வெள்ளி, 3 ஏப்ரல், 2020

இராமன் ஓர் அசைவப்பிரியன்

இராமாயணமும் லங்கையும் என்ற ஆங்கில நூலை 1940 ஆம் ஆண்டு டி. பரமேசுவர ஐயர் எனும் ஆய்வாளர் எழுதியுள்ளார். இந்தியாவில் இருக்கும் எல்லா இராமாயணக்கதைகளையும் ஆய்வு செய்து அவற்றினடிப்படையில் இராமன் ஒரு மதுப்பிரியராகவும் இறைச்சி விரும்புபவராகவும் காட்டுகிறார்.


வில்வித்தையை விரும்பி புரிந்த வில்லாளியான இராமன் மாமிசத் தேவைகளுக்காகவே வேட்டையில் வேட்கை மிக்கவனாக இருந்துள்ளான். அவன் மனம், தசைத் திரட்சிமிக்க உடற்கட்டோடு இருந்ததெல்லாம் இறைச்சிக்காக வேட்டையாடிய விளைவால் வந்தவையே என்கிறார். (பக்கம் 129)

"கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டியபோது திரும்பி அயோத்தியிருக்கும் திசைநோக்கி இராமன் தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்போது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டையாடப் போகிறேன்? இந்த வேட்டை இராஜரிஷிகள் சம்மதித்தல்லவா? ( அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27).

"விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான்- காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டுமே புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் " என்று கூறுகிறான். (அயோத்யா காண்டம் சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29) நூலின் பக்கம் -130.

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது இராமனின் மனைவி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் மதுவும் இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள் நுழைந்த அன்று, இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப்பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக இராமனும் இலட்சுமணனும் வில் அம்போடு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டுவந்து ஒரு மரத்தடியில் சமைத்து சாப்பிட்டனர். (சர்க்கம் 52 பாடல் 102) சுவையான இறைச்சியை சீதைக்குத் தந்து அவளை இராமன் திருப்திபடுத்தினான். (சர்க்கம் 96 பாடல் 1).

இத்தோடு முடியவில்லை இறைச்சிப்படலம்! மாறுவேடத்தில் வந்த இராவணனுக்குக்கூட சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்! என் கணவர் விரைவில் வந்துவிடுவார். காட்டுப்பொருட்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி,காட்டுப்பன்றி கொண்டு வருவார். இஷ்னுமான் (முதலை முட்டை தின்னும் விலங்கு) கொண்டு வருவார். (ஆரண்ய காண்டம் சர்க்கம் 47, பாடல்கள் 22,23)

இப்படி இராமன் இறைச்சியுண்டதை ஏதோ ஓரிடத்தில் குறிப்பிடவில்லை வால்மீகி. பல்வேறு இடங்களில் இறைச்சியையே இராமன் தேடித்தேடி விரும்பி உண்டதாக வலியுறுத்திச் சொல்கிறார். வால்மீகியும் ஒரு வேடனென்பதால் வேட்டையாடிய இராமனையும் அவன் இறைச்சிப்பிரியனாக இருப்பதையும் சொல்லி சிலாகித்து எழுதுகிறார்.

இராமனின் பெயரால் நிகழும் தூய பிம்பங்களும் மாட்டிறைச்சி அரசியலும் இராமகாதைகளுக்கு முற்றிலும் முரணானவை. இராமனைத் தமிழுக்குக் கொண்டு வருகிற கம்பன் தன் மொழியாளுமையால் அப்போது தமிழகத்தில் நிலவிய புலாலுண்ணாமையை இராமாயணத்தில் எழுதுகிறார்.

இறைவனுக்குரிய எந்த இலக்கணத்திற்குள்ளும் இல்லாத இராமனைக் கம்பன் தன் கவித்திறத்தால் கடவுளாகக் கட்டமைக்கிறார். ஒழுக்கமற்றுத் திரிந்த வடக்கத்திய கதைபாத்திரத்தைத் தமிழாய்ந்து எழுதுகிறபோது ஒழுக்கத்தின் விழுமியங்களை ஒப்பேற்றி வைக்கிறார் இராமன் மீது.

கம்பராமாயணம் தமிழ் இலக்கியப்பெருங்கடலில் மிக முக்கியமானது. எண்பதாயிரம் எதுகை, மோனைத்தொடைகளோடும் கணக்கில்லாத கவியுறைந்த உவமைகளாலும் கம்பராமாயணத்தில் தமிழை இறைத்து நிரப்புகிறார். பத்து எதுகைக்கே படுத்துவிடுகிற பாவலர்களில் ஆயிரக்கணக்கான எதுகைகளோடு எக்காளமிடுகிறது கம்பன் கைவிரல் பிடித்த எழுத்தாணி!

ஆளாளுக்கு இராமாயணத்தை வளைத்தெழுதிய பின்பு கம்பனைக் கடைத்தேற்றிவிடக் கருதாத கவிஞர்கூட்டம் காலமைதி கொண்டுவிட்டது. மீண்டும் இராமாயணத்தை எழுதத் தொடங்கினால் அதில் வரலாற்று நாயகனாக கலைபத்தில் தலைசிறந்த இராவணன் கதைநாயகனாக விளைந்தெழுவான். 

குடைவரை அடைமழை


கரிசல்நிலத்தின் விரிசல்கழனியாய் வீணாய்க்கிடந்தேன். வந்து போன வாடைக்காற்றுக்கெல்லாம் ஓடைக்கூச்சலுக்குண்டான உற்சாகப்போலி காட்டிக்கொண்டிருந்தேன்.

இம்மியளவு ஈரக்கசிவு இதயத்துகளை நனைத்துவிடாதாவென கும்மிக்கும்பிட்டு கூனிக்குறுகிப் போயிருந்தன என் ஏக்கமுதுகெலும்பு! 

ஆயுட்காலத்து அடைமழையோடு நீ மட்டும் வந்துசேராவிடில் பாளம் பாளமாய் வெடித்து பாழாய்ப் போயிருக்கக்கூடும் உடலுழுவயல்! நீ தந்த ஈரத்தழுவலில் தான் என் உயிர்க்கூடு நெடுநாளாய் அரிக்காமல் அடைகாத்த நெல்மணிகள் வேர்விடத் தொடங்கின. 

உன் தேகம் என் மோகத்தோடு மோதி மோதி எப்போதும் முப்போகம் விளையக் காத்திருக்கிறது அளவெடுத்த அங்கம் ஒன்று, யாழ்மீட்டும் விரல்போல் சூலில் நின்று!

தூங்காத இரவிலொருநாள் தாங்கொணாக் களைப்பிலிருந்த பொழுது பூங்காற்றாய் அங்கம் தழுவினாய்! கழுவாத என் பிறவியழுக்கை அத்தழுவல் தான் முழுதாய் தூய்மை செய்தது. 

தேனில் விழுந்த மீன்போல தேகமெல்லாம் இனிக்கக் களித்தேன். திளைக்கத் திளைக்க நான் திகட்டிக்கொண்டிருந்த போது பூவிரல் நீட்டி புத்துணர்ச்சி புகட்டத் தெரிந்தது உனக்கு.

எப்போதும் சொல்வேன் அந்தப் புத்துணர்ச்சிக்கு ஆயிரக்கலவியின் ஆற்றல் இருந்தது என்று!

திருந்துவதும் வருந்துவதும் தீயப்பழக்கமென இருந்த எனக்குள் மருந்தென வந்து மகத்துவம் செய்தவள் நீ! தீராச் சோகத்தினடியில் மீளாச் சிறைபோல் அடைபட்டுக் கிடந்தவனை நம்பிக்கைச்சொல்லடுக்கி மீட்டுவிட வந்தவள் நீ! குற்றவுணர்ச்சி தவிர்த்து மற்றவுணர்ச்சிக்கெல்லாம் மனங்கொடுத்து அலைந்தவனை இனங்கண்டு இழுத்துக்கொண்டு இளைப்பாற வைத்தவள் நீ!

வேக்காட்டில் வெருண்டு சாக்காடன்றி சாகக்கிடந்தவனை உன் உள்ளங்கை குளிர்வில் பூக்காடு பார்க்க புத்துயிர் ஊட்டியவள் நீ! மௌனக்குழியில் மரணக்கிடக்கில் சரணடைந்து போனவனை வார்த்தைகளில் தீர்த்தந்தெளித்து கெடுதலைத் தடுத்து விடுதலை தந்தவள் நீ!

நீயென்பது நீ மட்டுமில்லை நானும் சேர்ப்பென்ற செம்மையான வார்ப்புக்கு செப்பனிட்டுக் கொடுத்தவள் நீ! வாடிக்கிடக்கும் வாலிபத் திசுக்களைக் கூடிக்களித்து கொண்டாட முடியுமென்ற நாடிக்கணக்கை நடைமுறைபடுத்தியவள் நீ! 

வியாழன், 2 ஏப்ரல், 2020

களிற்றுத்துன்பம்

கூர்தீட்டிகளால்
கொலையுண்டுபோன
யானைகளின் கதறல்
கானத்தை அரற்றியது!

திடுக்கிட்டெழுந்த
என் கனவுக்குள்
அந்தக் கதறல்
கேட்டுக்கொண்டேயிருந்தது!

ஏனிந்த தொல்லை?
எங்கோ விழுந்த அடிகளும்
குத்திக் கிழித்த காயங்களும்
என் நினைவுக்கடியில்
நெருஞ்சிமுட்களை
ஏன் தூவிப்போகின?

பழைய நாட்களுக்குள்
காலப்பயணம்
போய் வந்த நாளொன்றில்
கண்டுகொண்ட உண்மைக்கு
களிறுபட்ட துன்பத்தின் சாயல்!

பெண்வாழ்க்கையோடு
பெரும்பாடு துயரங்களுக்கெல்லாம்
விலங்கொடு அனையும்
விந்தை இருக்கிறது தான்.!

நான்பட்ட பாடுக்கு
யானை வாழ்க்கை போலும்!



செவ்வாய், 31 மார்ச், 2020

நம்பிக்கையெனும் நல்மருந்து!

'யாரை நம்புவது?' என்ற கேள்வி எல்லா வயதுடையோராலும் வரம்பின்றி கேட்கப்படுகிறது. 'யாரையும் நம்ப முடியவில்லை!' என்ற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. 'இது நம்மையும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது' என, ஏன் எவருக்குமே குற்றவுணர்ச்சி ஏற்படுவதில்லை.

ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளாத - தோல்வியை ஏற்றுக்கொள்ளாத - சிறு அவமானத்தைச் சகித்துக்கொள்ளாத மனங்களை உருவாக்கி வருகிறோம். இது சரிதானே?! ஏன் ஏமாற வேண்டும்? ஏன் தோற்க வேண்டும்? எதற்காக அவமானப்பட வேண்டும்? என்ற கேள்விகள் இயல்பாக எழக்கூடும்.

யாரையும் ஏமாற்றாமலோ, யாரையும் தோற்கடிக்காமலோ, யாருக்கும் அவமானம் தராமலோ இருக்கிறோமா? இருந்தால் இதையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை தான். ஆனால் அப்படியில்லையே! நம் சூழ்நிலைக்காக யாரையும் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நம் பெயர்ப்போதைக்காக உடனுற்ற நண்பர்களைக்கூட தோற்கடிக்கத் துடிக்கிறோம். நம் தேவைக்காக யாரையும் அவமானப்படுத்தும் அடிமனக்குரூரத்தோடு அலைகிறோம்.

ஏமாற்றினாலென்ன? எல்லோரையும் நம்புவதால் என்ன இழந்துவிடப் போகிறோம்.! யாரை நம்பலாம் எனத் தேடித்தேடி தெளிவோடு ஆளறியத் தெரிந்துகொள்வதைக் காட்டிலும் எல்லோரையும் நம்புவது உள்ளத்தைத் தெளிவாக வைத்திருக்கும்.

தோல்வியின் அனுபவத்தைக் கொண்டாட யாருமே தயாராயில்லை. போட்டியிடுவதே ஓர் இயக்கநிலைக்கு நம்மை இட்டு வைக்கும். அதைத்தான் நாம் ஆர்வத்தோடு செய்துகொள்ள வேண்டும். ஆனால், வெற்றிக்காக மட்டுமே போட்டியை அணுகுவதால் போட்டியிடும் பண்பிலிருந்து விலகி எல்லோரையும் தோற்கடிக்கவே துடிக்கிறோம்.

போட்டியிடுவதுதான் மிகச்சிறந்த பண்பு! வெற்றியைக் காட்டிலும் நம்மை நாம் துல்லியமாக சோதித்துக்கொள்ள போட்டி மட்டுமே உதவக்கூடியது. அதை யார் சொல்லித் தருகிறார்கள்? எல்லோரும் முதலிடத்திற்கு வர வேண்டுமெனில் யார்தான் இரண்டு, மூன்றென தொடர்வது? உடனிருப்போரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பெருமைப்படுவதற்காகவே நாம் வென்றாக வேண்டிய கட்டாயத்தைக் கற்றுக்கொள்கிறோம்! இது எத்துணை அபத்தமானது!

என்ன இழப்பைச் சந்தித்தாலென்ன? எத்தனைச் சோகங்கள் சூழ்ந்தாலென்ன? யாரையும் நம்பிவிடாதே என யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். சா விளிம்பின்வரை சூழ்ந்தோரைச் சார்ந்து வாழும் வாழ்விது! தனியாக இருந்து போட்டியிடவோ, தன்னை யாரென நிரூபிக்கவோ, தன் பெருமை சொல்லி பீற்றிக்கொள்ளவோ,தான் ஏமாற்றப்பட்டதைச் சொல்லிக் காட்டவோ தனியாக இருந்து செய்ய இயலாது. எதிரில் யாராவது அல்லது ஒரு கூட்டமோ தேவைப்படும்.  ஆகவே எல்லாவற்றிற்கும் அப்பால் ஒருவரை நம்புவதைப் போல மனதிற்கு இளகானது எதுவுமில்லை. ஏமாற்றத்தைத் தாண்டியும் ஏமாற்றியவரை மீண்டும் ஒரு வாய்ப்பளித்து நம்புவதைவிட அவரை வருத்தவும் திருத்தவும் தக்க தீர்வு எதுவுமில்லை. மேலும் எல்லோரையும் நம்பும் நபராக நாம் மாறும்போது எல்லோராலும் நம்பும் ஆளாக நாம் பிறக்கிறோம்.

நம்பிக்கை நல்லது! ஏமாற்றினாலும் நம்பிக்கை நல்லது! ஏமாற்றப்பட்டாலும் நம்பிக்கை நல்லது! தோற்றாலும் அவமானப்பட்டாலும் விழுந்தாலும் அதிலிருந்து மீள நம்பிக்கையே நல்லது! ஆதலால் அறுதியிட்டு சொல்கிறேன்,  அனைத்து இழப்பையும் சோகத்தையும் தீர்ப்பதற்கு ஒரு நம்பிக்கையே மருந்தாக முடியும்! 🖤

The Red Balloon என்ற பிரெஞ்சு படம்


"Le Balloon Rouge" என்ற பிரெஞ்சு மொழி படம் ஒன்றைத் தேடிப் பார்த்தேன். Albert Lambroiss என்பவர் இயக்கியுள்ளார்.

மகிழ்வைத் தேடித்தேடி உள்வாங்கிக்கொள்ளத் தயாராயிருக்கும் மானுட மனத்திற்கான குறியீடுகளைக் கொண்டு இயக்கப்பட்டுள்ள குறும்படம் அது.

செந்நிறப் பலூனைக் கண்டடைகிற ஒரு சிறுவன் அதைத் தன்னோடு வைத்துக்கொள்ள விரும்புகிறான். உடனுள்ளோர் எல்லோரும் அவனிடமிருந்து அப்பலூனை பிடுங்கி எறிய நினைக்க, அப்பலூன் அச்சிறுவனைச் சுற்றியே வருகிறது.

அவனிடம் இருக்கும் பலூன் அவனை மகிழ்விக்கிறது. அது பலரை அவன் மீது பொறாமை கொள்ளச் செய்கிறது. பலூன் திடீரென உடைக்கப்படுகிறபோது அவன் உருக்குலைந்து அழுகிறான். அந்நேரம் பலூன் விற்பவரிடமிருந்து பலூன்கள் வான்நோக்கி பறக்கின்றன.

மொத்தமாக வானோக்கி பறக்கும் பலூன்களெல்லாம் அவனிடம் வருகின்றன. அவற்றையெல்லாம் அவன் ஒன்றாக கட்டிப் பிடித்துக்கொள்கிறான். அவை அச்சிறுவனை மேலே தூக்கி பறக்கின்றன. அப்படியே கதை நிறைவடைகிறது.

மிக எளிய கதை! ஒரு மனிதனை மகிழ்விக்க உயிரற்றப் பொருள்கூட உயிரோட்டமாகத் தெரிகிறது.
வாழ்வின் உன்னதத்தை மிக எளிமையாக கடத்துகின்ற கதை இது.

1956 ஆம் ஆண்டில் வெளியாகி சிறந்த குறும்படத்திற்கான Academy Award -ஐப் பெற்றுள்ளது. உரையாடல்களுக்கு அப்பால் திரைக்கதை நமக்கு தெளிவாகப் புரிகிறது.

-உதய்
31-03-2020