புதன், 17 நவம்பர், 2021

தொல்காப்பியன் : ஆதி அறிவன்

 மொழி ஓர் உயிரி. அது தன்னைப் பேசும் மனிதர்களை இயக்குகிறது; அவர்களால் இயக்கவும் பெறுகிறது; இறந்த காலத்தைச் சுமந்துகொண்டு நிகழ்காலத்தில் இயங்கிக்கொண்டு, எதிர்காலத்தின் பெரு வெளியில் பயணிக்கிறது. ஓர் உயிரி சந்திக்கும் நல்வினைகளையும் அல்வினைகளையும் ஒரு மொழி எல்லாக் காலங்களிலும் எதிர்கொள்கிறது. காலத்திருப்பங்களில் சில மொழிகள் கவிழ்ந்துவிடுகின்றன. சில தடம் புரள்கின்றன. சில விபத்துக்குள்ளாகி விழுகின்றன. சில அந்நியக் கிருமிகள் புகுந்து நோயுற்று அழிகின்றன. வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாத சில மொழிகள் முதுமையுற்று மாய்கின்றன.


லத்தீன் - சம்ஸ்கிருதம் - ஹீப்ரு போன்ற மூத்த மொழி களெல்லாம் மேற்சொன்ன இவற்றுள் ஏதோ ஒன்றிலோ, கண்டறியப்படாத ஒரு காரணத்தினாலோ உலக வழக்கு ஒழிந்துபோயின. ஆனால், மேற்சொன்ன அத்தனை காரணங் களையும் வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொண்டு இன்னும் உயிரோடு விளங்கும், உயிர்ப்போடு துலங்கும் மிகச் சில பேருயிரிகளில் நமது தமிழ் தலையாயது. வாழ்வோடு படைப்பிலக்கியங்களையும், படைப்பிலக்கியங்களோடு வாழ்வையும் தமிழர்கள் இடையறாது பேணிவந்ததே அது உயிர்த்திருப்பதற்கு முதல் காரணம்; இலக்கணம் என்ற அறிவியல் மீது அது திட்டமிட்டுக் கட்டப்பட்டிருப்பது இரண்டாம் காரணம்.


ஆரிய வரவினால் தமிழுக்கு நேரவிருந்த பெரும் பின்னடைவிலிருந்து தமிழைக் கட்டிக்காத்த காப்பு நூல் என்றே தொல்காப்பியத்தைக் கருத வேண்டும். தொல் + காப்பு + இயம் - தொல்மரபுகளைக் காப்பதற்கே இயம்பப் பெற்ற இலக்கணம் என்று கொள்வது ஒருபோதும் உண்மைக்குப் புறம்பாகாது.


தொல்காப்பியத்தின் தொன்மை


தொல்காப்பியத்தின் தொன்மை குறித்து அறிவுலகத்தில் பல கருத்துகள் உண்டு. தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5320 என்பார் வெள்ளைவாரணார்; கி.மு. 2000 என்பார் புலவர் குழந்தை; கி.மு. 1200 என்பார் கா.சுப்பிரமணிய பிள்ளை; கி.மு. 1000 என்பார் மு.வ.; கி.மு. 700 என்பார் இலக்குவனார்; கி.மு. 200 என்பர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் - மு.ராகவ அய்யங்கார் இருவரும்; கி.பி. 400 என்பார் வழக்கம்போல் வையாபுரிப் பிள்ளை. தொல்காப்பியத்தின் காலம் குறித்து வேறுபாடுகள் இருப்பினும், அது தமிழுக்கு நல்ல காலம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை.


மூன்று தமிழ்ச் சங்கங்களை மூன்று கடற்கோள்கள் அழித்திருக்கின்றன என்பது ஆய்வுலக நம்பிக்கை. கி.மு. 2387-ல் முதல் கடற்கோள், கி.மு 504-ல் இரண்டாம் கடற்கோள், கி.மு. 306-ல் மூன்றாம் கடற்கோள் நேர்ந்தன என்பது அனுமானத் தால் பெற்ற ஆய்வாகும் அல்லது ஆய்வில் பெற்ற அனுமானமாகும். “இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்று(த்) தொல்காப்பியம்” என்பது இறையனார் களவியல் ஆசிரியர் கூற்றாதலின் முதல் கடற்கோளுக்குப் பிறகு பிறந்தது தொல்காப்பியம் என்று கொள்ளலாம்.


முதற்கடற்கோளில் தமிழரின் பெரிய நிலப்பரப்பும் அரிய நூல்களும் ஆழிவாய்ப்பட்டழிய, தமிழினம் ஊனப்பட்டு நின்ற ஒரு காலவெளியில், ஆரிய மொழியும் பண்பாடும் தமிழர் மீது தாக்குறவு நிகழ்த்தத் தலைப்பட்டதாகக் கருதப்பட்ட பண்பாட்டுச் சூழலில், தமிழின் இலக்கணத்தையும் தமிழரின் வாழ்வியலையும் பெருமிதத்தோடு தூக்கி நிறுத்திய பேரறிவாளன் தொல்காப்பியன்.


வடமொழி வழிநூலா நம் தொல்காப்பியம்?


தொல்காப்பியம் முதனூலா, வடமொழிச் சார்புற்ற வழிநூலா என்பது ஒரு நீண்ட வினா. தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் என்று கருதப்பெறும் பனம்பாரனார் பாடிக்கொடுத்த பாயிரத்தில் காணப்பெறும் ஒரு சொல்லாட்சியே இந்த வினாவை விதைத்திருப்பதாய் ஒரு சாரார் கருதுகிறார்கள். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் / தன்பெயர் தோற்றி” என்ற தொடரில் துலங்கும் ஐந்திரம் என்ற சொல், ஐந்திர வியாகரணமாகிய வடநூலைக் குறிக்கிறதென்றும் தொல்காப்பியம் அதனடியாய் வந்த வழிநூல் என்றும் சிலர் கருதுவர். ஐந்திரம் என்பதை ஐந்திர வியாகரணம் என்று எழுதிச்சென்ற அடியார்க்கு நல்லாரை அவர்கள் சான்று காட்டுவதுமுண்டு.


இங்கிருந்துதான் நம் பொறுப்புமிக்க மறுப்புவாதம் உயிர்ப்புறுகிறது. முதலில் ஐந்திரம் என்பது ஓர் இலக்கண நூல் அன்று. அது ஐந்திரம் - ஆக்கினேயம் - கணாதிபத்தியம் - சைவம் - வைணவம் - சாக்கியம் என்ற அறுவகைச் சமயங்களுள் ஒன்று. ஒரு சமய நூல் எப்படி இலக்கணத்திற்கு முதனூலாகும்? இன்னொன்று: தொல்காப்பியம் நிலவிய காலத்தில் ஐந்திரம் உலவியதாகச் சான்றொன்றும் கிட்டிலது. அதே பனம்பாரனாரின் பாயிரம் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு / முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி” என்று பாடியிருப்பதால் தமிழக எல்லைகளுக்கு உட்பட்ட முந்துநூல்களே தொல்காப்பியத்தின் மூலநூல்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே, தொல்காப்பியம் முதனூல்தான்; மூத்த தமிழ்க்குடியின் மூளைச்சாறுதான்; தமிழினத் தின் ஐயந்திரிபற்ற ஆதி ஆறிவுதான்.


எழுத்து - சொல் - பொருள் என்ற மூன்று அதிகாரங் களையும் ஓர் அதிகாரத்திற்கு ஒன்பது வீதம் 27 இயல்களை யும் இளம்பூரணர் கணக்குப்படி 1,595 நூற்பாக்களையும், நச்சினார்க்கினியர் பேராசிரியர் கணக்குப்படி 1,611 நூற்பாக் களையும் உறுப்புகளாக உடையது தொல்காப்பியம்.


தமிழை ஆளும் மூன்றதிகாரங்கள்


மூன்றதிகாரங்களுள் எழுத்தையே தொல்காப்பியம் முன்வைக்கிறது. ஒலிப்பதிவு கண்டறியாத காலம் வரைக்கும் பேச்சுமொழி என்பது தன்மை முன்னிலைக்கு மட்டுமே உரியது. ஆனால், எழுத்து என்பதோ தன்மை - முன்னிலை - படர்க்கை என முக்காலத்திற்குமானது. எழுத்து என்பது ஒலியை ஊற்றிவைக்கும் கொள்கலன். அது அறிவின் சேமிப்புக் கிடங்கு. தலைமுறைகளுக்கான ஞானத்தைக் கடத்தி ஏகும் கருவி. மொழியின் எழுத்துகளைப் பகுப்பதென்பதே ஒரு கணிதம் மற்றும் அஃதோர் ஒலி விஞ்ஞானம். தொல்காப்பியர் ஓர் ஒலி விஞ்ஞானி.


தமிழ் எழுத்திலக்கணத்தை “நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல்” என்று 9 இயல்களில் வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். “எழுத்தெனப் படுவ / அகர முதல னகர இறுவாய் / முப்பஃது என்ப / சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே” என்று தமிழ் எழுத்துகள் மொத்தம் 33 என்று வரையறுக்கிறார். அகர முதல் ‘ன’கர ஈறாகவுள்ள முப்பதோடு, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றையும் கூட்டித் தமிழ் எழுத்து கள் 33 என்று முடிவுசெய்கிறார்.


தனித்தியங்கவல்ல 12 எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்றார், தனித்தியங்கவல்லாத 18 எழுத்துகளை மெய் யெழுத்துகள் என்றார். உயிரைச் சார்ந்து இயங்குவதே மெய் என்ற பேரறிவை மொழியின் மீது சாற்றிய முன்னோர்களின் மூதறிவைக் கருதும்போதெல்லாம் உள்ளம் களிகூர்கிறது. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் இம்மூன்றும் ஒரு சொல்லைச் சார்ந்தன்றி தனித்தியங்கும் இயல்பற்றன வாதலின் சார்பெழுத்துகள் எனப்பட்டன.


எழுத்ததிகாரத்தின் பெருமை பேசப் பிறப்பியல் ஒன்றே போதும். எழுத்துகள் பிறப்பதெங்ஙனம், அவற்றின் பிறப்பிடம் யாது என்று சிந்தித்த தொல்காப்பியர் உடல் - உயிர் - காற்று என்ற மூன்று மூலங்களோடு முடிச்சுப் போடுகிறார். “உந்தி வழியா முந்துவளி தோன்றித் / தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் / பல்லும் இதழும் நாவும் மூக்கும் / அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்… / …பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல” - என்பது நுட்பமான நூற்பா.


உந்தி வழியே முந்தி எழுகின்ற காற்று தலை - மிடறு - நெஞ்சு ஆகிய மூவிடங்களில் தவழ்ந்து, பல் - உதடு - நாக்கு - மூக்கு - அண்ணம் ஆகிய ஐவகை உறுப்புகளோடு உறழ்ந்து, வெவ்வேறு உருவாய்த் தோற்றுவதே எழுத்துகளின் பிறப்பு முறையாகும் என்று அறிவியல் தளத்தில் நின்று அறுதியிட்டு அறிவிக்கிறார்.


மொழிக்கு முதலெழுத்தாக வரக்கூடியவை எவை? வாராதவை எவை என்று தொல்காப்பியர் இட்டுக்கொடுத்த சட்டம் 3000 ஆண்டுகளாய் நின்று நிலவுகிறது. உயிர் எழுத்து பன்னிரண்டும் மொழி முதலாகும். மெய்யெழுத்துகள் மொழி முதலாகா. வடநாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தால் கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் புகத் தலைப்பட்ட காலத்தில், தொலைநோக்குப் பார்வையோடு தொல்காப்பியர் செய்த ஒரு நூற்பாதான் இன்றுவரை தமிழின் தனித்தன்மையைக் காக்கிறது; அதுதான் அந்நிய மொழியை வெளியே நிறுத்தித் தூய்மையுறுத்தித் தமிழுக்குள் அனுப்புகிறது.


காலப்போக்கில் கிரந்த எழுத்துகளின் சொற்களைத் தவிர்க்க முடியாது; ஆனால், அந்த கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்தான் அந்த மொழியறிஞன். “வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்றான். அதாவது, வடசொற்களின் வடவெழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக்கித் தமிழோடு புழங்கலாம் என்று இலக்கணச் சட்டம் இயற்றினான். லஷ்மன் - இலக்குவன் ஆனதும், ஜானகி - சானகியானதும், மஹாராஷ்டிரம் - மராட்டியம் ஆனதும், ஹைகோர்ட் - ஐகோர்ட் என்று எழுதப்படுவதும் தொல்காப்பியன் வகுத்த மொழிமரபின் தொடர்ச்சியே ஆகும். இன்று வடசொற்களையும், திசைச் சொற்களையும் அந்தந்த ஒலிவடிவில் எழுதுவது ஊடகக் கலாச்சாரமாய் இருப்பினும், தொல்காப்பியரின் செல்வாக்கு தமிழ்ப்பரப்பில் முற்றிலும் அற்றுப்போகவில்லை என்பதே மொழியின் தனித்தன்மையாகும்.


காலப்பெருவெளியில் எத்தனையோ அரசர்களின் எத்துணையோ அதிகாரங்கள் மாண்டழிந்துபோயின. ஆனால், தொல்காப்பியன் இயற்றிய மூன்று அதிகாரங்களும் இன்றுவரை ஒரு மொழியில் ஆட்சி செலுத்துகின்றன.


இரு திணைகளில் அடங்கும் உலகு


வைப்பு முறையில் எழுத்ததிகாரத்தைத் தொடர்கிறது சொல்லதிகாரம். எழுத்துக்கு முன்பே பிறந்தது சொல். சொல்லை முன்னிலைப்படுத்திப் பொருள் உண்டாவதில்லை. பொருளை முன்னிலைப்படுத்தியே சொல் உண்டாகிறது. பின்னர் அந்தப் பொருளைச் சுட்டும் சொல் தானும் ஒரு பொருளாகிறது. பொருளே சொல்லுக்கு மூலம் என்பதனால் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று அறைந்து சொல்கிறது தொல்காப்பியம். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் எந்த ஒலி எழுத்துக்குள் அடங்குகிறதோ அதுவே சொல்லாகிறது.


கடலோசை - காற்றோசை - இடியோசை - மழையோசை - பறவையோசை - விலங்கோசை - ஆற்றோசை - அருவியோசை - இசைக் கருவிகளின் இன்னோசை - முத்தம் - சிரிப்பு - முனகல் - இருமல் இவையெல்லாம் எழுத்துகளில் அடங்குவதில்லை. அதனால், இவை யாவும் ஒலிக்குறிப்பு களாகுமே அன்றிச் சொற்களாகா. எழுத்துக்குள் அடங்கும் ஒலியே சொல்லாகிறது.


இந்தப் பேரண்டத்தை அளக்கும் அத்தனை சொற்களை யும் இரண்டே இரண்டு செப்புக்குள் அடைக்கிறார் தொல்காப்பியர். ஒன்று உயர்திணை; மற்றொன்று அஃறிணை.


மனிதர் உயர்திணை; மனிதக் கூட்டம் அல்லாதவை எல்லாம் அஃறிணை. அந்த உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றுக்குள் அடக்கிய தொல்காப்பியர், அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டுக்குள் அடக்குகிறார். இந்தச் சொற்பகுப்பைத் தமிழ் ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம். “இந்தோ ஐரோப்பிய மொழிகள் பல உயிருள்ளன, உயிரல்லன அனைத்தையும் உயர்திணையாகவே கொண்டு ஆண் - பெண் என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன.


சித்திய மொழிக் குழுவினுள் பல எல்லாவற்றையும் அஃறிணை யாகவே கொண்டு ஒன்று - பல என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன. தமிழ் ஒன்றுதான் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து, அதனையுடைய மக்களை உயர்திணை எனக் கூறியுள்ளது” என்று தமது தொல்காப்பிய ஆராய்ச்சியுள் அறிஞர் சி.இலக்குவனார் சுட்டுவது அறிவுலகத்தின் ஆழ்ந்த பார்வைக்கு உள்ளாகிறது.


அந்தச் சொற்களைப் பெயர் - வினை - இடை - உரி என்று நான்காகப் பகுத்தபோது மொழியின் மொத்தக் கட்டமைப் பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. “பொருளை உணர்த்துவது பெயர்ச்சொல். அப்பொருளின் தொழிலைச் சொல்வது வினைச்சொல். பெயருக்கும் வினைக்கும் இடையே மையமாய் இயங்குவது இடைச்சொல். பொருளின் பண்பு கூறுவது உரிச்சொல்” என்ற சிவஞான முனிவரின் தெள்ளுரையும் உள்வாங்கி உணரத்தக்கது.


சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்ட கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்ற ஒன்பது இயல்களிலும் சொல்லும், சொல் இயங்கும் அறிவியலும், மொழியின் இயக்கத்தால் பெறப்படும் விகாரங்களும், விகாரங்களால் பெறப்படும் புதுவடிவங்களும், தமிழ் மொழியின் ஒரு சொல் இப்படித்தான் இயங்கும் அல்லது இயங்க வேண்டும் என்ற ஒலிச் சட்டங்களும் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியரின் சொல்லதிகாரத்தை இற்றைநாள் மொழியில் சொல்லறிவியல் என்றும் சொல்லலாம்.


பொருள் எனும் பேரதிகாரம்


மூன்றாம் அதிகாரத்திற்குப் பொருளதிகாரம் என்று தலைப்பிட்ட தொல்காப்பியரின் சொற்றேர்வு சுட்டுகிறது அவர் பெற்ற பேரறிவை. மனிதன் பொருள்களால் ஆக்கப்பட்டவன் மற்றும் பொருள்களை இயக்குகிறவன்; பொருள்களால் இயக்கப்படுகிறவன். பொருள்களைக் கண்டறிகிறவன்; பொருள்களை உண்டாக்குகிறவன். இறுதியில் தானும் ஒரு பொருளாகி, பின்னர் பொருளற்ற பொருளாகிக் காலப்பொருளுக்குள் மூலப்பொருளாய்க் கலக்கிறவன் அல்லது கரைகிறவன். இந்த உலகப் பொருள்கள் கட்படு பொருளென்றும் கருது பொருளென்றும் இருவகைப்படும். அவற்றை மூவகைப்படுத்தி முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்று பகுத்தறிவால் பகுத்துப் பகுத்து வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.


முதற்பொருள் எதுவென்று முன்மொழிந்தது தொல்காப் பியரின் மூளைப்பழம் பிழிந்த சாறாகும். உயிர்த்தோற்றத் தின் மூலமாகிய இந்த நிலமென்ற உருவமும், இந்த நிலவியல் வாழ்வை இயக்குகின்ற காலம் என்ற அருவமும் முதற்பொருள் என்பது தொல்காப்பியரின் அசைக்க முடியாத அறிவின் ஆணையாகும். “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் / இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” என்பது எங்கள் முன்னோன் எழுதிய முன்னறிவியல்.


ஐன்ஸ்டைன் முதலாக ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஈறாக விளங்கிய விஞ்ஞானிகளும் ‘காலமும் வெளியும்’ (Time and Space) என்று தேடிக் கண்டறிந்த திரவியத்தை அன்றே சுட்டிய பேரறிவு பெருமைக்குரியது.


முதற்பொருள்களில் கருக்கொள்வனவெல்லாம் கருப்பொருள்கள். அந்தக் கருப்பொருள்களின் ஒழுகலாறுகள் உரிப்பொருள்கள் என்று வகைப்படுத்தியதில் மொத்த உலகத்தையும் இந்த மூன்று பகுப்புக்குள் அடக்கி முடிக்கிறார் அறிஞர் பெருமான்.


அகத்திணையியல் - புறத்திணையியல் - களவியல் - கற்பியல் - பொருளியல் - மெய்ப்பாட்டியல் - உவமவியல் - செய்யுளியல் - மரபியல் என்ற பொருளதிகாரத்தின் 9 இயல் களிலும் தமிழர்களின் காதலும் வீரமும், நிலமும் பொழுதும், வாழ்வும் தொழிலும், உணவும் உணர்வும், கலையும் கல்வியும், வழக்கமும் ஒழுக்கமும், உறவும் பிரிவும், அறமும் மறமும், மரபும் மாற்றமும், யாப்பும் அணியுமென எல்லாப் பொருளையும் இலக்கணப்படுத்தியிருக்கிறார் தொல்காப்பியப் பேராசான்.


விஞ்ஞானத்தோடு முன்னின்றவன்


உலகத் தோற்றம் குறித்து இதுவரை இரண்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று மதக் கருத்து; இன்னொன்று அறிவியல் கருத்து. இந்த அண்டமே கடவுளின் கைவினை என்ற கருத்தையே எல்லா மதங்களும் எழுதிப்போகின்றன. ஆனால், கரிமக்கொள்கை என்ற விஞ்ஞானம் இந்த பூமியின் தோற்றம் குறித்து அதுவரையில் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியல் எல்லைக்குள் அண்டத்தை அளந்தது தொல்காப்பியம்.


“நிலம் தீ நீர் வளி விசும்பொடு / ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (பொருளதிகாரம் மரபியல் 86) என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். நிலம் - நீர் - தீ - வளி - வெளியென்ற ஐந்தின் கலவைதான் இந்த மண்கோள் என்று முரண்பாடில்லாத கருத்தை முன்மொழிகிறது. இந்த பூமி எப்படிப் படைக்கப்பட்டது என்ற மதம்சார் கருத்தியலில் தோயாமல், எதனால் படைக்கப்பட்டது என்ற மெய்ம்மையோடு மட்டும் நின்றுகொண்டதால் தொல்காப்பியத்தை எந்த நூற்றாண்டு அறிவியலும் இடறித்தள்ளவியலாது.


தொல்காப்பியர் எந்த மதத்துக்குள்ளும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஐவகை நிலம் காக்கத் தங்க ளைக் களப்பலியிட்டுக்கொண்ட முன்னோர்களுக்கு நட்ட நடுகல்லையே தமிழர்கள் தெய்வமென்று போற்றி வழி பட்டார்கள் என்பதையே தொல்காப்பிய நூற்பா நுதலிப் போகிறது. “காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் / சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” (பொருளதிகாரம் : புறத்திணையியல் 5) என்னும் தொல்காப்பியம் நடுகல் வழிபாடுதான் தமிழர்களின் ஆதிவழிபாடு என்று சான்றளிக்கிறது. அதுவே, குலதெய்வ வழிபாடாகி இன்றுவரை நாட்டார் சமயமாய் விளங்குகிறது.


தொல்காப்பியத்தை எப்படி மதிப்பிடுவது?


மொழி, இலக்கணக் கோட்டுக்குள் இயங்கவும், அதன் ஒலி தடம் புரளாமல் பயணிக்கவும், தமிழன் ஆதிகுடி என்பதற்கு அடையாளம் காட்டவும், மொழிக்கு அறிவியலையும் வாழ்வுக்கு அறவியலையும் அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பழங்குடி என்பதற்குச் சான்று சொல்லவும், தமிழர்க்கு உச்சமாகவும் எச்சமாகவும் உள்ள தொல்லாவணமே தொல்காப்பியம் என்று மதிப்பிடலாம். தொல்காப்பியத்தைக் கட்டிக்காப்பது அரசாங்கத்தின் - அறிவுலகத்தின் கடமை மட்டுமன்று; தமிழ் மொழி பேசும் - எழுதும் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.


- கவிஞர் வைரமுத்து

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

இராமன் ஓர் அசைவப்பிரியன்

இராமாயணமும் லங்கையும் என்ற ஆங்கில நூலை 1940 ஆம் ஆண்டு டி. பரமேசுவர ஐயர் எனும் ஆய்வாளர் எழுதியுள்ளார். இந்தியாவில் இருக்கும் எல்லா இராமாயணக்கதைகளையும் ஆய்வு செய்து அவற்றினடிப்படையில் இராமன் ஒரு மதுப்பிரியராகவும் இறைச்சி விரும்புபவராகவும் காட்டுகிறார்.


வில்வித்தையை விரும்பி புரிந்த வில்லாளியான இராமன் மாமிசத் தேவைகளுக்காகவே வேட்டையில் வேட்கை மிக்கவனாக இருந்துள்ளான். அவன் மனம், தசைத் திரட்சிமிக்க உடற்கட்டோடு இருந்ததெல்லாம் இறைச்சிக்காக வேட்டையாடிய விளைவால் வந்தவையே என்கிறார். (பக்கம் 129)

"கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டியபோது திரும்பி அயோத்தியிருக்கும் திசைநோக்கி இராமன் தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்போது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டையாடப் போகிறேன்? இந்த வேட்டை இராஜரிஷிகள் சம்மதித்தல்லவா? ( அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27).

"விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான்- காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டுமே புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் " என்று கூறுகிறான். (அயோத்யா காண்டம் சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29) நூலின் பக்கம் -130.

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது இராமனின் மனைவி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் மதுவும் இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள் நுழைந்த அன்று, இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப்பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக இராமனும் இலட்சுமணனும் வில் அம்போடு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டுவந்து ஒரு மரத்தடியில் சமைத்து சாப்பிட்டனர். (சர்க்கம் 52 பாடல் 102) சுவையான இறைச்சியை சீதைக்குத் தந்து அவளை இராமன் திருப்திபடுத்தினான். (சர்க்கம் 96 பாடல் 1).

இத்தோடு முடியவில்லை இறைச்சிப்படலம்! மாறுவேடத்தில் வந்த இராவணனுக்குக்கூட சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்! என் கணவர் விரைவில் வந்துவிடுவார். காட்டுப்பொருட்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி,காட்டுப்பன்றி கொண்டு வருவார். இஷ்னுமான் (முதலை முட்டை தின்னும் விலங்கு) கொண்டு வருவார். (ஆரண்ய காண்டம் சர்க்கம் 47, பாடல்கள் 22,23)

இப்படி இராமன் இறைச்சியுண்டதை ஏதோ ஓரிடத்தில் குறிப்பிடவில்லை வால்மீகி. பல்வேறு இடங்களில் இறைச்சியையே இராமன் தேடித்தேடி விரும்பி உண்டதாக வலியுறுத்திச் சொல்கிறார். வால்மீகியும் ஒரு வேடனென்பதால் வேட்டையாடிய இராமனையும் அவன் இறைச்சிப்பிரியனாக இருப்பதையும் சொல்லி சிலாகித்து எழுதுகிறார்.

இராமனின் பெயரால் நிகழும் தூய பிம்பங்களும் மாட்டிறைச்சி அரசியலும் இராமகாதைகளுக்கு முற்றிலும் முரணானவை. இராமனைத் தமிழுக்குக் கொண்டு வருகிற கம்பன் தன் மொழியாளுமையால் அப்போது தமிழகத்தில் நிலவிய புலாலுண்ணாமையை இராமாயணத்தில் எழுதுகிறார்.

இறைவனுக்குரிய எந்த இலக்கணத்திற்குள்ளும் இல்லாத இராமனைக் கம்பன் தன் கவித்திறத்தால் கடவுளாகக் கட்டமைக்கிறார். ஒழுக்கமற்றுத் திரிந்த வடக்கத்திய கதைபாத்திரத்தைத் தமிழாய்ந்து எழுதுகிறபோது ஒழுக்கத்தின் விழுமியங்களை ஒப்பேற்றி வைக்கிறார் இராமன் மீது.

கம்பராமாயணம் தமிழ் இலக்கியப்பெருங்கடலில் மிக முக்கியமானது. எண்பதாயிரம் எதுகை, மோனைத்தொடைகளோடும் கணக்கில்லாத கவியுறைந்த உவமைகளாலும் கம்பராமாயணத்தில் தமிழை இறைத்து நிரப்புகிறார். பத்து எதுகைக்கே படுத்துவிடுகிற பாவலர்களில் ஆயிரக்கணக்கான எதுகைகளோடு எக்காளமிடுகிறது கம்பன் கைவிரல் பிடித்த எழுத்தாணி!

ஆளாளுக்கு இராமாயணத்தை வளைத்தெழுதிய பின்பு கம்பனைக் கடைத்தேற்றிவிடக் கருதாத கவிஞர்கூட்டம் காலமைதி கொண்டுவிட்டது. மீண்டும் இராமாயணத்தை எழுதத் தொடங்கினால் அதில் வரலாற்று நாயகனாக கலைபத்தில் தலைசிறந்த இராவணன் கதைநாயகனாக விளைந்தெழுவான். 

குடைவரை அடைமழை


கரிசல்நிலத்தின் விரிசல்கழனியாய் வீணாய்க்கிடந்தேன். வந்து போன வாடைக்காற்றுக்கெல்லாம் ஓடைக்கூச்சலுக்குண்டான உற்சாகப்போலி காட்டிக்கொண்டிருந்தேன்.

இம்மியளவு ஈரக்கசிவு இதயத்துகளை நனைத்துவிடாதாவென கும்மிக்கும்பிட்டு கூனிக்குறுகிப் போயிருந்தன என் ஏக்கமுதுகெலும்பு! 

ஆயுட்காலத்து அடைமழையோடு நீ மட்டும் வந்துசேராவிடில் பாளம் பாளமாய் வெடித்து பாழாய்ப் போயிருக்கக்கூடும் உடலுழுவயல்! நீ தந்த ஈரத்தழுவலில் தான் என் உயிர்க்கூடு நெடுநாளாய் அரிக்காமல் அடைகாத்த நெல்மணிகள் வேர்விடத் தொடங்கின. 

உன் தேகம் என் மோகத்தோடு மோதி மோதி எப்போதும் முப்போகம் விளையக் காத்திருக்கிறது அளவெடுத்த அங்கம் ஒன்று, யாழ்மீட்டும் விரல்போல் சூலில் நின்று!

தூங்காத இரவிலொருநாள் தாங்கொணாக் களைப்பிலிருந்த பொழுது பூங்காற்றாய் அங்கம் தழுவினாய்! கழுவாத என் பிறவியழுக்கை அத்தழுவல் தான் முழுதாய் தூய்மை செய்தது. 

தேனில் விழுந்த மீன்போல தேகமெல்லாம் இனிக்கக் களித்தேன். திளைக்கத் திளைக்க நான் திகட்டிக்கொண்டிருந்த போது பூவிரல் நீட்டி புத்துணர்ச்சி புகட்டத் தெரிந்தது உனக்கு.

எப்போதும் சொல்வேன் அந்தப் புத்துணர்ச்சிக்கு ஆயிரக்கலவியின் ஆற்றல் இருந்தது என்று!

திருந்துவதும் வருந்துவதும் தீயப்பழக்கமென இருந்த எனக்குள் மருந்தென வந்து மகத்துவம் செய்தவள் நீ! தீராச் சோகத்தினடியில் மீளாச் சிறைபோல் அடைபட்டுக் கிடந்தவனை நம்பிக்கைச்சொல்லடுக்கி மீட்டுவிட வந்தவள் நீ! குற்றவுணர்ச்சி தவிர்த்து மற்றவுணர்ச்சிக்கெல்லாம் மனங்கொடுத்து அலைந்தவனை இனங்கண்டு இழுத்துக்கொண்டு இளைப்பாற வைத்தவள் நீ!

வேக்காட்டில் வெருண்டு சாக்காடன்றி சாகக்கிடந்தவனை உன் உள்ளங்கை குளிர்வில் பூக்காடு பார்க்க புத்துயிர் ஊட்டியவள் நீ! மௌனக்குழியில் மரணக்கிடக்கில் சரணடைந்து போனவனை வார்த்தைகளில் தீர்த்தந்தெளித்து கெடுதலைத் தடுத்து விடுதலை தந்தவள் நீ!

நீயென்பது நீ மட்டுமில்லை நானும் சேர்ப்பென்ற செம்மையான வார்ப்புக்கு செப்பனிட்டுக் கொடுத்தவள் நீ! வாடிக்கிடக்கும் வாலிபத் திசுக்களைக் கூடிக்களித்து கொண்டாட முடியுமென்ற நாடிக்கணக்கை நடைமுறைபடுத்தியவள் நீ! 

வியாழன், 2 ஏப்ரல், 2020

களிற்றுத்துன்பம்

கூர்தீட்டிகளால்
கொலையுண்டுபோன
யானைகளின் கதறல்
கானத்தை அரற்றியது!

திடுக்கிட்டெழுந்த
என் கனவுக்குள்
அந்தக் கதறல்
கேட்டுக்கொண்டேயிருந்தது!

ஏனிந்த தொல்லை?
எங்கோ விழுந்த அடிகளும்
குத்திக் கிழித்த காயங்களும்
என் நினைவுக்கடியில்
நெருஞ்சிமுட்களை
ஏன் தூவிப்போகின?

பழைய நாட்களுக்குள்
காலப்பயணம்
போய் வந்த நாளொன்றில்
கண்டுகொண்ட உண்மைக்கு
களிறுபட்ட துன்பத்தின் சாயல்!

பெண்வாழ்க்கையோடு
பெரும்பாடு துயரங்களுக்கெல்லாம்
விலங்கொடு அனையும்
விந்தை இருக்கிறது தான்.!

நான்பட்ட பாடுக்கு
யானை வாழ்க்கை போலும்!



செவ்வாய், 31 மார்ச், 2020

நம்பிக்கையெனும் நல்மருந்து!

'யாரை நம்புவது?' என்ற கேள்வி எல்லா வயதுடையோராலும் வரம்பின்றி கேட்கப்படுகிறது. 'யாரையும் நம்ப முடியவில்லை!' என்ற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. 'இது நம்மையும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது' என, ஏன் எவருக்குமே குற்றவுணர்ச்சி ஏற்படுவதில்லை.

ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளாத - தோல்வியை ஏற்றுக்கொள்ளாத - சிறு அவமானத்தைச் சகித்துக்கொள்ளாத மனங்களை உருவாக்கி வருகிறோம். இது சரிதானே?! ஏன் ஏமாற வேண்டும்? ஏன் தோற்க வேண்டும்? எதற்காக அவமானப்பட வேண்டும்? என்ற கேள்விகள் இயல்பாக எழக்கூடும்.

யாரையும் ஏமாற்றாமலோ, யாரையும் தோற்கடிக்காமலோ, யாருக்கும் அவமானம் தராமலோ இருக்கிறோமா? இருந்தால் இதையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை தான். ஆனால் அப்படியில்லையே! நம் சூழ்நிலைக்காக யாரையும் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நம் பெயர்ப்போதைக்காக உடனுற்ற நண்பர்களைக்கூட தோற்கடிக்கத் துடிக்கிறோம். நம் தேவைக்காக யாரையும் அவமானப்படுத்தும் அடிமனக்குரூரத்தோடு அலைகிறோம்.

ஏமாற்றினாலென்ன? எல்லோரையும் நம்புவதால் என்ன இழந்துவிடப் போகிறோம்.! யாரை நம்பலாம் எனத் தேடித்தேடி தெளிவோடு ஆளறியத் தெரிந்துகொள்வதைக் காட்டிலும் எல்லோரையும் நம்புவது உள்ளத்தைத் தெளிவாக வைத்திருக்கும்.

தோல்வியின் அனுபவத்தைக் கொண்டாட யாருமே தயாராயில்லை. போட்டியிடுவதே ஓர் இயக்கநிலைக்கு நம்மை இட்டு வைக்கும். அதைத்தான் நாம் ஆர்வத்தோடு செய்துகொள்ள வேண்டும். ஆனால், வெற்றிக்காக மட்டுமே போட்டியை அணுகுவதால் போட்டியிடும் பண்பிலிருந்து விலகி எல்லோரையும் தோற்கடிக்கவே துடிக்கிறோம்.

போட்டியிடுவதுதான் மிகச்சிறந்த பண்பு! வெற்றியைக் காட்டிலும் நம்மை நாம் துல்லியமாக சோதித்துக்கொள்ள போட்டி மட்டுமே உதவக்கூடியது. அதை யார் சொல்லித் தருகிறார்கள்? எல்லோரும் முதலிடத்திற்கு வர வேண்டுமெனில் யார்தான் இரண்டு, மூன்றென தொடர்வது? உடனிருப்போரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பெருமைப்படுவதற்காகவே நாம் வென்றாக வேண்டிய கட்டாயத்தைக் கற்றுக்கொள்கிறோம்! இது எத்துணை அபத்தமானது!

என்ன இழப்பைச் சந்தித்தாலென்ன? எத்தனைச் சோகங்கள் சூழ்ந்தாலென்ன? யாரையும் நம்பிவிடாதே என யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். சா விளிம்பின்வரை சூழ்ந்தோரைச் சார்ந்து வாழும் வாழ்விது! தனியாக இருந்து போட்டியிடவோ, தன்னை யாரென நிரூபிக்கவோ, தன் பெருமை சொல்லி பீற்றிக்கொள்ளவோ,தான் ஏமாற்றப்பட்டதைச் சொல்லிக் காட்டவோ தனியாக இருந்து செய்ய இயலாது. எதிரில் யாராவது அல்லது ஒரு கூட்டமோ தேவைப்படும்.  ஆகவே எல்லாவற்றிற்கும் அப்பால் ஒருவரை நம்புவதைப் போல மனதிற்கு இளகானது எதுவுமில்லை. ஏமாற்றத்தைத் தாண்டியும் ஏமாற்றியவரை மீண்டும் ஒரு வாய்ப்பளித்து நம்புவதைவிட அவரை வருத்தவும் திருத்தவும் தக்க தீர்வு எதுவுமில்லை. மேலும் எல்லோரையும் நம்பும் நபராக நாம் மாறும்போது எல்லோராலும் நம்பும் ஆளாக நாம் பிறக்கிறோம்.

நம்பிக்கை நல்லது! ஏமாற்றினாலும் நம்பிக்கை நல்லது! ஏமாற்றப்பட்டாலும் நம்பிக்கை நல்லது! தோற்றாலும் அவமானப்பட்டாலும் விழுந்தாலும் அதிலிருந்து மீள நம்பிக்கையே நல்லது! ஆதலால் அறுதியிட்டு சொல்கிறேன்,  அனைத்து இழப்பையும் சோகத்தையும் தீர்ப்பதற்கு ஒரு நம்பிக்கையே மருந்தாக முடியும்! 🖤