அன்றொருநாள் வெண்ணிலா விளக்கேற்றியிருந்த கிழக்கு வானத்தைப் பார்த்தபடி
மொட்டைமாடி வரம்புச்சுவற்றில் அவளோடு அமர்ந்திருந்தேன்.
இருள்சூழ்ந்த அப்பொழுதில் தொலைதூரத்து வெளிச்சங்களைப் பார்த்தபடி அவளின்
கொஞ்சலடைந்த வினாக்களுக்கு அதிராத குரலில் விடையளித்துக்கொண்டிருந்தேன்.
என் பேச்சை ஏதோ அப்பொழுதுதான் முதன்முதலாய் கேட்பதைப் போல் அவள்
இதழோரத்து புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.
சட்டென்றென்று என்ன நினைத்தாலோ என் வலக்கையை வாஞ்சையோடு வாங்கி
விரல்களால் வருடி உள்ளங்கையை ஒற்றிக்கொண்டே பற்றிக்கொண்டாள்!
பேசிக்கொண்டேயிருந்தேன்...
சிறிதுநேரம் கழித்து ஏதோவொரு சிலிர்ப்பு! என் கழுத்துக்கும் தோளுக்குமான
இடைவெளியை அவள் தன் தலை சாய்த்து நிரப்பியிருந்தாள்!
அந்த வெப்பந்தோய்ந்த நுட்பத்தழுவலை அதுகாறும் நான் துய்த்திருந்ததில்லை.
உள்ளுக்குள்ளிருந்து ஓர் அழுத்தமொன்று என் பேச்சை நிறுத்திவிட்டது.
பேசாமல்
நெடுநேரம் அமைதியாகவே இருந்தோம்...
கைகளும் கழுத்தும் எங்களுக்கே புரியாததொரு மொழியில் பேசிக்கொண்டிருந்தன...
அந்த மொழியை எங்களால் இன்றுவரை மொழிபெயர்த்துக்கொள்ள முடியவில்லை.

Nice
பதிலளிநீக்குநன்றி இசை :)
நீக்கு