத்தாக்கமும் ஒரே வீச்சில் ஒப்புக் கொள்ளப்பட்டதில்லை. அப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட எதுவும் நின்று நிலைத்ததுமில்லை. எதிர்ப்பைச் சந்திக்காத எதையும் வரலாறு வரவுவைத்துக்கொள்வதில்லை. எதிர்ப்பு என்பது அமிலச் சோதனை; உயிர்நீட்சிக்கான ஒத்திகை.

தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரிந்தால் நீ நெருப்பு. புதைக்கப்பட்ட பிறகும் பூமியை எட்டி உதைத்து முட்டி முளைத்தால் நீ விதை. அக்கினிக் குளியலுக்குப் பிறகும் சாம்பலாகாமல் மீந்திருந்தால் நீ சத்தியம். வள்ளலார் எதிர்ப்புகளால் மெய்ப்பிக்கப்பட்ட சத்தியம்.

வள்ளலார் புகழுறுவதையும் அவர் கருத்துக்கள் கவனம் பெறுவதையும் கோயில் உற்சவங்களில் திருவாசகத்துக்கு மாற்றாய் அருட்பா ஓதப்படுவதையும் கண்டு கண்சிவந்த சில சைவ மடங்கள் வள்ளலாருக்கெதிராய்க் கள்ளக்களம் கண்டன; அருட்பாவை மருட்பா என்று பரப்புரை செய்தன. பேராற்றலும் பெரும்புலமையுமிக்க இலங்கை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை வள்ளலாருக்கெதிராகக் கொம்பு சீவிவிட்டன; நாவலர் ஆறுமுகத்துக்கு ஏழாம் முகமாய் எதிர்ப்பு முகம் ஒன்றையும் ஒட்டவைத்தன. 'பரசமய கோளரி' என்று பாராட்டப் பெற்றவர் 'அகச்சமயக் கோடரி'யாக ஆட்பட்டது ஆச்சரியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் ஆறுமுகநாவலர் தொடுத்த வழக்கு அருட்பாவை மருட்பா என்று மெய்ப்பித்தலுக்கு என்று பலராலும் நம்பப்பட்டு வருகிறது. ஆவணம் சொல்வது அதுவன்று. தம்மை இழித்துப் பேசியதாக வள்ளலார் மீது ஆறுமுக நாவலர் தொடுத்த அவதூறு வழக்கே அது. அந்த அவதூறு யாது என்பதே ஒரு நாகரிக நகைச்சுவையாகும். சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் தம்மை அடுத்திருந்தாரிடம் 'நாவலர்' என்ற சொல்லுக்கு வள்ளலார் எள்ளல் மொழியில் பொருளுரைத்தாராம். 'நா அல்லாதவர் - நாவினால் அலர் தூற்றுபவர் - நாவினால் துன்புறுகிறவர்' என்பதே வள்ளலார் செய்த வார்த்தை விளையாட்டாம். இதுவே அவதூறு வழக்கிற்கு அடிகோலியதாம். தாம் அவ்வண்ணம் மொழியவில்லையென்று வள்ளலார் மறுக்க, அதை மெய்ப்பிக்கவொண்ணாமல் நாவலர் திகைக்க, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உரைக்க நீதிமன்றத்தைவிட்டு அந்த வெள்ளை வெளிச்சம் வெளியேறியதாம்.

பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த ஆறுமுகநாவலருக்கு 'அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்; ஆனால் பொறாமை எலும்புருக்கி' என்ற விவிலியம் விளங்காதது வியப்பே.

வள்ளலாரின் மேன்மைக்குக் காரணம் சொல் மட்டுமன்று; செயல். முற்போக்குக் கருத்துக்களை முன்மொழிந்த முன்னோரெல்லாம் தம்மை நிறுவனப்படுத்தினாரல்லர். ஒரு நிறுவனத்தின் முதுகில் ஏறிக்கொள்ளாத அல்லது ஏற்றப்படாத எதுவும் நீண்டபயணம் காண்பதில்லை. 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்றும் 'சத்திய தருமச் சாலை' என்றும் 'சித்திவளாகம்' என்றும் தம் கொள்கைகளைச் செயல்படுத்தத் தாமே தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டவர் இராமலிங்க வள்ளலார்.

கருத்துக்களை உள்வாங்குவதற்கு மனிதர்களுக்குக் காது கேட்க வேண்டும். அது பசியால் அடைபட்டிருந்தால் கடவுளே வந்து அருள்வாக்கு அருளினாலும் அது காது கடக்காது. காதுக்குக் கருத்து என்பதற்கு முன்னால் வயிற்றுக்குச் சோறு என்பதுதான் மனிதர்களின் தேவை.

1800-களில் இந்தியப் பெரும்பரப்பில் பூகம்பத்தால் செத்தவர்களைவிடப் பசியால் செத்தவர்களே அதிகம்.

'இம்பீரியல் கெஸட்டியர் ஆஃப் இந்தியா' இதழில் பிரிட்டிஷ் அரசு அதிகார பூர்வமாய் அறிவித்த பிணக்கணக்கு ஐம்பத்தைந்து இலட்சம். ஆனால் 'பிராஸ்பரஸ் பிரிட்டிஷ் இந்தியா' என்ற நூலில் 'வில்லியம் டிக் பி' தெரிவித்திருக்கும் மெய்க்கணக்கு ஒரு கோடியே மூன்று இலட்சம்.
தக்காண பீடபூமிக்கு மேலிருந்த மேகத்தை நாடு கடத்திவிட்டு வானம் தொலைந்துபோயிருந்தது. கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கை அளவில்கூட மழைத்துளிகள் இல்லை. பஞ்சம்; பெரும் பஞ்சம். பசிகள் கூடி மனிதனை உண்ணும் பஞ்சம். இயற்கையும் மனிதனும் விநியோகத்தில் செய்யும் தவறுகளுக்குத் தானே பஞ்சம் என்று பெயர்!

மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிட்டனர். ஆடுமாடு பண்ட பாத்திரங்களைத் தொடர்ந்து தானியத்துக்காக வீட்டுக் கதவுகளையும் விற்றனர். நாயைத் துரத்தி அது கவ்விச் செல்லும் எலும்புத் துண்டைக் கைப்பற்றியவர்கள் அது யாருக்கு என்ற அடிதடியில் ஈடுபட்டு எலும்பு நொறுங்கினர். எறும்புப் புற்றுகளின் சேமிப்புக் கிடங்குகளைத் தோண்டிச் சுரண்டி உண்டோர் பலபேர் உண்டு என்று திருநெல்வேலி கலெக்டர் 'மெக் குகே' பதிவிட்டிருக்கிறார்.
தாதுவருடப் பஞ்சத்திற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே 1866-இல் ஒரு பஞ்சம் தென்னகத்தை உயிரோடு உருக்கிச் சாப்பிட்டது.

வள்ளலாரின் பாடல் கண்ணீர் ஈரம் காயாத காலத்தின் பதிவாக வெளிவந்தது.

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர்உறக் கண்டுளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்'

-என்று பெருமூச்சு விட்டதோடு நின்றாரில்லை. அந்தப் பெருமூச்சின் வெப்பத்தையே நெருப்பாக்கி 1867-இல் சத்தியதருமச் சாலையில் அணையாத அடுப்பைப் பற்றவைத்தார். அது சாதிமதபேதமற்ற சமபந்தி என்று சட்டஞ் செய்தார். 'சொல் பித்தளை; செயல்தான் தங்கம்' என்று சொல்லிச் செல்லும் ஒரு துருக்கியப் பழமொழி. வள்ளலார் தங்கமானார்.

பிறப்பு - வளர்ப்பு - உணவு - உடை - உறைவிடம் - கல்வி - பொருளாதாரம் என்று தொடங்கி இறப்பு வரையில் பேணப்படும் பேதங்களைக் கட்டிக்காக்கத்தான் இந்துமதத்தின் உருவ வழிபாடுகளும் அடையாளங்களும் துணைபோகின்றன என்று கண்டறிந்த வள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தார். வழிபாட்டில்கூட ஒன்றுபட முடியாத சமுதாயம் வாழ்க்கையில் எப்படி ஒன்றுபட முடியும் என்று வருந்தி அழுதார். மக்களை ஒன்றுபடுத்த உருவொன்று வேண்டும்; அது உருவமில்லாத உருவாகத் திகழவேண்டும். உண்டென்றும் சொல்லலாம் இல்லையென்றும் சொல்லலாம்; அதுதான் ஒளியின் வடிவம். சோதி வழிபாடு என்ற அவரது சிந்தனையை உலகப் பெருங் கருத்தாகவே கொள்ளலாம்.
வேத சங்கிதைகளின் விளக்கமாக வந்த சுவேதாஸ்வதர உபநிடதம்கூட -

'பிரம்மமே அக்கினி; அதுவே சூரியன்
அதுவே பிரஜாபதி'என்பதோடு நின்றுகொள்கிறதே தவிர அது உருவ வழிபாட்டுக்கு மாற்று வழிபாடாகக் கொள்ளத்தக்கது என்று சொல்லிச் செல்லவில்லை.

இந்த பூமியே உறைந்த நெருப்புதான்; ஒளிக்கோளம் துப்பிய துண்டுதான். உயிர்களின் பிறப்புக்கு ஒளியே மூலம். ஐம்பொறிகளை ஆக்கியது இந்த ஒளி. உயிராற்றலை இயக்குவதே உள்மூச்சால் எரியும் நெருப்புதான். வள்ளலாரின் ஒளி வழிபாடு விஞ்ஞானமயமானது. கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பு அது. இந்த ஒளிவழிபாட்டின் வெற்றி வள்ளலாருக்கு; தோல்வி மனிதகுலத்துக்கு.

வள்ளலாருக்கு மற்றுமோர் அநீதியும் நேர்ந்திருக்கிறது. நாட்டிய மங்கையின் அழகில் ஐக்கியப்பட்டு அபிநயத்தை மறந்துவிடுவதைப் போல இராமலிங்கரின் அருட்பாவில் திளைத்துப்போன பலர் அவரது உரைநடையோரம் ஒதுங்கவில்லை.

தன் மகன் வீதிவிடங்கன் தேரேற்றிக் கன்று கொன்றான் என்று கண்டுகொண்ட மனுநீதிச் சோழன் தன் நீதி வளைந்தது கண்டு நெஞ்சு வளைந்து புலம்புவதில் இராமலிங்கரின் தெள்ளுதமிழ் துள்ளித் துள்ளி வினைப்படுகிறது.

'என் செங்கோலை அளவுகோலென்பேனோ! எழுதுகோலென்பேனோ, ஏற்றக்கோலென்பேனோ! கத்தரிக்கோலென்பேனோ கன்னக் கோலென்பேனோ! குருடன்கோலென்பேனோ! துலாக்கோலென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோலென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்?'

இராமலிங்கரின் அருட்பாவை உள்வாங்கி, பிறமொழி பெரிதும் கலவாத கவிதைநடை கைவரப்பெற்ற பாரதியார்கூட இராமலிங்கரின் உரைநடையை ஓங்கிக் கற்றிருந்தால் கவிதைபோலவே அவரது உரைநடையும் பூத்துப் பொலிந்திருக்கும். அந்த நற்பேறு நமக்கு வாய்க்கப் பெற்றிலோம்.
மணிப்பிரவாளம் கலவாத தனித்தமிழுக்கு மறைமலையடிகளுக்கு முன்னோடி என்று கொள்ளலாம் வள்ளலாரை.

சமரச சுத்த சன்மார்க்கமென்பது இந்து மதத்திற்கு எதிரான இன்னொரு சமயமன்று. அது இன்னொரு வாழ்க்கைமுறை; தன்னுயிர்போல் மன்னுயிர்களை உணரும் கலை. ஆனால் சமயத்திற்கே எதிரியாக அவர் சித்தரிக்கப்பட்டது வரலாற்றில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வாகும்.
இந்து சமயப் பெரியோர்களில் யார்தான் மதத்தை விமர்சிக்கவில்லை?

'ஒரு சூத்திரன் வேதம் கேட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்று. ஒரு வரி நினைவிருந்தாலும் நாவினை வெட்டிவிடு - இம்மாதிரி வாசகங்கள் சில ஏடுகளில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பிசாசுகள் முற்காலத்திலும் தோன்றியிருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்' - இப்படி ஒரு கருத்தை வெகுண்டு சொன்னவர் பெரியாரல்லர் - விவேகானந்தர்.
'மனுஸ்மிருதியின் சில பகுதிகள் மீது எனக்கு நம்பிக்கை விழவில்லை. அவற்றைப் படித்ததன் பயனாக எனக்கு நாத்திக உணர்வுகூட அரும்பிற்று' - என்று சொன்னவர் நாராயண குரு அல்லர் - உத்தமர் காந்தி அடிகள்.
இப்படி எதிர்மறைச் சிந்தனைகளை முன்வைத்தாலும் இந்து மதத்தின் கிழிசல்களைத் தைத்து உடுத்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

'இயலவே இயலாது; அது கந்தலாய்க் கிடக்கிறது. தைத்தாலும் கிழியும்; துவைத்தாலும் கிழியும். அழுக்குறாத - கிழியாத - சலவை செய்யத் தேவையில்லாத ஒளியாடை நெய்து உடுத்துவோம் என்று ஊரை அழைத்தார் வள்ளலார்; உடுத்தியும் காட்டினார். சிலர் உடுத்துக்கொண்டார்கள். பலரோ கந்தலாடையில் அடித்த பழைய மரபுவாசனையில் மயங்கிக் கிடந்தார்கள்; கிடக்கிறார்கள். அதனால் வள்ளலார் தோல்வி கண்டார் என்று தூர எறிந்துவிட முடியாது.

இலட்சியவாதிகளின் வாழ்க்கை ஒருநாள் பந்தயமல்ல - வெற்றி தோல்விகளை மாலைக்குள் அறிவதற்கு. அது யுகங்களின் மீது எட்டுவைத்து நடக்கும் பயணம்.

சில விதைகள் முளைக்கவில்லையே என்று விதைத்தவன் வருத்தப்படக்கூடாது. என்றோ எங்கிருந்தோ பறந்து வரும் ஒரு பறவை அதை விழுங்கி எட்டாத மலைமீது எச்சம் இட்டுக் காடு வளர்க்கும்.

அந்தப் பறவையின் வரவுக்காக வள்ளலாரியம் இன்னும் ஒரு நூற்றாண்டோ ஒரு யுகமோ காத்திருக்கலாம்.

கருவூலம் கண்ட திருமூலர் - வைரமுத்து

பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் - மந்திரம் - உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்திரம் வேதப்பொருளன்று; ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்குசெய்வது ஆகமம்.
சிவப்பொருளை உள்ளீடாகக் கொண்டு, உறுதிப்பொருளுரைக்கும் மெய்யாற்றுப்படை இதுவென்று சைவத் தமிழர்களால் பேசப்படுவது; தலைமுறைகளால் பேணப்படுவது திருமந்திரம்.
சமய மறுப்பாளரும் இதனைச் சமயநூலென்று கருதவியலாது. நம் முன்னோர்கள் கட்டியெழுப்பிய திருக்கோயில்கள் கண்டவிடத்து, சிற்பக் கலைக்குச் செழுமை சேர்த்த இனத்தார் பெருமை இதுவென்று கடவுள் மறுப்பாளரும் களிகூருமாறுபோல, திருமந்திரத்தின் சிவப்பொருள் கழித்தும் இது தமிழர் தத்துவ சாரத்தின் தனிப்பனுவல் என்று தடந்தோள் விரியலாம். இது அறமாக விளங்கும் தமிழர் மெய்யியலுக்கு வரமாக வந்த வரவென்றும், வெவ்வேறு கால வெளிகளில் விளங்கிவந்த தமிழர் தம் தத்துவ முத்துக்களை ஆரவாரமில்லாமல் தொடுத்த அறிவாரமென்றும் தமிழ்ச்சமயம் கருதுகிறது.
மந்திரம் என்ற சொல்லாட்சியை முன்னிறுத்தி, 'ஸ்ரீமந்த்ர மாலிகா' என்னும் வடமொழி நூலின் தமிழ் வடிவுதான் திருமந்திரம் என்று கருதிக் கழிந்தாருமுளர். ஆனால், மந்திரம் என்ற சொல் -
''நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப''
என்று தொல்காப்பியத்திலேயே துலங்கி விளங்கிப் புழங்குகிறது. மேலும் அவர்கள் விடயமாகச் சுட்டிய அந்த வடமொழி நூலுக்குத் தடயமே இல்லை. ஆகவே, இது தமிழர் தத்துவத்தின் முழுமுதல் காட்டும் முதுநூல் என்று கொள்வதே உண்மையை மகிழ்வுறுத்துவதாகும்.

கருத்தையோ ஒரு நூற்பொருளையோ அது பிறந்த காலத்தின் வேரடி மண்ணோடுதான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆனால் திருமூலர் குறித்தும், அவர்தம் காலம் குறித்தும், நெற்றியில் முளைத்த முடிபோல் நம்ப முடியாத சில கதைகள் நாட்டில் நிலவுகின்றன.
கயிலையிலே நந்தியருள் பெற்ற சிவயோகி ஒருவர், அகத்திய முனிவரோடு அளவளாவும் ஆசையுற்றுத் தென்னாடு பயணித்தபோது காவிரிக்கரை கடந்தாராம். அங்கே மூலன் என்னும் மாட்டிடையன் ஒருவன் இறந்து கிடந்தது கண்டு காம்புவழி பால்சொரியும் பசுக்கள் கண்வழி நீர்சொரியக் கண்டாராம். பசுக்களின் துயரம் தீர்க்கக் கருதிய சிவயோகியார் மூலன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாராம். மாடுகளை வீடு சேர்த்துத் தம் உடல்தேடிச் சென்றபோது அது தொலைந்திருக்கக் கண்டு, திருவாவடுதுறை அரசமரத்தடியில் அமர்ந்து யோகநிலையுற்று ஆண்டுக்கொன்றாய் மூவாயிரம் பாடல் பாடி
னாராம். அதுதான் தமிழ் மூவாயிரம் என்னும் பெயரிய திருமந்திரமாம். இந்தக் கதை உண்மையின் கோடுகளுக்குள் இல்லை என்றே தோன்றுகிறது.
மூலன் என்ற தமிழன் பெருமையைத் தமிழனுக்கே வழங்காமல் அதனை வடநாட்டுச் சிவயோகிக்கு வார்த்துக் கொடுப்பது என்ன நியாயம்? ஏன்? ஓர் இடையன் ஞானமுறக்கூடாதா? அல்லது ஞானமுறுதல் இயலாதா? கண்ணன் என்ற ஓர் இடையன் கீதோபதேசம் செய்வது சாத்தியமெனில் தெற்கே ஓர் இடையன் மந்திரோபதேசம் செய்வது சாத்தியமாகாதோ? ஆகும்; அவன்தான் திருமூலன்.
திருமூலரின் காலம் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முற்பட்டதென்றும் ஏழாம் நூற்றாண்டுக்கு உட்பட்டதென்றும் திருவாவடுதுறை ஆதீனம் கூட்டிய திருமந்திர மாநாட்டில் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ கூறிய கூற்றை ஏற்றுக் கொள்வது இயல்புடைத்தாகும். திருமந்திரத்தின் தொடரமைதியும், திசைச்சொல் வாசனையும், மொழிநெகிழ்ச்சியும், மாற்று உள்ளடக்கமும் இந்தக் கால எல்லைக்குக் கட்டியம் கூறுகின்றன.
ஏழாம் நூற்றாண்டின் காலப்பெருவெளியில் திருமூலரைப் புடம்போட்டால் உண்மையின் உள்ளொளி தெரியவரும்.
பெளத்தவிகாரைகளும் சமணப் பள்ளிகளும் தத்தம் மதங்களை நிலைநிறுத்த நிறுவனப்பட்டபோது, சைவமும் தன்னை அகத்தும் புறத்தும் கட்டமைத்துக்கொள்ளக் காலம் அறிவுறுத்தியது. நாயன்மார்கள் சைவத்தைத் தோத்திரங்களால் தூக்கி நிறுத்திய காலையில் அதனைச் சாத்திரங்களால் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. நாயன்மார்களின் நெகிழ்ந்த தமிழையும் சித்தர்களின் செறிந்த மரபையும் கூட்டிக் குழைத்துச் சித்தாந்தப் பனுவல் செய்யும் திருப்பணியைச் செய்யுள் தெரிந்தவரெல்லாம் செய்ய இயலாது. சைவத்தின் திருவையும் சித்தர்களின் மந்திரத்தையும் ஒன்றுகூட்டித் தமிழ் செய்யத் தொன்றுதொட்ட பேரறிவு வேண்டும். அது திருமூலர் என்ற திருமுனிக்கே வாய்த்திருந்தது.
சைவசித்தாந்தத்தோடு சித்தர்களின் ஞானம் கலந்தபிறகுதான் தத்துவநிலை கடந்து அது வாழ்வியல் நோக்கி வளர்ந்தது. பதி - பசு - பாசம் என்ற குழூஉக்குறி கொண்ட சைவசித்தாந்தம், பதியைத் தலைவராகவும் பசுவை உயிராகவும் பாசத்தைப் பற்றாகவும் சுட்டிச் செல்கிறது. தலைவன் என்ற சொல்லைச் சிவமென்று செய்துகொண்டார்கள் சித்தர்கள். பற்றறுத்த உயிர்கள் சிவப்பொருள் சேர்வதே உயிரின் உச்சம் அல்லது பிறவிப் பெரும்பேறு என்று நம்பினார்கள். அழியாப் பொருளோடு ஐக்கியமாவதற்கே இந்த அழியும் பொருள் பிறந்தது என்ற கருதுகோளையே சைவச் சகடத்தின் அச்சாணியாக்கினார்கள்.
மேற்குலகம் பருப்பொருளின் பெளதிக ஆராய்ச்சியில் புகுந்து புற உலகின் அகலங்காணப் புறப்பட்ட வேளையில், கிழக்குலகம் மனமென்னும் நுண்பொருள் ஆராய்ச்சியில் நுழைந்து அகவெளியின் ஆழங்காணப் புறப்பட்டது. உடல் - உயிர் - மனம் என்ற மூன்றையும் பொருத்தியும் தனித்தனியே இருத்தியும் புரிந்துகொள்ள முற்பட்ட மெய்யுலகம், அணுக்களின் சேர்மானத்தில் ஆக்கப்பட்ட பொருள்களெல்லாம் அழிபட்டே தீரும் என்று ஆய்ந்து கண்டது. தீப்பொறிகளைப் போலவே நட்சத்திரங்களும் காலவித்தியாசத்தில் கழிவன என்று கண்டது. சுற்றிவரும் பூமி மட்டுமன்று மற்றுமுள சந்திரசூரியரும் அழிந்தொழிவதே அண்டவிதி என்று கொண்டது. அவர்களின் புரிதலில் அணுக்களால் ஆக்கப் பெறாத இறைப் பொருள் ஒன்றுதான் என்றும் அழியாதது. அவர்களுக்கேற்ற மொழியில் அதைச் சிவமென்று செப்பிக் கொண்டார்கள். இந்த உடம்பென்ற தசைப் பொருளுக்குள் வதியும் உயிரை இறைப் பொருளோடு இரண்டறக் கலத்தல் என்ற உள்ளொளிப் பயணத்தில் இயங்குகிறது திருமூலரின் திருமந்திரம்.
கடவுள் என்பதற்குத் திருமூலர் கொண்டிருக்கும் கருதுகோள் தமிழ்வெளியில் அவருக்கென்று தனித்த அடையாளம் தருகிறது. கடவுள் என்பது வான்வெளியிலோ மண்பரப்பிலோ தேடிக் கண்டடையும் திருப்பொருளன்று. அது ஒரு கருதுநிலை. அது ஓர் உணர்ச்சி; உணரக் கூடியதன்றி உணர்த்தக் கூடுவதன்று. உருவம் தராதே. உணர்த்தவும் முயலாதே. அது உன் அகவய அனுபவம். கடவுள் என்பதொரு நினைப்பு. ஈசன் என்பதோர் இனிப்பு. தேனைச் சுவைக்கிறாயே. அந்தச் சுவை கறுப்பா? சிவப்பா? என்று எரிகணைக் கேள்வி எறிகிறார் திருமூலர்.
''வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே''
இப்படி உருவ வழிபாட்டைச் சலவை செய்வதற்கு ஒரு சித்தனின் சித்தம் வேண்டும். உணர்பொருளே கடவுளென்று காட்ட ஒரு ஞானம் வேண்டும்.
கடவுள் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்த இவ்விடமே செவ்விடமென்று இக்கட்டுரை கருதுகிறது.
கடவுள் என்பது வெறும் உள்ளூர்ச் சரக்கன்று; உலகச் சரக்கு. கடவுளைக் கடக்க வேண்டுமானால் முதலில் கடவுளைச் சந்திக்க வேண்டும். மனிதகுல வரலாற்றில் 'கடவுள் வந்த காலமும் வந்துபோன காலமும்' என்று ஒன்று வரும். டினோசரும் - அன்றில் பறவையும் திடப்பொருளாய் வந்து மறைந்தவை. கடவுள் என்பது அருவமாய் வந்து மறையக் கூடியது. சீனப் பழங்குடிகளின் போர்க்கடவுள் 'வேத் வோ' இப்போது எங்கே? கிரேக்கப் போர்க்கடவுள் 'அரேஸ்' இப்போது எந்த யுத்தக்களத்தில் சண்டையிடுகிறார்? ரோமானியக் கடவுளான 'மார்ஸ்' பற்றித் தகவல் தர முடியுமா? ஆப்பிரிக்க ஆதிக்குடிகளின் கடவுள் 'முரிக்' அவர்களுக்கின்னும் அருள்பாலிக்கும் தூரத்திலிருக்கிறாரா? இப்படி எல்லாக் கடவுள்களுக்கும் ஓர் இறந்தகாலம் வரும்.
இயற்கை மனிதனை மிரட்டியபோது அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன் றினார். ஒரு படைப்பாளன் கடவுளுக்கு உருவம்தந்த காலையில் கலையின் கருப்பையில் கடவுள் பிறந்தார். ஆளும் வர்க்கம் அடிமை வர்க்கத்தை அடக்கியாளக் கருதியபோது நிறுவனத்தின் கருப்பையிலிருந்து கடவுள் அவதரித்தார். கடவுளின் தேவையிலிருந்து மனிதகுலம் விடுபடும் யுகத்தில் கலையில் மட்டுமே கடவுள் மிஞ்சுவார். பிறகு கற்பித்த உருவம் கழிந்து ஒரே ஓர் உணர்வாக மட்டுமே கடவுள் கருதப்படுவார்.
இந்த வகையில் திருமூலர் என்னைக் கதற வைத்த கவிதை ஒன்றுண்டு.
பல குடங்களில் தண்ணீர் நிரப்பியிருக்கிறீர்கள். எல்லாக் குடங்களிலும் ஒரு துண்டுச் சூரியன் மிதக்கிறது. ஒவ்வொரு குடத்துக்குள்ளும் ஒரு சூரியன். ஆனால் உச்சியில் ஒளிர்வது ஒரே சூரியன்தான். குடத்துக்குள் விழுந்த சூரியன் தனக்கே சொந்தமெனக் குடத்தை மூடினால் அக் கதிரவன் குடத்துக்குள் அடங்குவனோ? ஒவ்வொரு குடத்துக்குள்ளும் தோன்றினாலும் கதிரவன் குடத்துக்குள் அடங்காதவாறு போல ஒவ்வோர் உடம்பிலும் உறையினும் அந்த உடம்புக்கே சொந்தமாகாது உயிர். அந்த உயிரே இறைப்பொருள் என்று நம்புகிறார் திருமூலர்.

''கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே''
திருமூலரை இப்படி எழுத வைத்த அனுபவவெளியின் மீது என் மனப்பறவை திரிந்து திரிந்து பறந்து பறந்து திகைக்கிறது.
''ஊர்க்கிணறு தோறும் மிதக்கிறது ஒரே நிலா'' - என்ற ஜப்பானிய ஐக்கூ கவிதை பின்னாளில் பேசிய ஒரு சிறுபொருளைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு பெரும்பொருளாகப் பேசிமுடித்த மூலனின் மூலம் என்னை வியக்க வைக்கிறது.
எல்லா உடம்புக்குள்ளும் உறைவது இறையென்று நம்பப் படுவதன் இன்னொரு துண்டு என்ற கோட்பாடுதான் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற உலகப் பெருங்கருத்தை முன்வைக்கச் செய்தது மூலரை. சாதிபேதம், இனபேதம், மதபேதம், வர்க்கபேதம் என்ற அனைத்து பேதங்களையும் அழிக்க முற்படும் ஆயுதம் என்றே கருதவேண்டும் இந்தக் கருத்தாடலை. உடலை இறையோடு பொருத்திய இந்த உயிர்க் கொள்கைதான், இழித்துச் சொல்லப்பட்ட உடலென்ற பொருளை மதித்துப் பேசும் மாண்பு கொடுத்தது.
'உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே'
இந்தக் கருத்து தமிழுக்குப் புதுவது; மாயாவாதத்தைச் சூறையாடுவது.
''காயமே இது பொய்யடா - வெறும் காற்றடைத்த பையடா'' என்று சிரித்துக் கொள்ளா
மலும், பட்டினத்தடிகள் போல் இது ''சலமலப் பேழை'' என்று சலித்துக் கொள்ளாமலும், ''உடம்பொரு கோயில்'' என்று உரக்கச் சொன்ன திருமூலர் உபநிடதங்களின் 'உயிர் அழிவதில்லை' என்ற பழைய வாதத்தையும் களைந்தெறிகிறார்.
''ஆத்மா பிறப்பதில்லை; இறப்பதுமில்லை. அது எதிலிருந்தும் வெளிப்பட்டதில்லை; அதில் எதுவும் வெளிப்படுவதுமில்லை. உடல் அழியும்போதுகூட ஆத்மா அழிவதில்லை'' என்று சொல்லும் கடோப உபநிடதத்திற்கு மாறாக,
''உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்''
என்று பாடிய செறிவும் அறிவும் திருமூலத் தமிழனுக்கு வாய்த்திருக்கிறது.
உடலறிவு குறித்த பௌதிகக் கதவைத் திருமந்திரமே முதலில் திறக்கிறது. முதன் முதலில் மூச்சறிவியல் பேசப்படுவதும் திருமந்திரத்திலேதான். எலும்புகள் நிறுத்தி, நரம்புகள் பொருத்தி, இறைச்சியை இருத்தி, உறுப்புகள் மலர்த்தி, உயிர்த்திரி கொளுத்தி உலவவிடப்பட்ட இந்த உடலுக்கு நாடிகள் மொத்தம் பத்தென்று கணித்தார்கள் ஞானச்சித்தர்கள்; அவற்றுள் முக்கியமானவை மூன்றென்றும் முடிவு கட்டினார்கள்.
நீர்வழிப்பட்ட சிலேட்டுமம் - தீ வழிப்பட்ட பித்தம் - வாயுவழிப்பட்ட வாதம் இம்மூன்றுமே உடலென்ற எந்திரத்தின் எரிபொருட்கள் என்று கண்டார்கள். தசைநார்களை இளக்கம் செய்வதும், எப்போதும் இயங்கும் இதயத்தின் சூடு தணிவிப்பதும், நாவின் ஈரம் காப்பதும், உதிர ஓட்டத்தை ஒழுங்குறுத்துவதும், மூட்டுகள் தேயாமற் காத்தலும் சிலேட்டுமத்தின் செம்பணிகள். உணவை எரித்தலும், அறிவும் நினைவும் அழியாமற் காத்தலும், குருதிக்கு நிறமூட்டலும் தோலின் பளபளப்பைப் பாதுகாத்தலும் பித்தத்தின் பெரும்பணிகள். மூச்சினைச் சீர் செய்தலும், உயிருக்கு உயிர்ப்பூட்டலும், மனமொழி மெய்களை நேர் செய்து சீர் செய்தலும், தாதுக்களை உண்டாக்கலும், கழிவுகள் புறந்தள்ளலும் வாதத்தின் அரும்பணிகள்.
நீரின்றியும் நெருப்பின்றியும் இவ்வுடல் சின்னாட்கள் வாழ்வது சாத்தியமெனினும் காற்றின்றிச் சின்னேரம் வாழ்வதும் சிரமம். அந்தக் காற்றுக்கும் உடலுக்குமான தொடர்பைத் தமிழ்க்குலத்துக்கு முதலில் சொன்ன பேரறிஞன் எங்கள் மூலனே என்பது காலம் எமக்களித்த கர்வமாகும்; தமிழ் எமக்களித்த தருக்காகும்.
''ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே'' -
என்பது திருமந்திரம்
அஃதென்ன காற்றைப் பிடிக்கும் கணக்கு? அதுதான் மூலர் அருளிய மூச்சறிவியல்.
பகலில் எட்டு மில்லி மீட்டர் சுருங்கி, இரவில் எட்டு மில்லி மீட்டர் நீண்டுவிடும் இந்த உடம்புக்குப் படுத்திருக்கும்போது நிமிடத்துக்கு 9 லிட்டரும், அமர்ந்திருக்கும்போது 18 லிட்டரும், நடைபயிலும்போது 27 லிட்டரும் மூச்சுக்காற்று தேவைப்படுகிறது. சராசரியாக 250 கோடி முறை துடிக்கும் இந்த இருதயம் ஒருநாளில் 18,000 லிட்டர் ரத்தத்தை இறைக்கிறது; காற்றால்தான் அந்த இயக்கம் நடைபெறுகிறது.
இந்தக் காற்றுதான் நுரையீரல் சென்று, உயிர்வளி, நைட்ரஜன், ஹைட்ரஜன், உயிராற்றல் எல்லாவற்றையும் உதிர ஓட்டத்தில் கலக்கிறது. உதிர ஓட்டத்தின் மூலம் அவை செல்களுக்குப் பரிமாறப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் மீண்டும் உதிரத்தில் கலக்கின்றன. அந்தக் கழிவுகளையெல்லாம் நாம் விடும் வெளிமூச்சுதான் வெளியேற்றுகிறது. உட்சுவாசம் உணவு; வெளிச்சுவாசம் கழிவு. உயிரின் இயக்கம் காற்றுதான். சொல்லப்போனால் உயிரே காற்றுதான். அந்தக் காற்றை இழுத்தல் - இருத்தல் - வெளியிடுதல் மூன்றுக்கும் ஒரு கணக்கிருக்கிறது என்று கண்டார் திருமூலர். அந்தக் காற்றைப் பிடிக்கும் கணக்கை அவர் வழியில் உங்களுக்குக் காட்ட விழைகிறேன்.
முவ்வழிகளில் வினைப்படுகிறது மூச்சு. பூரகம் கும்பகம் மற்றும் இரேசகம். பூரகம் என்பது காற்றை இழுத்தல். கும்பகம் என்பது உள்ளே இருத்துதல். இரேசகம் என்பது வெளியே விடுதல். இந்தப் பூரகம் கும்பகம் இரேசகம் மூன்றுக்குமான கால அளவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. 16 நொடி மூச்சை உள்ளிழுத்து, 64 நொடி அதை உள்ளே இருத்தி, 32 நொடி மூச்சை வெளியிட்டால் மட்டுமே சித்தர்கள் கண்டறிந்தபடி 72,000 நரம்புகளுக்கும் உயிர்ச்சத்து ஓடி உட்சேரும் என்பது திருமூலர் கணக்கு.
''ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண் டதிரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே!''
என்பதே காற்றைப் பிடிக்கும் கணக்கு.
இது சராசரி மனிதர்க்கு சாத்தியமில்லை; சாத்தியம் செய்தோன் சராசரியில்லை.
உயிரியக்கத்தின் வழியே காற்றும் காற்றியக்கத்தின் வழியே உயிரும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்வதன் கருமூலம் கண்டு சொன்னவர் திருமூலர். அருகம் புல்லின் நுனியில் தூங்கும் பனித்துளியளவில், விந்தணுவில் ஒரு கரு முளைவிட்டதும் ஓடிவந்து சூழ்ந்து நின்று அந்தக் கருமுளையைக் காவல் செய்வதும் காற்றுதான், உயிருள்ள காலம்வரை உடன் உறைவதும் காற்றுதான். இப்படிப் பேணப்படும் உடம்பின் பெருமை சொன்னதும் திருமூலர்தான்; உயிர் விட்டதும் இது உதவாத பொருளென்று உதறித் தள்ளுவதும் திருமூலர்தான்.
மரணத்தைப் புரிந்து கொள்வதில் தொடங்குகிறது மனித இனத்தின் நாகரிக முதிர்ச்சி. மரணம்தான் இந்த பூமியின் தொடர்ச்சி. அது இன்னோர் உயிருக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும் இடப்பெயர்ச்சி. சொல்லப்போனால் மரணம்தான் பூமியின் புராதனச் சுத்திகரிப்பு. நாம் எல்லோருமே நம் முன்னோர்களின் மரணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதிர்ந்த சருகு வழிவிட்ட இடத்திலிருந்துதான் புதிய தளிர் புறப்பட்டு வருகிறது. மரணம் என்பதைப் பூரணம் என்று புரிந்துகொள்கிறவன் பெரும் பேற்றாளன். மரணத்தால் இந்த உடல் பெருக்கி எறியப்படும்போது அதனால் பெருக்கி எறிய முடியாத பெருஞ்செயல் செய்தவனே மரணத்திற்கு மரணம் தருகிறான். ''மரணத்தை வீரத்தோடு தழுவிக் கொள்கிறவன் தன்னைத் தானே ஆசீர்வதித்துக் கொண்டவன்'' என்ற உத்தமர் காந்தியடிகளின் வாசகம், நல்ல மரண ஊர்வலத்திற்கு முன்னால் நடந்துபோவதைப் பார்க்கிறேன்.
நிலையாமையைச் சொல்லி நெஞ்சுறுதியூட்டுகிறார் திருமூலர். செல்வத்தின் நிலையாமை சொல்லவந்த திருமூலர், ''உனது செல்வம் உன்னை ஒருபோதும் காப்பாற்றாது; உனது நிழலில் நீ ஒதுங்க முடியுமா?'' என்று கேட்கிறார். ''குடம் உடைந்தால் ஓடு மிச்சம்; உடல் உடைந்தால் ஏது மிச்சம்?'' என்று எள்ளி நகையாடுகிறார். மரணம் பூமியின் நிலைத்த மெய் என்று உலகோடு உரையாடுகிறார்.
எப்போதோ பயின்ற ஒன்று இப்போது நினைவாடுகிறது.
வாழ்க்கை மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம் : ''என்னை ஏன் நேசிக்கிறார்கள். உன்னை ஏன் வெறுக்கிறார்கள்?'' மரணம் சொன்னதாம் : ''ஏனெனில், நீ ஓர் அழகான பொய்; நான் கடினமான உண்மை''. உண்மையை எதிர்கொள்வதும் கடைசியில் ஏற்றுக்கொள்வதுமே வாழ்வின் உள் மையம்.
''ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பின் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினுள் மூழ்கி நினைப்பொழிந் தார்களே''
என்று போகிற போக்கில் மரணத்தைப் புறங்கையால் தள்ளிப் போகிறார் திருமூலர்.
நிலையாமையும் மரணமும் மனிதனை அறத்திற்கே ஆற்றுப்படுத்த வேண்டும் என்று ஆணையிடுகிறார்.
ஏ தமிழா... அறிவியல் வழிப்பட்ட திருமூலரின் திருச்சொல் கேள்; அறம் புரி; அன்பு கொள்; உடல் பேணு; உயிர் வளர்; வெட்டவெளியெங்கும் உன் மனப்பறவையை ஓட்டு. நட்சத்திரம் கொத்து; சூரியன் தின்; நிலாப்பால் பருகு. உன் இதயவெளி பெரிது. அதில் கடல் ஒரு குடம். ஆகாயம் ஒரு சாளரம். கொடி கோணலாகிக் கிடந்தாலும் பூ நிமிர்ந்தே பூக்கிறது. ஒவ்வொரு மலரும் ஓர் உலகம். ஒவ்வோர் உலகமும் ஒரு மலர். குறையுடைய வாழ்விலும் குற்றமேதுமில்லை. இறக்கை ஒடிந்த குயிலும் சுதிமாறிப் பாடுவதில்லை. வாழ்க்கை இன்பத் தோட்டம். மரணம் ஒரு கொண்டாட்டம். இறைவன் இருப்பது உண்மையானால் நீ நம்பு. நீ இருப்பது உண்மையானால் இறைவன் உன்னை நம்பட்டும். திருமந்திரத்தின் நறுமந்திரத்தை ஓதி ஓதி உள்வாங்கு. நல்லன புதுக்கு; அல்லன ஒதுக்கு. ஒரு ஞானப்பரம்பரையின் நீட்சி நீ என்று நினை. திகைக்கும் உனக்குத் திருமூலன் துணை.
மூவாயிரம் பாடிய திருமூலருக்கு ஒரு
மந்திரம் பாட என் உள்ளுயிர் துடிக்கிறது. பாடுகிறேன் :
''பூவிடும் மூச்சோ புறவெளி போகும்
தீவிடும் மூச்சோ திசைவழி ஏகும்
மேவிடும் தமிழால் மெய்ம்மறை சொல்லி
நீவிடும் மூச்சே நித்தியமாகும்''
வணங்க வேண்டும்; உன் திருப்பாதம் காட்டு திருமூலா!