புதன், 4 அக்டோபர், 2017

மொழிகாத்தான் சாமி - வைரமுத்து

                          அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் என்ற கிறித்தவரும், உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மைந்தர் சாமிநாதன் என்ற அய்யரும் தோன்றாதுபோயின் திராவிடம் என்ற கலாசாரக்கட்டமைப்புக்குக் கச்சாப்பொருள் இல்லாது போயிருக்கும்.
ஆரியம் - திராவிடம் என்ற இரு சொற்களும் வடமொழி - தமிழ் என்ற பொருள் குறிக்கும் சுட்டுகளாகவே வழங்கப்பட்டு வந்தன.
''ஆரியம் தமிழோடு இசையானவன்'' என்று அப்பர் பதிகத்தில் ஆளப்பெறும் ஆரியம், வடமொழியை மட்டுமே சுட்டுகிறது. ஞானசம்பந்தன் என்ற ஒரு பிராமணக் குழந்தை 'திராவிட சிசு' என்று அடைமொழி பெறுமிடத்து அது தமிழ் மொழியை மட்டுமே சுட்டுகிறது.
வேதாந்த தேசிகர் - தாயுமானவர் போன்ற முன்னோடிகளும் திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் என்ற பொருள் வரையறைக்குள் மட்டுமே எடுத்தாளு
கிறார்கள். கும்பகர்ணன் இராவணனை 'ஆரிய' என்று விளித்தபோதும், பாரதியார் 'ஆரிய ராணியின் வில்' என்று களித்தபோதும் உயர்ந்தோர் சிறந்தோர் என்ற பொருள் மட்டுமே உணரப்பட்டது.
இவ்வண்ணமாக ஆரியம் என்பது வடமொழியென்றும், திராவிடம் என்பது தமிழ்மொழியென்றும் அறியப்பட்டும் ஆளப்பட்டும் வந்த நிலையில் திராவிடம் என்பது இனக்குறியீடு என்றும், ஆரியம் என்பது அதற்கு எதிர்ப்பதமான கலாசாரக் குறியீடு என்றும் மொழி அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து முன்மொழிந்தவர் கால்டுவெல் பாதிரியார்.
அவர் கண்டதெல்லாம் திராவிட இனத்திற்கு ஆதரவான இலக்கணச் சான்றுகள். ஆனால் உ.வே.சா என்ற மூதறிவாளர் கண்டெடுத்ததெல்லாம் திராவிட நாகரிகத்துக்குச் சார்பான இலக்கியச் சான்றுகள்.
வடமொழியின் ஊன்றுகோலின்றித் தனித்தியங்க வல்லது தமிழ் என்பதை இலக்கணத்தால் நிறுவியவர் கால்டுவெல் என்றால், இலக்கியத்தால் நிறுவியவர் உ.வே.சாமிநாதையர் ஆவார்.
19ஆம் நூற்றாண்டின் மையத்திலிருந்து 20ஆம் நூற்றாண்டின் மையம் வரையிலான காலப்பெருவெளியில் (1855-1942) நாடுதோறும் ஏடுதேடி ஓடி அலைந்து அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் -
* தமிழர் என்ற தொல்பழங்குடிக்குத் தோற்றுவாய் இல்லை
* சேர - சோழ - பாண்டிய மரபுகளின் செவ்விகள் இல்லை
* குழந்தை ஒன்று இறந்தாலும் அது ஒரு பிண்டமாகவே பிறந்தாலும் அதனை வாளால் கிழித்துப் புதைக்கும் வீரத்திற்குச் சான்றுகள் இல்லை
* ''புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்'' என்ற அரிய பண்பாட்டுக்கு ஆவணங்கள் இல்லை
* அன்பின் ஐந்திணை இல்லை
* எங்கள் புவிசார் பொருள்களுக்குப் பெயர்களில்லை
* உலக நாகரிகப் பொதுவெளியில் எங்கள் பெருமைகூறும் பெருமிதங்களில்லை
*அனைத்துக்கும் உச்சமாய் ஒரு செம்மொழியின் தலைமைத் தகுதியான தொன்மை என்பதற்குச் சங்க இலக்கியம் போலொரு தங்கப்பட்டயம் இல்லை
பனை ஓலைத் தமிழை மீட்டுப் பதிப்பித்தல் என்பது எலும்பைப் பெண்ணாக்கிய முன்னொரு கதையைப்போல் இன்னொரு கதையாகும்.
அச்சு வாகனத்தை அடைவதற்கு முன்பு பனை ஓலைதான் தமிழின் கடைசி ஊடகம். மூலப்படிகள் காலங்காலமாய்ப் பெயர்த்தெழுதப்பட்டு கரையான் தின்றதுபோக, அனல் உண்டதுபோக, புனல் கொண்டதுபோக, வாழ்ந்துகெட்ட ஒரு தலைமுறையின் எச்சம்போல் கொஞ்சம் கொஞ்சம் மிச்சமிருந்தன; மடங்களிலும் தமிழறியாத சில தனவந்தரிடத்தும் சிக்கிச் சிதிலமுற்றுக் கிடந்தன. அந்தத் தமிழ் தரித்த பனை ஓலைகளெல்லாம் சிலமடங்களில் பூஜைப் பொருளாய், சில வீடுகளில் அறிவாளிகளின் அடையாளமாய், சில விடங்களில் தற்குறிகளின் தனி உடைமையாய் மொத்தமாகவும் சில்லறையாகவும் முடங்கிக்கிடந்தன. எடுத்தாள நாதியற்று, எங்கு கிட்டும் என்ற சேதியற்று காக்கை கொத்திய கடுக்கனைப்போல மதிப்பறியாது மங்கிக்கிடந்தன. அந்தச் சுவடிகளில்தாம் பதிந்துகிடந்தன பழந்தமிழரின் சுவடுகள்.
இவ்விடத்து நாம் சற்றே சுவடி புராணம் சொல்லுவோம்.
தமிழ்நாட்டுப் பனைமரங்களை நாம் வணங்க வேண்டும். பன்னூறு ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட தமிழை 18ஆம் நூற்றாண்டுக்குக் கடத்திவர ஓலை தந்த கற்பகத்தருக்கள் அவைதாம். தென்
கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதுமே தங்கள் பதிவுறு பொருளாய்ப் பயன்படுத்தியது பனை ஓலைகளைத்தான். கல் - களிமண் - மரவுரி - மடல் - தோல் - துணி என்ற ஊடகங்களைக் காலந்தோறும் கடந்துவந்த மொழிஉரு, தன் இறுதி இளைப்பாறலுக்குப் பனை ஓலையில் வந்து படிந்தது.
இவற்றுள் கல்லில் காப்பியம் செதுக்குதல் கடிது. களிமண்ணோ கடத்தவும் கையாளவும் அரிதானது. மரவுரியோ அற்ப ஆயுள்கொண்டது. தோல் என்பது கொல்லாமைக்கு எதிரானது. பட்டயம் என்பது செல்வந்தர்களே செதுக்கத் தக்கது. துணியோ கிழிசலுறுவது. பனை ஓலைதான் எழுதவும் புழங்கவும் எளிதானது. காக்கவும் கடத்தவும் வசதியானது. 200 முதல் 300 ஆண்டுகள் ஆயுள்கொண்டது.
சுவடி படைக்கும் தொழில் நுட்பம் அற்புதமானது.
இளம் பதமுள்ள பனை ஓலை பொறுக்கி, அளவுக்குத்தக்க நறுக்கி, குழந்தைக்கு நகம் வெட்டுவதுபோல் நளினமாய் நரம்பு களைந்து, நிழலில் உலர்த்தி, பனியில் பதப்படுத்தி, இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்பி, பளபளப்பான சங்கு அல்லது கல்கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுறுத்தி, பக்குவமாய்ப் பாடஞ்செய்து, மஞ்சள் நீரிலோ அரிசிக் கஞ்சியிலோ உள்ளார ஊறவைத்து, பிள்ளைக்கு வலிக்காமல் காது குத்துவதுபோல சுவடிக்கு இரு துளைகளிட்டு, ஒரு முனையில் கயிறு செருகி, மறுமுனையில் சுள்ளாணி செருக, பனை ஓலை பாட்டுச் சுவடியாய் மோட்சமுறும். ஓலையின் மீது மஞ்சளும் வேப்பெண்ணெயும் பூசி, கோவை, ஊமத்தை இலைச்சாறுகளும், மாவிலை அருகம்புல் விளக்கு ஆகியவற்றின் கரியும் தடவி 'மையாடல்' செய்வதுமுண்டு.
இந்த ஓலைகளின் மீதுதான் தமிழின் மரபணுக்கள் மாறிமாறிப் பயணப்பட்டன. இந்த ஏடுகளைத்தான் தின்றழித்தது கடல்; நின்றழித்தது தீ; கொன்றழித்தது மதம்; உண்டழித்தது மூடம். தமிழை மறந்த ஆட்சியும் அழித்தது; தமிழ் தெரியாத பூச்சியும் அழித்தது. இப்படிக் காலவாய் என்ற காளவாயில் வீழ்ந்ததுபோக மிச்சமுள்ள ஏட்டுத் தமிழை மீட்டுத் தரத்தான் சாமிநாதன் என்ற மூளைக் கிழவனைக் காலம் அனுப்பியது.
ஏடு தேடுதல் என்பது சீதையை ராமன் தேடியதினும் துயரமானது. பழந்தமிழ் நூலாயின் எந்த ஏட்டுக்கும் மூலப்படி இராது. தலைமுறை தலைமுறையாய்ப் பெயர்த்தெழுதப்பட்ட ஏதேனும் ஒரு பிரதியே கிட்டும். அதிலும் பெயர்த்தெழுதியவனின் 'பேரறிவு' மூலத்தின் முகத்தையே சிதைத்திருக்கும். ஒருபடி நெல்லைக்குத்தி ஊருக்கே எப்படிப் பொங்க முடியாதோ அப்படி ஒரே ஒரு படியை நம்பிப் பதிப்பிக்கவியலாது. ஒப்பு நோக்கப் பலபடிகள் வேண்டும். அந்தப் படிகளை அடைவது திசைக்கொரு சீதையைக் கண்டறிவதுபோல் திகைப்புக்குரியதாகும். அப்படியே கண்டறிந்தாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போகாத பிரதிகளில் மெய்ம்மூலம் எதுவென்று கண்டறியும் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றிருக்க வேண்டும். பனை ஓலை எழுத்துக்களுக்குப் புள்ளி இராது. எல்லா எழுத்துக்களும் ஒன்றுபோல் இரா. பல நேரங்களில் உரையும் மூலத்தின் தாள ஒழுங்கிலேயே நடைபோடுவதால், மூலத்திற்கும் உரைக்குமான பிரிசுவர் யாங்குளது என்று பிரித்தறிவது, கடலுக்குள் எது இந்து மகா சமுத்திரம் - எது வங்காள விரிகுடா என்று பிரித்தறிவதுபோல் பெருந்துன்பம் தருவதாகும்.
இலக்கியப் பேரறிவும் இலக்கணச் சீரறிவும் கரையான் தின்ற மிச்சத்தை வாசித்துக் கொண்டுகூட்டிப் பொருள் காணும் கூரறிவும் வாய்த்திருந்தால் மட்டுமே பனை ஓலையைக் காகிதத்திற்குப் படிமாற்றம் செய்ய இயலும். இப்படி அனைத்தறிவும் கூடிப்பெற்ற கொள்கைக் கிழவராய் உ.வே.சா தமிழின் பழம்பரப்பெங்கும் பரவி நிற்கிறார்.
ஏடுதேடும் ஒரு மனிதன் எய்த வேண்டிய முதற்குணம் அவமானம் தாங்குதல்.
சேலம் ராமசாமி முதலியார் உ.வே.சாவுக்கு வழங்கிய சீவகசிந்தாமணி ஏட்டுப் பிரதி தொடங்கிவைக்கிறது அவரது பதிப்புப் பயணத்தை. 'பிரதி உபகாரம்' செய்தவர் என்று பெரிதும் வணங்கத் தோன்றுகிறது அந்த ராமசாமி முதலியாரை.
ஆனால் ஏடு பிரித்ததும் உள்ளங் கலங்கியது உ.வே.சாவுக்கு. இடவலமாய்ச் சுழலும் பூமிக்கு எதிராக, வலஇடமாய் சுற்றத் தொடங்கியது உ.வே.சாவின் தமிழறிந்த தலை.
''பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம்போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு. இது கொம்பு - இது சுழி என்று வேறு
பிரித்து அறியமுடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. 'ர'கரத்திற்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. 'சரபம்' சாபமாகத் தோற்றும்; 'சாபம்' சரபமாகத் தோற்றும்'' என்று உள்ளங்கலங்கும் உ.வே.சா ஒப்பீடு செய்து உறழ்ந்து பொருள்காண வேறுவேறு படிகள் தேடி ஊர் தோறும் அலைகிறார்.
தஞ்சாவூர் விருட்சபதாச முதலியார் என்பவர் வீட்டில் பழஞ்சுவடிகள் உள்ளதறிந்து சில தஞ்சாவூர்க் கனவான்களை அழைத்துக்கொண்டு செல்கிறார். அவர் தேடிச் சென்ற சிந்தாமணிப் பிரதி பரணில் இல்லை; பையில் இல்லை; அலமாரியில் இல்லை; அடிமனை அறையிலும் இல்லை. முதலியாரின் பூஜை அறையில் இருக்கிறது. பிரதி கேட்டதற்கு முதலியார் என்ன சொன்னார் என்று எழுதுகிறார் உ.வே.சா.
''ஜைனர்களுக்குத்தான் கொடுப்பேனே தவிர மற்றவர்களுக்குத் தரமாட்டேன். அப்படித் தருவது எங்கள் சம்பிரதாயங்களுக்கு விரோதம். எவ்வளவோ ரகஸ்யங்கள் பொருந்திய சிந்தாமணியை வெகு சுலபமாக நீங்கள் படித்துப் பார்க்க முடியாது. அந்நிய மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பதனால் எங்களுக்குச் சாபம் சம்பவிக்கும்''.
இதைப் பயிலும் போது எனக்கோர் அய்யம். ''ஜைனரிடம் அய்யர் பிரதிதானே கேட்டார்; பெண்ணா கேட்டார்? அதற்கா இத்துணை ஆட்சேபணை?''
கலங்கவில்லை உ.வே.சா. தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்ய அய்யர், துக்காராம் என்ற மராட்டியர் ஒருவரைத் துணைக்கழைத்துச் சென்ற பிறகுதான் பூஜை அறையில் இருந்த சமணச் சுவடி அய்யராகிய சைவருக்கு மதம் மாறியது.
பயிலப் பயிலத்தான் தெரிந்தது சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தமிழறிவு மட்டும் போதாது சமணப் பேரறிவும் வேண்டுமென்று. ஜைனர்களிடம் சென்று சமயமறிந்தும் நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்துகொண்டார். சைவத்திலே புழங்கிவரும் பஞ்சாட்சரம் சமணத்திலும் ஓர் இடத்தில் பயின்று வருவது கண்டு குழம்பி நின்றார் தமிழ்த் தாத்தா.
''ஓரிடத்திலே திருத்தங்கு மார்பன் புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும்வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்'' என்றிருந்தது. இது ஜைன நூலாயிற்றே! பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்து கொண்டது என்ற சந்தேகம் வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரம் என்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில் 'அருகர் - ஸித்தர் - ஆசாரியர் - உபாத்தியாயர் - ஸாதுக்கள்' என்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம் என்று தெளிவுறுத்தினார்கள்'' (என் சரித்திரம்).
உண்மை என்ற ஒளியின் மையத்தை அடையும் வரை அய்யரின் பயணம் ஓய்வதில்லை என்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே உயர் சான்றாகும்.
மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை. சீவகசிந்தாமணிப் பதிப்பு நிறைந்ததும் அலுப்பு மிகுதியால் அச்சகத்தில் உறங்கிப்போன அய்யர் பெருமானை ''இந்தாருங்கள் பத்துப்பாட்டு'' என்றொரு குரல் எழுப்புகிறது.
வேலூர் வீர சைவராகிய குமாரசாமி அய்யரே அவரைக் குரல்கொடுத்து எழுப்பியவர். தமிழ்த் தொண்டு தொடரவேண்டும் என்று தமிழ் அன்னையே இவர் மூலம் கட்டளை இடுகிறாள் என்று கருதிக்கொண்ட அய்யர் அவர் கையில் 50 ரூபாயை அள்ளித் தந்து அனுப்புகிறார். பத்துப்பாட்டுக்கு 50 ரூபாய் எனில் ஒரு பாட்டுக்கு ஐந்து ரூபாய். அதன் பிறகு அய்யரைப் பத்துப்பாட்டு என்ற பேய்பிடித்து ஆட்டுகிறது.


பத்துப்பாட்டைப் பதிப்பிக்க அவர் பட்டபாடுகளும் உற்ற துயர்களும் எத்துணை என்பதை எண்ணிப்பார்க்க நிகழ்வொன்றை நினைவு கூரலாம்.
பத்துப்பாட்டின் எட்டாம் பத்தாகிய குறிஞ்சிப்பாட்டு ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழறிவிக்குமாறு கபிலர் பாடியது. தமிழ்நாட்டின் புவியியல் - தமிழின் சொல்லியல் - தமிழர் வாழ்வியல் மூன்றின் செழுமைகாட்டும் செய்யுள் அது.
தினைப்புனம் காக்கச் சென்ற மலை வாணர் மகளாகிய தலைவியும் அவள் தோழியும் அருவி நீரில் ஆடி முடித்து மலைப்பாறையில் கொய்து கொய்து குவிக்கிறார்கள் கொழும் பூக்களை. குவிக்கப்பட்ட பாறைக்கும் கொள்ளை வாசம்தரும் அந்த 99 பூக்களின் பெயர்களை வரிசைப்படுத்துகிறார் புலவர்.
அந்தப் பூக்களில் மூன்றே மூன்று பூக்களின் பெயர்கள் மட்டும் ஏட்டில் இல்லை. அதுமட்டுமில்லை; புரியாத எந்தச் சொல்லின் பொருளைத் தேடுகிறோமோ அந்தச் சொல்மட்டும் எல்லா அகராதிகளிலும் மாயப்பொய் பலகாட்டி மறைவதைப்போல விட்டுப்போன அந்த மூன்று பூக்கள் மட்டும் எந்தப் பிரதியிலும் இல்லை.
பூவிழந்த கைம்பெண்ணைப் போலப் புலம்புகிறார் உ.வே.சா. 261 அடிகள் கொண்ட குறிஞ்சிப் பாட்டில் 64 மற்றும் 65ஆம் அடிகளில் தொடுக்கப்பட்ட பூக்களே விடுபட்டுள்ளன.
''ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி ----------- --------
----------------------------- கூவிளம்''
இங்கே விடுபட்டுப்போன மலர்கள் எவை? எந்த ஏட்டிலும் கிட்டவில்லையே! என்னடா இந்தக் குறிஞ்சிக்கு வந்த சோதனை என்று வேதனை உற்ற பொழுது அய்யரின் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.
தாம் தேடாத இடம் தருமபுர ஆதீனம் மட்டும்தான். அங்கு சென்று தேடினால் என்ன? ஆனால் திருவாவடுதுறை மடத்துக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் ''மனஸ்தாபம்'' என்ற சொல்லை அய்யர் பயன்படுத்தினாலும் உண்மையில் இரு மடங்களுக்குமிடையே வழக்கே நடந்துகொண்டிருந்தது என்பதே வரலாறு.
அய்யர் துணிந்துவிட்டார். தமிழ்மானம் காப்பவன் தன்மானம் பார்ப்பதில்லை.
தம்மைப் பெரிதும் ஆதரித்துவரும் திருவாவடுதுறையின் சம்மதம் பெற்றுத் தருமபுரம் புகுந்தார். உயரமான குத்துவிளக்குகளின் ஒளியில் இரவெல்லாம் தேடித் தேடிக் கடைசியில் ஓர் ஏடுகண்டார். ''நான் எந்தப்பாகம் காணாமல் தவித்தேனோ அதை ஓர் ஏட்டிலே பார்த்தேன். என் உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரே மயிர்க்கூச்சல் உண்டாயிற்று'' என்று எழுதுகிறார் உ.வே.சா.
''தேமா மணிச்சிகை
உரிதுநாறவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்''
தேமா, மணிச்சிகை, உந்தூழ் என்ற மூன்று மலர்களின் பெயர்கள் கண்டதும் இழந்த குழந்தையைக் கண்டெடுத்த தாயானேன் என்று அழுது மகிழ்கிறார் தமிழ்த் தாத்தா. அவரது கண்ணீரின் மிச்சம் தமிழ்த் தாயின் கண்களிலிருந்தும் வழிந்திருக்கும்.

***

சிலப்பதிகாரத்தின் செப்பமான பிரதி தேடி அவர் ஊர் தோறும் அலைந்த கதை நினைத்தால் ஊறுங் கண்ணீர் ஊறும்.
திருச்சி சபாபதி முதலியார் - பாகற்பட்டி ஸ்ரீநிவாச நாயக்கர் - தாரமங்கலம் ஆதி சைவர் வீடுகளிலும் தேடித் தேடி ஏமாற்றமுற்று கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதன் சன்னதி அடைகிறார். அது வரகுண பாண்டியன் ஏட்டுச் சுவடிகளையெல்லாம் கூட்டுவித்த ஆலயம்.
தேவஸ்தானத்தின் தருமகர்த்தாவிடம் அந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் எங்கே என்று கேட்கிறார்.
'ஆகமசாஸ்திரத்தில் சொன்னபடி அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட்டார்கள்' என்கிறார் தருமகர்த்தா.
அதற்கு உ.வே.சா சொன்ன மறுமொழியில்தான் அவரது முற்போக்கு முகங்
காட்டுகிறது.
உ.வே.சா மீது எனக்கொரு வருத்தம் இருந்தது. அவர் மகாகவி பாரதியை
மதித்ததில்லை. ''பாரதியை அரசாங்க விரோதி என்றும், வருணாசிரம ஒழுக்கத்தைத் தூவென்று தள்ளியவர் என்றும், இவரையும் இவருடைய கொள்கையையும், இவரது தமிழையும்கூட அய்யர் மதித்திருந்தனர் என்பதற்குச் சான்று யாதும் இல்லை'' என்று வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார்.
''தமக்கு நடந்த பாராட்டு விழாவில் பாரதி இயற்றி வந்த வாழ்த்துப்பா ஒன்றைப் பாட சாமிநாத அய்யர் அனுமதிக்கவில்லை'' என்ற குறிப்பினைக் கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ் இருவரும் எழுதுகிறார்கள். எனவே உ.வே.சாவை ஒரு பிற்போக்குவாதி என்றே பெருங்கருத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், ஆகம விதிகளின்படி சுவடிகளை எரித்துவிட்டோம் என்ற தருமகர்த்தாவின் பதிலுக்கு உ.வே.சா சொன்ன மறுமொழி அந்த வருத்தத்தைச் சற்றே போக்கியது. அவர் சொன்னது இது :
''அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தை அல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்?''

ஒன்றிரண்டு அல்ல; ஒருநூறு சொல்லலாம் அய்யரின் பெருமைகளை.
பத்துப்பாட்டு (1889) மொத்தத்தையும், புறநானூறு (1894) உட்பட எட்டுத்தொகையுள் ஐந்தனையும், சீவகசிந்தாமணி (1887), சிலப்பதிகாரம் (1891), மணிமேகலை (1898) என்ற ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றனையும் மீட்டெடுத்துப் பதிப்பித்த மேதைமை சொல்லவோ...
'சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே'
என்ற குறுந்தொகையைப் பதிப்பிக்குமிடத்து, அது 'பெரிதே காமம் என் உயிர்தவச் சிறிதே' என்று கலித்தொகையில் ஆண்டு வரலாயிற்று என்று ஒப்புமை காட்டும் ஒப்பிலா ஞானம் சொல்லவோ...
தம் தமிழுக்குப் பொருளுதவி செய்த பொன்மனவேந்தர்களாகிய சேதுபதி அரசர், பாலவனத்தம் ஜமீன்தார், பாண்டித்துரைத் தேவர், சிறுவயல் ஜமீன்தார், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களைச் செம்பதிப்புகளில் நினைவு கூர்ந்த செய்ந்நன்றி சொல்லவோ...
எவ்வளவு சொன்னாலும் தகும் அந்தத் தமிழ்ப் பெருங்கிழவனுக்கு.
இத்துணை இடர்ப்பட்டு நம் முன்னோடிகள் சேர்த்துவைத்த தமிழ்ச்செல்வத்தைப் போற்றியும், புகழ்ந்தும், காத்தும், கற்பித்தும், வாசித்தும், வாழ்ந்தும் வருவதுதான் அந்த முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதையாகும்.
உத்தமதானபுரம் உ.வே.சாவின் சொந்த ஊராயினும் அவர் பிறந்த கிராமம் 'சூரிய மூலை'. அவரை எப்படிப் பாடிப் பரவுவது?
சூரியமூலையில் பிறந்த ஆரிய மூளையே!
உமக்கு எம் திராவிட வணக்கம்.

(திராவிட என்ற சொல்லாடல்களைத் தவிர்த்தால் நல்ல தமிழ்க்கட்டுரை)

வெள்ளி, 14 ஜூலை, 2017

நசியா என்ற நல்லவள்


                       


  அவளை எனக்கு இருபதாண்டுகளாகத் தெரியும். இருபதாண்டுகளுக்கு முன் சித்தி வீட்டுக்கு போயிருந்தபோது எதிர்வீட்டில்தான் அவளது குடும்பமிருந்தது. அவள் மிகவும் அமைதியானவள். என்னிடம் தயங்கிக்கொண்டேதான் பேச வருவாள். அவளோடு எப்போதேனும் அந்த வயதில் பேசும்போதெல்லாம் எனக்கு என்னைப் பிடித்திருந்தது.

அவளை எல்லோரும் அம்மு என்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் அவளது உண்மையான பெயர் நசியா பேகம்! எனக்கும் கூட அம்மு என்று கூப்பிடத்தான் ஆசையாக இருந்தது. ஆனால்  அப்படிக் கூப்பிடுவது ஏதோ கொஞ்சுந்தொனியில் இருப்பதால் அந்த விளிப்புச்சொல்லை விழுங்கிக்கொண்டேன். அவளை நான் மட்டுமே "நசியா" எனக்கூப்பிடுவதுண்டு. நான் அவளின் பெயரைச் சொல்லி கூப்பிட்டால் அவள் மென்மையாக சிரிப்பாள். அதுபோல யாராலும் மென்மையாக சிரிக்கவே முடியாது. அது இப்போதும் நெஞ்சாங்கூட்டின் நினைவில் இருக்கிறது!

நசியாவுக்கு ஒரு தமக்கையும் ஒரு தம்பியும் இருந்தார்கள். சித்தி வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம்  எதிர்வீட்டு முற்றப்பரப்பில் தான் விளையாடுவோம். அப்போதெல்லாம் எனக்கு ஆண்பிள்ளைகளோடு விளையாடப் பிடிப்பதேயில்லை. உடன்பிறந்தோராக பெண்பிள்ளைகள் இல்லையென்பதால் எப்போதும் பெண்பிள்ளைகளோடு விளையாடுவதில் விருப்பம் அதிகம். அதற்காகக் கேலிப்பேச்சும் கூட கிடைப்பதுண்டு. பெண்களோடு பேசி விளையாடுவதில் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும். அவர்கள் விளையாட்டுக்குக்கூட ஏமாற்ற மாட்டார்கள். இது பொதுவானதாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் என்னிடம் அப்படித்தான் இருந்தார்கள் ; இருக்கிறார்கள்.

நான் நசியாவின் அக்காவைத் தான் எப்போதும் விளையாட அழைப்பேன். நசியாவும் என்னைப்போல ஏழாம் வகுப்பே படித்துக் கொண்டிருந்ததால் அவளை வெட்கங்கலந்த பார்வையால் கடப்பதோடு சரி. பேசாமல் பார்வையால் சொற்கள் பரிமாறுவது எத்துணை வாஞ்சையானதாக இருக்கிறது! அதெல்லாம் ரசிக்கத்தக்க உணர்வியல்.

நான், செகன், குமார், தேவி, ஆரிபா (நசியாவின் அக்கா) ஒளிந்து பிடித்து விளையாடுவோம். நசியாவுக்கு கூச்ச சுபாவம். அதுவும் என்னிடம் அவள் எப்போதுமே நாணத்தோடுதான் இருப்பதாகக் காட்டிக்கொள்வாள். அதனாலேயே கூட எனக்கு அவளைப் பிடித்திருக்கலாம். அந்த வயதில் எங்களுக்குள் இருந்ததெல்லாம் என்னவென்றே சொல்லத் தெரியாது. பால்யம் தன் நொதிகளின் தூண்டில் போடுவதாகக்கூட இருந்திருக்கலாம். அதனால் அதைப் பெரிதாக பெயரிட முயன்றதில்லை.

ஒருநாள் நாங்கள் விளையாட வந்தபோது தேவி எங்களோடு விளையாட நசியாவையும் கூப்பிட்டாள். அப்போது அவள் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, வரவில்லை என்பதாக தலையாட்டினாள்.

நாங்கள் விளையாட்டைத் தொடங்கினோம். எல்லோரும் வட்டமாக நின்றுகொண்டோம்.

ஆரிபா அக்கா யார் கண்டுபிடி ஆளுக்கான பாட்டை ஏதோ மெட்டில் சொன்னார்,

தட்ட தட்ட கம்மந்தட்ட
சோத்துக்கு சோளத்தட்ட
பட்டு வர்ற சொல்லிக்கிட்ட
ஆளு யாரு கிட்டத்தட்ட

செகன் வெளியேறினான்.

மறுபடி சொல்லத் தொடங்கினார்.

தேவி வெளியேறினாள்.

அப்படியே, குமாரும் ஆரிபா அக்காவும் வெளியேற நான் தான் கண்டுபிடியாளானேன்.

அப்துல்லா மாமா வீட்டு தட்டியைத் தொட்டு இருபது எண்கள் எண்ணிவிட்டு வரச்சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள்.

நசியா என்னைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் தெரியும்படி சிரித்தாள். அவ்வளவு அழகாக இருந்தாள். நானும் பதிலுக்குச் சிரித்துவிட்டு அப்துல்லா மாமா வீட்டுக்கு ஓடினேன்.

அப்துல்லா மாமா வீட்டு தட்டியைத் தொட்டு "ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு...," என்று எண்ணத் தொடங்க, அந்நேரம் மாமி தட்டிக்கு வந்து

"எய்யா என்ன செய்தீரு? வெளையாடுதிகளோ? வெளாடுங்க வெளாடுங்க. உங்க தனம் சித்தி வீட்ல இருக்கா மருமோனே?" என்று கேட்க,

"ஆமாத்தே! பீடி சுத்திட்டிருக்குத்தே! மாமா இருக்காவளா? காட்டுக்கு போயிருக்காவளா?"

"வீட்டுள்ளாரத்தாம்யா இருக்காவ. போய் பாருங்க மருமோனே! "

"இல்லத்தே! பட்டு வரச் சொல்லிருக்கா ஆரிபா அக்கா. போயி அவிகள கண்டுபிடிக்கணும்ல . நான் வாரேன்த்தே " என்று சொல்லிவிட்டு ஓடினேன்.

நசியா மட்டும் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். நான் வழக்கம் போல எல்லோரும் ஒளியும் இடங்களைத்தேடி அலைய, அவள் என்னைக் கேலிப்பார்வையோடு பார்க்கிறாள்.

அவள் வீட்டுத்தொழுவத்து போய், அங்கிருந்து நசியாவை ஒலிகுறைந்த குரலில் கூப்பிட்டேன். அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை. மறுபடி கூப்பிட்டேன். அப்போதும் எந்த அசைவுமில்லை. ஒருவேளை அப்படி நான் விளிப்பது அவளுக்குப் பிடித்திருக்கலாம். ஆம் ஆண்களின் அதிகாரத்தொனியைவிட மென்மையாக காற்றதிராமல் விளிப்பது விரும்பத்தக்கதாக இருக்கும்.

மறுபடி கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட அவள் திரும்பிப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

புருவத்தை உயர்த்தி பார்த்தபடி என்னை நோக்கி எழுந்து வந்தாள். தொழுவத்தின் கூரைச்சாய்ப்பின் அருகே வந்து நின்றுகொண்டு,

"கூப்பிட்டியோ? என்ன சொல்லு? "

"அவிக எல்லாம் எங்கங்க ஒளிஞ்சிருக்காவ? "

"வெளாட்டுல ஏமாத்தக்கூடாதுல?! ஏங்கிட்ட எதுக்கு கேக்க? நீ நல்லவம்ல தேடு "

"ஏய்ய்ய் சொல்லுத்தா! நான் கேட்டா சொல்லமாட்டியா? "

"அப்படி சொல்ல மாட்டேன் கேட்டியா,  அது தப்புல்லா?! நீ தேடு கண்டுபுடிச்சுடுவ, நான் சொல்லுதேன்ல "

"சரி போத்தா! உன்கிட்ட போய் கேட்டேன் பாரு "

"ஏய் எதுக்கு கோவப்படுத? அது தப்புல்ல உதய்! நீ நல்லப்பையன்ல கோச்சுக்காதயேன் "

பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்சுகிறாளா, கொஞ்சுகிறாளா என்று ஐயந்தோன்றும்படி என்முன்னே நசியா நிற்க,

நான் நிலைகொள்ளமாட்டாமல் தடுமாறியதை எப்படி சொல்வது,? தொழுவத்திலிருந்து வெளியேற அவள் ரெட்டைச்சடைகளில் ஒன்றைப் பிடித்து இழுத்துவிட்டு சிரிப்போடு

"செத்த உட்காரு நல்லவளே! வந்துடுதேன் " என்று ஓடினேன்.

அந்த உற்சாகத்தில் ஒளிந்திருந்தவர்களைத் தேடினேன்.

ஆயிசா வீட்டு மாடியில் தேவியும் செகனும் மாட்டிக்கொள்ள, மகூப் வீட்டு வைக்கோற்போருக்குப் பின் ஆரிபா அக்காவும் பழநி மாமா கடைக்கு பின்னால் குமார் மாட்டிக்கொண்டான். முதலில் நான் கண்டுபிடித்த தேவி தான் அடுத்த 'கண்டுபிடி ஆள் '.

தேவி அடுத்து பட்டுவர ஆயத்தமாக, நான் நசியாவைக் கூப்பிட்டேன் எங்களோடு சேர்ந்து விளையாட.

"நசியா! வெளாட வாறியாத்தா? "

"நானா? இல்ல வல்ல "

"ஏய்ய் வாத்தா பழநி மாமா கடைல பப்ளிக்கான் வேங்கித்தாறன் "

"நெசமாவா? அப்ப வாறன் "

'அட பப்பிள்கம் கிறுக்கச்சியே!' என மனத்திற்குள் சிரித்துக்கொண்டேன். ஆனால் அவள் எனக்காகவே வந்ததுபோலத்தான் நினைப்பிருந்தது.

தேவி அவளை முறைத்தாள். அவள் கூப்பிட்டபோது விளையாட வராதவள், நான் கூப்பிட்டதும் வந்துவிட்டதால் அவளுக்கு செல்லக்கோபம் வந்திருக்கக்கூடும். நசியா அப்போது தேவியைப் பார்த்து, அமைதியாக நின்றுகொண்டு,

"தேவிக்கா! நான் பட்டு வாறன். "

"ம்ம்ம் தெரியும்ல. அப்துல்லா சித்தப்பா வீட்டுத்தட்டிய தொட்டு இருபது எண்ணிட்டு வரணும் "

"சரிக்கா நான் போறேன். நீங்க போய் ஒளிஞ்சிக்கங்க "

நான் இடைமறித்து நசியா பட்டுவருவதைத் தடுத்தேன்.

"தேவி! அவ இப்ப தான மொதல்ல வெளாட வாறா?! மொதல்லயே பட்டு வந்தா பாவம்ல? நீயே பட்டு வாயேன். "

இப்போது தேவி என்னைப் பார்த்து முறைக்க, நான் சிரித்தேன்.

"ஏலாய் என்ன நினைச்சுட்டிருக்க நீயி? புதுசா வாறவளே பட்டுவாறேங்கா, நீயேம்லே நடுவுல நாட்டாமத்தனம் பண்ணுத?. அவ என்னடான்னா நாங்கூப்புட்டா வல்லேங்கா, நீ கூப்புட்டா வந்துடுறா,! என்ன சேட்டை பண்ணுதியலா? "

"ஏன் தேவி எனக்காக நீயே பட்டு வரமாட்டியா? உனக்கு விலங்கியல் நோட்டுல கரப்பான்பூச்சி, தவக்களைலாம் வரஞ்சு தர்றேன்ல? "

"அதெல்லாம் வுடுலே. எனக்கும் பப்ளிக்கான் வேங்கித்தா நான் பட்டுவாறன் "

"சேரி வேங்கித் தாறேன் பட்டு வாத்தா "

மெல்லுங்கோந்து (sewing gum) இங்கே கையூட்டுப்பொருள் போல தெரியலாம். ஆனால், அதை மெல்லுவதையும் அதில் ஊதி காற்றுமுட்டை விட்டு விளையாடுவதையும் அந்தப் பெண்கள் ஆர்வத்தோடும் ஆற்றாமையோடும் பார்த்திருக்கலாம்.

வீட்டில் வாங்கித் தின்ன தரப்படும் பணத்தில் மெல்லுங்கோந்து வாங்கித் தின்றால் அப்பாவும் அம்மாவும் திட்டுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்துள்ளது.

பெண்களின் எல்லா புறத்தையும் ஆணைகளால் அடைத்து வைத்துவிட்டு அதனை 'அடைகாப்பு' என்பது போல் தடுத்துவிடுவதுதானே சமூகம் காலாதிகாலமாக செய்துவரும் நடவடிக்கை!

நான் வாங்கித் தருவதாக சொன்னது மெல்லுங்கோந்து மட்டுமல்ல, அவர்களின் விருப்புரிமை! ஆதலால், அவர்களுக்கு என்னைப் பிடித்துவிடுவது இயல்பாகலாம். ஆம் நசியாவுக்கும் தேவிக்கும் உதய் என்றால் நிரம்ப பிடிக்கும்!

உதய் பள்ளிவிடுமுறைக்கு ஊருக்கு வருவானென்று கேள்விப்பட்டால் நசியாவுக்கும் தேவிக்கும் இருப்பு கொள்ளாது. சித்தி வீட்டுக்கு போவதென்றால் தாத்தாவிடம் அடம்பிடித்து திருவில்லிபுத்தூர் பால்கோவா வாங்கிக்கொண்டுதான் போவான். எல்லோருக்கும் பங்கு கொடுக்கும்படி நிறைய வாங்கச் சொல்லுவான்.

என் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு தேவியே பட்டுவர அப்துல்லா மாமா வீட்டுக்கு ஓடினாள். செகனும் குமாரும் பக்கத்து தெருவுக்குள் ஓட, ஆரிபா அக்கா சித்தி வீட்டுக்குள் ஓடினாள்.

நசியா என்னைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்க,

"என்கூட வாத்தா "

என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு என்னோடு ஓடிவரச் சொன்னேன்.

நசியாவின் சின்னஞ்சிறு உள்ளங்கையை மெல்ல அழுந்தப் பற்றிக்கொண்டு அவளை என்னோடு இழுத்துக்கொண்டு தேவி நடந்து செல்லும் திசையில் ஓடி, முன்னதாக பிரிந்த தெரு வழியே அழைத்துப் போனேன்.

"இந்தப் பக்கம் கூட்டுட்டு போற உதய்? "

"ஏங்கூட நம்பி வாத்தா! பத்தரமா கூட்டியாறன்த்தா "

"ம்ம்ம்ம்" என்ற அழுத்தம் அவள் என் கையைப் பற்றிக்கொண்டதிலும் தெரிந்தது.

அப்துல்லா மாமா வீட்டின் பின்னாலே போய் நின்றோம். தேவி அப்போது தான் வீட்டுத்தட்டியைத் தொட்டு கண்ணை மூடி எண்களை எண்ணத் தொடங்கினாள்.

நான் நசியாவைக் கூப்பிட்டு தேவிக்குத் தெரியாமல் அப்துல்லா மாமா வீட்டுக்குள் ஓடினேன். சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த பலகணி மேடையில் ஏறி ஒளிந்து நின்றுகொண்டு தேவியைப் பார்த்தோம்.

அப்போதுதான் இருபதை எண்ணிவிட்டு அவள் திரும்பினாள். நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

அப்படியே நின்றிருந்த நாங்கள்  கீழிறங்கி அந்த பலகணி அருகிலேயே உட்கார்ந்துகொண்டோம். அப்போது வீட்டுக்குள் ஏதோ உடைகிற ஒலி கேட்க,

இருவரும் எழுந்து உள்ளே எட்டிப் பார்த்தோம். வீட்டினுள்ளே அப்துல்லா மாமாவின் பெரிய மகன் நசீர் அத்தான் ஏதோ கண்ணாடி போத்தலை கையில் வைத்திருந்தான். அவன் எங்களைவிட இரண்டு வயது மூத்தவன். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

கீழே ஒரு போத்தல் உடைந்து நொறுங்கிருந்தது. நசியா எட்டிப் பார்த்துவிட்டு என் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

"ஏய்ய்ய் சாராயப் பாட்டுலு ஒடஞ்சிப்போச்சி."

நான் எட்டிப் பார்த்தேன். அது பிராந்திப் போத்தலாக இருந்தது. அதை அவன் உரமூட்டைகளுக்குள் ஒளித்து வைத்திருந்திருக்கிறான். அம்மா வெளியே போனபின்பு, அப்பா மாடிவீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அதை எடுத்து குடிக்கலாமென எடுக்கும்போது கைதவறி விழுந்து உடைந்திருக்கிறது.

அவசரம் அவசரமாக அவற்றை அப்புறப்படுத்தும் போது நான் உள்ளே போகிறேன். என்னைப் பார்த்ததும் அவன் பதறுகிறான்.

"மாட்டிக்கிட்டீரா? இருங்க அத்தை வரோட்டும் சொல்லிடுதேன் "

அவன் பதறியபடி,

"ஏலாய் சொன்னேனு வச்சுக்க, ஒன்னைய செவுட்டிப்புடுவனன்லே! " என்று  மருட்ட முயல்கிறான்.

"ஆங் செய்வீரு செய்வீரு, தோப்புக்கெணத்துல குளிச்சுட்டு ஒத்தையில வந்தப்ப லிப்ட் கேட்டேன்ல? கொடுத்தீரா? மாட்டிவுடுறேன் இரும் மச்சான் "

"ஏய்ய் வேணாலே ஆக்கங்கெட்ட கூவ. அறஞ்சுபோடுவன் போயிடு"

இவ்வாறு நாங்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க,

நசியா சொளவையும் விளக்குமாறையும் எடுத்துக்கொண்டு வந்து உடைந்து கிடந்த போத்தல் சில்லுகளைத் துப்புரவு செய்யத் தொடங்கினாள்.

"ஏத்தா நீ ஏன் இத செய்யுறவ? எழும்புத்தா "

"நசீரண்ணே! வாங்க இத கொண்டோய் கூளத்துல போட்டுட்டு வாங்கண்ணே "

அவன் அவளிடம் வாங்கிக்கொண்டு வெளியே போனான். நசியா என்னைப் பார்த்தாள்.

"அந்தச் சணல் சாக்க எடு உதய் "

"நான் மாட்டேன் போத்தா "

"என் பேச்ச கேப்பேல உதய்,? "

"ஆனா நசி அவனுக்காக? "

"எடுத்துக்கொடு "

எடுத்துக்கொடுத்தேன். வாங்கித் தண்ணீரைத் தெளித்து ஈரத்தைச் சாக்குப்பையால் துடைத்தெடுத்தாள்.

நசீர் உள்ளே வர,

"ண்ணே பயப்படாதீய! நாங்க சொல்லமாட்டம்."

"          "

"ஆனா அண்ணே இதெல்லாம் வேணா வுட்ருங்கண்ணே! எங்க வாப்பாவ யாரோ குடிச்சுட்டு வண்டியோட்டிட்டு  வந்துதான் ஏத்தி கொண்ணுட்டாவ "

"          "

"இனிமே நீங்க குடிக்காதீய ப்ளீஸ் "


அவன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தலை குனிந்தபடி நின்றுகொண்டிருந்தான்.

நாங்களிருவரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். நான் அவளைப் பார்த்தேன். அதே மெல்லிய சிரிப்பு.!

"மாட்டிவிட்டா அண்ணன அடிப்பாவ. சித்தப்பா கோவத்துல படிப்ப நிப்பாட்டிடும். பாவம் ல உதய் ? "

"நீ நல்லவ தான்த்தா "

ஆம். பெண்பிள்ளைகள் சிறுபருவத்திலேயே பக்குவமடைந்து விடுகிறார்கள். எந்தச் சூழலையும் உள்வாங்கி அதை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அதை யாருக்கும் தீங்கிழைக்காதபடி சரிசெய்யவும் முனைகிறார்கள். அவர்களின் புரிதல் சொல்லிக்கொடுத்தெல்லாம் வருவதாகத் தெரியவில்லை. அஃது அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது.

அவர்களின் வாழ்வு மிக மென்மையானது. அதைப் புரிந்துகொண்டு வாழ்வதுதான் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை பயப்பது. ஆனால்  இந்த அறிவிலிகளுக்கு அதெல்லாம்  அகப்படுவதேயில்லை.

நசியா நல்லவள்!

தொடக்கத்தில் நசியாவைப் போல்தான் எல்லாப் பெண்பிள்ளைகளும்.

நசியாக்கள் எப்போதும் நல்லவளாகவே இருந்துவிட சமூகம்தான் சம்மதிப்பதில்லை.

(முற்றும்)

திங்கள், 3 ஜூலை, 2017

பெண்ணின் பெருமை - கருத்துரை

மனச்சகதியின் தகாத நாற்றங்களை அப்புறப்படுத்திவிட்டு மெல்லிய உணர்வலையூட்டும் நறுமணத்தைப் பரவச்செய்வதில் இந்தப் புத்தகம் இயன்றளவு முயன்றிருக்கிறது

எந்த நூல்களை வாசிக்கலாமென்று எவரிடத்திலும் பரிந்துரை கேட்பதில்லை. ஏனென்றால், நான் தேர்ந்தெடுக்கும் நூல்களைவிட, என்னைத் தேர்ந்தெடுக்கின்ற நூல்கள் ஓரளவேனும் ஓர்ந்துகொள்கின்றன என்பதை உணர்ந்துள்ளேன்.

பத்தாண்டுகளுக்கு முன் 'புதிய குழந்தை' என்றொரு நூலை அண்ணன் செல்வகோ மதி வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தான். பொழுதுபோகாத ஒருநாளில் அதைப் புரட்டி பார்க்க நேர்ந்தபோது உள்ளச்சுவரெங்கும் அதிரும் கருத்துவீச்சுகளை எதிர்கொண்டேன்.

ஒரு குழந்தை எப்படியெல்லாம் வளர்க்கப்படுகிறது, அது வளர்ச்சி என்ற பெயரில் எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது, எவ்வளவு அதிமுகாந்திரமுள்ள வளர்கலையோடு குழந்தையாவும் வளர்க்கப்பட வேண்டும் என அதுகாறும் அவதானிக்கப்படாத முறையில் அறிவின்மை சருகுகளைக் கொளுத்தியது அந்தப் புத்தகம்

இப்படித்தான் ஓசோ எனக்கு அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு ஏதோ ஒரு சாமியார் என்றே நினைத்ததுண்டு. ஆனால், இந்தியத்துணைக்கண்டத்தின் முதல் ஆடம்பரச் சாமியார் அவரே! அவரைப் பின்பற்றியே இன்றுவரை இத்தனை போலிகள் குவிந்துள்ளனர்.

ஓர் ஐந்து நூல்கள் மட்டுமே அவருக்கும் எனக்குமான தொடர்பு தொடுத்தவை. அதில் கடைசி இரண்டு நூல்கள் பள்ளிக்காலந்தொட்டு நண்பர்களோடு கலந்தரட்டையிட்ட கருத்தியலுக்கு விளக்கமளிப்பதாகவே அமைந்தது. ஏற்கனவே, எங்கள் கரிசற்காட்டு மண்வாழ்க்கையினூடாகவும் இறைவிகள் சூழ்ந்த பெண்வாழ்க்கையினூடாகவும் நான் கண்டுணர்ந்தவற்றை ஓசோ என் தலைவருடி தக்கப்பாடம் நடத்தினார்.

அவை : பெண்விடுதலை -ஒரு புதிய தரிசனம் மற்றும் பெண்ணின் பெருமை .

இவ்விரண்டும் ஏதோ பெண்ணைப் பேசும் பெண்ணிய நூல்கள் என்று தலைப்பைக் கொண்டு தள்ளுவோமெனில் அது மூடத்தனம் ஆகிவிடும். ஆண் -பெண் பற்றிய உளவியலை தெள்ளத்தெளிவாக பேசிவரும் போதெல்லாம் ஆணியக்கருத்தாக்கம் பெண்வாழ்வின் மீது காலந்தோறும் நிகழ்த்திவரும் தாக்குதலையும் அதைத் தடுக்க தவறான வழிகாட்டலால் பெண்ணியம் பிறழ்ந்து நின்று வெறித்தனம் பூண்டு இயங்குதலையும் அறியத் தருகிறார்.

பெண்ணின் பெருமை என்ற இந்நூல் அன்பு பற்றியும் தாய்மை பற்றியும் தத்துவக்காற்றை வீசி புனித மானுடவியல் நோக்கி மனிதச்சேர்க்கைக்கு வழிதருகிறது.

உண்மையில் ஈ.வெ.ராமசாமியை விட பன்மடங்கு பகுத்தறிவாளர் ஓசோ என்பதை ஓங்குகுரல் கொண்டு சொல்லிவிட வேண்டும். ஏனென்றால், இயற்கையின்வழி பொருத்தி பெண்ணின் வாழ்வியலைப் பண்படுத்த ஏராளமாக பேசியுள்ளவர் ஓசோ தான்.

அன்பின் கொண்டாட்டம் அனைவரையும் தழுவட்டும்

                           

ஞாயிறு, 2 ஜூலை, 2017

தாயைக் கொண்டாடு

எனக்கு இதுதான் விளங்குவதேயில்லை. மிகவும் அபத்தமானதாகவே இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அம்மாவின் மீதான அன்பென்பது சோகக்குரல்களின் சொந்தப்பாடலா?

தாயைப் பற்றிய சிறுகதை, கதை, நாவல், திரைப்படம், பாடல் என எதுவெனினும் சோகவிரல்களால் அழுகைவிழிகளை ஒத்தடம் செய்துகொண்டுதான் இருக்க வேண்டுமா? அன்னையை ஆரத்தழுவி அன்புகூர்ந்திட முனையும்போதுகூட ஆனந்தக்கண்ணீர் தான் அரவணைப்பின் பசையொட்டிக்கொள்ள வேண்டுமா? ஒன்று எனக்குப் புரியவில்லை. இந்தப் பூமிப்பந்திற்கு ஒரு புதிய உயிரைக் கொண்டுவருகிறவளை நாம் கொண்டாடத்தானே வேண்டும்? ஆனால், நம் கொண்டாட்டங்களின் விளிம்புகளிலெல்லாம் விழிநீர் வழிய வேண்டிய வலியுறுத்தல்களை எதற்காகத் திணிக்கிறோம்?

ஏனென்று தெரியுமா? இங்கே அன்புசெய்யப்படுவது ஒரு கடமையாக இருக்கிறது. கடமை என்று எதையேனும் கொண்டோமானால், அது முறைமைகளை வரையறை செய்துகொள்ளக்கூடியது. அன்பு எப்படி முறைமைகளால் முகிழ்ந்திட முடியும்? அதுவோர் இருப்புநிலை. கொடுக்கல் -வாங்கல் என்ற கோட்பாடுகளுக்கப்பால் நின்று நிலையுணர்த்தும் ஓர் இருப்புநிலை. இயங்கும் வாழ்வியலில் இருப்புநிலை வேண்டுமெனில் - மானுடத்தன்மை மதிப்புறவேண்டுமெனில், மகிழ்ந்திருக்கும் மனப்பாங்கு அன்புடைமையின் ஆகுபொருள் ஆக வேண்டும்.

மகிழ்ந்திருக்கும் மனப்பாங்கிற்கு தன்னைச் சுற்றி நிகழும் அசைவுகளையெல்லாம் கொண்டாடி நுகரும் கொள்நிலை பெருக வேண்டும். அப்போதுதான் சோகஞ்சூழ்ந்த வாழ்வுச்சுணக்கங்களை அன்பின் தழுவல் அப்புறப்படுத்த இயலும்.

அன்புகாட்டலில் எப்போதும் அனுதாபங்களையே விதைக்கவும் -விளைக்கவும் எண்ணுவதாலேதான் தாயென்பவள் தாங்கொணாத் துயர்நிரம்பிய தியாகத்திருவுருவமாக விளம்பரப்படுத்தப்படுகிறாள். அவள் கொண்டாட்டங்களின் கோயில் அல்லவா? புன்னகை தளும்பும் புதிய சொற்களால் கீர்த்தனை பாட வேண்டிய தேவதையல்லவா? நெடுந்தூர சுற்றுலா ஒன்றிற்கேனும் உடனழைத்துப் போக வேண்டிய உற்றத்தோழி அல்லவா? அவளின் பழைய தோழிகள் தேடிக்கண்டறிந்து கொண்டு சேர்த்து ஒருநாளேனும் உரையாட வைக்க வேண்டாமா? இனியேனும் ஒரு நல்ல நண்பனைத் தெரிவுசெய்துகொள்ளும் பரந்தவெளிக்குப் பழக்கிக்கொள்ள வேண்டாமா?

உடல்நலிவு கண்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அம்மாவுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது,  தன் வாழ்வின் வாதைகளையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக கண்ணீர் மல்க ஒன்று சொன்னார்

"பொம்பளைகளாகவே பொறக்கக்கூடாதுப்பா "

இதுதான் பெரும்பான்மை தாய்களின் வடிகட்டப்பட்ட வாழ்க்கைத்தர்க்கம்!

அதற்காக அவர்களைத் துயருற்ற முகங்களோடும் - கண்ணீர் நனைத்த கைகளோடும் - அழுகைப்பாடல்களோடும் அணுகுவதென்பது அடிப்படையற்ற குரூரமான வன்முறை என்றே சொல்லுவேன்.

கேலிக்கிண்டல்களோடு - நாளும் நகைப்பூட்டி தாயை ஒரு குழந்தைபோல கொண்டாடுகின்ற மகனாக என்னைப் புதுப்பித்துக் கொண்டபின் புலப்பட்டவை இவை :

எனக்கு இதுதான் விளங்குவதேயில்லை. மிகவும் அபத்தமானதாகவே இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அம்மாவின் மீதான அன்பென்பது சோகக்குரல்களின் சொந்தப்பாடலா?

சனி, 24 ஜூன், 2017

யானேயாகி - சிறுகதை (மித்ரா)




                 கண்கள் இப்போது எரியத் தொடங்குகின்றன.வெகு நேரமாக மிண்ணணுப் பொருட்களோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன்.வெகு நாட்களாக இக்கூடத்தினுள்ளும், வெகு காலமாக இமைசேர விடாது இடை நிற்கும் என் கனவுகளோடும் உயிர் பொதித்து வைத்துள்ளேன். என் துணையாகவோ, உதவிக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ ஸீரோ (sero) இருக்கிறான்.என் இனிய இயந்திரன்.

         இதோ, இன்னும் சில தினங்கள், தொடு வானமாய் ஜாலம் காட்டிய என் கனவுகளை துரத்திப் பிடிக்கும் முயற்சியில் வெல்லப் போகிறேன். கை தொடும் தூரத்தில் இருக்கிறது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் என் மந்திரக்கோல்.

         விரும்பியவரை விரும்பிய காலத்திற்குச் சென்று வாழ வைக்கும் மந்திரக்கோல், இரண்டு பொத்தான்கள் மற்றும் கைரேகை பதியும் தொடுதிரையுடன் கூடிய என் எந்திரம்,  ' நேரத்தை திரும்பக் கொண்டு வர இயலாது ' எனும் கூற்றை வழக்கொழிக்கும். இனி உலகத்தாரின் தவறான முடிவுகளை நானே மாற்றுவேன்.

"நான் மித்ரா. உலகை மாற்றும் வித்தை அறிந்தவள்."

         கண்கள் இப்போது எரியத் தொடங்குகின்றன.

"ஸீரோ, Coffee கிடைக்குமா?"

         பதில் பேசாமல் Coffee தயாரிக்கத் தொடங்கியிருந்தான் ஸீரோ. அடுத்த இரண்டு நிமிடங்களில் கோப்பை என் கையில் இருக்கும். அதுவரை நாளிதழைப் புரட்டலாம். தலை வலித்தது. எழுத்துகள் நடனமாடின. ஆராய்ச்சியை முடித்த பின்னே மீண்டும் புத்தகங்கள் படிக்கத் தொடங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

" மித்ரா, Coffee! "

" thanks ஸீரோ..நாளிதழ் படித்தாயா? "

" படித்தேன். "

" ஏதேனும் முக்கியச் செய்தி? "

" உள்ளது. மரணத்தை வெல்லும் மருந்திற்கான ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. சில தினங்களிலேயே கூட ஆய்வு வெற்றி என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம். "

" நல்லது. நம்மைப் போலவே கனவுகள் சுமப்பவர்கள் ஏராளம். அனைவரும் வெல்லட்டும். ஆக, இனி வரும் காலங்களில் யாரும் மரணிக்க மாட்டார்கள். இல்லையா ஸீரோ? "

" ஆம் மித்ரா, இது மருத்துவ உலகின் மாபெரும் புரட்சி. ஆனால் இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மருத்துவத்துறை தான். "

" பார்ப்போம் ஸீரோ. அதற்கும் ஏதேனும் யோசித்திருப்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். நான் சற்று உறங்குகிறேன். இரண்டு மணி நேரம் கழித்து எழுப்பி விடு. "

         அவன் எழுப்பி விடும் முன்னரே எழுந்துவிட்டேன். உறக்கமும், ஓய்வும் உடலுக்குத் தான். கனவுகள் உறங்குவதில்லை. உறங்கவிடுவதுமில்லை. மீண்டும் வேலைகளைத் தொடங்கினேன்.

*****

" எவ்வளவு சதவீதம் மீதமுள்ளது மித்ரா? " ஸீரோவின் எந்திரக்குரல் சமீபமாகக் கேட்டது.

" கொஞ்சம் தான் ஸீரோ. ஒருவாறு முடித்து விட்டேன். ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். பின்பு மேலும் சில வசதிகளைப் பொருத்த வேண்டும். அதன் பின்பே காப்புரிமை பெற வேண்டும். "

*****

" Hurraayyy...... " மகிழ்ச்சியில் கத்தியே விட்டேன். சத்தம் கேட்டு வந்தான் ஸீரோ.

" என்னவாயிற்று மித்ரா? "

" எதுவுமில்லையே... "

" இன்னும் எவ்வளவு சதவீதம் மீதமுள்ளது மித்ரா? " ஸீரோ கேட்க அதிர்ந்தே விட்டேன். இறுதியாக இன்று வென்றும் விட்டேன்.

"கொஞ்சம் தான் ஸீரோ..ஒருவாறு முடித்து விட்டேன்.ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும்.பின்பு காப்புரிமை பெற வேண்டும்.."

"மேலும் என்ன வசதிகள்?"

"பின்பு சொல்கிறேன்.அவைகளை நானே இன்னும் முழுதாக வடிவமைக்கவில்லை.இப்போது வேலையிருக்கிறது, பின்பு பேசலாம்."

        மீண்டும் எந்திர வடிவமைப்பில் ஈடுபட்டேன்.

         நாளை என் வாழ்வில் மட்டுமில்லை உலக வரலாற்றிலேயே மிக முக்கியமான நாள்.மித்ரா காலத்தை வெல்லப் போகும் நாள். I am the very first time traveller in the world.

02.06.2037

         காலப்பயணத்திற்கு தயாரானேன். என்ன வேண்டுமானாலும் நேரலாம். நான் திரும்ப இயலாமலும் போகலாம் இடுப்பில் ஒரு கைத்துப்பாக்கியோடும், என் கையகல கால எந்திரத்தோடும் எதிர்காலத்தை நோக்கிக் கிளம்புகிறேன்.

02.06.2080

         கால எந்திரத்தில தேதியைக்  குறிப்பிட்டு, கைரேகையை வைத்தழுத்த, அழுந்த மூடிய விழிகள் பிரியும் போது கண் முன் விரிந்தது என் எதிர்காலம் கனவு போல இருந்தது.

         ஆஹா..என் இந்தியாவா இது? எத்தனை சுத்தம்?இது என்ன வாகனங்கள் பறக்கின்றன. யாரிடமாவது நட்பாக வேண்டுமே.சாலையில் யாரையுமே காணவில்லை. நான் மட்டும் நடந்து கொண்டிருந்தேன்.

         அப்போது, முட்டை வடிவிலான ஏதோவொன்று வந்தது. நீல வண்ணத்தில் ஏதோ வாகனம் போல. என் அருகில் நின்றது.

" என்ன நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்? "

" சும்மா தான் "

" என் உதவி தேவைப்படுகிறதா? நான் உங்களை எங்கேனும் இறக்கி விடட்டுமா? "

" ஆனால் இதில் ஒருவர் அமரத்தானே இடம் இருக்கிறது? "

அவள் சிரித்துக் கொண்டே ஒரு பொத்தானை அழுத்தினாள். மேலும் ஒருவர் அமரும் அளவிற்கு பலூன் போல விரிந்தது.

" ஊருக்குப் புதிதா? "

விஞ்ஞான விந்தைகள்.

" ஆம், புதிது தான். ஆனால் நான் நடந்து செல்ல விரும்புகிறேன்.உதவிக்கு நன்றி. " என்றேன்.

அவள் விடுவதாயில்லை.

" இப்போதெல்லாம் யாரும் நடப்பதில்லை miss. .....? "

" மித்ரா " என்றேன் சிரித்துக் கொண்டேன்.

" இப்போதெல்லாம் யாரும் நடப்பதில்லை மித்ரா. சரி நானும் உங்களோடு சற்று  நடக்கிறேன்."

என்று வாகனத்திலிருந்து வெளியே வந்தவள், வெளியிலிருந்து மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தினாள். சதுர வடிவப் பெட்டியாக, ஒரு பெரிய கைப்பைக்குள் அடங்கும் அளவுக்கு சுருங்கியது வாகனம். எடுத்து கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

" செல்லலாம் மித்ரா. "

         பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். எனக்கும் அவளைப் போல ஒரு துணை தேவைப்பட்டது தான். நான் கேட்பதற்கு முன்பே அத்தனையும் சொல்லிக் கொண்டிருந்தாள். விழி விரியக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

         நான் கண்ட கனவுகளை எல்லாம் கண் முன்னே பார்ப்பது போல் இருந்தது. அத்தனை முன்னேற்றம். அத்தனை வளர்ச்சிகள். அனைத்திலும் அறிவியல். ஆனால், வரும் வழியில் கணும் மனிதர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தனர்.

" இது என்ன? மனிதர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஏறத்தாழ ஒன்று போல தோன்றுகிறார்களே?  உடல் ரீதியாகவோ, உடை ரீதியாகவோ வேறுபாடுகள் ஏதும் புலப்படவில்லையே? "

"அப்படித் தான் மித்ரா. சில காலங்களுக்கு முன்பு பாலியல் வேறுபாட்டுக் கலகங்கள் தோன்றின. ஆண் பெரியவனா?  பெண் பெரியவளா?  என்று இருபாலரும் அடித்துக் கொண்டனர். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ரீதியாக, அன்றாட அலுவல்களிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பலதரப்பட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின் பாலின வேறுபாடுகள் களையப்பட்டன. இட ஒதுக்கீடுகளும் ரத்து செயப்பட்டன. ஒருவருக்கொருவர் மதிப்புக் குறைந்தவர் அல்ல எனும்படியாக சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் இப்படித் தான் மித்ரா. அவர்களே சொல்லாத வரையில் பாலினம் கண்டறிதல் அரிது. அதற்கேற்றபடி இயற்கைக்கு மாறான உணவு முறைகளால் உடல்ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட்டன. "

" நன்றாக தமிழ் பேசுகிறீர்கள். அழிவை எதிர் நோக்கியிருந்த மொழி இப்போதும் வாழ்கிறது ஆச்சரியமாக இருக்கிறது. "

" இத்தனை வருட விஞ்ஞான வளர்ச்சியில் அழியாமல் வாழ்வது நம் மொழி மட்டும் தான் மித்ரா. நவீனமயமாக்கப்பட்ட சமூக வலைதளங்களால் தமிழ் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது மித்ரா. "

" மிக்க மகிழ்ச்சி. பணி புரிகிறீர்களா? "

" ஆம், வீட்டிலேயே. "

         அதற்குமேல் அதுபற்றி அவளிடம் கேட்க நான் விரும்பவில்லை. ஒரு கேள்விக்கு ஒன்னரை முழத்தில் பதில் சொல்கிறாள். பேசுவதற்கு விரும்புகிறாள் போல. ஆனால், அதைக் கேட்பதற்கு நான் விரும்பவில்லை.

         அவள்புறம் திரும்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தேன். எங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள். ஆட்கள் வசிக்கிறார்களா? இல்லையா? எதுவும் தெரியவில்லை. அசாதாரண அமைதி. ஒரு மரம், செடி ஒன்றையும் காணவில்லை. காக்கைகள், நாய்கள் கூடத் தென்படவில்லை. இது நகரமாக இருக்கலாம். கிராமப்புறங்கள் வேறெங்கும் இருக்கலாம்.

         ஆள் அரவமற்ற, கண்ணுக்குக் குளிர்ச்சியற்ற பாதையினூடான பயணம் சலிப்புத் தட்டியது. பாவம் இந்தக் காலத்து மனிதர்கள்.

         என் முகம் சென்ற போக்கைப் பார்த்து அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

" பசிக்கிறதா மித்ரா? "

" ஆம், கொஞ்சம் " என்றேன்.

         அவள் கைப்பைக்குள் கையை விட்டுத் துழாவினாள். ஏதேனும் சிற்றுண்டி வைத்திருப்பாளோ? ஒரு நெகிழிப்பையை எடுத்தாள். அதில் சில பெரிதும் சிறிதுமான உருண்டைகள் இருந்தன. இந்தக் காலத்து உணவுப் பொருளாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

        ஆனால் அவள் என்னிடம் நீட்டியது தண்ணீரையும், ஒரு மாத்திரையையும்...

" பசிப்பதற்கு எதற்கு மாத்திரை? "

" பசி போக்கும் மாத்திரை. உணவு உண்ணும் பழக்கம் மறைந்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. உணவுப் பொருட்கள் விளைவிக்க நிலங்களும் இல்லை. விவசாயப் பணிபுரிய மனிதர்களும் தயாரில்லை. சொல்லப் போனால் உணவு தயாரிக்க ஆகும் செலவுகளை விடவும் இம்மாத்திரைகளை வாங்கும் செலவு குறைவு. " எனக் கூறிக் கண்ணடித்தாள்.

" wtf?  உணவுக்கு பதில் மருந்துகளா? உடல்நலம் கெட்டுப்போய் விரைவில் மரணித்து விடுவீர்களே? "

" யாரும் மரணிப்பதில்லை மித்ரா. மானுடம் மரணத்தை வென்று வெகு நாட்கள் ஆகிறது. "

நேற்று ஸீரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

" அது சரி. என்ன செய்தாலும் மரணம் நேராது எனும் போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா? ஆமாம்...அதனால் இப்போது மருத்துவர்கள் கிடையாதா? "

" தெரிந்து தான் பேசுகிறாயா மித்ரா?  இப்பொழுது உலகை ஆள்பவர்கள் மருத்துவர்கள் தான். "

" மரணம் வெல்லும் மருந்து உலகத்தை அழிக்கும் மாபெரும் சதி மித்ரா. மனிதர்களுக்கு மரணம் தான் நேராது. ஆனால், நோய்கள் முன்னை விட பலமடங்கு பெருகிவிட்டன. அதற்கு மருத்துவம் பார்த்துத் தான் ஆக வேண்டும். விட்டுவிட்டால் என்ன நேரும் யோசித்தாயா? எந்தவொரு நோயாலும் யாரும் சாக மாட்டார்கள். ஆனால், சிகிச்சை அளிக்காமல் நோயின் தீவிரம் சற்றும் குறையாது. "

         இதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லையே. எவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது. வேண்டுமென்றே நோய் பரப்புவார்கள். மருத்துவம் பார்க்கும் வசதியற்ற மக்கள் சாவதற்கும் வழியின்றி துடித்துக் கொண்டே கிடப்பார்கள். என்ன அநியாயம் இது? மானுடம் பயன் பெறத் தானே மருத்துவமும், விஞ்ஞானமும். இவர்கள் ஏன் சாகா மருந்தையெல்லாம் உட் கொண்டனர். எரிச்சலாக வந்தது. கேட்டு விட்டேன்.

" நீங்கள் ஏன் சாகா மருந்தையெல்லாம் உட்கொண்டீர்கள்? "

" விளம்பரம் மித்ரா. சந்தைப் படுத்தினார்கள். ஆசையைத் தூண்டினார்கள். ஒரு கட்டத்தில் இலவசமாகவும் அம்மருந்தை விநியோகித்தார்கள். சாகாமல் இருக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது? "

"கிட்டத்தட்ட இருபது, இருபத்தைந்து வருடங்களாக யாரும் மரணிக்கவில்லையெனில் அவர்கள் எல்லாம் எங்கே?  இடநெருக்கடி., " சொல்லி முடிப்பதற்குள் அவள் பதில் சொன்னாள்.

" அந்தக் கதை தெரியாதா உனக்கு? "

" எந்தக் கதை? "

" வா என்னுடன் " என்று கூறிக் கொண்டே வாகனத்தை விரித்தாள். நானும் உள்ளே அமர்ந்தேன். போகுமிடத்தை உள்ளிருந்த தொடுதிரையில் பதிந்து விட அது வேகமெடுத்தது. அவளுக்கு வேலையேதும் இருக்கவில்லை.

         ஒரு பிரமாண்ட கட்டிடத்தின் முன் வாகனம் நின்றது. ஐம்பது அல்லது அறுபது வயதையொத்தவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நியாய விலைக்கடையாக இருக்குமோ என நினைத்துக் கொண்டேன்.

" ஐம்பது வயதிற்கு மேல் இங்கு வாழ யாருக்கும் அனுமதி இல்லை மித்ரா.அவவ்கள் அவர்களின் கடந்த காலத்திற்கு சென்று விட வேண்டும். "

" கடந்த காலமா? "

" காலப்பயணம் - Time travel பற்றி அறியவில்லையா மித்ரா? "

சிரித்துக் கொண்டேன்.

" மேலே சொல். "

" இரண்டு பொத்தான்களுடனும்,  கைரேகை பதியும் தொடு திரையுடனும் இருக்கும் கைபேசி போன்ற எந்திரம் தான் காலப்பயணம் செய்ய உதவும் மித்ரா. அதன் மூலம் நாம் நாம் வாழ்ந்த காலத்திற்கோ வாழப்போகும் காலத்திற்கோ செல்ல முடியும். அந்த காலத்திற்குண்டான நம் வயதின் படியே அங்கு பிரவேசிப்போம். "

" ஓஹ்...அப்படியா? "

    என் கண்டுபிடிப்பை, அதில் பின்பு நான் செய்யப் போகும் திருத்தங்களை என்னிடமே ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

" ஆம் மித்ரா. மரணம் வென்றவர்கள் ஜுவிக்க இங்கு இடமுமில்லை. செலவினங்களும் அதிகம். அதனால் மீண்டும் அவர்களை அவர்களின் பால்யத்திற்கே அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு தாங்கள் எதிர்காலத்திலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து போவார்கள். எப்போதும் போல வாழ்வார்கள். நடந்தவையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் நடக்கும். எதுவும் மாறாது. யாரும் மரணிக்க மாட்டார்கள். மீண்டும் அவர்களின் ஐம்பது வயதின் போது நிகழ்ந்ததெல்லாம் நினைவு வரும். எத்தனை காலப்பயணம் சென்றிருக்கிறோம், ஒரே வாழ்க்கையை எத்தனை முறை வாழ்ந்திருக்கிறோம் என்பது நினைவு வரும். மீண்டும் மீண்டும் வாழ சலிப்புத் தட்டிப் போய் வேறு வழியுமின்றி பயணத்திற்கு தயாராகிறார்கள். "

         மிரண்டு போனேன் நான். இதென்ன அத்தனையும் இங்கு இயற்கைக்கு மாறாக நடக்கிறது? நான் கண்டுபிடித்தது சாதனை இல்லையா? காலப்பயணமும், சாகா மருந்தும் இவ்வளவு பெரிய அழிவு சக்திகளா? இதையெல்லாம் தெரிந்தே தான் விஞ்ஞான உலகம் முழுவீச்சில் செயல்படுகிறதா? ஆயிரம் கேள்விகள் மனதுள் ஓடிக் கொண்டிருந்தன.

" இப்போது எங்களின் ஒரே தேவை, எதிர்பார்ப்பு என்ன தெரியுமா மித்ரா? "

கேள்வியாய் பார்த்தேன்.

" சாகும் வரம் மித்ரா.மரணிக்கும் மருந்து. " என்றாள் விரக்திப் புன்னகையுடன்.

" சரி. நான் வருகிறேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "

எனக்கூறி மறைந்தேன்.என் எதிர்காலத்தில் நான் கண்ட கடைசி காட்சி கண்ணீருடன் தங்கள் கடந்த காலத்தை நோக்கி பயணமாகும் முதியவர்கள்.

         கண் விழித்த போது என் ஆய்வுக்கூடத்தில் இருந்தேன்.

         இப்போது சாகா மருந்திற்கான ஆய்வு வெற்றி பெற்றால் ஏற்படப்போகும் விபரீதங்களை விளக்கி, அந்த ஆராய்ச்சிக்கு நிரந்தரத் தடை கோரி ஐ.நா சபையில் கோரிக்கை வைத்திருக்கிறேன். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

         என் காலப்பயண ஆராய்ச்சிகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.

         நான் மித்ரா. இயற்கையை சீரழிக்கும் அபரிதமான விஞ்ஞான வளர்ச்சிக்கு  எதிராக போராடும் விஞ்ஞானி நான்.

சாகாவரம் போல் சோகம் உண்டோ?
முடியா கதையை கேட்போர் உண்டோ?

சனி, 13 மே, 2017

கலீல் ஜிப்ரான் கவிதைகள்



என் பழைய மொழி

நான் பிறந்து 
மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. 
நான் தொட்டிலில் இருந்தபடி 
என் புதிய உலகத்தை 
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் 
பார்த்துக் கொண்டிருந்தேன்.. 
என் அம்மா, 
செவிலித் தாயிடம் கேட்டாள்.. 
"எப்படி இருக்கிறான் என் மகன்..??" 

அவள் சொன்னாள்.. 
"ரொம்ப நன்றாக இருக்கிறான்.. 
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.. 
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான் 
இதுவரை கண்டதேயில்லை.." 

எனக்குக் கோபம் வந்தது.. 
நான் கத்தினேன்.. 
"அம்மா.. அது உண்மையில்லை.. 
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது.. 
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது.. 
அவள் மார்பகங்களின் வாசம் கூட 
எனக்குப் பிடிக்கவேயில்லை.. 
நான் மகிழ்ச்சியாய் இல்லை.. 
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!" 

ஆனால் என் அம்மாவுக்கோ, 
என் செவிலித்தாய்க்கோ 
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை.. 
ஏனென்றால் நான் பேசிய மொழி, 
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது.. 
இந்தப் புதிய உலகத்தில் 
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை.. 

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும் 
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது.. 
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி 
என் தாயிடம், 
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே.. 
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.." 
என்றார்.. 
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம், 
"அப்படியென்றால் 
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய் 
துக்கப்பட வேண்டுமே.. 
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்.. 
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை.. 

ஏழு மாதங்கள் ஆன பிறகு, 
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து 
என்னைப் பார்த்து என் தாயிடம், 
"உங்கள் மகன் 
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்.. 
அதற்குரிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்.. 
நான் கோபத்துடன், 
"தலைவனெல்லாம் ஆக முடியாது.. 
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்.. 
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்.. 
ஆனால், அந்த வயதிலும் 
என் மொழி யாருக்கும் புரியவில்லை.. 

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள் 
கழிந்த பிறகு 
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி 
எல்லோரும் இறந்து போய் விட்டனர்.. 
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்.. 
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்.. 
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது 
அவன் சொன்னான்.. 
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று 
எனக்கு அப்போதே தெரியும்.. 
நீ குழந்தையாய் இருந்த போதே 
நான் கணித்துச் சொன்னேன்.." 
என்றான்.. 

நான் அவன் சொன்னதை நம்பினேன்.. 
ஏனென்றால், 
இப்போது 
என் பழைய மொழியை 
நானே மறந்து போயிருந்தேன்..!!!

*****

பொன்மணிப் புதையல்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

*****

என் ஆழ்மனத்திலிருந்து 

என் ஆழ்மனத்திலிருந்து
ஒரு பறவை எழுந்து
வானோக்கிப் பறந்தது.

உயர உயரப் பறக்கப் பறக்க
அது மேலும் மேலும் வளர்ந்த்து
முதலில் அது
ஒரு குருவியாக.. பின்
ஒரு வானம்பாடியாக..பின்
ஒரு கழுகாக..பின்
ஒரு பெரும் பனி மேகமாக...
மாறி மாறி பின்
விண்மீன்கள் மின்னும்
சொர்க்கத்தை நிரப்பியது.

என் மனத்திலிருந்து
ஒரு பறவை
வானோக்கிப் பறந்தது
அது பறக்க.. பறக்க..
வலிமையிலும் உருவத்திலும்
மேலும் வளர்ந்தது
இன்னும் என் மனதை விட்டு
விலகவில்லை.

என் நம்பிக்கையே!
என் பழக்கப்படுத்தா அறிவே!
உன் உயரத்திற்கு நான்
எவ்வாறு பறப்பேன்?

வானில் தீட்டப்பட்டுள்ள
மனிதனின் பெரும் சுயத்தை
உன்னுடன் எவ்வாறு பார்ப்பேன்?
என்னுள் இந்தக் கடலை
ஒரு பனியாக
எவ்வாறு மாற்றுவேன்.?

அளக்க முடியா வண்ணம்
ஆகாய வெளியில் உன்னுடன்
எவ்வாறு நகர்வேன்?

ஆலயத்தினுள்ளேயே
இருக்கும் ஒரு சிறைக்கைதி
அதன் தங்க முகடுகளை
எவ்வாறு உற்று நோக்க முடியும்?

ஒரு கனியின்
இதயத்தை நீட்டி
அந்தக் கனியினையே மூட
எவ்வாறு முடியும்?

என் நம்பிக்கையே!
வெள்ளிக்கம்பிகள்
வலுவான மரத்தடுப்புகள் பின்
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும் நான்
உன்னுடன் பறக்க முடியாது.

ஆனாலும் என்
இதயத்திலிருந்து நீ
வானோக்கிப் பறக்கிறாய்.
என் இதயம் உன்னைப்
பிடித்து வைத்திருக்கிறது.
நான் மனநிறைவுடன் இருப்பேன்!!

*****


மலரின் பாடல்


இயற்கை அன்புடன்
திரும்பத் திரும்பச் சொல்லும்
பாசமுள்ள வார்த்தை நான்.

நீலவானக் கூடாரத்திலிருந்து
பச்சைக் கம்பள விரிப்பில்
விழுந்த விண்மீன் நான்.

குளிர்காலம் கர்ப்பம் தரித்த
பஞ்ச பூதங்களின் புதல்வி நான்.

இளவேனிலுக்காகப் பெற்றுத் தந்த
குழந்தை நான்.
கோடை காலத்தின் மடியில் தவழ்ந்தேன்;
இலையுதிர் காலத்தின் படுக்கையில் உறங்கினேன்.

வைகறைப் பொழுதில்,
ஒளியின் வருகையை அறிவிக்க
நான் தென்றலுடன் இணைந்தேன்.

மாலைப் பொழுதில்,
பறவைகளுடன் சேர்ந்து கொண்டேன்
வெளிச்சத்திற்கு விடைகொடுத்தனுப்ப.

சமவெளிகளெல்லாம்
என் அழகிய வண்ணங்களால்
அணி செய்யப்பட்டன.
காற்றுக்கு நான் மணமூட்டினேன்.

நான் உறக்கத்தைத் தழுவும் போது
இரவின் கண்கள்
எனக்கு காவலிருக்கும்.

நான் கண் விழித்தபோது
கதிரவனைக் கண்டு வெறித்தேன்;
அப்போதைய நாளின் ஒரேகண் அவன்தான்.

நான் பனித்துளி மதுவைக் குடித்தேன்.
பறவைகளின் குரல்களைக் கேட்டேன்.
புல்லின் அசைவிற்கேற்ப நாட்டிய மாடினேன்.

நான் காதலரின் பரிசு,
நான் திருமண மாலை
நான் மகிழ்ச்சியின் ஒரு நொடி.
நான், வாழ்வோர்,
இறந்தவர்க்குக் கொடுக்கும் பரிசு.
நான் மகிழ்ச்சியின் பகுதி,
துக்கத்தின் பாகம்.
நான் தலை தூக்கிப் பார்ப்பது
ஒளியை மட்டுமே.
நான் எப்போதும் தலை குனிந்து
என் நிழலைப் பார்ப்பதே இல்லை,
இந்த ஞானத்தைத்தான்
மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

*****

வெள்ளைக் காகிதம் 

வெள்ளைக் காகிதம் ஒன்று 
பனிக்கட்டி போலப் 
பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது.. 

அது சொன்னது, 
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்.. 
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்.. 
இருள் என் அருகில் வர 
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்.. 
சுத்தமில்லாத எதுவும் 
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!" 

கறுப்பு மைபுட்டி ஒன்று 
காகிதம் சொன்னதைக் கேட்டது.. 
தனக்குள் சிரித்துக் கொண்டது.. 
ஆனாலும் காகிதத்தை நெருங்க 
அதற்குத் தைரியம் வரவில்லை..! 

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட 
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன.. 
ஆனால் அவையும் 
அதை நெருங்கத் துணியவில்லை..! 

இன்று வரை 
வெள்ளைக் காகிதம் 
தான் விரும்பியபடி 
பரிசுத்தமானதாகவே இருக்கிறது.. 
ஆனால், 
வெறுமையாக இருக்கிறது..!!

*****

கண்

கண் ஒரு நாள் சொன்னது.. 
"பாலைவனத்திற்கு அப்பால் 
ஒரு பனி மூடிய மலை 
தெரிகிறது பாருங்கள்.. 
எவ்வளவு அழகாக இருக்கிறது..?" 

காது கொஞ்ச நேரம் 
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப் 
பிறகு சொன்னது.. 
"மலையா?? எந்த மலை?? 
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!" 

கையும் பேசியது.. 
"என்னால் 
எவ்வளவு முயன்றும் 
அந்த மலையைத் தொட முடியவில்லையே.. 
மலை நிச்சயம் இருக்கிறதா..??" 

மூக்கு உறுதியாகச் சொன்னது.. 
"மலை எதுவும் கிடையாது.. 
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!" 

கண் வேறு பக்கமாய்த் 
திரும்பிக் கொண்டது.. 

மற்ற உறுப்புக்களெல்லாம் 
தங்களுக்குள் பேசிக் கொண்டன.. 
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன.. 

"கண்ணில் ஏதோ 
கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"

*****

நரியின் பசி 

நரி ஒன்று 
காலை வேளையில் 
தன் நிழலைக் கண்டது.. 
"இன்று நான் 
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.." 
என்று எண்ணிக் கொண்டது.. 

பகல் முழுவதும் 
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.. 

நண்பகலில் 
தன் நிழலை மீண்டும் கண்டது.. 
"ஒரு எலி போதும் எனக்கு.." 
என்ற முடிவுக்கு வந்தது..!!

*****

துறவி 


மலைகளுக்கு அப்பால் இருந்த 
துறவியின் குடிலில் 
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. 
அப்போது ஒரு திருடன் 
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன் 
அவரை நாடி வந்தான்.. 

"முனிவரே..!! 
எனக்கு நிம்மதி தாருங்கள்.. 
உங்களால் மட்டுமே முடியும்.. 
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.." 

"வருந்தாதே..!! 
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.." 

"ஆனால் 
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!" 

"நானும் திருடன் தான்.. கொள்ளைக்காரன் தான்..!!" 

"நான் ஒரு கொலைகாரன்.. 
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!" 

"நானும் கொலைகாரன் தான்.. 
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!" 

"நான் எண்ணிலடங்கா 
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!" 

"நானும் செய்துள்ளேன்..!!" 

திருடன் எழுந்து நின்றான்.. 
புரிந்து கொள்ள முடியாத 
ஒரு பார்வை அவனிடம்.. 
திரும்பி நடந்தான், 
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்.. 

நான் துறவியிடம் கேட்டேன்.. 
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம் 
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..?? 
அவன் உங்கள் மேல் 
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!" 

துறவி சிரித்துக் கொண்டே கூறினார்.. 
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்.. 
ஆனால், நிம்மதி அடைந்து போகிறான்..!!" 

நான் அப்போது தான் கவனித்தேன்.. 
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி 
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது..!!

*****

போரும் சிறிய நாடுகளும் 

விளைநிலம் ஒன்றில் 
ஒற்றை ஆடும் அதன் குட்டியும் 
மேய்ந்தபடி இருந்தன.. 

கழுகு ஒன்று 
குட்டி ஆட்டினைப் 
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி 
வட்டமடித்து வந்தது.. 
கீழிறங்கி 
இரையினைக் கவ்வும் நேரத்தில் 
இன்னொரு கழுகும் 
பசியோடு வந்து சேர்ந்தது.. 

எதிரிகளின் 
ஆவேசப் போராட்டத்தின் 
கூக்குரல் 
வானமெங்கும் நிரம்பி வழிந்தது.. 

ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து 
ஆச்சர்யப்பட்டுப் போனது.. 
குட்டியிடம் சொன்னது, 
"பார்த்தாயா குழந்தாய்.. 
எத்தனை விநோதம் இது?? 
இவ்விரு பெரிய பறவைகளுக்கும் 
விரிந்து பரந்த இந்த காயம் 
போதவில்லையோ?? 
இப்படி ஒருவரை ஒருவர் 
தாக்கிக் கொள்கிறார்களே..!! 
சிறகு முளைத்த அந்த 
உன்னிரு சகோதரர்களுக்கிடையில் 
சமாதானம் ஏற்படட்டும் என்று 
இதயபூர்வமாய் நீ 
இறைவனை வேண்டிக் கொள்..!!" 

குட்டியும் அவ்வாறே 
வேண்டிக் கொண்டது..!!

*****

விமர்சகர்கள் 


ஓர் இரவு நேரத்தில் 
கடல் நோக்கிக் 
குதிரை ஒன்றில் 
பிரயாணம் மேற்கொண்ட 
வழிப்போக்கன் ஒருவன் 
விடுதி ஒன்றில் 
இளைப்பாற இறங்கினான். 

கடல் நோக்கிப் போகும் 
யாவரைப் போலவே 
இரவின் மீதும் 
ஏனைய மனிதர் மீதும் 
மிகுந்த நம்பிக்கை கொண்டு 
குதிரையைக் கதவருகில் 
கட்டிப் போட்டு 
உள்ளே சென்றான். 

நள்ளிரவில் 
உறக்கத்தின் போர்வையில் 
அனைவரும் ஆழ்ந்திருக்க 
திருடன் ஒருவன் 
வருகை புரிந்தான், 
குதிரை கவர்ந்து 
மறைந்து போனான். 

காலையில் எழுந்து நடந்ததை அறிந்த 
வழிப்போக்கன் 
குதிரை களவு போனதற்குக் கொஞ்சமும் 
குதிரை களவாட ஒருவன் துணிந்தானே 
என்பதற்கு மிகுதியும் 
வருத்தம் கொண்டான். 

விடுதியில் இருந்த மற்ற பயணிகள் 
சுழ்ந்து நின்று கூட்டம் சேர்த்தனர், 
களவு குறித்து கருத்து உதிர்த்தனர். 

முதலாமவன் சொன்னான், 
"லாயம் ஒன்று உள்ளே இருக்க 
குதிரையை வெளியில் கட்டி நிறுத்திய 
உம் மூடத்தனம் என்னே..!" 

இரண்டாமவன் சொன்னான், 
"கட்டிப்போட்டால் மட்டும் போதுமா? 
கால்கள் நகராமல் இருக்க 
வழி வகை செய்திட மறந்தீரோ? 
உமக்கெல்லாம் எதற்கு 
குதிரையும் பயணமும்?" 

மூன்றாமவன் சொன்னான், 
"கடலை நோக்கிக் 
குதிரையில் போவது 
வடிகட்டிய முட்டாள்தனமன்றி வேறில்லை." 

நான்காமவன் சொன்னான், 
"சோம்பேறிகளும் கால் விளங்காதவர்களும் 
மட்டும் தான் 
குதிரைகள் வைத்திருப்பார்கள்." 

வழிப்போக்கன் மிகுந்த வியப்புடன் 
அவர்களிடம் சொன்னான், 
"நண்பர்களே, 
என் குதிரை களவு போனதினால் 
என் குறைகளை 
யாரும் கேட்காமலேயே 
அறைகூவி அறிவிக்க 
நீங்கள் இத்தனை வேகம் காட்டுகிறீர்கள். 
னால் குதிரையைத் திருடியவன் பற்றி 
ஒரு சின்ன முணுமுணுப்பு கூட 
இன்னும் செய்யவில்லையே, 
அது ஏனோ?"

*****

கடவுளும் சாத்தானும் 

கடவுளும் சாத்தானும் 
ஒரு நாள் 
மலையுச்சியில் சந்தித்தனர். 

கடவுள் சொன்னார், 
"சகோதரா, 
உனது நாள் 
நன்றானதாக அமையட்டும்..!" 

சாத்தான் 
மறுமொழி ஏதும் கூறவில்லை. 

கடவுள் தொடர்ந்தார், 
"ஏதேது, 
நீ இன்று 
மிகவும் கோபமாக இருக்கிறாய் 
போலிருக்கிறதே..!" 

சாத்தான் சொன்னது, 
"எல்லாம் 
இந்த முட்டாள் மனிதர்களால் தான். 
இப்போதெல்லாம் சில காலமாக 
அவர்கள் என்னை நீயென்று 
நினைத்துக் கொள்கிறார்கள். 
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது, 
உன்னைப் போல் என்னை நடத்துவது, 
சீச்சீ, 
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!" 

கடவுள் புன்னகைத்துச் சொன்னார், 
"அதனாலென்ன சகோதரா, 
சில நேரங்களில் 
இந்த மனிதர்கள் 
என்னைக் கூடத்தான் 
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள், 
உன் பேர் சொல்லி என்னை அழைத்து 
சபிக்கிறார்கள், 
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!" 

சாத்தான் சமாதானமடையாமல் 
மனிதர்களின் முட்டாள்தனத்தை 
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

*****

மதிப்புகள் 

ஏழை ஒருவன் 
தன் நிலத்திலே 
புதைந்து கிடந்த 
பளிங்குச் சிலை 
ஒன்றைக் கண்டெடுத்தான். 

கலைப் பொருட்களை 
வாங்கிச் சேகரிக்கும் 
கலை ஆர்வலர் ஒருவரிடம் 
காண்பித்தான். 

சிலையின் அழகும் 
கலைநயம் மிக்க உருவாக்கமும் 
ஆர்வலரைக் கவர்ந்தன. 
பெரும்பணம் தந்து வாங்கிக் கொண்டார். 

பணத்துடன் திரும்பிய 
ஏழைக்கு ஆச்சர்யம், 
"இத்தனை பணம் கொண்டு 
எது வேண்டுமானாலும் செய்யலாமே? 
எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அமைக்கலாமே? 
செதுக்கப்பட்டு, 
பலநூறு ஆண்டுகள் 
உலகின் கவனம் படாமல் 
புதைந்து கிடந்த 
ஒரு சாதாரணமான கல்லுக்காக 
இத்தனை பணம் தருபவர்களும் 
இருக்கிறார்களே இவ்வுலகில்..!!" 

சிலையை ரசித்துக் கொண்டிருந்த 
ஆர்வலருக்கும் ஆச்சர்யம், 
"என்ன அழகு! எத்தனை உயிர்ப்பு! 
எத்தகைய ஆன்மாவின் அற்புதக் கனவு..!! 
பலநூறு ஆண்டுகள் 
அழியாத புதுக்கோலம்! 
உயிர்ப்பும் உணர்வும் 
எதுவுமற்ற பணத்திற்காக 
விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைத் தருபவர்களும் 
இருக்கிறார்களே இவ்வுலகில்..!!"


*****

மாதுளை 

நானொரு மாதுளைப் பழத்தின் 
இதயத்தில் வசித்து வந்தேன். 

ஒரு விதை சொன்னது, 
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன். 
காற்று என் கிளைகளுக்கிடையில் 
ராகம் பாடும், 
கதிரவன் என் இலைகளின் மேல் 
நடனம் புரியும், 
எல்லாக் காலங்களிலும் நான் 
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்." 

இன்னொரு விதை சொன்னது, 
"நானும் உன்னைப் போல் 
இளம்பிராயத்தினனாய் இருந்த போது 
இது போல் நினைத்ததுண்டு. 
இன்றோ 
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன், 
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று 
கண்டுணர்ந்துள்ளேன்." 

மூன்றாவது விதையும் பேசியது, 
"வளமானதொரு எதிர்காலத்திற்கான 
நம்பிக்கைகள் எதையும் 
நமது தற்கால வாழ்வில் 
நான் காணவில்லை." 

நான்காவது விதை சொன்னது, 
"சீச்சீ..!! 
அப்படி ஒரு நல்ல எதிர்காலம் 
இல்லாமல் போகுமானால் 
எத்தனை ஏமாற்றம்? 
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?" 

ஐந்தாவது விதை சொன்னது, 
"நாம் என்னவாக இருக்கிறோம் 
என்பதே சரியாகப் புரியாத போது 
நாம் என்ன ஆவோம் 
என்பதைப் பற்றி 
ஏன் இத்தனை சர்ச்சை?" 

ஆறாவது விதை பதில் சொன்னது, 
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ 
அதுவாகவே 
எப்போதும் இருப்போம்." 

ஏழாவது விதை சொன்னது, 
"நாம் எப்படி இருப்போம் 
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது, 
ஆனால் அதை 
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை." 

இப்படியே மேலும் 
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, 
இன்னும் பலப்பல விதைகள் பேசின, 
கடைசியில் எல்லா விதைகளும் 
சேர்ந்து போட்ட கூச்சலில் 
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. 

அன்றே நான் 
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு 
இடம் மாறி விட்டேன். 
அங்கு விதைகளும் குறைவு, 
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.


*****

அவரவர் நம்பிக்கை 


ஒரு நாள் 
மெத்த அறிவு படைத்த நாய் ஒன்றின் 
பாதையின் வழியே 
ஒரு பூனைக் கூட்டம் கடந்து சென்றது. 
தன்னைக் கவனிக்காமல் 
அப் பூனைக் கூட்டம் 
மிகுந்த முனைப்புடன் 
முன்னோக்கிச் செலவதைக் கண்ட நாய் 
நின்று கவனித்தது. 

பூனைகள் வட்டமாக அமர்ந்தன. 
மூத்த பூனை ஒன்று, 
உறுதியும் எச்சரிக்கையும் 
தொனிக்கும் குரலில் சொன்னது, 
"சகோதரர்களே..! 
வழிபடுங்கள், வழிபடுங்கள், 
நம்பிக்கையோடும், கீழ்ப்படிதலோடும் 
மீண்டும் மீண்டும் நாம் 
வழிபட்டால் 
வானத்திலிருந்து 
கணக்கற்ற எலிகள் மழையாகப் பொழியும்.." 

இதைக் கேட்ட நாய் 
பரிகசித்துச் சிரித்தபடி 
தனக்குள் சொல்லிக் கொண்டது, 
"இந்த முட்டாள் பூனைகளின் 
குருட்டு நம்பிக்கைகளுக்கு 
அளவில்லாமல் போயிற்றே.. 
நமது ஆதி நூல்களில் எழுதப்பட்டு 
நானும் எனக்கு முன்னால் என் முன்னோரும் 
அறிந்த உண்மைகளின் படி 
நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் மிக்க 
வழிபாட்டின் பலனாக 
மழையாகப் பொழியப் போவது 
எலிகளல்ல, எலும்புத் துண்டுகளன்றோ..!"

*****


நீதி 

அரச மாளிகையில் 
அன்று விருந்து.. 
திடீரென்று மனிதன் ஒருவன் நுழைந்து 
அரசனைப் பணிந்தான்.. 
விருந்தாளிகள் 
அவனை நோக்கினர்.. 
அவன் கண்களில் ஒன்று 
குத்திக் கிழிக்கப்பட்டு 
ரத்தம் வடிந்த நிலையில் 
குழியாய் இருப்பதைக் கவனித்தனர்.. 

அரசன் கேட்டான்.. 
"நீ யார்..? 
உனக்கு நேர்ந்தது என்ன..?" 

அவன் பணிந்து வணங்கி சொன்னான்.. 
"அரசே..!! 
நான் தொழிலால் ஒரு திருடன்.. 
இன்று நிலவில்லா அமாவாசை இரவானதால் 
அடகுக் கடையில் திருடக் கிளம்பினேன்.. 
என் போறாத காலம், 
தவறிப் போய் 
நெசவாளன் கடையில் நுழைந்து விட்டேன்.. 
அவன் தறியின் கம்பி 
என் கண்ணைக் குத்திக் கிழித்து விட்டது.. 
அரசே..!! 
எனக்கு நீதி வழங்க வேண்டுகிறேன்.." 

நெசவாளனை அழைத்து வர 
அரசன் பணித்தான்.. 
அவன் வந்ததும் 
அரசவை, வழக்கினை ஆராய்ந்து 
அவனது ஒரு கண் 
குத்திக் கிழிக்கப் பட வேண்டுமென்று 
தீர்ப்பு வழங்கியது.. 

நெசவாளன் பணிந்து வணங்கிச் சொன்னான்.. 
"அரசே.!! 
ஒரு கண்ணுக்கு மறுகண் என்பது 
மிகச் சரியான தீர்ப்பு.. 
இருந்தாலும், 
என் தொழிலில் 
நான் நெய்யும் ஆடையின் 
இரண்டு பக்கங்களை ஆராய்ந்திட 
எனக்கு இரண்டு கண்கள் அவசியம் தேவை.. 
எனக்குப் பக்கத்துக் கடையில் 
செருப்புத் தைப்பவன் ஒருவன் உண்டு.. 
அவன் தொழிலில் 
இரண்டு கண்களுக்கு அவசியம் இல்லை.. 
ஒரு கண்ணே போதுமானது.." 

அரசன் சிறிது நேரம் சிந்தித்தான்.. 
அவன் ஆணைப்படி செருப்புத் தைப்பவன் 
அழைத்து வரப்பட்டான்.. 
அவன் இரு கண்களில் ஒரு கண் 
குத்திக் கிழிக்கப்பட்டது.. 

நீதி அங்கு 
நிலை நிறுத்தப்பட்டது..!!

*****

நான்கு கவிஞர்கள் 

கவிஞர் நால்வர் 
மேசையொன்றினைச் சுற்றி 
அமர்ந்திருந்தனர். 
மேசை மேலிருந்த 
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது 
கவனத்தைக் குவித்திருந்தனர். 

முதல் கவிஞன் சொன்னான்: 
"என் ஞானக் கண் கொண்டு 
பார்த்திடும் போது 
இம்மதுவின் நறுமணம் 
அடர்பெருங்காட்டின் மேல் குவியும் 
பறவைக்கூட்டம் போல் 
கோப்பையின் மேல் 
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது." 

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்: 
"என் ஞானக் காதுக்கு 
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம் 
அளப்பரிய சுகமளிக்கிறது. 
வண்டானது, அழகிய மலரின் 
இதழ்களின் இடையே 
சிறைப்படுவது போல் 
என் இதயமும் பறிபோகிறது." 

மூன்றாம் கவிஞன் 
கண்களை மூடிக் 
கைகளை உயர்த்தி உரைத்தான்: 
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன். 
தூங்குமொரு தேவதையின் 
மூச்சுக் காற்றினைப் போல் 
அவைகளின் சிறகுகள் 
என் கைகளை உரசுகின்றன." 

நான்காம் கவிஞன் எழுந்து 
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்: 
"அந்தோ, நண்பர்காள். 
உம்போல் எனக்கு 
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான 
உணர்வுகள் எதுவும் 
உயர்வாக இல்லை. 

நானந்த நறுமணப் பறவையைப் 
பார்த்திட இயலவில்லை, 
அதன் கானங்களைக் 
கேட்டிட இயலவில்லை, 
அதன் சிறகுகளைத் 
தொட்டுணர இயலவில்லை. 
எனது ஊனக் கண்களுக்கு 
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது. 
அதனைக் குடித்து மட்டுமே 
என்னால் 
உம்போன்று அதன் ரசிப்பில் 
அமிழ்ந்து திளைக்க இயலும்." 

சொல்லியபடி 
மதுவின் இறுதித் துளி வரைக் 
குடித்து விட்டான். 

மற்ற கவிஞர் மூவரும் 
வாய்பிளந்து நோக்கினர். 
அவர்களின் 
பார்வைகளில் தாகம், 
விழிகளில் வெறுப்பு.

*****


இலையிடம் புல் சொன்னது 


இலையுதிர் காலத்து 
இலை ஒன்றிடம் 
புல் சொன்னது: 
"நீ நிலம் நோக்கி 
விழும் போது 
எத்தனை ஓசை செய்கிறாய். 
நாராசம்! 
என் குளிர் காலக் கனவுகள் 
அனைத்தையும் 
கலைத்து விடுகிறாய். 
ஒழிந்து போ எங்காவது.!!" 

இலை 
எரிச்சலுடன் 
மறுமொழி இறுத்தது: 
"சீச்சீ! அற்பப் பிறவியே! 
கீழே பிறந்து கீழே வாழ்ந்து 
கீழே மடியும் கீழான பிறவியே! 
மேலே இருக்கும் காற்றின் 
இசை, இன்பம், இனிமை 
இது குறித்தெல்லாம் 
ஏதும் அறிவாயா நீ? 
எனது இசையைப் பற்றி 
ஏதும் பேசாதே!! 
வாயை மூடு..!!" 

இலையுதிர் காலத்தின் 
இயல்புக்கேற்ப 
இலை கீழே விழுந்தது. 
மண்மீதில் உறங்கியது. 

வசந்தத்தின் வருகையால் 
அதுவும் ஒரு புல்லாய் 
மறுபடி முளைத்தது. 

இலையுதிர்காலம் மீண்ட போது 
குளிர்கால உறக்கத்தின் 
பிடிக்குள்ளிருந்த படி 
அது தனக்குள் முனகியது: 
"சீ! இந்த இலையுதிர்காலத்து இலைகள்.! 
எத்தனை ஓசை! எத்தனை கூச்சல்! 
என் குளிர்காலக் கனவுகளை 
துரத்திவிடுகின்றன.!!"

*****

வருந்தும் பாவிகள் 

நிலவற்ற 
அமாவாசை இரவொன்றில் 
பக்கத்து வீட்டுத் தொட்டத்தில் 
புகுந்து 
இருப்பதிலேயே 
பெரிய பூசணியொன்றைத் 
திருடினான் ஒருவன். 

திருட்டுப் பூசணியுடன் 
வீடு வந்து சேர்ந்து 
அறுத்துப் பார்த்தபோது 
அதிர்ந்தான். 

இன்னும் பழுக்காத காய்!! 

அப்போது தான் 
அந்த அதிசயம் நிகழ்ந்தது. 

அவன் மனசாட்சி 
விழித்துக் கொண்டது. 
அவனைக் கண்டித்தது. 
செய்த பாவத்துக்கு 
வருந்தினான் அவன்.

*****

மழையின் பாடல்

கடவுள்கள், சுவர்க்கத்திலிருந்து தொங்கவிட்ட
வெள்ளிச் சரடு நான்.
தனது தோட்டங்களையும், பள்ளத்தாக்குகளையும்
அழகு படுத்துவதற்காக
இயற்கை என்னை ஏற்றுக் கொண்டது.

இஸ்தாரின் மணிமுடியிலிருந்து
விடியலின் புதல்வி,
தோட்டங்களை அழகு படுத்துவதற்காகப்
பறித்து வீசிய அழகு முத்துக்கள் நான்.

நான் சிரிக்கும் போது மலைகள் அழும்
நான் அடங்கியிருக்கும் போது மலர்கள் மகிழும்
நான் தலை வணங்கும்போது, எல்லாமே உயரும்.

நிலமும் மேகமும் காதலர்கள்.
அவர்களுக்கிடையில் நான் கருணைத் தூதுவன்
அவர்களில் ஒருவரின் தாகத்தைத் தீர்க்கிறேன்
மற்றவரின் வேதனையைப் போக்குகிறேன்.

இடியில் குரல் என் வரவுக்குக் கட்டியம் கூறுகிறது;
நான் புறப்பட்டு விட்டதை
வானவில் முன்கூட்டிச் சொல்லிவிடுகிறது

பைத்தியக்காரப் பஞ்ச பூதங்களின்
காலடியில் பிறந்து
மரணத்தின் விடித்த சிறகுகளின் கீழ் மடியும்
பூமி வாழ்வு போன்றது என் வாழ்வு

நான் கட்லின் இதயத்திலிருந்து தோன்றி,
தென்றலுடன் மேலெழுந்து பறந்தேன்.

தாகித்து நிற்கும் நிலம் கண்டால்
நான் இறங்கி வருவேன்.
மலர்களைத் தழுவிக் கொள்வேன்.
மரங்களை இலட்சக் கணக்கான
விதங்களில் அரவணைத்துக் கொள்வேன்.

சாளரங்களை என் மெத்தென்ற
விரல்களால் மெல்லத் தொடுவேன்.
என் அறிவிப்பே ஒரு வரவேற்புப் பாடல்தான்.
எல்லாரும் என் பாடலைக் கேட்க முடியும்
ஆனால் உணர்வு மிக்கவர்களால் மட்டுமே
அதை உணர்ந்து கொள்ள முடியும்.

காற்றின் வெப்பம்தான் என்னைப் பெற்றது.
ஆனால், நான் அதைக் கொன்று விட்டேன்.
ஒரு பெண், ஆடவனிடத்திலிருந்தே
வலிமை பெற்று, அவனையே வெல்வது போல.

நான் கடலின் பெருமூச்சு.
நிலத்தின் சிரிப்பு.
வானத்தின் கண்ணீர்.

இதே போலத்தான், நான் அன்பிலும்-
ஆழமான பாசக்கடலின் பெருமூச்சு;
உயிரின் வண்ண வயலின் சிரிப்பு;
எல்லையற்ற ஞாபக வானத்தின் கண்ணீர்.

*****

இந்தக் கரைகளில் நான்
எப்போதும்
நடந்து கொண்டிருக்கிறேன்,
மணலுக்கும் நுரைக்கும்
இடைப்பட்ட வெளியில்.
பேரலை வந்தால் என் தடம் அழிந்து போகும்
காற்று வந்தால் இந் நுரை கலைந்து போகும்.
கடலும் கரையும் மட்டும்
என்றென்றும் நிலைத்திருக்கும்.

-o0o-

அவர்கள் விழித்திருக்கும் போது
என்னிடம் சொல்வார்கள்,
"நீயும் நீ வாழும் உலகமும்
எல்லையற்ற கடலின் எல்லையற்ற கரையில்
ஒரு சிறு மணற்துகள்."

என் கனவில்
அவர்களிடம் சொல்வேன்,
"நானே எல்லையற்ற கடல்!
எல்லா உலகங்களும்
எனது கரையில்
சிறு மணற்துகள்கள்."

-o0o-

ஒரே ஒரு முறை தான்
நான் சொல்லிழந்து
விடையளிக்க இயலாமல்
ஊமையாக்கப்பட்டேன்.

"நீ யார்?"
என்று அவன்
என்னைக் கேட்ட போது.

-o0o-

ஒரு மணற்துகளைச் சுற்றி
எழுப்பப்பட்ட ஆலயமே
முத்து என்றால்,
எந்த வேட்கை எழுப்பியது நம் உடல்களை?
எந்த மணற்துகளைச் சுற்றி?

-o0o-

கடவுள்,
சிறுகல்லாக என்னை
இந்தக் குளத்தில் எறிந்தார்.
நான் மேல்புறத்தில்
வளையம் வளையமாய்ச்
சலனம் செய்தேன்,
ஆழத்தை அடைந்ததும்
அமைதியும் அடைந்தேன்.

-o0o-

Remembrance is a form of meeting.
நினைவுகூர்தலும் ஒருவகையில் சந்திப்பது போலத் தான் ..

-o0o-

The most pitiful among men is he who turns his dreams into silver and gold.
தன் கனவுகளைப் பொன்னாகவும் வெள்ளியாகவும் மாற்றிப் பார்ப்பவன் மிகவும்
பரிதாபத்துக்குரியவன்

-o0o-

A woman may veil her face with a smile.
பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்

-o0o-

Trees are poems that the earth writes upon the sky. We fell them down
and turn them into paper that we may record our emptiness.
பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை
நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்

-o0o-

Poetry is not an opinion expressed. It is a song that rises from a
bleeding wound or a smiling mouth.
கவிதை என்பது கருத்தல்ல, அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை
புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது .

-o0o-

A thousand years ago my neighbor said to me, \"I hate life, for it is
naught but a thing of pain.\" And yesterday I passed by a cemetery and
saw life dancing upon his grave.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என் அண்டைவீட்டுக்காரன் என்னிடம் சொன்னான் ..
\" நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்....இது வலி மிகுந்தது \"
நேற்று மயானம் வழியே சென்ற பொழுது கவனித்தேன்..
அந்த அண்டைவீட்டுக்காரனின் சமாதி மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டிருந்தது.

-o0o-

If your heart is a volcano how shall you expect flowers to bloom in your hands?
உன் உள்ளம் எரிமலையாகப் பொங்கினால் உன் உள்ளங்கையில்
எப்படி மலர்கள் பூக்கும் ?

-o0o-

A root is a flower that disdains fame.
வேர் என்பது புகழை அலட்சியம் செய்யும் ஒரு மலர் ஆகும்

-o0o-

Many a woman borrows a man\'s heart; very few could possess it.
அநேக பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள்
ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்

-o0o-

Only the dumb envy the talkative.
வாயாடியைப் பார்த்து ஊமை மட்டுமே பொறாமைப்படுவான்

-o0o-

Lovers embrace that which is between them rather than each other.
காதலர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் பொழுது
தங்களுக்கு இடைப்பட்ட காதலைத் தான் தழுவிக்கொள்கிறார்கள்..
தங்களை அல்ல.....

-o0o-

When a man\'s hand touches the hand of a woman they both touch the
heart of eternity.
ஒர் ஆண் , ஒரு பெண்ணின் கையை ஸ்பரிசிக்கும் பொழுது அவர்கள் இருவரும் 
அழியாமையின் இதயத்தைத் தொடுகிறார்கள்.

-o0o-

If it were not for your guests all houses would be graves.
விருந்தினர் வராத வீடு சுடுகாடு

-o0o-

We often sing lullabies to our children that we ourselves may sleep.
நாம் பெரும்பாலும் குழந்தைகளுக்காகத் தாலாட்டுப்பாடுவது
நாம் தூங்குவதற்காகத்தான்

-o0o-

Even the hands that make crowns of thorns are better than idle hands.
சோம்பியிருக்கும் கரங்களை விட முட்கிரீடங்கள் செய்யும் கரங்கள் எவ்வளவோ மேல்

-o0o-

தூங்கிக் கொண்டிருக்கும் அடிமையை ஒருபோதும் எழுப்பாதீர்கள். ஏன் என்றால் அவர்கள் சுதந்திரத்தை பற்றிய கனவு கண்டு கொண்டிருக்க கூடும்.

-o0o-

அவளுடைய அழகிய மென்மையான கைவிரல்களால் கோதப்படும் என் தலைமுடிக்கு, 
சூட்டப்படும் வேறெந்த மகுடத்தையும் நான் ஏற்கத் தயாராயில்லை

-o0o-