வெள்ளி, 30 டிசம்பர், 2016

வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்


                     
                தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்களில் தமிழர் சிலரே. அச்சிலருள் முக்கியமானவர் வண்ணதாசன். சிறுகதை மரபில் தனக்கென பாணி அமைத்து தனித்துவத்தோடு விளங்குபவர். அவருக்கு தற்போது 'சிறுஇசை ' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடெமி விருது வழங்கப் பெற்றுள்ளது. அதற்குத் தமிழ் கூறும் நல்லுலகு மகிழ்வோடு மதிப்பு செய்ய வேண்டும்.
            ஒரு மண்ணின் எழுத்தாளன், தான் வாழும் மண்ணின் வலியை, மக்களின் வாழ்வை, காயத்தை, கண்ணீரைத் தன் குருதியில் குழைத்து நிரப்பிக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் அவன் உண்மையின் உறுத்தோடு எழுதிக் கொண்டிருக்க முடியும். அப்படிப்பட்ட ஆளுமையும் மண்பற்றும் கொண்ட எழுத்தாளராக வண்ணதாசனை வரவேற்று ஏற்கலாம். முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க.சிவசங்கரன் அவர்களின் மகன் தான் இந்த கல்யாண சுந்தரம் என்ற கல்யாண்ஜி. இயற்பெயர் மறக்கப்பட்டு இலக்கியப் பேருலகு வண்ணதாசன் என்ற பெயரையே பொருத்திக் கொண்டது. கல்யாண்ஜி என்ற பெயருடன் கவிதைகளையும் வண்ணதாசன் என்ற பெயருடன் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.

"நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்
தலைகீழாய் வரைந்துகொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை 
வாங்கிக் கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது"

         கனவுகளை நிரப்பிக் கொண்டு காதலிக்காக காத்திருக்கும் நிமிடங்களில், சிருங்காரத்தின் சில்மிசங்களையும் பெண்ணருகின் பூரிப்பையும் பற்றி எண்ணிப் பேணிக்கொண்டிருப்போரிடம் இருந்து வேறுபட்டு, இயற்கையைச் சுவைக்க எண்ணுகின்ற ஒருவனைக் கவிதைபடுத்தியதில் இந்த மண்ணின் எழுத்தாளன் மதிப்புறுகிறான்.

இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்த பறவை எழுதியிருக்கும்
இந்த கடிதத்தை?

           பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாடு கொண்ட பரம்பரையின் ஆழ்ந்த நோக்கம் அத்துணை உயிர்களையும் நேசித்தலாகத்தான் இருக்க முடியும். அப்படி நேசிக்கின்ற கவிதைகளையே வண்ணதாசன் வரைகின்றார்.
           கவிஞனாக இருந்து கதை எழுத நேர்கிற பொழுது, கவிதைக்கான சொல் சேகரிப்பின் கவனம் போல், கதையோட்டத்தின் சொல்லாக்கமும் கவனமுடன் நகரும். தன் சிறுகதையின் தலைப்புகளிலும் ஓர் உல்லாச பயணம், ஒருபோதும் தேயாத பென்சில், கனியான பின்னும் நுனியில் பூ, கனிவு, சின்னு முதல் சின்னு வரை, பெயர் தெரியாமல் ஒரு பறவை, சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், மணல் உள்ள ஆறு, சிறுஇசை என்று கவித்துவமான தலைப்புகளையே வைத்துள்ளார்.
            'மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்' என்கிற வண்ணதாசன், "இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.  எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக்கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன.  நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்.  நான் உணர்வதைத் தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கைமணல் இது" என்று தன் எழுத்தாளுமையின் நிலைப்பாடை நிறுவிச் சொல்கிறார்.
       மனிதமனம் என்பது கோடிக்கணக்கான ஊசிகள் கொண்ட அமைப்பு.  அதில் ஒரு ஊசியை லேசாக உருவி, பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து விட்டு, திரும்ப செருகி வைத்து விடுவதைத்தான் படைப்பாளி செய்கிறான் என்பது போலவே வண்ணதாசன் ஒரு படைப்பாளியாக தன் பிம்பம் உடையாமல் பார்த்துக் கொள்பவர். அன்பின் இழையோடும் கதைமனிதர்களையே எழுதியிருக்கும் வண்ணதாசன் சக மனிதன் மீது கொள்ளும் அன்பு ஒன்றுதான் அவரின் எல்லா கதைகளிலும் ஆக்கிரமித்து கிடக்கிறது. ஒரு படைப்பாளியிடமிருந்து அவனது நேர்மையின் வெளிப்பாடாக வாழ்பனுவங்கள் படைப்பாக்கம் பெறுகின்றன. அக உலக அனுபவங்களையும் வெளியுலகம் அவனுக்கு ஏற்படுத்திய பாதிப்பையும் ஒரு படைப்பாளி தனது  படைப்புகளின்   மூலம் முன்வைக்கிறான். அவ்வாறானவை வண்ணதாசனின் படைப்புகளிலும்  பரவிக் கிடப்பதை அறியலாம்.
         சாலச் சிறந்த எழுத்துப்பணியில் தலைசிறந்து விளங்கும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.  அவர்தம் பணி மென்மேலும் தொடர்ந்து சிறக்கட்டும்.  'புதிதாக எழுத வருகிறவர்கள் வண்ணதாசனைப் படிக்க வேண்டும்' என்று
மறைந்த சுஜாதா சொல்வது போல் அனைவரும் வண்ணதாசனை வாசிப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக