வியாழன், 5 ஜனவரி, 2017

நீ நான் நாம்



உன் களைப்பின்
இளைப்பாறுதலாய்
எப்போதும் இருப்பேன்!

என் இதயத்துடிப்பொலிகூட
இடையூறாயிருக்காது!

உனக்கான
சுதந்திரத்தை
நானென்ன ஒதுக்குவது?

உன்னில் நான்
நேசிப்பதே உன்
சிறகுகளைத்தான்!

பரந்து பறந்து வா!

என்
அன்பின் கிளைகள்
காத்திருக்கின்றன ...
*****



உன்னோடு
உரையாட
உவகை மிகுதி!
நீயோ
அதை
மௌனத்தின்
நகங்களால்
உருக்குலைக்கிறாய்!

காலக்கிணற்றில்
விழுந்த
தவளையாய்க்
கத்திக்கொண்டிருக்கின்றது
உனக்கான
உரையாடல்!
*****


என்னோடு நீ
முரண்படுவதில்
வியப்பேதுமில்லை!

என்னோடு நானே
முரணாகிதான்
என்னைப்
புதுப்பிக்கிறேன்...

முரண்படுதல் நலம்!
*****



உனக்காக
காத்திருப்பதில்
என் நாட்கள்
ஆகிப்போன அவலம்!

இரவுகளை
விழுங்கிவிடும்
பகல்கள் ;

பகல்களை
வாந்தியெடுக்கும்
இரவுகள்!

*****

காதலென்பது
கனவுகளில் மிதப்பதெனக்
கவிஞர்கள் சொல்லக்கூடும் ;

அஃதில்லை அன்பே!

எதார்த்தத்தில்
இறங்கி நடப்பதுவே...

வா!
ஒரு பொடிநடை
போய் வரலாம்... 😘😘🏃🏃

புதன், 4 ஜனவரி, 2017

ஆடை அவமானம்


                  

நாகரிகம் பேசும்
நல்லோரே!
ஆள்பாதி ஆடைபாதி
என்றீரே!
ஆடைக்கெதற்கு இத்தகு நீதி?
சொல்வீரா?

'உடுக்கையிழந்தவன்
கைபோல'
இந்த உவமை
சுட்டுவதென்ன?

பள்ளிக்கூடத்தில்
முன்வரிசையில்
எழுந்து நிற்கையில்
கிழிந்த உடையுடன்
கூனிக்குறுகி நின்றதுண்டா?

உடை விலகும்
ஒவ்வொரு கணமும்
அவசரமாய்
ஆடை திருத்தும்
பெண்ணவளின் பரபரப்பை
மொழிபெயர்த்து உணர்ந்ததுண்டா?

உடுத்தல்
உறுப்பின் அரணா?
இயற்கையின் முரணா?

ஆடை ஒருபுறம்
அடையாளம்!
மறுபுறம் அவமானம்!

அம்மணமாய்
இருந்தபோது
அவமானம் குறைவுதான்!
அப்படியே
இருந்திருக்கலாம்!

இப்போது
தண்டனை யாருக்குத்
தருவது?
வாருங்கள்!
ஆடையுடுத்திய
ஆதிமனிதனைத்
தோண்டியெடுத்து
தூக்கிலிடுவோம்!

வேர்களின் சாவு




எட்டு வருசம்
கெட்டவன்
எள்ளு போடு!
பத்து வருசம்
கெட்டவன் 
பருத்தி போடு!

சொலவம் சொன்ன 
அப்பத்தாவிடம் 
கேட்டேன்

எத்தனை வருசம்
கெட்டான் பாட்டன்
தூக்கு போட?


                   அறுவடைத்திருநாளின் கொண்டாட்டத்திற்கு அணியமாகிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களில் உழவப்பெருமக்கள் உயிர்விட்டிருப்பதை ஏதோவொரு செய்தியைப் போல் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்வரும் நாளொன்றின் பசியை வயிற்றுக்குள் நினைவுபடுத்தி வலி தரும் எச்சரிக்கையாகத் தெரிகிறது. தமிழீழத்தில் ஓராண்டுக்குள் ஒட்டுமொத்த இனமும் அழித்தொழிக்கப்பட்டதைக் கண்டு, கதறி, கதியிழந்தபின் மரணம் என்பதே மரத்துப்போன ஒன்றாகிவிட்ட சூழலிலும் ஓர் உழவனின் சாவு இயல்பாக கடந்துபோக மறுக்கிறது.

உழுதுண்டு வாழ்பவனின் கண்ணீர் அவனைத் தொழுதுண்டு வாழ்வோர்க்குத் தெரியாமலேயே போய்விடும்போது, சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் நம்மைச் சபிப்பதாகவேபடுகிறது. இங்குலவும் ஒவ்வொருவரின் உணவுக்கும் உற்பத்திப்பொருள் அனுப்புபவன், ஏதோவொரு சிற்றூரில் வெயிலில் தோய்ந்து, மழையில் நனைந்து, வியர்வை சிந்தி, வெம்பாடுபட்டு விளைச்சல் பெருக்குவதற்கு அல்லோலப்படுகிறான் என்ற பாடம், பசியெடுக்கும் ஒவ்வொருவருக்கும் படிப்பிக்கப்பட வேண்டும்.  ஆனால், கத்தரி -வெண்டை காய்கனிகளைக் காசு கொடுத்தால் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்; உழவுக்குத் தண்ணீரின்றி வயல்கள் கருகிப்போவது பற்றி, மற்ற வேலைசெய்வோர் கவலைப்பட ஏதுமில்லை என்ற அசட்டுத்தனமான போக்கு, விவசாயிகளில்லாத ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அது எவ்வளவு ஆபத்தானது என்பதை இங்கெவரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.



விவசாயியின் சாவு
வேர்களின் சாவு!
இனி
கிளைகளில் 
உங்கள் கனிகளில்லை!
இலைகளில்
உங்கள் நிழலுமில்லை! 

சாண்ட்விச்
சாப்பிடுபவரா நீங்கள்?
வெள்ளரி விவசாயி
தூக்கிடும் முன்னாவது
காப்பாற்றுக!
அஃதெதற்கு
அலைச்சல்?
கடைகளில்தானே
காய்கறி வாங்குவீர்! 

குழந்தைப்பசிக்கு
கவலை வேண்டா!
குர்குர்ரே பொட்டலம்
கொடுத்தால் போதும்!

இறுதி விளைச்சல்
உறுதியாகிவிட்ட பின்
உங்கள் வீட்டின்
கடைசி அரிசியைக்
காப்பாற்றிக்கொள்க!

இனி 
உணவென்பது
உழவில் வராது!

உழவனின் கடைசி
அழுகையில்
அரசின் ஆண்மை
கரைந்துபோனது! 

இனி
சமைக்கும்போது
உப்பைக் கூட்டுக!
கழனியில் விழுந்த
கண்ணீர் குறைந்தது!

             யாரிந்த உழவன்? மளமளவென்று பெருகிக்கிடக்கும் மானுடச்சமுத்திரத்தில் அவன் பங்களிப்பு யாதென்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. நாமோ உணர்வற்ற எந்திரங்களாக நகர்ந்து கடந்து போய்க்கொண்டே இருக்கின்றோம். 'படியளப்பான் பரமன்' என்னும் வழிபாட்டுமொழியை உற்றுப்பார்த்தால் அந்தப் பரமனுக்கும் படியளப்பவன் இந்த உழவுக்காட்டுப் பாமரன் தான் என்பதே உண்மை.

மலைக்காடுகளில் வாழ்ந்தபோது தன் அன்றாடப்பசிக்கு அலைந்து தேடியவன், ஆற்றுச்சமவெளிக்கு நகரத் தொடங்கினான். ஆங்கே பறவையோ, காற்றோ பரப்பிய விதைத்தலின் நாற்றுவிளைச்சலை உண்டபின் நின்று நிலைக்க வேண்டுமென்று வேளாண்மை பழகினான். காட்டுக்குள் காய் பறித்து, கனி பொறுக்கி, கிழங்கு அகழ்ந்து பசியாற்றியதெல்லாம் இயற்கை தாமாக செய்த வேளாண் விளைச்சல்! ஆனால், மனிதன் அதைப் பழக்கிப்பார்க்க விழையும்போது நிறையவே தோல்வி கண்டான். பருவம் அறியவும் பயிர்கள் விளையவும் இயற்கை போட்டு வைத்த கணக்கின் சூத்திரங்களைக் காலங்காலமாகத் தேடித்தேடி பக்குவம் கண்டான்.

எந்த மண்ணில், எந்தப் பருவத்தில், எந்தப் பயிர், எவ்வளவு வளரும் என்பதையும் எந்தப் பயிருக்கு எவ்வளவு நீர், எவ்வளவு உரம் இட்டுப் பார்த்தல் வேண்டும் என்பதையும் அவதானிக்க அவனுக்கு ஆண்டுகள் பல ஆகின.

ஆடிப்பட்டம் தேடி விதை;  தும்பி பறந்தால் தூரத்தில் மழை; சோளம் விதைக்க சொல்லி விதை போன்ற சொலவடைகள் உருவானதெல்லாம் அவன் காலங்காலமாக கண்டுணர்ந்த பட்டறிவின் விளைவுகளே! உலகெங்கும் மற்றினத்தார் காட்டுமிராண்டிகளாக அலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இந்த மண்ணில் உழவன் உருவாகியிருந்தான். காட்டைத் திருத்தி கழனி செய்தான். கழனி முழுக்க உழவு செய்தான். உழவு செலுத்தி உணவுப்பயிர் பெருக்கினான். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புமாறு எட்டுத்திசைக்கும் ஏறி கூவினான். வரலாற்றில் அதுவரை அறிமுகமாகாத முதல் நாகரிகத்தை உருவாக்கிக் கொடுத்தான். நாகரிகப் பிழைப்போட்டத்திற்கு நங்கூரமிட்டது அவன் உழவு செய்த நாகரிகம் தான். அந்த நாகரிகத்தொட்டிலில் அடுத்து வந்த நூற்றாண்டுகளைத் தாலாட்டிய தாயுமானவன் இந்த நூற்றாண்டிலோ நாகரிகமற்ற வேலைக்காரனாகவே பார்க்கப்படுகிறான். இதுதான் காலத்தின் கொடுமையாகக் கண்டுணரப்படுவது.

முன்றிலில் கோலமிடும் கொள்கை வகுத்ததன் கதை தெரியுமா? நன்றிக்குரிய பண்பாட்டு வழிமுறைகளில் அது அதிமுக்கியத்துவமானது. மலை குடைந்து, குகை கண்டு குடியிருந்தவன் மலைவிட்டு இறங்கி சமவெளிகளில் உலவியபோது இருப்பின் நிலைகொள்ள, பத்திரமாகப் படுத்துறங்க வீடொன்று தேவைப்பட்டது. செடிகொடி, குச்சிக்கோலென்று பலவகை வீடு பழகி கட்டினான். காற்றுமழைக்குக் காணாமல் போனது. ஆற்றுமணல் அள்ளி வந்து குழைத்தான். குலைந்து போனது. ஈரத்தை இருத்தி வைக்கும் மண்தான் வீடுகட்ட உகந்தது என்பதை உற்றறிந்தான்.

எந்த மண்ணில் ஈரப்பதமிருக்கும்? எறும்புத்திரள் எந்த மண்ணில் ஆண்டுக்கணக்காய்க் கூடிவாழ்ந்து செரிக்கிறதோ, அந்த மண்ணில் தான் உயிர்ப்பசை ஒட்டிக்கிடக்கும்! உலகம் முழுக்க மணலை மண்ணாக்கிய பணியைச் செய்தன எறும்புகள். அப்படி எறும்புகளின் குடியிருப்பு மண்ணள்ளி குழைத்துகட்டி வீடு கண்டான். எறும்பின் வீடழித்து தாம் வீடுகட்டிய குற்றத்திற்குப் பதிலீடு தர எண்ணியவன், அரிசிப்பொடி தூவி கோலம் என்னும் ஓவியக்கலையாக நேர்த்திக்கடன் செலுத்தினான். மண்ணால் வீடுகட்டும் மரபுக்கு ஆதியாய் ஒருவன் அறிவைச் செலுத்தினானே, அவன்தான் கோலமிடும் கோட்பாட்டின் தந்தையாவான்.


           உலகின் பசி தீர்க்க பாடுபவன் வயல் வற்றி, வயிறு ஒட்டி, உயிர்விடவும் தள்ளப்படுகிறான். யாரும் உழவர் சாவுக்கு அழ வேண்டா. அவர்கள் செத்துப்போகும் காரணம் தேடி அதுகுறித்து கவலைப்படுங்கள். அதைத் தீர்க்கப் போராட முன்வாருங்கள். இனியொரு உழவர் சாகும்முன் உழவுத்தொழில் வளர்க்க உதவுங்கள். 

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

சொல்லாயுதம்

     


சொல்லாயுதம் மாற்றுப்பரிமாணத்தில் செறிவானது!

சல்லிக்கட்டுக்குத் தடை போட்டுவிட்டு தமிழர் தொன்மை அடையாள அழிப்பிற்கான கோரமுகத்தைக் காட்டியவாறும் அதனூடாக நாட்டுமாடுகளின் இருப்பைக் காலி செய்வதாகவும் நேருக்கு நிற்கும் வலிதான அதிகாரம் மற்றும் அமைப்பினை எவ்வாறு எதிர்கொள்வோமென்ற தவிப்பில் இருக்கின்ற வேளையில்,
"தடையை நீக்கு" என்ற சலனமற்ற கூச்சல்களுக்கிடையே ஒற்றைக்குரலொன்று ஓங்கி ஒலித்தது "தடையை மீறுவோம்" என்ற சொல்லாயுதமாய்... வாளின் வீச்சொத்த பேச்சின் பிரளயக்காரன் சீமானின் சீற்றமிகு சொல்லாயுதம் தான் அது!

வெற்று முழக்கமென்று இதை வேடிக்கை பார்த்து வாடிக்கையாய் விமர்சிக்கும் தொண்டைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை இது இந்திய இறையாண்மை மீதெறியப்பட்ட சொல்லாயுதம் என்று!

இறையாண்மை, ஒருமைப்பாடு, சமத்துவம் யாவும் அரசின் அங்கமான மக்களால் உயிர்கொள்பவையே என்ற ஒடுங்குதன்மையோடு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அரசாள்கிற அரைவேக்காடுகளுக்கு முக்கியம்.
உணர்வுகளுக்கெதிராக உந்தப்படுகிற அடக்குமுறையின் முகத்தில் ஒத்துழையாமை எனும் ஓங்கு குரலால் காறி உமிழப்படுகிற எச்சில் துளிகளை அதிகார மையம் அறிந்துகொண்டே தான் இருக்கிறது!

நாட்டின் பொதுஅமைதி, ஒழுங்கைக் கட்டுக்கோப்போடு காப்பாற்றும் பிம்பம் சட்டங்களால் மட்டுமோ,  உறுத்துரைக்கும் உத்தரவுகளால் மட்டுமோ உடையாமலிருப்பதில்லை. மக்களால் மதிக்கப்படுகிறவரை தான் சட்டங்கள் சாகாமலிருக்கக்கூடும் என்பதின் எதார்த்தப்புரிதல், சட்டங்களுக்கிணங்கி வாழும் மக்கள்திரளுக்கு உருவாகிவிட்டால் தானாகவே துலாக்கோலில் சட்டத்தினை நிறுக்கத் தொடங்குவர்.

மக்களின் உணர்வுகளுக்கு அப்பால் எழும்புகிற எந்தத் தடையும் நீடித்து நிற்கப்போவதில்லை. ஆகவே, "தடையை மீறுவோம்" என்ற கூற்று தொடர்ந்து செவிப்புலன் கதவுகளைத் தட்டிக்கொண்டேயிருக்க, அது இயல்பானதொரு நடவடிக்கையைச் சாத்தியப்படுத்திவிடக் கூடும்.

விளைவுகளை ஏற்படுத்தாத எந்தச் சொல்லும் வீண்! விளைவுகளை ஏற்படுத்தவல்ல எந்தச் சொல்லும் ஆயுதமே!

"தடையை மீறுவோம்"