சனி, 24 ஜூன், 2017

யானேயாகி - சிறுகதை (மித்ரா)




                 கண்கள் இப்போது எரியத் தொடங்குகின்றன.வெகு நேரமாக மிண்ணணுப் பொருட்களோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன்.வெகு நாட்களாக இக்கூடத்தினுள்ளும், வெகு காலமாக இமைசேர விடாது இடை நிற்கும் என் கனவுகளோடும் உயிர் பொதித்து வைத்துள்ளேன். என் துணையாகவோ, உதவிக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ ஸீரோ (sero) இருக்கிறான்.என் இனிய இயந்திரன்.

         இதோ, இன்னும் சில தினங்கள், தொடு வானமாய் ஜாலம் காட்டிய என் கனவுகளை துரத்திப் பிடிக்கும் முயற்சியில் வெல்லப் போகிறேன். கை தொடும் தூரத்தில் இருக்கிறது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் என் மந்திரக்கோல்.

         விரும்பியவரை விரும்பிய காலத்திற்குச் சென்று வாழ வைக்கும் மந்திரக்கோல், இரண்டு பொத்தான்கள் மற்றும் கைரேகை பதியும் தொடுதிரையுடன் கூடிய என் எந்திரம்,  ' நேரத்தை திரும்பக் கொண்டு வர இயலாது ' எனும் கூற்றை வழக்கொழிக்கும். இனி உலகத்தாரின் தவறான முடிவுகளை நானே மாற்றுவேன்.

"நான் மித்ரா. உலகை மாற்றும் வித்தை அறிந்தவள்."

         கண்கள் இப்போது எரியத் தொடங்குகின்றன.

"ஸீரோ, Coffee கிடைக்குமா?"

         பதில் பேசாமல் Coffee தயாரிக்கத் தொடங்கியிருந்தான் ஸீரோ. அடுத்த இரண்டு நிமிடங்களில் கோப்பை என் கையில் இருக்கும். அதுவரை நாளிதழைப் புரட்டலாம். தலை வலித்தது. எழுத்துகள் நடனமாடின. ஆராய்ச்சியை முடித்த பின்னே மீண்டும் புத்தகங்கள் படிக்கத் தொடங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

" மித்ரா, Coffee! "

" thanks ஸீரோ..நாளிதழ் படித்தாயா? "

" படித்தேன். "

" ஏதேனும் முக்கியச் செய்தி? "

" உள்ளது. மரணத்தை வெல்லும் மருந்திற்கான ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. சில தினங்களிலேயே கூட ஆய்வு வெற்றி என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம். "

" நல்லது. நம்மைப் போலவே கனவுகள் சுமப்பவர்கள் ஏராளம். அனைவரும் வெல்லட்டும். ஆக, இனி வரும் காலங்களில் யாரும் மரணிக்க மாட்டார்கள். இல்லையா ஸீரோ? "

" ஆம் மித்ரா, இது மருத்துவ உலகின் மாபெரும் புரட்சி. ஆனால் இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மருத்துவத்துறை தான். "

" பார்ப்போம் ஸீரோ. அதற்கும் ஏதேனும் யோசித்திருப்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். நான் சற்று உறங்குகிறேன். இரண்டு மணி நேரம் கழித்து எழுப்பி விடு. "

         அவன் எழுப்பி விடும் முன்னரே எழுந்துவிட்டேன். உறக்கமும், ஓய்வும் உடலுக்குத் தான். கனவுகள் உறங்குவதில்லை. உறங்கவிடுவதுமில்லை. மீண்டும் வேலைகளைத் தொடங்கினேன்.

*****

" எவ்வளவு சதவீதம் மீதமுள்ளது மித்ரா? " ஸீரோவின் எந்திரக்குரல் சமீபமாகக் கேட்டது.

" கொஞ்சம் தான் ஸீரோ. ஒருவாறு முடித்து விட்டேன். ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். பின்பு மேலும் சில வசதிகளைப் பொருத்த வேண்டும். அதன் பின்பே காப்புரிமை பெற வேண்டும். "

*****

" Hurraayyy...... " மகிழ்ச்சியில் கத்தியே விட்டேன். சத்தம் கேட்டு வந்தான் ஸீரோ.

" என்னவாயிற்று மித்ரா? "

" எதுவுமில்லையே... "

" இன்னும் எவ்வளவு சதவீதம் மீதமுள்ளது மித்ரா? " ஸீரோ கேட்க அதிர்ந்தே விட்டேன். இறுதியாக இன்று வென்றும் விட்டேன்.

"கொஞ்சம் தான் ஸீரோ..ஒருவாறு முடித்து விட்டேன்.ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும்.பின்பு காப்புரிமை பெற வேண்டும்.."

"மேலும் என்ன வசதிகள்?"

"பின்பு சொல்கிறேன்.அவைகளை நானே இன்னும் முழுதாக வடிவமைக்கவில்லை.இப்போது வேலையிருக்கிறது, பின்பு பேசலாம்."

        மீண்டும் எந்திர வடிவமைப்பில் ஈடுபட்டேன்.

         நாளை என் வாழ்வில் மட்டுமில்லை உலக வரலாற்றிலேயே மிக முக்கியமான நாள்.மித்ரா காலத்தை வெல்லப் போகும் நாள். I am the very first time traveller in the world.

02.06.2037

         காலப்பயணத்திற்கு தயாரானேன். என்ன வேண்டுமானாலும் நேரலாம். நான் திரும்ப இயலாமலும் போகலாம் இடுப்பில் ஒரு கைத்துப்பாக்கியோடும், என் கையகல கால எந்திரத்தோடும் எதிர்காலத்தை நோக்கிக் கிளம்புகிறேன்.

02.06.2080

         கால எந்திரத்தில தேதியைக்  குறிப்பிட்டு, கைரேகையை வைத்தழுத்த, அழுந்த மூடிய விழிகள் பிரியும் போது கண் முன் விரிந்தது என் எதிர்காலம் கனவு போல இருந்தது.

         ஆஹா..என் இந்தியாவா இது? எத்தனை சுத்தம்?இது என்ன வாகனங்கள் பறக்கின்றன. யாரிடமாவது நட்பாக வேண்டுமே.சாலையில் யாரையுமே காணவில்லை. நான் மட்டும் நடந்து கொண்டிருந்தேன்.

         அப்போது, முட்டை வடிவிலான ஏதோவொன்று வந்தது. நீல வண்ணத்தில் ஏதோ வாகனம் போல. என் அருகில் நின்றது.

" என்ன நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்? "

" சும்மா தான் "

" என் உதவி தேவைப்படுகிறதா? நான் உங்களை எங்கேனும் இறக்கி விடட்டுமா? "

" ஆனால் இதில் ஒருவர் அமரத்தானே இடம் இருக்கிறது? "

அவள் சிரித்துக் கொண்டே ஒரு பொத்தானை அழுத்தினாள். மேலும் ஒருவர் அமரும் அளவிற்கு பலூன் போல விரிந்தது.

" ஊருக்குப் புதிதா? "

விஞ்ஞான விந்தைகள்.

" ஆம், புதிது தான். ஆனால் நான் நடந்து செல்ல விரும்புகிறேன்.உதவிக்கு நன்றி. " என்றேன்.

அவள் விடுவதாயில்லை.

" இப்போதெல்லாம் யாரும் நடப்பதில்லை miss. .....? "

" மித்ரா " என்றேன் சிரித்துக் கொண்டேன்.

" இப்போதெல்லாம் யாரும் நடப்பதில்லை மித்ரா. சரி நானும் உங்களோடு சற்று  நடக்கிறேன்."

என்று வாகனத்திலிருந்து வெளியே வந்தவள், வெளியிலிருந்து மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தினாள். சதுர வடிவப் பெட்டியாக, ஒரு பெரிய கைப்பைக்குள் அடங்கும் அளவுக்கு சுருங்கியது வாகனம். எடுத்து கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

" செல்லலாம் மித்ரா. "

         பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். எனக்கும் அவளைப் போல ஒரு துணை தேவைப்பட்டது தான். நான் கேட்பதற்கு முன்பே அத்தனையும் சொல்லிக் கொண்டிருந்தாள். விழி விரியக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

         நான் கண்ட கனவுகளை எல்லாம் கண் முன்னே பார்ப்பது போல் இருந்தது. அத்தனை முன்னேற்றம். அத்தனை வளர்ச்சிகள். அனைத்திலும் அறிவியல். ஆனால், வரும் வழியில் கணும் மனிதர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தனர்.

" இது என்ன? மனிதர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஏறத்தாழ ஒன்று போல தோன்றுகிறார்களே?  உடல் ரீதியாகவோ, உடை ரீதியாகவோ வேறுபாடுகள் ஏதும் புலப்படவில்லையே? "

"அப்படித் தான் மித்ரா. சில காலங்களுக்கு முன்பு பாலியல் வேறுபாட்டுக் கலகங்கள் தோன்றின. ஆண் பெரியவனா?  பெண் பெரியவளா?  என்று இருபாலரும் அடித்துக் கொண்டனர். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ரீதியாக, அன்றாட அலுவல்களிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பலதரப்பட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின் பாலின வேறுபாடுகள் களையப்பட்டன. இட ஒதுக்கீடுகளும் ரத்து செயப்பட்டன. ஒருவருக்கொருவர் மதிப்புக் குறைந்தவர் அல்ல எனும்படியாக சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் இப்படித் தான் மித்ரா. அவர்களே சொல்லாத வரையில் பாலினம் கண்டறிதல் அரிது. அதற்கேற்றபடி இயற்கைக்கு மாறான உணவு முறைகளால் உடல்ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட்டன. "

" நன்றாக தமிழ் பேசுகிறீர்கள். அழிவை எதிர் நோக்கியிருந்த மொழி இப்போதும் வாழ்கிறது ஆச்சரியமாக இருக்கிறது. "

" இத்தனை வருட விஞ்ஞான வளர்ச்சியில் அழியாமல் வாழ்வது நம் மொழி மட்டும் தான் மித்ரா. நவீனமயமாக்கப்பட்ட சமூக வலைதளங்களால் தமிழ் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது மித்ரா. "

" மிக்க மகிழ்ச்சி. பணி புரிகிறீர்களா? "

" ஆம், வீட்டிலேயே. "

         அதற்குமேல் அதுபற்றி அவளிடம் கேட்க நான் விரும்பவில்லை. ஒரு கேள்விக்கு ஒன்னரை முழத்தில் பதில் சொல்கிறாள். பேசுவதற்கு விரும்புகிறாள் போல. ஆனால், அதைக் கேட்பதற்கு நான் விரும்பவில்லை.

         அவள்புறம் திரும்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தேன். எங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள். ஆட்கள் வசிக்கிறார்களா? இல்லையா? எதுவும் தெரியவில்லை. அசாதாரண அமைதி. ஒரு மரம், செடி ஒன்றையும் காணவில்லை. காக்கைகள், நாய்கள் கூடத் தென்படவில்லை. இது நகரமாக இருக்கலாம். கிராமப்புறங்கள் வேறெங்கும் இருக்கலாம்.

         ஆள் அரவமற்ற, கண்ணுக்குக் குளிர்ச்சியற்ற பாதையினூடான பயணம் சலிப்புத் தட்டியது. பாவம் இந்தக் காலத்து மனிதர்கள்.

         என் முகம் சென்ற போக்கைப் பார்த்து அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

" பசிக்கிறதா மித்ரா? "

" ஆம், கொஞ்சம் " என்றேன்.

         அவள் கைப்பைக்குள் கையை விட்டுத் துழாவினாள். ஏதேனும் சிற்றுண்டி வைத்திருப்பாளோ? ஒரு நெகிழிப்பையை எடுத்தாள். அதில் சில பெரிதும் சிறிதுமான உருண்டைகள் இருந்தன. இந்தக் காலத்து உணவுப் பொருளாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

        ஆனால் அவள் என்னிடம் நீட்டியது தண்ணீரையும், ஒரு மாத்திரையையும்...

" பசிப்பதற்கு எதற்கு மாத்திரை? "

" பசி போக்கும் மாத்திரை. உணவு உண்ணும் பழக்கம் மறைந்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. உணவுப் பொருட்கள் விளைவிக்க நிலங்களும் இல்லை. விவசாயப் பணிபுரிய மனிதர்களும் தயாரில்லை. சொல்லப் போனால் உணவு தயாரிக்க ஆகும் செலவுகளை விடவும் இம்மாத்திரைகளை வாங்கும் செலவு குறைவு. " எனக் கூறிக் கண்ணடித்தாள்.

" wtf?  உணவுக்கு பதில் மருந்துகளா? உடல்நலம் கெட்டுப்போய் விரைவில் மரணித்து விடுவீர்களே? "

" யாரும் மரணிப்பதில்லை மித்ரா. மானுடம் மரணத்தை வென்று வெகு நாட்கள் ஆகிறது. "

நேற்று ஸீரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

" அது சரி. என்ன செய்தாலும் மரணம் நேராது எனும் போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா? ஆமாம்...அதனால் இப்போது மருத்துவர்கள் கிடையாதா? "

" தெரிந்து தான் பேசுகிறாயா மித்ரா?  இப்பொழுது உலகை ஆள்பவர்கள் மருத்துவர்கள் தான். "

" மரணம் வெல்லும் மருந்து உலகத்தை அழிக்கும் மாபெரும் சதி மித்ரா. மனிதர்களுக்கு மரணம் தான் நேராது. ஆனால், நோய்கள் முன்னை விட பலமடங்கு பெருகிவிட்டன. அதற்கு மருத்துவம் பார்த்துத் தான் ஆக வேண்டும். விட்டுவிட்டால் என்ன நேரும் யோசித்தாயா? எந்தவொரு நோயாலும் யாரும் சாக மாட்டார்கள். ஆனால், சிகிச்சை அளிக்காமல் நோயின் தீவிரம் சற்றும் குறையாது. "

         இதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லையே. எவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது. வேண்டுமென்றே நோய் பரப்புவார்கள். மருத்துவம் பார்க்கும் வசதியற்ற மக்கள் சாவதற்கும் வழியின்றி துடித்துக் கொண்டே கிடப்பார்கள். என்ன அநியாயம் இது? மானுடம் பயன் பெறத் தானே மருத்துவமும், விஞ்ஞானமும். இவர்கள் ஏன் சாகா மருந்தையெல்லாம் உட் கொண்டனர். எரிச்சலாக வந்தது. கேட்டு விட்டேன்.

" நீங்கள் ஏன் சாகா மருந்தையெல்லாம் உட்கொண்டீர்கள்? "

" விளம்பரம் மித்ரா. சந்தைப் படுத்தினார்கள். ஆசையைத் தூண்டினார்கள். ஒரு கட்டத்தில் இலவசமாகவும் அம்மருந்தை விநியோகித்தார்கள். சாகாமல் இருக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது? "

"கிட்டத்தட்ட இருபது, இருபத்தைந்து வருடங்களாக யாரும் மரணிக்கவில்லையெனில் அவர்கள் எல்லாம் எங்கே?  இடநெருக்கடி., " சொல்லி முடிப்பதற்குள் அவள் பதில் சொன்னாள்.

" அந்தக் கதை தெரியாதா உனக்கு? "

" எந்தக் கதை? "

" வா என்னுடன் " என்று கூறிக் கொண்டே வாகனத்தை விரித்தாள். நானும் உள்ளே அமர்ந்தேன். போகுமிடத்தை உள்ளிருந்த தொடுதிரையில் பதிந்து விட அது வேகமெடுத்தது. அவளுக்கு வேலையேதும் இருக்கவில்லை.

         ஒரு பிரமாண்ட கட்டிடத்தின் முன் வாகனம் நின்றது. ஐம்பது அல்லது அறுபது வயதையொத்தவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நியாய விலைக்கடையாக இருக்குமோ என நினைத்துக் கொண்டேன்.

" ஐம்பது வயதிற்கு மேல் இங்கு வாழ யாருக்கும் அனுமதி இல்லை மித்ரா.அவவ்கள் அவர்களின் கடந்த காலத்திற்கு சென்று விட வேண்டும். "

" கடந்த காலமா? "

" காலப்பயணம் - Time travel பற்றி அறியவில்லையா மித்ரா? "

சிரித்துக் கொண்டேன்.

" மேலே சொல். "

" இரண்டு பொத்தான்களுடனும்,  கைரேகை பதியும் தொடு திரையுடனும் இருக்கும் கைபேசி போன்ற எந்திரம் தான் காலப்பயணம் செய்ய உதவும் மித்ரா. அதன் மூலம் நாம் நாம் வாழ்ந்த காலத்திற்கோ வாழப்போகும் காலத்திற்கோ செல்ல முடியும். அந்த காலத்திற்குண்டான நம் வயதின் படியே அங்கு பிரவேசிப்போம். "

" ஓஹ்...அப்படியா? "

    என் கண்டுபிடிப்பை, அதில் பின்பு நான் செய்யப் போகும் திருத்தங்களை என்னிடமே ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

" ஆம் மித்ரா. மரணம் வென்றவர்கள் ஜுவிக்க இங்கு இடமுமில்லை. செலவினங்களும் அதிகம். அதனால் மீண்டும் அவர்களை அவர்களின் பால்யத்திற்கே அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு தாங்கள் எதிர்காலத்திலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து போவார்கள். எப்போதும் போல வாழ்வார்கள். நடந்தவையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் நடக்கும். எதுவும் மாறாது. யாரும் மரணிக்க மாட்டார்கள். மீண்டும் அவர்களின் ஐம்பது வயதின் போது நிகழ்ந்ததெல்லாம் நினைவு வரும். எத்தனை காலப்பயணம் சென்றிருக்கிறோம், ஒரே வாழ்க்கையை எத்தனை முறை வாழ்ந்திருக்கிறோம் என்பது நினைவு வரும். மீண்டும் மீண்டும் வாழ சலிப்புத் தட்டிப் போய் வேறு வழியுமின்றி பயணத்திற்கு தயாராகிறார்கள். "

         மிரண்டு போனேன் நான். இதென்ன அத்தனையும் இங்கு இயற்கைக்கு மாறாக நடக்கிறது? நான் கண்டுபிடித்தது சாதனை இல்லையா? காலப்பயணமும், சாகா மருந்தும் இவ்வளவு பெரிய அழிவு சக்திகளா? இதையெல்லாம் தெரிந்தே தான் விஞ்ஞான உலகம் முழுவீச்சில் செயல்படுகிறதா? ஆயிரம் கேள்விகள் மனதுள் ஓடிக் கொண்டிருந்தன.

" இப்போது எங்களின் ஒரே தேவை, எதிர்பார்ப்பு என்ன தெரியுமா மித்ரா? "

கேள்வியாய் பார்த்தேன்.

" சாகும் வரம் மித்ரா.மரணிக்கும் மருந்து. " என்றாள் விரக்திப் புன்னகையுடன்.

" சரி. நான் வருகிறேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "

எனக்கூறி மறைந்தேன்.என் எதிர்காலத்தில் நான் கண்ட கடைசி காட்சி கண்ணீருடன் தங்கள் கடந்த காலத்தை நோக்கி பயணமாகும் முதியவர்கள்.

         கண் விழித்த போது என் ஆய்வுக்கூடத்தில் இருந்தேன்.

         இப்போது சாகா மருந்திற்கான ஆய்வு வெற்றி பெற்றால் ஏற்படப்போகும் விபரீதங்களை விளக்கி, அந்த ஆராய்ச்சிக்கு நிரந்தரத் தடை கோரி ஐ.நா சபையில் கோரிக்கை வைத்திருக்கிறேன். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

         என் காலப்பயண ஆராய்ச்சிகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.

         நான் மித்ரா. இயற்கையை சீரழிக்கும் அபரிதமான விஞ்ஞான வளர்ச்சிக்கு  எதிராக போராடும் விஞ்ஞானி நான்.

சாகாவரம் போல் சோகம் உண்டோ?
முடியா கதையை கேட்போர் உண்டோ?