செவ்வாய், 30 ஜனவரி, 2018

உதயோவியங்கள்



ஓவியமோ, மொழியறிவுக்கப்பால் விழியறிவை விரித்துரைக்கும் கவித்துவம். ஓவியன் கவிதை எழுதுவதும் கவிஞன் ஓவியம் வரைவதும் கலைக்குத் தேவையான பரிணாம வளர்ச்சி.






ஓவியங்கள் மீதான ஆர்வமும் தேடலும் சின்னஞ்சிறு பிள்ளைதொட்டு எல்லோருக்கும் இருப்பதை உணரலாம். எழுத்தின் வழியே உலகத்தை அறிந்ததும் உலகத்திற்கு அறிவித்ததும் இதயத்தின் இயல்பான நடையாகும். எழுதத் தெரிந்த காலம் முதல் எதுகை மோனைக்கு ஏற்றபடி கற்றுக்கொண்டதும் வாசிப்பவர் நேசிக்கும்படி வார்த்தைகளை வார்க்கத் தெரிந்ததும் இதுவரை என்னை ஓரளவுக்கேனும் உயர்த்திக் காட்டியிருக்கிறது. 











ஓவியம் - வாசிப்பின் அயற்சியின்றி அதைப் படைத்தளித்தவனின் எண்ணக்கருத்தைப் புரிய முடிந்த எளிய ஊடகம். ஒரு கவிஞனின் காந்த மனம் தானெண்ணியதை எத்துணை இலகுவாய் இயம்ப முடியுமென்பதில் எப்போதும் ஊக்கத்தோடு ஆக்கங்காணும். மொழியை வழிசெய்யும் மேதைமைக்கு அது உதவியாய் இருப்பதாக அவன் தன்னை ஆற்றுப்படுத்தி போற்றுவான். 




செவ்வாய், 23 ஜனவரி, 2018

யுகத்துக்கு ஒருவன் - வைரமுத்து

ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.
ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.
வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க
வில்லையே! ஏன்?
மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.
பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.
""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில்
பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து
சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.
இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.
கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.
பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.
அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.
சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.
சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.
இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.
ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.
""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.
- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.
இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.
அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.
பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.
""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.
அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.
இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.
கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.
பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.
அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.
காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.
எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.
அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.
""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.
1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.
பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''
சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''
பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?'' சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.
""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.
இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.
பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.
இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.
""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.
""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.
""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.
பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும். ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.
வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.
திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.
""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.
நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.
""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''
பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.
அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:
""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)
மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.
"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா
கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்
கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன?
பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.
சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை.
அது "யுகாக்கினி'.

வெள்ளை வெளிச்சம் - வைரமுத்து

1823. மருதூர் இராமையாபிள்ளையின் ஆறாம் தாரத்தின் ஐந்தாம் மகனாக இராமலிங்கர் பிறந்தபோது தெய்வமகன் பிறந்திருப்பதாய் தேவதைகள் பேசிக்கொண்டதாகவோ, மும்மாரியே பொய்த்துப் போன தேசத்தில் பூமாரி பொழிந்ததாகவோ தகவல் இல்லை. அது மற்றுமொரு பிறப்பு; இந்திய மக்கள் தொகையில் இன்னுமோர் எண்ணிக்கை. அவ்வளவுதான்.

ஆனால், இந்துமதத்தின் தூங்காத ஞானிகளுக்கு மட்டும் தூர தரிசனம் வாய்த்திருந்தால் வைதீகத்தின் ஆணி வேரையே அசைக்கப் போகும் பூகம்பப் பிறப்பு அது என்று புரிந்து கொண்டிருக்க முடியும். அளவில் அது 5.1 ரிக்டர் என்றும் பதிவிட்டிருக்க முடியும்.

இராமலிங்கரும் முன்னோடிகளின் கண்ணீரைக் கடன்வாங்கி பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அறுசீர் விருத்தத்தில் அழுதுபோயிருந்தாலோ, கட்டளைக் கலித்துறையில் கதறிப் போயிருந்தாலோ நெடுஞ்சரித்திரத்தில் அவர் தடம் பதித்திருக்க முடியாது.

ஓர் எளிய குடும்பத்து இராமலிங்கம் 'அருட் பிரகாசர்' என்றானதற்கும் 'வள்ளலார்' என்று வளர்ந்ததற்கும் அவர்தம் ஐந்து திருமுறைகளில் அடங்கியுள்ள பக்திப் பாடல்கள் காரணமல்ல. ஆறாம் திருமுறையின் புரட்சிக் கருத்தே அவரது வாழ்வுக்கே வடிவம் கொடுத்தது; வரலாறு சமைத்தது.

இதை நமது கூற்றாக முன்மொழிவதைவிட தென்னார்க்காடு மாவட்டத்தின் அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.எச்.கார்டின்ஸ் எழுதியதை வழிமொழிவதே தக்கது.

'இராமலிங்கப் பரதேசி கோயில்களில் பாடிய முற்காலப் பாடல்கள் தெய்வங்களின் புகழ்பாடவே அமைந்தன. பின்னாளில் பாடிய பாடல்களே அவர் ஆத்ம வழிகாட்டியாகவும் போதகராகவும் கொண்டாடப்படுவதற்குக் காரணமாயின' உண்மைதான். பிற்காலப் பாடல்கள் என்று அவர் குறிப்பிடுவது ஆறாம் திருமுறையைத்தான் என்பதைக் காலவரிசையின் கணக்கே காட்டுகிறது. தான் வாழ்ந்த 51 ஆண்டுகளின் கடைசிப் பத்தாண்டுகளில்தான் அவர் ஆறாம் திருமுறை எழுதினார். இந்து சமயத்தையும் இந்த சமூகத்தையும் திருத்தியும் எழுதினார்.

இந்து மதத்தின் காவியைச் சலவை செய்து வெள்ளாடை உடுத்துக் கொண்டவர் என்பதனாலும் மனிதகுலத்தின் மீது கொண்ட கருணையைத் தாவர வர்க்கம் முதலிய உயித்தொகுதிவரை நீட்டித்த சன்மார்க்கக் கொள்கையாலும்தான் அந்த ஒளியாளர் இன்னும் உணரப்படுகிறார். இந்தக் கொள்கைக்குத் தடையாக உள்ள எதையும் தள்ளிவிடு என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனால்தான் 'கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக' என்ற சாட்டையடி சமூகம் தாண்டி சமயத்தின் மீதும் விழுகிறது.

வள்ளலாரின் வாழ்வும் செயலும் அவர் வாழ்ந்த காலத்தைத் தாக்குறுத்தின என்று சொல்லவியலாது. அவர் கருத்துகளால் ஊட்டம் பெற்ற அடுத்த தலைமுறையின் ஆளுமைகளால் அவர் அடுத்த நூற்றாண்டில் வெற்றி பெற்றார் என்றே கணிக்க முடிகிறது.

வள்ளலார் மறைந்த ஐந்தாம் ஆண்டில் பெரியார் பிறக்கிறார். எட்டாம் ஆண்டில் பாரதியார் பிறக்கிறார். இருவருக்கும் வயதில் மூன்று ஆண்டுகள் வித்தியாசம். ஆனால் இராமலிங்கரால் பாதிக்கப்பட்டதில் அந்த இருவர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பெரியார் உயர்த்திப் பிடித்த தீப்பந்தத்திற்கான தீயும் பாரதியார் உயர்த்திப் பிடித்த கவிதா தீபத்திற்கான நெருப்பும் இராமலிங்க வள்ளலாரின் அருட்பெருஞ்சோதியில் பற்றவைக்கப்பட்டவை என்று கருத இடமுண்டு. வள்ளலாரின் பாட்டமைதியில் நெஞ்சு பறிகொடுத்தும் சமூக சமயச் சீர்த்ருத்தங்களில் தனக்கு உகந்ததை ஏற்றுக்கொண்டும் பாரதியார் தமிழ்செய்தார். வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தம் என்ற வெளியை மட்டும் பெரியார் உருவிக் கொண்டு விரிவு செய்தார்.

1935-இல் ஆறாம் திருமுறையிலிருந்து வள்ளலார் பாடல்கள் நூறு மட்டும் திரட்டப்பட்டுக் குடியரசுப் பதிப்பகத்தின் மூன்றாம் வெளியீடாக வெளியிடப்பட்டது என்பதே என் கருத்துக்கு ஓரளவு சாட்சி சொல்லும்.

'வேதாக மங்கள்என்று வீண்வாதம்
ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?'

என்று வள்ளலார் எழுதிய வெண்பாவின் விளக்கமும் துலக்கமும் விரிவும் செறிவும்தான் பெரியாரின் மொத்த வாழ்க்கையின் முழுத் திரட்டாகும்.

'நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலை அத்தனையும் பிள்ளை விளையாட்டே'

- என்ற வள்ளலாரின் பொன்வரிகளை வாங்கித்தான்

'மேலவர் கீழவர் என்றே - வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்'

- என்று பாரதி புடம் போடுகிறான்.

வள்ளலார் மறைந்து மரித்தாரா - மரித்து மறைந்தாரா என்ற கேள்வி இன்னும் நிலை கொண்டிருக்கிறது. 'மரணமிலாப் பெருவாழ்வு' என்ற அவரது கருதுகோள் உளவியல் வெளி சார்ந்ததேயன்றி உடலியல் வெளி சார்ந்ததன்று. பௌதிகச் சேர்மானமுள்ள எவ்வுடலும் இந்நாள்வரை மரித்தலில்தான் முடிந்திருக்கிறது. ஆனால் தனக்குப் பிறகும் அவர் தம் கருத்தால் இரண்டு உடல்களில் இயங்கியிருக்கிறார். ஓருடல் பெரியார். இன்னோருடல் பாரதியார். ஆகவே வள்ளலாரின் வாழ்வு வெற்றியா தோல்வியா என்ற வினாவெழுந்தால் இருந்தபோது தோல்வி-மறைந்த பிறகு வெற்றி என்று காலம் எழுதக்கூடும். வள்ளலாரின் காலவெளி மீது பறந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தாலன்றி அவரை விளங்கிக் கொள்ள இயலாது. இந்துமதம் இருக்க அவர் சன்மார்க்க சங்கம் கண்டதும், ஓராயிரம் கடவுளர் இருக்க அவர் உருவ வழிபாட்டை வெறுத்து ஒளி வழிபாடு கண்டதும் வெறும் அடையாளத்திற்கு மட்டும் ஆசைப்பட்டு அன்று.

இந்தியாவின் வரலாறு என்பதென்ன என்ற கேள்வியை எழுப்பி 'இந்தியர் அல்லாதாரின் அரசுகள் எழுந்ததும் விழுந்ததும்தான் இந்தியாவின் வரலாறு' என்ற கடும் விடையையும் முன் வைக்கிறார் காரல் மார்க்ஸ்.
பதினோராம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரை இந்தப் பரந்த நாடு இஸ்லாமியர்களின் இறுகிய பிடிக்குள் கிடந்தது. இன-மொழி கலாசாரக் காப்புக்கும் மீட்புக்குமான போரில் இந்த நாடே 750 ஆண்டுகள் ரத்தத்தில் நனைந்து கிடந்தது.

சிவந்தும் சிதறியும் கிடந்த தேசம் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தது. 1757 முதல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழிருந்த இந்தியா சரியாக 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1858-இல் விக்டோரியா மகாராணியின் நேரடி ஆளுகைக்கு இடம் மாறியது. வள்ளலார் வாழ்ந்த காலத்தையும் உள்ளடக்கிய காலமது.

கிழக்கிந்தியக் கம்பெனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் இராமலிங்கரின் மனமாற்றத்திற்கும் உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது.

மதமாற்றம் இந்த மண்ணில் எந்த வழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்? வருணங்களென்றும் குலங்களென்றும் சாதிகளென்றும் பிளந்துவைத்த இந்து மதத்தின் சந்துவழி புகுந்தனர். அந்நியரை ஓட்ட வேண்டும் - அதற்கு முன்னால் அந்நியர் வருவதற்கு வழிவகுத்த மதச் சண்டைகளின் பிற்போக்குத்தனத்தைப் பிடரிபிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சித்துறவி வள்ளலார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று திருவள்ளுவரும், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று திருமூலரும், 'பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா இறைச்சித் தோல் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ' என்று சித்தர்களும் தமிழ்ப்பரப்பில் நீண்டநாள் ஒலித்த குரல்களைத்தான் வள்ளலாரும் வாங்கி ஓங்கி ஒலித்தார். ஆனால் தன்னையே அடையாளப்படுத்தித் தன் கருத்துக்களையும் நிறுவனப்படுத்தியதுதான் வள்ளலாரின் வரலாற்றுச் செயல் என்று கருதலாம்.

இந்து மதத்தை எதிர்க்கவோ தகர்க்கவோ அவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் காணவில்லை. ஆன்மநேய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கவே அவர் தனித்தியங்கத் தலைப்பட்டார். இந்து மதத்திற்கு எதிர்த்திசையிலும் இயங்கினார். இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது; வள்ளலாரோ வெள்ளை என்றார். இந்து மதம் உருவ வழிபாடு என்றது; வள்ளலாரோ ஒளிவழிபாடு என்றார். இந்து மதம் மக்கள்தொகைபோல் கடவுள் தொகை சொன்னது; வள்ளலாரோ ஒரே கடவுள் 'அருட்பெருஞ் சோதி' என்றார். இந்துமதமோ நால்வருணப்பிரிவைக் கட்டிக்காத்தது; சன்மார்க்க சங்கமோ சாதிமத வேறுபாட்டை வெட்டிச் சாய்த்தது. இந்துமதத்தில் மூடப்பழக்கங்கள் மண்டிக் கிடந்தன சன்மார்க்க சங்கமோ கண்மூடி வழக்கங்களைக் கண்டித்தது. இந்துமதம் மொழிபுரியாத சுலோகங்களைச் சொன்னது; சன்மார்க்க சங்கமோ மக்கள் மொழியே கடவுள் மொழி என்றது. இந்து மதமோ கீதைபோதித்தது; வள்ளலாரோ திருக்குறள் வகுப்பெடுத்தார். இந்துமதமோ பரத்தின் சுகங்களுக்காக இகத்தின் துன்பங்களை ஏற்றுக்கொள் என்றது; சன்மார்க்க சங்கமோ பரத்தின் சுகங்கள் என்று கற்பிக்கப்பட்டவைகளையெல்லாம் இகத்திலேயே எய்துவோம் என்றது. இந்துமதமோ எரித்தலை வற்புறுத்தியது; சன்மார்க்க சங்கமோ புதைத்தலைப் போற்றிச் சொன்னது.

இப்படிப் புரட்டிப்போட்ட வள்ளலாரை எப்படி ஏற்றுக்கொள்ளும் வழிவழி வந்த வைதீகம்?

ஒரு தத்துவம் - ஓர் உண்மை - ஒரு கட்சி - ஒரு கண்டடைவு - ஒரு மாற்றம் முதலிய எந்தக் கருத்தாக்கமும் ஒரே வீச்சில் ஒப்புக் கொள்ளப்பட்டதில்லை. அப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட எதுவும் நின்று நிலைத்ததுமில்லை. எதிர்ப்பைச் சந்திக்காத எதையும் வரலாறு வரவுவைத்துக்கொள்வதில்லை. எதிர்ப்பு என்பது அமிலச் சோதனை; உயிர்நீட்சிக்கான ஒத்திகை.

தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரிந்தால் நீ நெருப்பு. புதைக்கப்பட்ட பிறகும் பூமியை எட்டி உதைத்து முட்டி முளைத்தால் நீ விதை. அக்கினிக் குளியலுக்குப் பிறகும் சாம்பலாகாமல் மீந்திருந்தால் நீ சத்தியம். வள்ளலார் எதிர்ப்புகளால் மெய்ப்பிக்கப்பட்ட சத்தியம்.

வள்ளலார் புகழுறுவதையும் அவர் கருத்துக்கள் கவனம் பெறுவதையும் கோயில் உற்சவங்களில் திருவாசகத்துக்கு மாற்றாய் அருட்பா ஓதப்படுவதையும் கண்டு கண்சிவந்த சில சைவ மடங்கள் வள்ளலாருக்கெதிராய்க் கள்ளக்களம் கண்டன; அருட்பாவை மருட்பா என்று பரப்புரை செய்தன. பேராற்றலும் பெரும்புலமையுமிக்க இலங்கை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை வள்ளலாருக்கெதிராகக் கொம்பு சீவிவிட்டன; நாவலர் ஆறுமுகத்துக்கு ஏழாம் முகமாய் எதிர்ப்பு முகம் ஒன்றையும் ஒட்டவைத்தன. 'பரசமய கோளரி' என்று பாராட்டப் பெற்றவர் 'அகச்சமயக் கோடரி'யாக ஆட்பட்டது ஆச்சரியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் ஆறுமுகநாவலர் தொடுத்த வழக்கு அருட்பாவை மருட்பா என்று மெய்ப்பித்தலுக்கு என்று பலராலும் நம்பப்பட்டு வருகிறது. ஆவணம் சொல்வது அதுவன்று. தம்மை இழித்துப் பேசியதாக வள்ளலார் மீது ஆறுமுக நாவலர் தொடுத்த அவதூறு வழக்கே அது. அந்த அவதூறு யாது என்பதே ஒரு நாகரிக நகைச்சுவையாகும். சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் தம்மை அடுத்திருந்தாரிடம் 'நாவலர்' என்ற சொல்லுக்கு வள்ளலார் எள்ளல் மொழியில் பொருளுரைத்தாராம். 'நா அல்லாதவர் - நாவினால் அலர் தூற்றுபவர் - நாவினால் துன்புறுகிறவர்' என்பதே வள்ளலார் செய்த வார்த்தை விளையாட்டாம். இதுவே அவதூறு வழக்கிற்கு அடிகோலியதாம். தாம் அவ்வண்ணம் மொழியவில்லையென்று வள்ளலார் மறுக்க, அதை மெய்ப்பிக்கவொண்ணாமல் நாவலர் திகைக்க, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உரைக்க நீதிமன்றத்தைவிட்டு அந்த வெள்ளை வெளிச்சம் வெளியேறியதாம்.

பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த ஆறுமுகநாவலருக்கு 'அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்; ஆனால் பொறாமை எலும்புருக்கி' என்ற விவிலியம் விளங்காதது வியப்பே.

வள்ளலாரின் மேன்மைக்குக் காரணம் சொல் மட்டுமன்று; செயல். முற்போக்குக் கருத்துக்களை முன்மொழிந்த முன்னோரெல்லாம் தம்மை நிறுவனப்படுத்தினாரல்லர். ஒரு நிறுவனத்தின் முதுகில் ஏறிக்கொள்ளாத அல்லது ஏற்றப்படாத எதுவும் நீண்டபயணம் காண்பதில்லை. 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்றும் 'சத்திய தருமச் சாலை' என்றும் 'சித்திவளாகம்' என்றும் தம் கொள்கைகளைச் செயல்படுத்தத் தாமே தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டவர் இராமலிங்க வள்ளலார்.

கருத்துக்களை உள்வாங்குவதற்கு மனிதர்களுக்குக் காது கேட்க வேண்டும். அது பசியால் அடைபட்டிருந்தால் கடவுளே வந்து அருள்வாக்கு அருளினாலும் அது காது கடக்காது. காதுக்குக் கருத்து என்பதற்கு முன்னால் வயிற்றுக்குச் சோறு என்பதுதான் மனிதர்களின் தேவை.

1800-களில் இந்தியப் பெரும்பரப்பில் பூகம்பத்தால் செத்தவர்களைவிடப் பசியால் செத்தவர்களே அதிகம்.

'இம்பீரியல் கெஸட்டியர் ஆஃப் இந்தியா' இதழில் பிரிட்டிஷ் அரசு அதிகார பூர்வமாய் அறிவித்த பிணக்கணக்கு ஐம்பத்தைந்து இலட்சம். ஆனால் 'பிராஸ்பரஸ் பிரிட்டிஷ் இந்தியா' என்ற நூலில் 'வில்லியம் டிக் பி' தெரிவித்திருக்கும் மெய்க்கணக்கு ஒரு கோடியே மூன்று இலட்சம்.
தக்காண பீடபூமிக்கு மேலிருந்த மேகத்தை நாடு கடத்திவிட்டு வானம் தொலைந்துபோயிருந்தது. கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கை அளவில்கூட மழைத்துளிகள் இல்லை. பஞ்சம்; பெரும் பஞ்சம். பசிகள் கூடி மனிதனை உண்ணும் பஞ்சம். இயற்கையும் மனிதனும் விநியோகத்தில் செய்யும் தவறுகளுக்குத் தானே பஞ்சம் என்று பெயர்!

மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிட்டனர். ஆடுமாடு பண்ட பாத்திரங்களைத் தொடர்ந்து தானியத்துக்காக வீட்டுக் கதவுகளையும் விற்றனர். நாயைத் துரத்தி அது கவ்விச் செல்லும் எலும்புத் துண்டைக் கைப்பற்றியவர்கள் அது யாருக்கு என்ற அடிதடியில் ஈடுபட்டு எலும்பு நொறுங்கினர். எறும்புப் புற்றுகளின் சேமிப்புக் கிடங்குகளைத் தோண்டிச் சுரண்டி உண்டோர் பலபேர் உண்டு என்று திருநெல்வேலி கலெக்டர் 'மெக் குகே' பதிவிட்டிருக்கிறார்.
தாதுவருடப் பஞ்சத்திற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே 1866-இல் ஒரு பஞ்சம் தென்னகத்தை உயிரோடு உருக்கிச் சாப்பிட்டது.

வள்ளலாரின் பாடல் கண்ணீர் ஈரம் காயாத காலத்தின் பதிவாக வெளிவந்தது.

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர்உறக் கண்டுளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்'

-என்று பெருமூச்சு விட்டதோடு நின்றாரில்லை. அந்தப் பெருமூச்சின் வெப்பத்தையே நெருப்பாக்கி 1867-இல் சத்தியதருமச் சாலையில் அணையாத அடுப்பைப் பற்றவைத்தார். அது சாதிமதபேதமற்ற சமபந்தி என்று சட்டஞ் செய்தார். 'சொல் பித்தளை; செயல்தான் தங்கம்' என்று சொல்லிச் செல்லும் ஒரு துருக்கியப் பழமொழி. வள்ளலார் தங்கமானார்.

பிறப்பு - வளர்ப்பு - உணவு - உடை - உறைவிடம் - கல்வி - பொருளாதாரம் என்று தொடங்கி இறப்பு வரையில் பேணப்படும் பேதங்களைக் கட்டிக்காக்கத்தான் இந்துமதத்தின் உருவ வழிபாடுகளும் அடையாளங்களும் துணைபோகின்றன என்று கண்டறிந்த வள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தார். வழிபாட்டில்கூட ஒன்றுபட முடியாத சமுதாயம் வாழ்க்கையில் எப்படி ஒன்றுபட முடியும் என்று வருந்தி அழுதார். மக்களை ஒன்றுபடுத்த உருவொன்று வேண்டும்; அது உருவமில்லாத உருவாகத் திகழவேண்டும். உண்டென்றும் சொல்லலாம் இல்லையென்றும் சொல்லலாம்; அதுதான் ஒளியின் வடிவம். சோதி வழிபாடு என்ற அவரது சிந்தனையை உலகப் பெருங் கருத்தாகவே கொள்ளலாம்.
வேத சங்கிதைகளின் விளக்கமாக வந்த சுவேதாஸ்வதர உபநிடதம்கூட -

'பிரம்மமே அக்கினி; அதுவே சூரியன்
அதுவே பிரஜாபதி'என்பதோடு நின்றுகொள்கிறதே தவிர அது உருவ வழிபாட்டுக்கு மாற்று வழிபாடாகக் கொள்ளத்தக்கது என்று சொல்லிச் செல்லவில்லை.

இந்த பூமியே உறைந்த நெருப்புதான்; ஒளிக்கோளம் துப்பிய துண்டுதான். உயிர்களின் பிறப்புக்கு ஒளியே மூலம். ஐம்பொறிகளை ஆக்கியது இந்த ஒளி. உயிராற்றலை இயக்குவதே உள்மூச்சால் எரியும் நெருப்புதான். வள்ளலாரின் ஒளி வழிபாடு விஞ்ஞானமயமானது. கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பு அது. இந்த ஒளிவழிபாட்டின் வெற்றி வள்ளலாருக்கு; தோல்வி மனிதகுலத்துக்கு.

வள்ளலாருக்கு மற்றுமோர் அநீதியும் நேர்ந்திருக்கிறது. நாட்டிய மங்கையின் அழகில் ஐக்கியப்பட்டு அபிநயத்தை மறந்துவிடுவதைப் போல இராமலிங்கரின் அருட்பாவில் திளைத்துப்போன பலர் அவரது உரைநடையோரம் ஒதுங்கவில்லை.

தன் மகன் வீதிவிடங்கன் தேரேற்றிக் கன்று கொன்றான் என்று கண்டுகொண்ட மனுநீதிச் சோழன் தன் நீதி வளைந்தது கண்டு நெஞ்சு வளைந்து புலம்புவதில் இராமலிங்கரின் தெள்ளுதமிழ் துள்ளித் துள்ளி வினைப்படுகிறது.

'என் செங்கோலை அளவுகோலென்பேனோ! எழுதுகோலென்பேனோ, ஏற்றக்கோலென்பேனோ! கத்தரிக்கோலென்பேனோ கன்னக் கோலென்பேனோ! குருடன்கோலென்பேனோ! துலாக்கோலென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோலென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்?'

இராமலிங்கரின் அருட்பாவை உள்வாங்கி, பிறமொழி பெரிதும் கலவாத கவிதைநடை கைவரப்பெற்ற பாரதியார்கூட இராமலிங்கரின் உரைநடையை ஓங்கிக் கற்றிருந்தால் கவிதைபோலவே அவரது உரைநடையும் பூத்துப் பொலிந்திருக்கும். அந்த நற்பேறு நமக்கு வாய்க்கப் பெற்றிலோம்.
மணிப்பிரவாளம் கலவாத தனித்தமிழுக்கு மறைமலையடிகளுக்கு முன்னோடி என்று கொள்ளலாம் வள்ளலாரை.

சமரச சுத்த சன்மார்க்கமென்பது இந்து மதத்திற்கு எதிரான இன்னொரு சமயமன்று. அது இன்னொரு வாழ்க்கைமுறை; தன்னுயிர்போல் மன்னுயிர்களை உணரும் கலை. ஆனால் சமயத்திற்கே எதிரியாக அவர் சித்தரிக்கப்பட்டது வரலாற்றில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வாகும்.
இந்து சமயப் பெரியோர்களில் யார்தான் மதத்தை விமர்சிக்கவில்லை?

'ஒரு சூத்திரன் வேதம் கேட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்று. ஒரு வரி நினைவிருந்தாலும் நாவினை வெட்டிவிடு - இம்மாதிரி வாசகங்கள் சில ஏடுகளில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பிசாசுகள் முற்காலத்திலும் தோன்றியிருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்' - இப்படி ஒரு கருத்தை வெகுண்டு சொன்னவர் பெரியாரல்லர் - விவேகானந்தர்.
'மனுஸ்மிருதியின் சில பகுதிகள் மீது எனக்கு நம்பிக்கை விழவில்லை. அவற்றைப் படித்ததன் பயனாக எனக்கு நாத்திக உணர்வுகூட அரும்பிற்று' - என்று சொன்னவர் நாராயண குரு அல்லர் - உத்தமர் காந்தி அடிகள்.
இப்படி எதிர்மறைச் சிந்தனைகளை முன்வைத்தாலும் இந்து மதத்தின் கிழிசல்களைத் தைத்து உடுத்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

'இயலவே இயலாது; அது கந்தலாய்க் கிடக்கிறது. தைத்தாலும் கிழியும்; துவைத்தாலும் கிழியும். அழுக்குறாத - கிழியாத - சலவை செய்யத் தேவையில்லாத ஒளியாடை நெய்து உடுத்துவோம் என்று ஊரை அழைத்தார் வள்ளலார்; உடுத்தியும் காட்டினார். சிலர் உடுத்துக்கொண்டார்கள். பலரோ கந்தலாடையில் அடித்த பழைய மரபுவாசனையில் மயங்கிக் கிடந்தார்கள்; கிடக்கிறார்கள். அதனால் வள்ளலார் தோல்வி கண்டார் என்று தூர எறிந்துவிட முடியாது.

இலட்சியவாதிகளின் வாழ்க்கை ஒருநாள் பந்தயமல்ல - வெற்றி தோல்விகளை மாலைக்குள் அறிவதற்கு. அது யுகங்களின் மீது எட்டுவைத்து நடக்கும் பயணம்.

சில விதைகள் முளைக்கவில்லையே என்று விதைத்தவன் வருத்தப்படக்கூடாது. என்றோ எங்கிருந்தோ பறந்து வரும் ஒரு பறவை அதை விழுங்கி எட்டாத மலைமீது எச்சம் இட்டுக் காடு வளர்க்கும்.

அந்தப் பறவையின் வரவுக்காக வள்ளலாரியம் இன்னும் ஒரு நூற்றாண்டோ ஒரு யுகமோ காத்திருக்கலாம்.

கருவூலம் கண்ட திருமூலர் - வைரமுத்து

பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் - மந்திரம் - உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்திரம் வேதப்பொருளன்று; ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்குசெய்வது ஆகமம்.
சிவப்பொருளை உள்ளீடாகக் கொண்டு, உறுதிப்பொருளுரைக்கும் மெய்யாற்றுப்படை இதுவென்று சைவத் தமிழர்களால் பேசப்படுவது; தலைமுறைகளால் பேணப்படுவது திருமந்திரம்.
சமய மறுப்பாளரும் இதனைச் சமயநூலென்று கருதவியலாது. நம் முன்னோர்கள் கட்டியெழுப்பிய திருக்கோயில்கள் கண்டவிடத்து, சிற்பக் கலைக்குச் செழுமை சேர்த்த இனத்தார் பெருமை இதுவென்று கடவுள் மறுப்பாளரும் களிகூருமாறுபோல, திருமந்திரத்தின் சிவப்பொருள் கழித்தும் இது தமிழர் தத்துவ சாரத்தின் தனிப்பனுவல் என்று தடந்தோள் விரியலாம். இது அறமாக விளங்கும் தமிழர் மெய்யியலுக்கு வரமாக வந்த வரவென்றும், வெவ்வேறு கால வெளிகளில் விளங்கிவந்த தமிழர் தம் தத்துவ முத்துக்களை ஆரவாரமில்லாமல் தொடுத்த அறிவாரமென்றும் தமிழ்ச்சமயம் கருதுகிறது.
மந்திரம் என்ற சொல்லாட்சியை முன்னிறுத்தி, 'ஸ்ரீமந்த்ர மாலிகா' என்னும் வடமொழி நூலின் தமிழ் வடிவுதான் திருமந்திரம் என்று கருதிக் கழிந்தாருமுளர். ஆனால், மந்திரம் என்ற சொல் -
''நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப''
என்று தொல்காப்பியத்திலேயே துலங்கி விளங்கிப் புழங்குகிறது. மேலும் அவர்கள் விடயமாகச் சுட்டிய அந்த வடமொழி நூலுக்குத் தடயமே இல்லை. ஆகவே, இது தமிழர் தத்துவத்தின் முழுமுதல் காட்டும் முதுநூல் என்று கொள்வதே உண்மையை மகிழ்வுறுத்துவதாகும்.

கருத்தையோ ஒரு நூற்பொருளையோ அது பிறந்த காலத்தின் வேரடி மண்ணோடுதான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆனால் திருமூலர் குறித்தும், அவர்தம் காலம் குறித்தும், நெற்றியில் முளைத்த முடிபோல் நம்ப முடியாத சில கதைகள் நாட்டில் நிலவுகின்றன.
கயிலையிலே நந்தியருள் பெற்ற சிவயோகி ஒருவர், அகத்திய முனிவரோடு அளவளாவும் ஆசையுற்றுத் தென்னாடு பயணித்தபோது காவிரிக்கரை கடந்தாராம். அங்கே மூலன் என்னும் மாட்டிடையன் ஒருவன் இறந்து கிடந்தது கண்டு காம்புவழி பால்சொரியும் பசுக்கள் கண்வழி நீர்சொரியக் கண்டாராம். பசுக்களின் துயரம் தீர்க்கக் கருதிய சிவயோகியார் மூலன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாராம். மாடுகளை வீடு சேர்த்துத் தம் உடல்தேடிச் சென்றபோது அது தொலைந்திருக்கக் கண்டு, திருவாவடுதுறை அரசமரத்தடியில் அமர்ந்து யோகநிலையுற்று ஆண்டுக்கொன்றாய் மூவாயிரம் பாடல் பாடி
னாராம். அதுதான் தமிழ் மூவாயிரம் என்னும் பெயரிய திருமந்திரமாம். இந்தக் கதை உண்மையின் கோடுகளுக்குள் இல்லை என்றே தோன்றுகிறது.
மூலன் என்ற தமிழன் பெருமையைத் தமிழனுக்கே வழங்காமல் அதனை வடநாட்டுச் சிவயோகிக்கு வார்த்துக் கொடுப்பது என்ன நியாயம்? ஏன்? ஓர் இடையன் ஞானமுறக்கூடாதா? அல்லது ஞானமுறுதல் இயலாதா? கண்ணன் என்ற ஓர் இடையன் கீதோபதேசம் செய்வது சாத்தியமெனில் தெற்கே ஓர் இடையன் மந்திரோபதேசம் செய்வது சாத்தியமாகாதோ? ஆகும்; அவன்தான் திருமூலன்.
திருமூலரின் காலம் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முற்பட்டதென்றும் ஏழாம் நூற்றாண்டுக்கு உட்பட்டதென்றும் திருவாவடுதுறை ஆதீனம் கூட்டிய திருமந்திர மாநாட்டில் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ கூறிய கூற்றை ஏற்றுக் கொள்வது இயல்புடைத்தாகும். திருமந்திரத்தின் தொடரமைதியும், திசைச்சொல் வாசனையும், மொழிநெகிழ்ச்சியும், மாற்று உள்ளடக்கமும் இந்தக் கால எல்லைக்குக் கட்டியம் கூறுகின்றன.
ஏழாம் நூற்றாண்டின் காலப்பெருவெளியில் திருமூலரைப் புடம்போட்டால் உண்மையின் உள்ளொளி தெரியவரும்.
பெளத்தவிகாரைகளும் சமணப் பள்ளிகளும் தத்தம் மதங்களை நிலைநிறுத்த நிறுவனப்பட்டபோது, சைவமும் தன்னை அகத்தும் புறத்தும் கட்டமைத்துக்கொள்ளக் காலம் அறிவுறுத்தியது. நாயன்மார்கள் சைவத்தைத் தோத்திரங்களால் தூக்கி நிறுத்திய காலையில் அதனைச் சாத்திரங்களால் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. நாயன்மார்களின் நெகிழ்ந்த தமிழையும் சித்தர்களின் செறிந்த மரபையும் கூட்டிக் குழைத்துச் சித்தாந்தப் பனுவல் செய்யும் திருப்பணியைச் செய்யுள் தெரிந்தவரெல்லாம் செய்ய இயலாது. சைவத்தின் திருவையும் சித்தர்களின் மந்திரத்தையும் ஒன்றுகூட்டித் தமிழ் செய்யத் தொன்றுதொட்ட பேரறிவு வேண்டும். அது திருமூலர் என்ற திருமுனிக்கே வாய்த்திருந்தது.
சைவசித்தாந்தத்தோடு சித்தர்களின் ஞானம் கலந்தபிறகுதான் தத்துவநிலை கடந்து அது வாழ்வியல் நோக்கி வளர்ந்தது. பதி - பசு - பாசம் என்ற குழூஉக்குறி கொண்ட சைவசித்தாந்தம், பதியைத் தலைவராகவும் பசுவை உயிராகவும் பாசத்தைப் பற்றாகவும் சுட்டிச் செல்கிறது. தலைவன் என்ற சொல்லைச் சிவமென்று செய்துகொண்டார்கள் சித்தர்கள். பற்றறுத்த உயிர்கள் சிவப்பொருள் சேர்வதே உயிரின் உச்சம் அல்லது பிறவிப் பெரும்பேறு என்று நம்பினார்கள். அழியாப் பொருளோடு ஐக்கியமாவதற்கே இந்த அழியும் பொருள் பிறந்தது என்ற கருதுகோளையே சைவச் சகடத்தின் அச்சாணியாக்கினார்கள்.
மேற்குலகம் பருப்பொருளின் பெளதிக ஆராய்ச்சியில் புகுந்து புற உலகின் அகலங்காணப் புறப்பட்ட வேளையில், கிழக்குலகம் மனமென்னும் நுண்பொருள் ஆராய்ச்சியில் நுழைந்து அகவெளியின் ஆழங்காணப் புறப்பட்டது. உடல் - உயிர் - மனம் என்ற மூன்றையும் பொருத்தியும் தனித்தனியே இருத்தியும் புரிந்துகொள்ள முற்பட்ட மெய்யுலகம், அணுக்களின் சேர்மானத்தில் ஆக்கப்பட்ட பொருள்களெல்லாம் அழிபட்டே தீரும் என்று ஆய்ந்து கண்டது. தீப்பொறிகளைப் போலவே நட்சத்திரங்களும் காலவித்தியாசத்தில் கழிவன என்று கண்டது. சுற்றிவரும் பூமி மட்டுமன்று மற்றுமுள சந்திரசூரியரும் அழிந்தொழிவதே அண்டவிதி என்று கொண்டது. அவர்களின் புரிதலில் அணுக்களால் ஆக்கப் பெறாத இறைப் பொருள் ஒன்றுதான் என்றும் அழியாதது. அவர்களுக்கேற்ற மொழியில் அதைச் சிவமென்று செப்பிக் கொண்டார்கள். இந்த உடம்பென்ற தசைப் பொருளுக்குள் வதியும் உயிரை இறைப் பொருளோடு இரண்டறக் கலத்தல் என்ற உள்ளொளிப் பயணத்தில் இயங்குகிறது திருமூலரின் திருமந்திரம்.
கடவுள் என்பதற்குத் திருமூலர் கொண்டிருக்கும் கருதுகோள் தமிழ்வெளியில் அவருக்கென்று தனித்த அடையாளம் தருகிறது. கடவுள் என்பது வான்வெளியிலோ மண்பரப்பிலோ தேடிக் கண்டடையும் திருப்பொருளன்று. அது ஒரு கருதுநிலை. அது ஓர் உணர்ச்சி; உணரக் கூடியதன்றி உணர்த்தக் கூடுவதன்று. உருவம் தராதே. உணர்த்தவும் முயலாதே. அது உன் அகவய அனுபவம். கடவுள் என்பதொரு நினைப்பு. ஈசன் என்பதோர் இனிப்பு. தேனைச் சுவைக்கிறாயே. அந்தச் சுவை கறுப்பா? சிவப்பா? என்று எரிகணைக் கேள்வி எறிகிறார் திருமூலர்.
''வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே''
இப்படி உருவ வழிபாட்டைச் சலவை செய்வதற்கு ஒரு சித்தனின் சித்தம் வேண்டும். உணர்பொருளே கடவுளென்று காட்ட ஒரு ஞானம் வேண்டும்.
கடவுள் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்த இவ்விடமே செவ்விடமென்று இக்கட்டுரை கருதுகிறது.
கடவுள் என்பது வெறும் உள்ளூர்ச் சரக்கன்று; உலகச் சரக்கு. கடவுளைக் கடக்க வேண்டுமானால் முதலில் கடவுளைச் சந்திக்க வேண்டும். மனிதகுல வரலாற்றில் 'கடவுள் வந்த காலமும் வந்துபோன காலமும்' என்று ஒன்று வரும். டினோசரும் - அன்றில் பறவையும் திடப்பொருளாய் வந்து மறைந்தவை. கடவுள் என்பது அருவமாய் வந்து மறையக் கூடியது. சீனப் பழங்குடிகளின் போர்க்கடவுள் 'வேத் வோ' இப்போது எங்கே? கிரேக்கப் போர்க்கடவுள் 'அரேஸ்' இப்போது எந்த யுத்தக்களத்தில் சண்டையிடுகிறார்? ரோமானியக் கடவுளான 'மார்ஸ்' பற்றித் தகவல் தர முடியுமா? ஆப்பிரிக்க ஆதிக்குடிகளின் கடவுள் 'முரிக்' அவர்களுக்கின்னும் அருள்பாலிக்கும் தூரத்திலிருக்கிறாரா? இப்படி எல்லாக் கடவுள்களுக்கும் ஓர் இறந்தகாலம் வரும்.
இயற்கை மனிதனை மிரட்டியபோது அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன் றினார். ஒரு படைப்பாளன் கடவுளுக்கு உருவம்தந்த காலையில் கலையின் கருப்பையில் கடவுள் பிறந்தார். ஆளும் வர்க்கம் அடிமை வர்க்கத்தை அடக்கியாளக் கருதியபோது நிறுவனத்தின் கருப்பையிலிருந்து கடவுள் அவதரித்தார். கடவுளின் தேவையிலிருந்து மனிதகுலம் விடுபடும் யுகத்தில் கலையில் மட்டுமே கடவுள் மிஞ்சுவார். பிறகு கற்பித்த உருவம் கழிந்து ஒரே ஓர் உணர்வாக மட்டுமே கடவுள் கருதப்படுவார்.
இந்த வகையில் திருமூலர் என்னைக் கதற வைத்த கவிதை ஒன்றுண்டு.
பல குடங்களில் தண்ணீர் நிரப்பியிருக்கிறீர்கள். எல்லாக் குடங்களிலும் ஒரு துண்டுச் சூரியன் மிதக்கிறது. ஒவ்வொரு குடத்துக்குள்ளும் ஒரு சூரியன். ஆனால் உச்சியில் ஒளிர்வது ஒரே சூரியன்தான். குடத்துக்குள் விழுந்த சூரியன் தனக்கே சொந்தமெனக் குடத்தை மூடினால் அக் கதிரவன் குடத்துக்குள் அடங்குவனோ? ஒவ்வொரு குடத்துக்குள்ளும் தோன்றினாலும் கதிரவன் குடத்துக்குள் அடங்காதவாறு போல ஒவ்வோர் உடம்பிலும் உறையினும் அந்த உடம்புக்கே சொந்தமாகாது உயிர். அந்த உயிரே இறைப்பொருள் என்று நம்புகிறார் திருமூலர்.

''கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே''
திருமூலரை இப்படி எழுத வைத்த அனுபவவெளியின் மீது என் மனப்பறவை திரிந்து திரிந்து பறந்து பறந்து திகைக்கிறது.
''ஊர்க்கிணறு தோறும் மிதக்கிறது ஒரே நிலா'' - என்ற ஜப்பானிய ஐக்கூ கவிதை பின்னாளில் பேசிய ஒரு சிறுபொருளைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு பெரும்பொருளாகப் பேசிமுடித்த மூலனின் மூலம் என்னை வியக்க வைக்கிறது.
எல்லா உடம்புக்குள்ளும் உறைவது இறையென்று நம்பப் படுவதன் இன்னொரு துண்டு என்ற கோட்பாடுதான் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற உலகப் பெருங்கருத்தை முன்வைக்கச் செய்தது மூலரை. சாதிபேதம், இனபேதம், மதபேதம், வர்க்கபேதம் என்ற அனைத்து பேதங்களையும் அழிக்க முற்படும் ஆயுதம் என்றே கருதவேண்டும் இந்தக் கருத்தாடலை. உடலை இறையோடு பொருத்திய இந்த உயிர்க் கொள்கைதான், இழித்துச் சொல்லப்பட்ட உடலென்ற பொருளை மதித்துப் பேசும் மாண்பு கொடுத்தது.
'உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே'
இந்தக் கருத்து தமிழுக்குப் புதுவது; மாயாவாதத்தைச் சூறையாடுவது.
''காயமே இது பொய்யடா - வெறும் காற்றடைத்த பையடா'' என்று சிரித்துக் கொள்ளா
மலும், பட்டினத்தடிகள் போல் இது ''சலமலப் பேழை'' என்று சலித்துக் கொள்ளாமலும், ''உடம்பொரு கோயில்'' என்று உரக்கச் சொன்ன திருமூலர் உபநிடதங்களின் 'உயிர் அழிவதில்லை' என்ற பழைய வாதத்தையும் களைந்தெறிகிறார்.
''ஆத்மா பிறப்பதில்லை; இறப்பதுமில்லை. அது எதிலிருந்தும் வெளிப்பட்டதில்லை; அதில் எதுவும் வெளிப்படுவதுமில்லை. உடல் அழியும்போதுகூட ஆத்மா அழிவதில்லை'' என்று சொல்லும் கடோப உபநிடதத்திற்கு மாறாக,
''உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்''
என்று பாடிய செறிவும் அறிவும் திருமூலத் தமிழனுக்கு வாய்த்திருக்கிறது.
உடலறிவு குறித்த பௌதிகக் கதவைத் திருமந்திரமே முதலில் திறக்கிறது. முதன் முதலில் மூச்சறிவியல் பேசப்படுவதும் திருமந்திரத்திலேதான். எலும்புகள் நிறுத்தி, நரம்புகள் பொருத்தி, இறைச்சியை இருத்தி, உறுப்புகள் மலர்த்தி, உயிர்த்திரி கொளுத்தி உலவவிடப்பட்ட இந்த உடலுக்கு நாடிகள் மொத்தம் பத்தென்று கணித்தார்கள் ஞானச்சித்தர்கள்; அவற்றுள் முக்கியமானவை மூன்றென்றும் முடிவு கட்டினார்கள்.
நீர்வழிப்பட்ட சிலேட்டுமம் - தீ வழிப்பட்ட பித்தம் - வாயுவழிப்பட்ட வாதம் இம்மூன்றுமே உடலென்ற எந்திரத்தின் எரிபொருட்கள் என்று கண்டார்கள். தசைநார்களை இளக்கம் செய்வதும், எப்போதும் இயங்கும் இதயத்தின் சூடு தணிவிப்பதும், நாவின் ஈரம் காப்பதும், உதிர ஓட்டத்தை ஒழுங்குறுத்துவதும், மூட்டுகள் தேயாமற் காத்தலும் சிலேட்டுமத்தின் செம்பணிகள். உணவை எரித்தலும், அறிவும் நினைவும் அழியாமற் காத்தலும், குருதிக்கு நிறமூட்டலும் தோலின் பளபளப்பைப் பாதுகாத்தலும் பித்தத்தின் பெரும்பணிகள். மூச்சினைச் சீர் செய்தலும், உயிருக்கு உயிர்ப்பூட்டலும், மனமொழி மெய்களை நேர் செய்து சீர் செய்தலும், தாதுக்களை உண்டாக்கலும், கழிவுகள் புறந்தள்ளலும் வாதத்தின் அரும்பணிகள்.
நீரின்றியும் நெருப்பின்றியும் இவ்வுடல் சின்னாட்கள் வாழ்வது சாத்தியமெனினும் காற்றின்றிச் சின்னேரம் வாழ்வதும் சிரமம். அந்தக் காற்றுக்கும் உடலுக்குமான தொடர்பைத் தமிழ்க்குலத்துக்கு முதலில் சொன்ன பேரறிஞன் எங்கள் மூலனே என்பது காலம் எமக்களித்த கர்வமாகும்; தமிழ் எமக்களித்த தருக்காகும்.
''ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே'' -
என்பது திருமந்திரம்
அஃதென்ன காற்றைப் பிடிக்கும் கணக்கு? அதுதான் மூலர் அருளிய மூச்சறிவியல்.
பகலில் எட்டு மில்லி மீட்டர் சுருங்கி, இரவில் எட்டு மில்லி மீட்டர் நீண்டுவிடும் இந்த உடம்புக்குப் படுத்திருக்கும்போது நிமிடத்துக்கு 9 லிட்டரும், அமர்ந்திருக்கும்போது 18 லிட்டரும், நடைபயிலும்போது 27 லிட்டரும் மூச்சுக்காற்று தேவைப்படுகிறது. சராசரியாக 250 கோடி முறை துடிக்கும் இந்த இருதயம் ஒருநாளில் 18,000 லிட்டர் ரத்தத்தை இறைக்கிறது; காற்றால்தான் அந்த இயக்கம் நடைபெறுகிறது.
இந்தக் காற்றுதான் நுரையீரல் சென்று, உயிர்வளி, நைட்ரஜன், ஹைட்ரஜன், உயிராற்றல் எல்லாவற்றையும் உதிர ஓட்டத்தில் கலக்கிறது. உதிர ஓட்டத்தின் மூலம் அவை செல்களுக்குப் பரிமாறப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் மீண்டும் உதிரத்தில் கலக்கின்றன. அந்தக் கழிவுகளையெல்லாம் நாம் விடும் வெளிமூச்சுதான் வெளியேற்றுகிறது. உட்சுவாசம் உணவு; வெளிச்சுவாசம் கழிவு. உயிரின் இயக்கம் காற்றுதான். சொல்லப்போனால் உயிரே காற்றுதான். அந்தக் காற்றை இழுத்தல் - இருத்தல் - வெளியிடுதல் மூன்றுக்கும் ஒரு கணக்கிருக்கிறது என்று கண்டார் திருமூலர். அந்தக் காற்றைப் பிடிக்கும் கணக்கை அவர் வழியில் உங்களுக்குக் காட்ட விழைகிறேன்.
முவ்வழிகளில் வினைப்படுகிறது மூச்சு. பூரகம் கும்பகம் மற்றும் இரேசகம். பூரகம் என்பது காற்றை இழுத்தல். கும்பகம் என்பது உள்ளே இருத்துதல். இரேசகம் என்பது வெளியே விடுதல். இந்தப் பூரகம் கும்பகம் இரேசகம் மூன்றுக்குமான கால அளவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. 16 நொடி மூச்சை உள்ளிழுத்து, 64 நொடி அதை உள்ளே இருத்தி, 32 நொடி மூச்சை வெளியிட்டால் மட்டுமே சித்தர்கள் கண்டறிந்தபடி 72,000 நரம்புகளுக்கும் உயிர்ச்சத்து ஓடி உட்சேரும் என்பது திருமூலர் கணக்கு.
''ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண் டதிரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே!''
என்பதே காற்றைப் பிடிக்கும் கணக்கு.
இது சராசரி மனிதர்க்கு சாத்தியமில்லை; சாத்தியம் செய்தோன் சராசரியில்லை.
உயிரியக்கத்தின் வழியே காற்றும் காற்றியக்கத்தின் வழியே உயிரும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்வதன் கருமூலம் கண்டு சொன்னவர் திருமூலர். அருகம் புல்லின் நுனியில் தூங்கும் பனித்துளியளவில், விந்தணுவில் ஒரு கரு முளைவிட்டதும் ஓடிவந்து சூழ்ந்து நின்று அந்தக் கருமுளையைக் காவல் செய்வதும் காற்றுதான், உயிருள்ள காலம்வரை உடன் உறைவதும் காற்றுதான். இப்படிப் பேணப்படும் உடம்பின் பெருமை சொன்னதும் திருமூலர்தான்; உயிர் விட்டதும் இது உதவாத பொருளென்று உதறித் தள்ளுவதும் திருமூலர்தான்.
மரணத்தைப் புரிந்து கொள்வதில் தொடங்குகிறது மனித இனத்தின் நாகரிக முதிர்ச்சி. மரணம்தான் இந்த பூமியின் தொடர்ச்சி. அது இன்னோர் உயிருக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும் இடப்பெயர்ச்சி. சொல்லப்போனால் மரணம்தான் பூமியின் புராதனச் சுத்திகரிப்பு. நாம் எல்லோருமே நம் முன்னோர்களின் மரணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதிர்ந்த சருகு வழிவிட்ட இடத்திலிருந்துதான் புதிய தளிர் புறப்பட்டு வருகிறது. மரணம் என்பதைப் பூரணம் என்று புரிந்துகொள்கிறவன் பெரும் பேற்றாளன். மரணத்தால் இந்த உடல் பெருக்கி எறியப்படும்போது அதனால் பெருக்கி எறிய முடியாத பெருஞ்செயல் செய்தவனே மரணத்திற்கு மரணம் தருகிறான். ''மரணத்தை வீரத்தோடு தழுவிக் கொள்கிறவன் தன்னைத் தானே ஆசீர்வதித்துக் கொண்டவன்'' என்ற உத்தமர் காந்தியடிகளின் வாசகம், நல்ல மரண ஊர்வலத்திற்கு முன்னால் நடந்துபோவதைப் பார்க்கிறேன்.
நிலையாமையைச் சொல்லி நெஞ்சுறுதியூட்டுகிறார் திருமூலர். செல்வத்தின் நிலையாமை சொல்லவந்த திருமூலர், ''உனது செல்வம் உன்னை ஒருபோதும் காப்பாற்றாது; உனது நிழலில் நீ ஒதுங்க முடியுமா?'' என்று கேட்கிறார். ''குடம் உடைந்தால் ஓடு மிச்சம்; உடல் உடைந்தால் ஏது மிச்சம்?'' என்று எள்ளி நகையாடுகிறார். மரணம் பூமியின் நிலைத்த மெய் என்று உலகோடு உரையாடுகிறார்.
எப்போதோ பயின்ற ஒன்று இப்போது நினைவாடுகிறது.
வாழ்க்கை மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம் : ''என்னை ஏன் நேசிக்கிறார்கள். உன்னை ஏன் வெறுக்கிறார்கள்?'' மரணம் சொன்னதாம் : ''ஏனெனில், நீ ஓர் அழகான பொய்; நான் கடினமான உண்மை''. உண்மையை எதிர்கொள்வதும் கடைசியில் ஏற்றுக்கொள்வதுமே வாழ்வின் உள் மையம்.
''ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பின் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினுள் மூழ்கி நினைப்பொழிந் தார்களே''
என்று போகிற போக்கில் மரணத்தைப் புறங்கையால் தள்ளிப் போகிறார் திருமூலர்.
நிலையாமையும் மரணமும் மனிதனை அறத்திற்கே ஆற்றுப்படுத்த வேண்டும் என்று ஆணையிடுகிறார்.
ஏ தமிழா... அறிவியல் வழிப்பட்ட திருமூலரின் திருச்சொல் கேள்; அறம் புரி; அன்பு கொள்; உடல் பேணு; உயிர் வளர்; வெட்டவெளியெங்கும் உன் மனப்பறவையை ஓட்டு. நட்சத்திரம் கொத்து; சூரியன் தின்; நிலாப்பால் பருகு. உன் இதயவெளி பெரிது. அதில் கடல் ஒரு குடம். ஆகாயம் ஒரு சாளரம். கொடி கோணலாகிக் கிடந்தாலும் பூ நிமிர்ந்தே பூக்கிறது. ஒவ்வொரு மலரும் ஓர் உலகம். ஒவ்வோர் உலகமும் ஒரு மலர். குறையுடைய வாழ்விலும் குற்றமேதுமில்லை. இறக்கை ஒடிந்த குயிலும் சுதிமாறிப் பாடுவதில்லை. வாழ்க்கை இன்பத் தோட்டம். மரணம் ஒரு கொண்டாட்டம். இறைவன் இருப்பது உண்மையானால் நீ நம்பு. நீ இருப்பது உண்மையானால் இறைவன் உன்னை நம்பட்டும். திருமந்திரத்தின் நறுமந்திரத்தை ஓதி ஓதி உள்வாங்கு. நல்லன புதுக்கு; அல்லன ஒதுக்கு. ஒரு ஞானப்பரம்பரையின் நீட்சி நீ என்று நினை. திகைக்கும் உனக்குத் திருமூலன் துணை.
மூவாயிரம் பாடிய திருமூலருக்கு ஒரு
மந்திரம் பாட என் உள்ளுயிர் துடிக்கிறது. பாடுகிறேன் :
''பூவிடும் மூச்சோ புறவெளி போகும்
தீவிடும் மூச்சோ திசைவழி ஏகும்
மேவிடும் தமிழால் மெய்ம்மறை சொல்லி
நீவிடும் மூச்சே நித்தியமாகும்''
வணங்க வேண்டும்; உன் திருப்பாதம் காட்டு திருமூலா!

தமிழைத் துறக்காத துறவி - வைரமுத்து

சிப்பதிகாரம் என்ற கலைக்காப்பியம் மெய்யா? புனைவா? மெய்யுறு புனைவா? எவ்வாறாயினும் ஆகுக.

சிலப்பதிகாரத்தின் காலம் எது?

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய குட்டுவனே, சேரன் செங்குட்டுவன் என்று கொண்டு புலவர் பலர் ஆய்ந்து அறுதியிடுவதுபோல, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியா? அல்லது சமய ஊட்டம் - விழுமிய மாற்றம் - மொழியின் நெகிழ்ச்சி - நாகரிக நீட்சி முதலியவைகளை முன்வைத்து சாமிக்கண்ணுப் பிள்ளையும், வையாபுரிப் பிள்ளையும் ஓங்கி உறுதியிடுவதுபோல் கி.பி. 8ஆம் நூற்றாண்டா? எக்காலமாயினும் ஆகுக.
மூன்று காண்டங்களில் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம் இளங்கோவடிகள் இயற்றியதா? அல்லது காலநீரோட்டத்தின் கடைச் செருகலா? எம்முடிவாயினும் ஆகுக.

கதைப்போக்கில் கலந்தோடிவரும் இயற்கை இறந்த நிகழ்வுகள் ஆரியக்கலப்பின் நீட்சியா? அல்லது காப்பியக் கலையின் மாட்சியா? எவ்வண்ணமாயினும் ஆகுக.




ஒன்று மட்டும் உறுதி: சிலப்பதிகாரம் இல்லையாயின் திராவிடப் பெருஞ்சமுதாயத்தின் பெருமைகூறும் தொல்லெச்சங்கள் இல்லை. ரோமானிய -  கிரேக்க - எகிப்திய - சீன நாகரிகங்களோடு ஒப்பிட்டுத் தமிழர் நாகரிகத்தைத் தூக்கி நிறுத்தும் தொன்மங்களில்லை. வாழ்வியல் - நிலவியல் -  கலைமரபு - காலத் தொடர்பு -  பண்பாட்டு அசைவுகள் - நீதியாடல் - மனையியல் - மனவியல் போன்ற விழுமியங்களுக்குச் சான்றுகளில்லை.

தமிழ்நாடு என்ற சொல்லாட்சியை இளங்கோவடிகளே இலக்கியத்தில் முன்மொழிகிறார்.

வஞ்சிக் காண்டத்தில் 'இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய' என்றும், அரங்கேற்று காதையில் 'இமிழ் கடல் வரைப்பின் தமிழகம்' என்றும் இந்த நிலப்பரப்புக்கு இளங்கோவடிகள் பெயர்சூட்டியிராவிடில் இன்றுவரை தமிழ்நாட்டில் நிலவிவரும் மண்ணரசியல் என்ற நுண்ணரசியல் இல்லை. மூவேந்தர் காலம்முதல் மொழிவாரி மாகாணங்களின் காலம்வரை இளங்கோவடிகளின் தமிழ்நாடு என்ற சொல்லாட்சிதான் இன்றும் நின்று நிலைத்திருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் என்னை வியக்க வைப்பது கண்ணகியோ, கோவலனோ, மாதவியோ அல்லர். இளங்கோவடிகள் என்ற படைப்பாளியின் பேரறிவே என்னை மலைக்க வைக்கிறது. தமிழ்க்கவி ஒருவனின் ஞாலமளந்த ஞானம் என்னைத் திகைக்க வைக்கிறது.

காப்பியக் கருப்பொருள் சிறியதுதான். ஒரு கற்புக்கரசியோடு இணைந்து வாழ்ந்தவன் ஒரு கலையரசியோடு கலந்து வாழ்ந்து, பின்னர் பிரிந்து, பதிபெயர்ந்து, பழிசுமந்து, கொலைக்களப்பட -  மாபத்தினியாள் நீதிகேட்டு மாநகர் எரிக்க, சேர மன்னன் அவட்குச் சிலையெடுத்த கதைதான் சிலப்பதிகாரம். ஆனால், இந்த ஒற்றை வரிக்குள் தன் உயிரை - உணர்வை - அறிவை - கலையை - மொழியை ஊற்றி ஊற்றிச் சேமித்து வைத்துள்ளார் சேரமுனி.

பூவனத்துக்குள் புகும்போது மெலிந்திருக்கும் காற்று, மகரந்தப் பொடிகளையும் தேனையும் சுமந்து எடைகூடி வெளியேறுவதுபோல, இளங்கோவடிகளின் ஞானப் பெருவெளிக்குள் புகுந்து புறப்படும் ஒரு சிறிய கதை காப்பியப் பேரழகு பெற்றுக் கலையாகிறது.

சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் ஏன் சிரசாடவேண்டுமெனில் - அழிந்த தமிழ் நாகரிகத்தின் ஆதாரம் அது என்பதனால்தான். ஏற்கெனவே தமிழினம் இழந்தது கொஞ்சமன்று. எல்லைகள் - இலக்கணங்கள் -  இலக்கியங்கள் - ஆயுதங்கள் - ஆலயங்கள் என்று அது எவ்வளவோ இழந்திருக்கிறது. அத்தனைக்கும் மொத்தமாய் அது கட்டிக்காக்க வேண்டிய கலை ஆவணம் சிலப்பதிகாரம்தான்.
சிலப்பதிகாரத்தின் இசைக் குறிப்புகள் இல்லாதுபோயின் ஆதி இசை தமிழிசையே என்று சத்தியப்படுத்தும் சான்றுகள் இல்லாது போயிருக்கும். பழம்பண்கள் தமிழில் இருந்தன. அவை தமிழ்ப் பெயர்களையே சூடியிருந்தன.

இந்திர விழவூரெடுத்த காதையில் -

''குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபு''

-  என்ற குறிப்பு கோலோச்சுகிறது.

அந்தக் 'குரல் முதல் ஏழும்' என்பன யாவை? அவை பிறந்த வழியாவது யாது?

சுற்றுச்சூழலோடு ஒட்டி வாழ்ந்த கூட்டம் -  இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் -  விலங்குகளையும் பறவைகளையும் தங்கள் வாழ்வின் அங்கங்கள் என்று உணர்ந்திருந்த தமிழச்சாதி, இயற்கையிலிருந்தே இசையை இழை பிரித்திருக்கிறது. குரல் -  துத்தம் -  கைக்கிளை -  உழை -  இளி -  விளரி -  தாரம் என்ற எழுவகைத் தமிழ்ப் பண்களையும் தமிழர் எங்கிருந்து எடுத்தார் என்பதே நம் இனத்தின் தொன்மைக்குச் சான்று காட்டும் தொல்லடையாளமாகும்.

வண்டின் ரீங்காரத்திலிருந்து பிறந்தது குரல்; அதுவே சட்ஜமமாயிற்று. கிளியின் மிழற்றலில் பிறந்தது துத்தம்; அதுவே ரிஷபமாயிற்று. குதிரையின் கனைத்தலை ஒத்தது கைக்கிளை; அதுவே காந்தாரமாயிற்று. யானையின் பிளிறல் போன்றது உழை; அதுவே மத்திமமாயிற்று. மயிலின் அகவல் போன்றது இளி; அதுவே பஞ்சமமாயிற்று. பசுவின் கதறலில் பிறந்தது விளரி; அதுவே தெய்வதமாயிற்று. ஆட்டின் கத்தலில் பிறந்தது தாரம்; அதுவே நிஷாதமாயிற்று.

''வேண்டிய வண்டும் மாண்டகு கிளியும்
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை''

- என்ற பிங்கல நிகண்டு இதையே உறுதி செய்கிறது.

'சரிகமபதநி' என்ற ஏழும் வெறும் குறியீடுகள் என்றே வடநூலாசான்கள் சிலரும் ஒப்புவர். ஆனால், உயிரெழுத்துக்களின் ஏழு நெட்டெழுத்துக்களைக்கொண்டே ஆதித் தமிழிசை இயங்கியிருக்கிறது.

''ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும்
இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக்குரிய''

- என்ற சேந்தன் திவாகரம் இந்த உண்மைக்கு உறுதியூட்டும்.

'பண்ணமை முழவு' என்பதும் 'யாழும் குழலும் ஏங்கிய மிடறும்' என்பதும் இளங்கோவடிகளால் அரங்கேற்று காதையில் ஆளப்பெறுகின்றன. தோற்கருவி - முழவு; துளைக்கருவி -  குழல்; நரம்புக்கருவி -  யாழ். இந்த முக்கருவிகளும் தமிழ்க் கருவிகளே. இந்த மூன்று கருவிகளின் பெயர்களிலும் தமிழுக்கே உரித்தான சிறப்பு 'ழ'கரம் பயின்று வருவதொன்றே அதற்குச் சான்று.

சொற்கள் திரிபுறும்போது சான்றுகள் அழிபடுகின்றன. கர்நாடக இசை என்று சொல்வதே ஒரு திரிபு. சேர நாட்டையும் உள்ளடக்கிய பழந்தமிழ்நாடு மூன்று பக்கமும் கடல்சூழ் நிலவியல் கொண்டது. அதனால் தமிழ்நாட்டுக்குக் 'கரைநாடு' என்ற பெயரும் உண்டு. ஆதித் தமிழிசை கரைநாட்டிசை என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும். 'சிராப்பள்ளி' என்னும் ஊர் 'திரு'வென்ற அடைகூடித் திருச்சிராப்பள்ளியாகி, இந்திய ரயில்களில் திருஸ்னாப்பள்ளியாகி, பின்பு சுருங்கித் திருச்சியாகி, இறுதியில் வெள்ளையர்களால் 'ட்ரிச்சி' என்று சுட்டப்பட்டதைப்போல, கரைநாட்டிசை மருவிக் 'கர்நாடிக்' இசை என்று ஆகியிருத்தல் கூடும். இதை நிறுவும் பெரும் பொறுப்பு இசைவாணர்களுக்கே உரியது. இப்படித் தமிழ்க் கலையின் மூலங்கள் தேடி நகரவேண்டுமாயின் சிலப்பதிகாரத்தை விட்டால் சேதியில்லை; இளங்கோவடிகளை விட்டால் நாதியில்லை.

கலைக்கூறுகள் மட்டுமல்ல; காப்பியப் பரப்பெங்கும் பண்பாட்டு ரேகைகளும் படிந்து கிடக்கின்றன. ஒரு சமுதாயத்தின் கல்வி வளம்தான் அதன் மனிதவளம்; துய்ப்புத்திறன் தான் அதன் செல்வவளம். கோவலன் கண்ணகியை விடுத்து மாதவி இல்லம் புகுந்ததற்குக் காமமும் ஒரு காரணமாயினும் கலையே முதற்காரணம். துய்க்க முடிந்த ஒரு செல்வக் கலைஞன் துய்க்கத் தெரிந்தவளையே நாடுவான். மாதவியின் கலைப்பாங்கு அவளது துய்க்கும் அறிவின் தூய சாட்சியாய் விரிகிறது. எகிப்தியப் பேரரசி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பாளாம். கலையரசி மாதவியோ வாசனைப்பாலில் குளித்திருக்கிறாள். ஒரு கலையரசியின் குளியலைத் துறவியார் பதிவு செய்கிறார். குளிக்கப் புகுமுன் அவள் நீராடும் நீரில் 32 வகை வாசனைத் திரவியங்கள் ஊறிக் கிடக்குமாம். அந்த மணம் படுபொருள்களோடுதான் கோவலனின் மனம்படுமங்கை நீராடுவாளாம்.

''பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறிய நன்னீர், உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி''

- என்று கடலாடு காதையில் காட்டுகிறார் காப்பியத்துறவி.

அந்த முப்பத்திருவகை ஓமாலிகை யாவை என்பதை ஒன்று விடாமல் வரிசைப்படுத்துகிறார்கள் உரைகாரர்கள்.

''இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணங்கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், ஒத்தகடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அமரேணுகம், காஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், பெருங்குளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகை''

இந்த ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒரு நறுமணம் எழுந்து வந்து உள்மூச்சை நிறைக்கும்போதே இவற்றுள் தமிழர்கள் இழந்த திரவியங்கள் எத்துணை என்று ஒரு பெருமூச்சும் எழுகிறது.

தங்கத்தை 'மஞ்சள் பிசாசு' என்று கண்டது மேற்குலகப் பண்பாடு. செல்வத்தின் - அழகின் குறியீடு என்று கொண்டது நமது பண்பாடு. பொன் - வைரம் -  மணி - முத்து ஆபரணங்களை மாதவியின் ஒவ்வோர் உறுப்பும் எப்படித் தரித்திருந்தது என்பதை இளங்கோவடிகள் என்ற கலைமேதை காட்சிப்படுத்துகிறார்.

மாதவியாளின் கால்விரல்களில் மகரவாய்மோதிரம், பீலி, காலாழி துலங்க -  அவள் கால்களில் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை சிணுங்க -  அவள் தொடையில் குறங்குசெறி ஒடுங்க -  ஆடைமீது முத்தரை விளங்க -  தோள்களில் கண்டிகையும், முத்துவளையும் மினுங்க -  முன்கைகளிரண்டில் சூடகம், செம்பொன்வளை, வால்வளை, பவழப்பல்வளை குலுங்க, கைவிரல்களில் முடக்கு மோதிரம், கிளர்மணி, மரகதத் தாள்செறி விளங்க -  கழுத்தில் சங்கிலி, நுண்தொடர், பூண்ஞாண், புனைவினை தளுங்க -  பிடரில் முத்துக்கோவை முழங்க -  காதுகளில் நீலக்குதம்பை, வைரக்குதம்பை அடங்க -  தலையில் வலம்புரி, தொய்யகம், புல்லகம், வணங்க அவளை ஆபரணஞ் சூடிவந்த தேராய் அலங்கரிக்கிறார் இளங்கோவடிகள்.

உளவியல் அறிஞர்கள் இந்த அலங்காரப் பெரும் பொருள்களைப் பாலியல் முதலீடு (Sex Capital) என்பர். ஒருத்தியின் கலையறிவுமீது கொள்ளும் மையலை அறிவுக்காமம் (Sapo Sexual) என்றும் அழைப்பர். ஆனால், மாதவியின் மீது கோவலன் கொண்ட மையலுக்குப் புறக்காரணம் கலை; அகக்காரணம் கற்பு என்றே அறிய முடிகிறது. ஏனென்றால் மாதவியின் முதலீடு பாலியலுக்கானதன்று; பைங்கலைக்கானது.

கலைக் கருவூலமென்பதைக் கடந்துபார்த்தால் சிலப்பதிகாரம் ஒரு பண்பாட்டுப் பெட்டகம். தமிழ்ச் சமுதாயம் சட்டங்களால் ஆளப்படுவது சிறிது; விழுமியங்களால் ஆளப்படுவதே பெரிது. கணவனைப் பிரிந்து கடுந்துயர் எய்தி, புகைபடிந்த பூவாய்... மழையூறிய சித்திரமாய்... மங்கல அணியன்றிப் பிறிதணி அணியாதவளாய் -  கண்ணகி கோலங்குலைந்து காலங்கழித்த வேளை அவளின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி என்பாள் அவள் வாட்டம் தீர ஒரு வழி சொல்கிறாள். சோமகுண்டம் சூரியகுண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கிக் காமனை வழிபட்டால் கணவனோடு சேரலாம் என்கிறாள்.

''சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர்''

- என்று கனாத்திறமுரைத்த காதையில் கண்ணகியைக் கோருகிறாள்.

அப்படி வழிபடுவது பெருமை தராது என்னும் பொருளில் 'பீடன்று' என்கிறாள் கண்ணகியாள்.

இந்தப் 'பீடன்று' என்னும் திருமொழிக்கு உரை தர வந்தோரெல்லாம் தெய்வந்தொழாமல் கணவனைத் தொழுதெழும் மரபிலே வந்தவள் மறுத்தலில் வியப்பில்லை என்னும் பொருளிலேயே எழுதுகிறார்கள். நாம் இதனை இன்னும் ஒரு படிதாண்டிச் சிந்திக்கலாம். 'கண்ணகி தெய்வமே தொழாதவள்' என்னும் குறிப்பொன்றும் காவியத்திலில்லை. ஆனால் இவ்விடத்தில் காமனைத் தொழவே அவள் மறுக்கிறாள். தனக்கு உரிமையுள்ள கணவனை அடைவதற்குக் கடவுளே ஆயினும் இன்னோர் ஆணின் துணை எதற்கு என்று கண்ணகி கருதியிருக்கலாம்.

மற்றுமொன்று: காமன் என்பவன் சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. குற்றமேதும் புரியாத தான் ஒரு குற்றவாளியை வணங்குவதா என்றும் அவள் தவிர்த்திருக்கலாம். அவள் அன்று ஒரு குற்றவாளியை வணங்கியிருந்தால் நிரபராதிக்கு நீதி கேட்கச் சென்றிருக்கவியலாது. இந்த நுட்பமான பண்பாட்டுக் குறிப்புதான் 'பீடன்று' என்ற சொல்லடைவில் தொனிப்பொருளாய் நிற்கிறது என்றும் கருதலாம்.

*

காதல் கடிதத்திலும் ஒரு கலாசாரம் காத்திருக்கிறார் இளங்கோவடிகள். கோவலனைப் பிரிந்து உயிர்வாடிப் போன மாதவிக் கொடியாள் இரு கடிதங்கள் எழுதுகிறாள்.

முதல் மடலை வசந்த மாலையிடம் தந்தனுப்புகிறாள். கோவலன் அம்மடலை வாங்க மறுத்துத் திருப்பியனுப்புகிறான். இரண்டாம் மடலைக் கோசிகாமணி என்ற மறையோன் வசம் தந்தனுப்புகிறாள். கோவலன் அம்மடலைப் பெற்றுக்கொள்கிறான். ஒன்றை மறுத்தமைக்கும் ஒன்றைப் பெற்றமைக்கும் உள்ள வேறுபாட்டில் இளங்கோவடிகள் ஓர் உளவியல் ஆசானாய் உயர்ந்து நிற்கிறார். இருமடல்களையும் எழுதியவள் ஒருத்தியாயினும் உள்ளடக்கங்கள் வெவ்வேறு.

முதல் கடிதம் காமம் பேசுகிறது.

''புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பூ தன்று இஃ தறிந்தீ மின்''

என்று பிரிந்திருப்போரைக் காமன் அம்பு துன்புறுத்தும் என்னும் பொருளில் முதல் கடிதம் விரகம் பேசுகிறது.

இரண்டாம் கடிதம் கடமை பேசுகிறது. ''முதியவராகிய பெற்றோரைப் பேணும் கடமையை விட்டுக் குலமகளோடு இரவோடு ஏன் பெயர்ந்தீர்? இதில் யான் செய்த பிழை யாது?'' என்று இதயம் அவிழ்க்கிறது இரண்டாம் மடல். இரண்டாம் மடலை வாசித்து நெக்குருகிய கோவலன் கோசிகாமணியிடமே அதனைத் திருப்பிக்கொடுத்து ''இம்மடலை எம் பெற்றோரிடம் காட்டுக'' என்று பேணிவிடுக்கிறான். எத்துணை பெரிய பண்பாட்டுக் குறிப்பு இது? ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயங்கும் காதல் கடிதம்கூட பெற்றோர்கள் வாசிக்கும் பண்பாட்டு மொழியில் படைக்கப்படுதல் வேண்டும் என்ற செழுமிய விழுமியம் செதுக்கித் தருகிறார் சேரமுனி.

*

சிலம்பு ஒரு 'தேசியக் காப்பியம்' என்று ம.பொ.சி.யும், 'குடிமக்கள் காப்பியம்' என்று தெ.பொ.மீ.யும் ஆய்ந்து சொன்னதில் அரும் பொருள் உண்டு.
சிலப்பதிகாரத்தின் உள்மையமாக முப்பெரும் பொருள்கள் பேசப்படுகின்றன. அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் -  ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் -  உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், என்பவையே அம் முப்பொருட்கள். உரைசால் பத்தினி கண்ணகி எனில் அவளை ஏத்திய உயர்ந்தோர் யார்? கல்லால் ஏத்திய செங்குட்டுவனா? சொல்லால் ஏத்திய இளங்கோவடிகளா? அல்லது பாட்டுடைச் செய்யுள் நாட்டுதலுக்குக் காரணமான சீத்தலைச் சாத்தனா? இம்மூவரையும் முந்திக் கொள்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்.

வேங்கை மரத்தடியில் ஒரு முலை இழந்த திருமா பத்தினியை முதலில் கண்டவர்கள் யார்? அவளைக் கொண்டாடியவர்கள் யார்?

''இவள் போலும் நம் குலக்கோர்
இருந் தெய்வம் இல்லையாகலின்
சிறுகுடியீரே சிறுகுடியீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே''

என்று சோழநாட்டுத் திருமகளைச் சேரநாட்டில் கொண்டாடியவர்கள் குன்றத்துக் குறவர்களே. தெய்வமென்று அவளை முதலில் ஏத்தியவர்களும் அவர்களே. ஆகவே அவர்களே உயர்ந்தோர் ஆகிறார்கள். இந்நாட்டின் ஆதிப்பழங்குடிகளை -  குறிஞ்சி மண்ணின் குழந்தைகளை உயர்ந்தோர் என்று சுட்டிப்போன இளங்கோவடிகளுக்கு சமூக நீதியாளர்கள் தலைவணங்க வேண்டும்.

*

காலந்தோறும் சிலப்பதிகாரத்தைச் சுற்றிவரும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க இக்கட்டுரை கருதுகிறது. கண்ணகி மதுரையை எரித்தது நியாயமா? இடது முலை திருகி எரித்தாள் என்பதில் நம்பகத் தன்மை உள்ளதா? கண்ணகி மதுரையை எரித்தது காப்பிய நியாயம் என்று இக்கட்டுரை கடந்தோடிவிடக் கருதாது.

அநீதியை அழிக்க வேண்டுமென்று காப்பியத்தலைவிகள் கருதுவதொன்றும் புதுவதன்று. ''எல்லை நீத்த இவ்வுலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்'' என்ற அசோகவனச் சீதை கூட உலகங்களை எரிக்க இயலும் என்று நம்பினாள்.

கணவன் உயிரோடிருந்ததால் தன் நெருப்பின் மீது நீரூற்றிக் கொண்டாள். கண்ணகிக்கோ கணவனில்லை. நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் உயிர் துறந்ததோடு கண்ணகி ஒடுங்கியிருந்தால், அவள் நீதி கேட்டது சுயநலத்துக்கு என்று சுருங்கிவிடும். ஒட்டுமொத்தத் தீமையை அழித்தால்தான் அவள் போராடியது பொதுநலத்திற்கென்ற பெருமை பெறும். ஒட்டுமொத்த மதுரையையும் அழிக்க எண்ணாமல் ''ஏ! தீச்செல்வனே! நீ தீத்திறத்தார் பக்கமே சேர்க'' என்று அவள் ஆணையிட்டதில் எதிர்காலத்தில் தம் போன்ற பத்தினியாள் யாருக்கும் தனக்கு நேர்ந்த தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் ஒட்டுமொத்தத் தீமைக்குத் தீயிட்டாள் என்று கருதுவது காப்பியநீதி மட்டுமன்று; சமூக நீதியுமாகும்.

முலை திருகி எறிந்தால் மூதூர் எரியுமா? இது இன்னொரு வினா?

முலை திருகி எறிவதென்பதைச் சதை திருகி எறிவதென்று கொள்வது இலக்கிய மூடம். அது வஞ்சினத்தின் உச்சம் சொல்லும் உணர்ச்சிசார் குறியீடு (Symbolized Emotion) என்று கொள்வதே கவிதை அறம்.

தமிழில் இதுவொன்றும் காணாத கருத்தாக்கமன்று. 'போர்க்களத்தில் என் மகன் புறங்காட்டி மாண்டிருந்தால் அவன் பாலுண்ட மார்பை அறுத்தெறிவேன்' என்று சங்ககாலத்தில் வஞ்சினம் உரைத்த ஒரு தமிழச்சியின் பழங்குரல்தான் அது.

''முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவன் யான்''

-  இது நச்செள்ளை பாடியது; 278ஆம் புறப்பாட்டு.

''துய்க்கப்படாமல் காய்கிறது என் இளமைநலம். பிரிந்துபோன கண்ணனை நான் காண்கில் அவனுக்குப் பயன்படாத என் முலைகளைக் கிழங்கோடு பெயர்த்து அவன் மார்பில் எறிவேன்'' என்பது ஆண்டாளின் நரக விரகம்.

''கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே''

-  என்பது நாச்சியார் திருமொழி.

இந்த இரண்டுமே சொல்லுக்குச் சொல் என்று நேர்பொருள் கொள்ளத்தக்கவை அல்ல. வஞ்சினத்தின் சிகரம்; உணர்ச்சியின் உச்சம்; சினத்தின் திரட்சி; மொழி தன் இருப்பை இழந்துவிட்ட நிலையில் காட்சியால் உரக்கச் சொல்லும் உத்தி என்றே கொள்ள வேண்டும்.

''இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அமைந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்''

-  என்பது காப்பியக்கூற்று.

முலை என்பது வேறொன்றுமில்லை. பாலூட்டியான தாய்க்குலத்திற்கு இயற்கை கொடுத்த கொடை. மெல்லிய தசைநார்களால் போர்த்தப்பட்ட பால்சுரப்பிகளையும், நுரைத் திசுக்கள் சூழ்ந்த ரத்த நாளங்களையும் தன் நுனியில் 10 முதல் 12 வரையிலான பாற்குழாய்களையும் கொண்ட கொழுங் கொழுப்புக் கோளம் அது. அதைத் திருகி எறிவதோ அது எரிவதோ சாத்தியமில்லை என்பது படைத்தவனுக்குத் தெரியாதா என்ன?

ஆனாலும் காப்பியப்படைப்பாளன் அவள் நெஞ்சில் மூண்டு வந்த பெருங்கனலுக்கு உருவம் கொடுக்கிறான். வட்டித்தெறிந்த மார்புக்கே இத்தனை வெப்பம் உண்டென்றால் அவள் நெஞ்சில் மூண்டெழுந்த மூலக் கனலின் நிறை என்ன என்பதைத் தன் உத்திகொண்டு உய்த்துணர வைக்கிறான்.

எனவே சொல்லின் பொருள் சொல்லில் மட்டுமன்று, கவிதையில் அதுசொல்லுக்குப் பின்னும் சொல்கடந்தும் இருக்கிறது என்ற இலக்கியப் புரிதலே இங்கு வேண்டற்பாலது.

கொண்டவன் கொலைக்களப்பட்டான்; இனி அவன் துய்க்காத முலை எதற்கு என்று முலை துறந்தாள் கண்ணகியாள்; கோவலன் இறந்த செய்தி கேட்டுத் தன் காதலன் துய்க்காத கலை எதற்கு என்று கலை துறந்தாள் மாதவியாள் என்று கருதிப் பார்ப்பதும் ஒருவாறு ஒக்கும்.

தமிழர்களின் ஒருமைப்பாட்டுக் காப்பியம் என்று உயர்த்திப் பிடிக்கலாம் சேரன் தம்பி இசைத்த சிலம்பை. கண்ணகி சிலைக்குக் கல்லெடுக்க வடதிசைப் போருக்கு முனையும்போது அந்தப் பெருமையைச் சேரன் செங்குட்டுவன் தன் ஒரு குலத்துக்கு மட்டும் உரித்தாக்கினானில்லை. மூவேந்தரின் முச்சின்னமும் பொறித்து வடபுலத்தரசருக்கு விடுக என்கிறான் சேரன் படைத்தலைவன் வில்லவன் கோதை.

''வடதிசை மருங்கன் மன்னர்க் கெல்லாம்
தென்தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை யேற்ற வரைக''

-  என்பது வஞ்சிக் காண்டத்தின் வாக்குமூலம்.

வடவரை எதிர்கொள்ளப் புகுமுன் சேர சோழ பாண்டியர் என்ற வேறுபாடு கடந்து தமிழரசர் என்ற ஒற்றை அடையாளத்தை முன்நிறுத்தியதால் அன்றைய செருவில் செங்குட்டுவன் வென்றான்.

இந்நூற்றாண்டுத் தமிழர்க்கும் இதில் ஒரு பாடமுளது.

இந்நாள் தமிழர்களும் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற வருணாசிரமம் கடந்து, மதங்கள் - கட்சிகள் என்ற மாச்சரியம் மடிந்து, முதலியார் - கவுண்டர் - நாடார் - தேவர் - பிள்ளை - நாயக்கர் என்ற சாதி பேதம் அழிந்து தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தை உயர்த்திப் பிடித்தால் உலகமயமாதல் என்ற பெரும்போரிலும் நாமே வெல்வோம்; வெல்ல வேண்டும்.

ஞாயிறு போற்றுதும்; திங்கள் போற்றுதும்; மாமழை போற்றுதும்;

தமிழ் போற்றுதும்; தமிழர் போற்றுதும்; தமிழகம் போற்றுதும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - வைரமுத்து

இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு.

இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு.

ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி.

ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள்.

ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம்.

ஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட முடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால் அழிக்கப்படாதது.

1930 இல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப் படுகிறான்.

பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் அரசாங்க ஆவணங்களில் கூட எழுத்துப் பிழையில்லாமல் எழுதமுடியாத ‘செங்கப்படுத்தான்காடு’ அவன் பிறப்பூர் ஆகிறது. அவன் ‘குவா குவா’ சொல்லிவிழுந்த அடுத்த ஆண்டில்தான் தமிழ் சினிமா பேசவே தொடங்குகிறது.

அவன் திரைப்பாட்டு எழுதவந்த 24 ஆண்டுகளுக்குள் புராணம் – இதிகாசம்-சரித்திரம் – சுதந்திரப் போராட்டம் என்ற கலையின் கச்சாப் பொருள்களையெல்லாம் செலவழித்துத் தீர்த்துவிட்டு சமூக எதார்த்தம் என்ற தளத்தில் வந்து நிலைகொள்கிறது திரைப்படத்தேர்.

1954 இல் அந்தப் பாமரப் பாவலன் பாட்டெழுத வந்து விட்டான். அதுவரைக்கும் கேட்காத தொனியில் உழைக்கும் மக்களின் முரட்டு மொழியில் திடீரென்று வந்து மிரட்டுகிறது அவன் பாட்டு.

அன்று ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த உடுமலை நாராயணகவியும் தஞ்சை ராமையாதாசும் தங்கள் உணவுமேஜையில் பட்டுக்கோட்டையைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குச் சில மாதங்களிலேயே அவன் பரபரவென்று பரவுகிறான்.

கேட்ட சொற்கள்; கேளாத பொருள். சந்தம் பழையது; சக்தி புதியது. பல்லவி எழுதமட்டும் தாமதம் செய்கிறான். பிறகு கோடைமழையாய்க் கொட்டிவிடுகிறான். படிக்காத பயலுக்கு எப்படி வந்தது இந்தப் பாட்டு வெறி? திரையுலகம் திகைக்கிறது.

வேளாண்வெளிகள் தந்த பட்டறிவு – பாவேந்தர் தந்த மொழியறிவு – கம்யூனிசம் கற்பித்த கருத்தறிவு – இந்த மூன்றையும் உள்வாங்கி எரிந்த அவனது உயிர்ச்சுடர்.
நானறிந்தவரை இந்த நான்கு பொருள்களே பட்டுக்கோட்டையின் முதலும் மூலமும்.

பாட்டெழுத வருவதற்கு முன்பு அவன் பார்த்த தொழில்கள் பதினேழு என்கிறார் ஜீவா.

விவசாயி – மாடுமேய்ப்பவன் – மாட்டுவியாபாரி – மாம்பழ வியாபாரி – இட்லி வியாபாரி – முறுக்கு வியாபாரி – தேங்காய் வியாபாரி – கீற்று வியாபாரி – மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி – உப்பளத் தொழிலாளி – எந்திர ஓட்டுநர்- தண்ணி வண்டிக்காரன் – அரசியல்வாதி – பாடகன் – நடிகன் – நடனக்காரன்- கவிஞன்.

வாழ்வியல் கூறுகளையும் வர்க்க அடுக்குகளையும் அவன் பார்த்த 17 தொழில்களும் பாடம் புகட்டியிருக்கக்கூடும்.

பாவேந்தர் என்ற வேடந்தாங்கலில் இந்தப் பட்டுக்கோட்டை என்ற பாட்டுப்  பறவையும் பாடிப்பாடிப் பழகியிருக்கக் கூடும்.

“ஏ ஆம்பளப்பயல்களா! இங்க பாருங்க ஒரு பொண்ணு என்ன போடு போட்டுருக்கான்னு” பாவேந்தர் ஒரு கவிதைத் தாளெடுத்துத் தன் மாணவர்களுக்கு நீட்டுகிறார். படித்தவர்கள் வியக்கிறார்கள். இயற்றியவர் பெயர் ‘அகல்யா’ என்றிருக்கிறது.

அங்கிருந்த கல்யாண சுந்தரம் தனக்குள் சிரித்துக் கொள்கிறான். அருணாசலம் பிள்ளை மகன் கல்யாணசுந்தரம்தான் தன் பெயரை ‘அகல்யா’ என்று பெண்படுத்தியிருக்கிறான். முளைவிடும் போதே பாவேந்தரால் பாராட்டப் பெற்றதில் விண்ணோக்கி வளரவேண்டும் என்ற வெறி விளைந்திருக்கக் கூடும்.

அவன் வளர வளர தஞ்சை மாவட்டம் பொதுவுடைமைப் போர்க்களமாய் வளர்கிறது. நிலப்பிரபுத்துவத்தால் கெட்டிப்பட்ட சமூகம் கிளர்ச்சிகளால் உடைக்கப்படுகிறது. சீனிவாசராவ் தலைமையிலான விவசாயிகள் சங்கம் விஸ்வரூபமெடுக்கிறது. அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் விதைகளைப்போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

வடபாதிமங்கலங்களும் குன்னியூர்களும், மூலங்குடிகளும், ராவ் பகதூர்களும் மிரட்சியடையும் அளவுக்குப் புரட்சி வெடிக்கிறது.

உழைக்கும் மக்களிடம் வேர்வையாகவும் ரத்தமாகவும் வடிந்த அந்தப் புரட்சி, ஒருவனிடம் மட்டும் தமிழாக ஒழுகுகிறது.

பாரதிதாசன் சொல்லித்தந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை-

“யாருமேல கீறினாலும்
ரத்தம் ஒண்ணுதானே
ஆகமொத்தம் பிறந்ததெல்லம்
பத்தாம் மாதம்தானே”

– என்று எழுதிக் காட்டியவன்.

கம்யூனிசம் சொல்லிக்கொடுத்த வர்க்கப் போராட்டத்தை

“வசதி படைத்தவன்
தரமாட்டான்
வயிறு பசித்தவன்
விடமாட்டான்”
– என்று செந்தமிழ் செய்கிறான்.

அவன் கலைபெற்றது தமிழால்; நிலைபெற்றது கம்யூனிசத்தால்.
சேற்றிலே பிறந்தவனைச் செந்தாமரையாக்கிய கம்யூனிச சமூகமே உனக்கு என் சிவப்பு வணக்கம்.

சுயமரியாதை மேடைகளில் பாடல்கள் பாடி “நல்லதைச் சொன்னால் நாத்திகனா?” என்று தன் முதல்வரியை எழுதிய சிறுவனை ஒரு சித்தாந்தக் கவிஞனாக்கியது பொதுவுடைமை இயக்கம் என்பதை வரலாற்றில் யாரும் மறைக்கமுடியாது.

ஒரு விசித்திரமான சரித்திரம் இருக்கிறது பட்டுக்கோட்டையின் பேனா பொதுவுடைமை எழுதியது; ஆனால் திராவிடத்தையே அது வளர்த்தது.
1950 களில் கலையுலகம் கட்டியெழுப்பிய பழைய பீடங்களை அசைத்ததிலும் சற்றே அகற்றியதிலும்  அறிஞர் அண்ணா, கலைஞர் (மு.கருணாநிதி) என்ற இரண்டு ஆளுமைகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்ற கருத்தை மாற்றாரும்  மறுக்க மாட்டார்கள்.

பகுத்தறிவு – சுயமரியாதை என்ற உள்ளடக்கங்கள் தமிழ்த் திரையைத் திசைமாற்றிப் போட்டன. ‘வேலைக்காரியும்’, ‘பராசக்தியும்’ திராவிட இயக்கத்தின் செல்லுலாயிட் சின்னங்களாயின. கலை இலக்கியத்தின் வழியே மக்கள் ஊடகத்தில் பயணித்தால்தான் ஓர் இயக்கம் கடைசி மனிதனை விரைந்து தொடமுடியும் என்பதை திராவிட இயக்கம் மெய்ப்பித்தது.

பொதுவுடைமை இயக்கம் கலையில் செய்துகாட்டத் தவறியதை மொழியில் செய்து காட்டியவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

அதே காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் பிம்பமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், இந்தப் பொதுவுடைமைக் கவிஞனின் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவேயில்லை.

‘மக்கள் திலகம்’ என்ற முத்திரையைக் கட்டிக் காக்க மக்கள் கவிஞனின் வரிகள் அவருக்குத் தேவைப்பட்டன.

பௌத்தமதத்தின் பெருங்கூறுகளையெல்லாம் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு விரைந்து கிளைபரப்பிய இந்து மதத்தைப்போல, பொதுவுடைமைக் கவிஞனின் வரிகளையும் வாங்கிச் செழித்து  வளர்ந்தது திராவிடம்.

“தூங்காதே தம்பி தூங்காதே – திருடாதே பாப்பா திருடாதே – சின்னப் பயலே சின்னப் பயலே சேதிகேளடா – குறுக்குவழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போகமாறுது” போன்ற பாடல்கள் எம்.ஜி.ஆரின் சல்லிவேர்கள் பரவுவதற்கான பாதையைப் பதப்படுத்தின.
·
பட்டுக்கோட்டையின் உயிரெல்லாம் தமிழும், உள்ளமெல்லாம் கம்யூனிசமும் நிறைந்திருந்தன என்பதற்குச் சாகாத அவன் பாடல்களே சாட்சி.
களத்துமேட்டுப் பாடல்களில் மட்டுமல்ல – காதல் பாடல்களிலும் கூட அவனது பொதுவுடைமை ஆசை பூக்காமற் போனதில்லை.

தங்கப் பதுமையில் –
“முகத்தில் முகம் பார்க்கலாம் – விரல்
நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்”

– என்ற பாடலில் நுட்பத்திலும் நுட்பமான ஒரு கருப்பொருள் வைக்கிறான்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான சுகம் என்பது சுயசுகத்தோடு முடிந்து போவதல்ல. தாம்பத்யம் என்பது பெண்ணுடல் கொண்டு தன்னுடல் நிரப்புவதல்ல. அதுபோல் ஆணுடல்கொண்டு பெண்ணுடல் நிரப்புவதுமல்ல. ஆண் தன்னை உருக்கிப் பெண்ணை நிரப்புவதும் – பெண் ஒரு ஆணை நிரப்பத் தன்னைப் பெருக்குவதும் தாம்பத்யத்தின் இருபாற் தத்துவம். கொடுத்துப் பெறுதல் அல்லது பெற்றுக் கொடுத்தல். இழந்து கொண்டே அடைதல்; அல்லது அடைந்துகொண்டே இழத்தல் என்பதே தாம்பத்யத்தின் தத்துவம். எதிர் உயிரைப் பெருமை செய்வதுதான் இணைவிழைச்சின் இன்பம்.

பட்டுக்கோட்டை எழுதுகிறான்:

“ இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் – அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம்
-நான் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன வரிகளுள் இதுவும் ஒன்று.

தங்கத்தின் மூலக்கூறு பிரித்தால் கடைசிவரைக்கும் தங்கம்தான். பட்டுக்கோட்டையின் பாட்டுக்கூறு பிரித்தால் அவன் காதல்வரைக்கும் கம்யூனிஸ்ட்தான்.

பட்டுக்கோட்டை பாட்டெழுதிக் கொண்டிருந்த அதே கால அலைவரிசையில் இந்தியத் திரைப்பாட்டு வடக்கிலும் தெற்கிலும் எந்த மொழியில் இயங்கியது என்பது கருதத் தக்கது. அறுபதாண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தனித்தன்மை புலப்படும்.

“உடைந்துபோன
கனவுகள் சொல்கின்றன
என் கண்கள் கண்டெடுத்ததை
இதயம் தொலைத்ததென்று”
இது 1950 இல் கறுப்புவெள்ளை யுகத்தில் ‘மதுமதி’யில் ஷைலேந்தர் இந்தியில் எழுதியது.

“எல்லோரும் சொல்கிறார்கள்
உன் இதயம் கல் என்று
நாடு சொல்கிறது
உன் மனது காடென்று
காட்டில் தேடிப் பார்த்தபோது தெரிந்தது
நீலக்குயிலின் கூடொன்று”

-இது 1952 இல் மலையாளத்தில் கவி பாஸ்கரன் நீலக் குயிலுக்கு எழுதியது.

பிறமொழியின் சமகால சகாக்களெல்லாம் படைப்புமொழி தொட்டுப் பாட்டெழுதினார்கள். நம் உள்ளூர்க்கவிஞனோ-

“ காவேரி ஓரத்திலே
கால்பதுங்கும் ஈரத்திலே
காலையில நான் நடப்பேன்
கலப்பை கொண்டுக்கிட்டு
கட்டழகி நீ வருவ
வெதையக் கொண்டுக்கிட்டு”

– என்று உழைப்பு மொழி தொட்டுப் பாட்டெழுதினான்.
அதனால்தான் பட்டுக்கோட்டை பாடல்கள் என்ற சுவரொட்டி பார்த்துத் தமிழர்கள் கீற்றுக் கொட்டகையை மொய்த்திருக்கிறார்கள்.

அவன் பாடல்களில் பெரிய அலங்காரமில்லை. மேக மந்தைகள் நட்சத்திரங்களை மேயும் கற்பனைகளில்லை. தமிழ்மரபுக்குரிய கட்டமைவு அமைந்தது; கருத்தமைதி இருந்தது.
இருபெருங்கூறுகளில் பட்டுக்கோட்டை பெரிதும் கவனம் செலுத்தியதாய்க் கருதுகிறேன். ஒன்று –  முறியாத மோனை. இரண்டு – காதுக்குள் இனிக்கும் கடைஇயைபு.

“மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள் தீரக்
தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா”

இதில் ‘மனிதனாக’ என்பதற்குத் தனியுடைமை என்று எதுகையுமிட்டு, முறியாத மோனைகளையும் அமைத்த பாவலன், “வையடா- கையடா- செய்யடா- பொய்யடா-” என்று கடைஇயைபுகளையும் கச்சிதப்படுத்தியிருப்பதுதான் கட்டமைதி. திரைப்பாட்டு எழுதுகிறவனுக்கு இது அவ்வளவு எளிதல்ல. ஒரு திரைப்பாடலாசிரியனுக்கு மூன்று எஜமானர்கள்.

இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பாளர் என்று மூன்று சக்திகளைத் திருப்திப்படுத்தி, சில நேரங்களில் நான்காவது எஜமானராகிய நடிகரையும் தாண்டி வர வேண்டும். இந்தப் பாடலில் கூட “தனியுடைமைக் கொடுமைகள் தீரப் புரட்சி செய்யடா” என்றுதான் பட்டுக்கோட்டை எழுதியிருந்தாராம். ‘புரட்சி’ என்ற வார்த்தை பலருக்கு மிரட்சியைக் கொடுத்திருக்கிறது.

அந்த ஒரு சொல்லை மட்டும் மாற்றுங்கள் என்று வற்புறுத்தப்பட்டிருக்கிறார். பிறகுதான் ‘புரட்சி’ என்ற அசைவச் சொல்  அகற்றப்பட்டு ‘தொண்டு’  என்ற சைவச்சொல் பெய்யப்பட்டிருக்கிறது. நான்கு எஜமானர்களைக் கடந்தாக வேண்டிய பாடலாசிரியன் தணிக்கைக்குழு என்ற சர்வாதிகாரியையும் தாண்டி வரவேண்டியவனாயிருக்கிறான்.

‘சிவப்பு மல்லி’யில் “எரிமலை எப்படிப் பொறுக்கும்” என்ற பாட்டில் ‘ரத்தச் சாட்டை எடுத்தால் உனது யுத்தக் கனவு பலிக்கும்’ என்று எழுதியிருந்தேன். வன்முறை தெறிக்கிறது என்று தணிக்கைக் குழு தடுத்தது. “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் கையை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்” என்று மாற்றிக் கொடுத்தேன். வன்முறை குறைந்துவிட்டது என்று தணிக்கைக் குழு தணிந்தது. பழைய வரியைவிட வீரியம் கூடி விட்டது என்று தயாரிப்புத் தரப்பு மகிழ்ந்தது.

மார்க்சியப் படைப்பாளிகளில் சிலர் மரபு வழி வந்த தமிழ் அழகியலைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள்.  காற்றில் கூட ஈரப்பதம் இருக்கிறது. சிலர் கவிதைகளில் இல்லாமல் போகிறது. ரத்த ஓட்டம் சுண்டிப் போன சொற்களால் அவர்கள் வாழ்க்கையை வரையப் பார்க்கிறார்கள். உண்மையான மார்க்சியம் என்பது வறண்ட வாழ்க்கையில் ஈரம் சேர்ப்பது. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான பேதமற்ற பேரின்பமே மார்க்சிய அழகியல். மரபுகளை உள் வாங்கிய தமிழ் அழகியல் பட்டுக்கோட்டையின் பாடல்களில் படிந்துகிடப்பது பாவேந்தர் தந்த பயிற்சியால் கூட இருக்கலாம்.

“ என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா மூத்தவளா?”
– என்று பட்டுக்கோட்டை கேட்கும் கேள்வியில் மதியைத் தனது மைத்துனியாக்கி விடும் சாமர்த்தியம் தொனிக்கிறது.

விஞ்ஞானம் பிரகடனப்படுத்திவிட்டது நிலா ஒரு பாலைவனம் என்று. அங்கே பிராணவாயு இல்லையென்று கோள் ஈர்ப்பும் குறைவென்று. மற்றும் தண்ணீர் இருந்ததற்கான தடயமும் இல்லையென்று . விண்வெளிப் புழுதிகளின் குப்பைக்கூடை அதுவென்று. அதிலுள்ள மடுக்களும் மடிப்புகளுமே கறையாகத் தோற்றம் தரும் காட்சி என்று . ஆனால் இவற்றையெல்லாம் புறம் ஒதுக்கி பூமியில் ஒழுகும் நிலாப் பாலையே கவிபாடிக் களிக்கிறது கலை.

விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு அதுதான். ஒன்றை ஒன்றாகப் பார்ப்பது விஞ்ஞானம். ஒன்றை மற்றொன்றாகப் பார்ப்பது கலை. நிலாக்கோளில் கறைபோல் காட்சிப்படும் தோற்றத்தை-

“கன்னத்தில் காயமென்ன
வெண்ணிலாவே – உன்
காதலன்தான் கிள்ளியதோ
வெண்ணிலாவே”

– என்று பாடும் பட்டுக்கோட்டை தற்குறிப்பேற்ற அணியால் ஈராயிரம் ஆண்டின் தமிழ் அழகியல் மரபைத் தொடரும் கவிஞனாகவே தோன்றுகிறான்.

பாடலில் ஆங்கிலச் சொற்களைக் கலந்திருக்கிறார். பெண்களை ஒரு பாடலில் வஞ்சகிகள் என்று வர்ணித்திருக்கிறார். ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்கமுடியாது’ என்று மார்க்சியத்திற்கு எதிர்வரிசையில் நின்று பேசியிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனக் கணைகள் பட்டுக்கோட்டை மீது வீசப்படுவது உண்டு. அந்தச் சில்லறை விமர்சனங்களை நாம் சிரச்சேதம் செய்துவிடலாம். உலகத்தின் எந்தப் படைப்பாளியின் படைப்புகளிலும் கொஞ்சம் கலைக்கழிவு உண்டு. அதைவைத்து அம்பு தொடுப்பது விமர்சனங்களின் பொய்விடைப்பு என்றே கருதப்படும்.

“பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா?” என்று கண்ணதாசன் பாடியபோது பாரிவள்ளலுக்கு மகனில்லை என்பது கூடக் கண்ணதாசனுக்குத் தெரியவில்லையே என்று ஒரு கூட்டம் முணுமுணுத்தது. கவிதையை நுகரும் நாசி இவர்களுக்குக் கடுகளவும் இல்லையே என்றுதான் கலையறிந்த கூட்டம் கவலைப்பட்டது.

ஒரு பாடல் அல்லது ஒரு படைப்பின் வீரியம் கவிஞன் இறந்த பிறகும் அது எத்தனை காலம் இறவாமல் இறக்கிறது என்பதுதான். பட்டுக்கோட்டையின் பல பாடல்களுக்கு மரணமில்லை. அவை நிகழ்காலத்தின் நீரோட்டத்தில் வாழ்கின்றன.

“பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லே
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
பொதுப் பணியில் நினைவில்லே
போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லே”

1959 இல் எழுதப்பட்ட இந்தப்பாட்டு ஐம்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் நிகழ்காலங்களின் அரசியலுக்கு நெருக்கமாக இருப்பது தற்செயலானதல்ல.

இருபத்தொன்பது வயதில் இறந்துபோனவனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. அவன் எழுதிய கடைசிப் பாடலுக்குரிய பணத்தைக் கையோடு கொண்டுவருகிறார் நடிகை பண்டரிபாய். பணத்தை வைத்துவிட்டு அழுதவர் அவன் எழுதிய கடைசிப் பாடலைப் படித்துப் பார்க்கிறார்.

“தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கிவிடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் – இதப்
புரிஞ்சுக்கிட்டவன் அழமாட்டான்”
புரிந்த பிறகும் அழுகை வருகிறது.

தான் வாழவிருந்த ஆயுளையும் தன் பாட்டுக்கு ஊட்டிவிட்டுப் போய்விட்டான் பட்டுக்கோட்டை. தமிழ்ச் சமூகம் அவனை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தன் பாரம்பரியத்தின் பிரதியானால்தான்  கலை இலக்கியத்தின் தொடர்ச்சியைக் காப்பாற்ற முடியும்.

2030 இல் அவனது நூற்றாண்டு வருகிறது. அந்த விழாவை நாடு தழுவியெடுப்பேன் நானிருந்தால். இல்லையேல் தமிழ்ச் சமூகத்தை முன்னிலைப்படுத்தி என் பிள்ளைகள் எடுப்பார்கள். இந்தக் கட்டுரையை அதற்கான உயில் என்றும் எழுதுகிறேன்.

திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழை ஆண்டாள் - வைரமுத்து

                               

மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.
மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.
"இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. "மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.
அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. "எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.
"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்யும்; நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளை போதில் பொறிவண்டு கண்படுக்கும்; வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்' - இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.
வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது அல்லது திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.
தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது. இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.
சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.
யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி -விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது. எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள். எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள். "இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.
வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; கொண்டு செலுத்தியது.
வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதியதன்று. "மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது. கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் -
பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனுமென்று
இருபெருந் தெய்வமும் உடன்நின் றாங்கு
உருகெழு தோற்றம்
(புறம் 58) - என்று பாடுகிறார்.

கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில் "தெய்வம்' என்கிறார். சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.
தெய்வம் - கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்; பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள்; பழகாத பொருள். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்'. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்; கடவுள் என்பது வழிபடுபொருள். அது எட்ட முடியாதது. எல்லார்க்கும் வாய்க்காதது. அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்; கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும். இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன. ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?
அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது? குரு பரம்பரைக் குறிப்புகள்கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை. "வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற திருப்பாவை வரிகொண்டு கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.

ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.
பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது. பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; தெய்வக் காதலில் திளைக்கிறாள்.
தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர் மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார். அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன. எல்லை மீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள் "அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்' என்று சொல்லி மறைகிறார். கோதையின் பெருமை கண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.

மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பௌர்ணமியாய் நிற்கிறது. மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. "மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!' என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.
"உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்கிறாள். "மாலிருஞ்சோலை
எம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்' என்று உறுதி உரைக்கிறாள்.
தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?

ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும், உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?
"தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே' என்ற குலசேகர ஆழ்வார் குரலில், ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.
வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது.

ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்; மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம். அது கட்டற்ற காட்டாறு. இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள் "ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்; ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்' என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.
ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.
ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு. நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள். அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்' என்று கனவு கண்டாள். "அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே' என்று காதல் வஞ்சினம் கண்டாள். அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று. தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று. கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்.
"நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்' -என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள். ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?
உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள். "குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். மெத்தென்ற பஞ்சசயனமாவது தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள்.

மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்' என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.
கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்' கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது. கொழுந்தமிழும் - செழுந்தமிழும், பழந்தமிழும் - இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன.

.
மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். எவரிடம் கேட்பது? அவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.
கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள். "சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான். எனக்கேன் இக்கண்ணீர் உப்பு?' என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது. ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது.
"காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை' என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது. "என் உயவுநோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்? முட்டிக்கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய்விட்டுக் கதறவோ' என்ற பொருளில் இயங்கும் "முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்' என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.

கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட "கன்று முண்ணாது கலத்தினும் படாது' என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான். ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். "கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்' என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.

ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோது, கண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது. "ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்; உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்' என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள், பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் "திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச்சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்' என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்க, போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்துவர, பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள். திருவரங்கக் கோயில் புகுந்து, வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடைநடந்து ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்; ஐக்கியமுற்றாள்.

இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.
கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல. மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு; கண்ணனும் ராதையும் போல. ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆனால், அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.
"குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்' - என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த "கோயிலொழுகு' நூலில் காணப்படுகிறது.

ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform  என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple.
- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.

சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. "எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்' என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.
"கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம். தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன். இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று' என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.

ஒன்றையே நினை - ஒருமுகப்படு - ஒப்புக்கொடு - நம்பு - கருதியதில் உறுதிகொள் - வினைப்படு - வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று. தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச்
செல்லும் அருஞ்செய்தி இதுதான்.

-வைரமுத்து