அவளை எனக்கு இருபதாண்டுகளாகத் தெரியும். இருபதாண்டுகளுக்கு முன் சித்தி வீட்டுக்கு போயிருந்தபோது எதிர்வீட்டில்தான் அவளது குடும்பமிருந்தது. அவள் மிகவும் அமைதியானவள். என்னிடம் தயங்கிக்கொண்டேதான் பேச வருவாள். அவளோடு எப்போதேனும் அந்த வயதில் பேசும்போதெல்லாம் எனக்கு என்னைப் பிடித்திருந்தது.
அவளை எல்லோரும் அம்மு என்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் அவளது உண்மையான பெயர் நசியா பேகம்! எனக்கும் கூட அம்மு என்று கூப்பிடத்தான் ஆசையாக இருந்தது. ஆனால் அப்படிக் கூப்பிடுவது ஏதோ கொஞ்சுந்தொனியில் இருப்பதால் அந்த விளிப்புச்சொல்லை விழுங்கிக்கொண்டேன். அவளை நான் மட்டுமே "நசியா" எனக்கூப்பிடுவதுண்டு. நான் அவளின் பெயரைச் சொல்லி கூப்பிட்டால் அவள் மென்மையாக சிரிப்பாள். அதுபோல யாராலும் மென்மையாக சிரிக்கவே முடியாது. அது இப்போதும் நெஞ்சாங்கூட்டின் நினைவில் இருக்கிறது!
நசியாவுக்கு ஒரு தமக்கையும் ஒரு தம்பியும் இருந்தார்கள். சித்தி வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம் எதிர்வீட்டு முற்றப்பரப்பில் தான் விளையாடுவோம். அப்போதெல்லாம் எனக்கு ஆண்பிள்ளைகளோடு விளையாடப் பிடிப்பதேயில்லை. உடன்பிறந்தோராக பெண்பிள்ளைகள் இல்லையென்பதால் எப்போதும் பெண்பிள்ளைகளோடு விளையாடுவதில் விருப்பம் அதிகம். அதற்காகக் கேலிப்பேச்சும் கூட கிடைப்பதுண்டு. பெண்களோடு பேசி விளையாடுவதில் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும். அவர்கள் விளையாட்டுக்குக்கூட ஏமாற்ற மாட்டார்கள். இது பொதுவானதாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் என்னிடம் அப்படித்தான் இருந்தார்கள் ; இருக்கிறார்கள்.
நான் நசியாவின் அக்காவைத் தான் எப்போதும் விளையாட அழைப்பேன். நசியாவும் என்னைப்போல ஏழாம் வகுப்பே படித்துக் கொண்டிருந்ததால் அவளை வெட்கங்கலந்த பார்வையால் கடப்பதோடு சரி. பேசாமல் பார்வையால் சொற்கள் பரிமாறுவது எத்துணை வாஞ்சையானதாக இருக்கிறது! அதெல்லாம் ரசிக்கத்தக்க உணர்வியல்.
நான், செகன், குமார், தேவி, ஆரிபா (நசியாவின் அக்கா) ஒளிந்து பிடித்து விளையாடுவோம். நசியாவுக்கு கூச்ச சுபாவம். அதுவும் என்னிடம் அவள் எப்போதுமே நாணத்தோடுதான் இருப்பதாகக் காட்டிக்கொள்வாள். அதனாலேயே கூட எனக்கு அவளைப் பிடித்திருக்கலாம். அந்த வயதில் எங்களுக்குள் இருந்ததெல்லாம் என்னவென்றே சொல்லத் தெரியாது. பால்யம் தன் நொதிகளின் தூண்டில் போடுவதாகக்கூட இருந்திருக்கலாம். அதனால் அதைப் பெரிதாக பெயரிட முயன்றதில்லை.
ஒருநாள் நாங்கள் விளையாட வந்தபோது தேவி எங்களோடு விளையாட நசியாவையும் கூப்பிட்டாள். அப்போது அவள் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, வரவில்லை என்பதாக தலையாட்டினாள்.
நாங்கள் விளையாட்டைத் தொடங்கினோம். எல்லோரும் வட்டமாக நின்றுகொண்டோம்.
ஆரிபா அக்கா யார் கண்டுபிடி ஆளுக்கான பாட்டை ஏதோ மெட்டில் சொன்னார்,
தட்ட தட்ட கம்மந்தட்ட
சோத்துக்கு சோளத்தட்ட
பட்டு வர்ற சொல்லிக்கிட்ட
ஆளு யாரு கிட்டத்தட்ட
செகன் வெளியேறினான்.
மறுபடி சொல்லத் தொடங்கினார்.
தேவி வெளியேறினாள்.
அப்படியே, குமாரும் ஆரிபா அக்காவும் வெளியேற நான் தான் கண்டுபிடியாளானேன்.
அப்துல்லா மாமா வீட்டு தட்டியைத் தொட்டு இருபது எண்கள் எண்ணிவிட்டு வரச்சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள்.
நசியா என்னைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் தெரியும்படி சிரித்தாள். அவ்வளவு அழகாக இருந்தாள். நானும் பதிலுக்குச் சிரித்துவிட்டு அப்துல்லா மாமா வீட்டுக்கு ஓடினேன்.
அப்துல்லா மாமா வீட்டு தட்டியைத் தொட்டு "ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு...," என்று எண்ணத் தொடங்க, அந்நேரம் மாமி தட்டிக்கு வந்து
"எய்யா என்ன செய்தீரு? வெளையாடுதிகளோ? வெளாடுங்க வெளாடுங்க. உங்க தனம் சித்தி வீட்ல இருக்கா மருமோனே?" என்று கேட்க,
"ஆமாத்தே! பீடி சுத்திட்டிருக்குத்தே! மாமா இருக்காவளா? காட்டுக்கு போயிருக்காவளா?"
"வீட்டுள்ளாரத்தாம்யா இருக்காவ. போய் பாருங்க மருமோனே! "
"இல்லத்தே! பட்டு வரச் சொல்லிருக்கா ஆரிபா அக்கா. போயி அவிகள கண்டுபிடிக்கணும்ல . நான் வாரேன்த்தே " என்று சொல்லிவிட்டு ஓடினேன்.
நசியா மட்டும் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். நான் வழக்கம் போல எல்லோரும் ஒளியும் இடங்களைத்தேடி அலைய, அவள் என்னைக் கேலிப்பார்வையோடு பார்க்கிறாள்.
அவள் வீட்டுத்தொழுவத்து போய், அங்கிருந்து நசியாவை ஒலிகுறைந்த குரலில் கூப்பிட்டேன். அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை. மறுபடி கூப்பிட்டேன். அப்போதும் எந்த அசைவுமில்லை. ஒருவேளை அப்படி நான் விளிப்பது அவளுக்குப் பிடித்திருக்கலாம். ஆம் ஆண்களின் அதிகாரத்தொனியைவிட மென்மையாக காற்றதிராமல் விளிப்பது விரும்பத்தக்கதாக இருக்கும்.
மறுபடி கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட அவள் திரும்பிப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.
புருவத்தை உயர்த்தி பார்த்தபடி என்னை நோக்கி எழுந்து வந்தாள். தொழுவத்தின் கூரைச்சாய்ப்பின் அருகே வந்து நின்றுகொண்டு,
"கூப்பிட்டியோ? என்ன சொல்லு? "
"அவிக எல்லாம் எங்கங்க ஒளிஞ்சிருக்காவ? "
"வெளாட்டுல ஏமாத்தக்கூடாதுல?! ஏங்கிட்ட எதுக்கு கேக்க? நீ நல்லவம்ல தேடு "
"ஏய்ய்ய் சொல்லுத்தா! நான் கேட்டா சொல்லமாட்டியா? "
"அப்படி சொல்ல மாட்டேன் கேட்டியா, அது தப்புல்லா?! நீ தேடு கண்டுபுடிச்சுடுவ, நான் சொல்லுதேன்ல "
"சரி போத்தா! உன்கிட்ட போய் கேட்டேன் பாரு "
"ஏய் எதுக்கு கோவப்படுத? அது தப்புல்ல உதய்! நீ நல்லப்பையன்ல கோச்சுக்காதயேன் "
பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்சுகிறாளா, கொஞ்சுகிறாளா என்று ஐயந்தோன்றும்படி என்முன்னே நசியா நிற்க,
நான் நிலைகொள்ளமாட்டாமல் தடுமாறியதை எப்படி சொல்வது,? தொழுவத்திலிருந்து வெளியேற அவள் ரெட்டைச்சடைகளில் ஒன்றைப் பிடித்து இழுத்துவிட்டு சிரிப்போடு
"செத்த உட்காரு நல்லவளே! வந்துடுதேன் " என்று ஓடினேன்.
அந்த உற்சாகத்தில் ஒளிந்திருந்தவர்களைத் தேடினேன்.
ஆயிசா வீட்டு மாடியில் தேவியும் செகனும் மாட்டிக்கொள்ள, மகூப் வீட்டு வைக்கோற்போருக்குப் பின் ஆரிபா அக்காவும் பழநி மாமா கடைக்கு பின்னால் குமார் மாட்டிக்கொண்டான். முதலில் நான் கண்டுபிடித்த தேவி தான் அடுத்த 'கண்டுபிடி ஆள் '.
தேவி அடுத்து பட்டுவர ஆயத்தமாக, நான் நசியாவைக் கூப்பிட்டேன் எங்களோடு சேர்ந்து விளையாட.
"நசியா! வெளாட வாறியாத்தா? "
"நானா? இல்ல வல்ல "
"ஏய்ய் வாத்தா பழநி மாமா கடைல பப்ளிக்கான் வேங்கித்தாறன் "
"நெசமாவா? அப்ப வாறன் "
'அட பப்பிள்கம் கிறுக்கச்சியே!' என மனத்திற்குள் சிரித்துக்கொண்டேன். ஆனால் அவள் எனக்காகவே வந்ததுபோலத்தான் நினைப்பிருந்தது.
தேவி அவளை முறைத்தாள். அவள் கூப்பிட்டபோது விளையாட வராதவள், நான் கூப்பிட்டதும் வந்துவிட்டதால் அவளுக்கு செல்லக்கோபம் வந்திருக்கக்கூடும். நசியா அப்போது தேவியைப் பார்த்து, அமைதியாக நின்றுகொண்டு,
"தேவிக்கா! நான் பட்டு வாறன். "
"ம்ம்ம் தெரியும்ல. அப்துல்லா சித்தப்பா வீட்டுத்தட்டிய தொட்டு இருபது எண்ணிட்டு வரணும் "
"சரிக்கா நான் போறேன். நீங்க போய் ஒளிஞ்சிக்கங்க "
நான் இடைமறித்து நசியா பட்டுவருவதைத் தடுத்தேன்.
"தேவி! அவ இப்ப தான மொதல்ல வெளாட வாறா?! மொதல்லயே பட்டு வந்தா பாவம்ல? நீயே பட்டு வாயேன். "
இப்போது தேவி என்னைப் பார்த்து முறைக்க, நான் சிரித்தேன்.
"ஏலாய் என்ன நினைச்சுட்டிருக்க நீயி? புதுசா வாறவளே பட்டுவாறேங்கா, நீயேம்லே நடுவுல நாட்டாமத்தனம் பண்ணுத?. அவ என்னடான்னா நாங்கூப்புட்டா வல்லேங்கா, நீ கூப்புட்டா வந்துடுறா,! என்ன சேட்டை பண்ணுதியலா? "
"ஏன் தேவி எனக்காக நீயே பட்டு வரமாட்டியா? உனக்கு விலங்கியல் நோட்டுல கரப்பான்பூச்சி, தவக்களைலாம் வரஞ்சு தர்றேன்ல? "
"அதெல்லாம் வுடுலே. எனக்கும் பப்ளிக்கான் வேங்கித்தா நான் பட்டுவாறன் "
"சேரி வேங்கித் தாறேன் பட்டு வாத்தா "
மெல்லுங்கோந்து (sewing gum) இங்கே கையூட்டுப்பொருள் போல தெரியலாம். ஆனால், அதை மெல்லுவதையும் அதில் ஊதி காற்றுமுட்டை விட்டு விளையாடுவதையும் அந்தப் பெண்கள் ஆர்வத்தோடும் ஆற்றாமையோடும் பார்த்திருக்கலாம்.
வீட்டில் வாங்கித் தின்ன தரப்படும் பணத்தில் மெல்லுங்கோந்து வாங்கித் தின்றால் அப்பாவும் அம்மாவும் திட்டுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்துள்ளது.
பெண்களின் எல்லா புறத்தையும் ஆணைகளால் அடைத்து வைத்துவிட்டு அதனை 'அடைகாப்பு' என்பது போல் தடுத்துவிடுவதுதானே சமூகம் காலாதிகாலமாக செய்துவரும் நடவடிக்கை!
நான் வாங்கித் தருவதாக சொன்னது மெல்லுங்கோந்து மட்டுமல்ல, அவர்களின் விருப்புரிமை! ஆதலால், அவர்களுக்கு என்னைப் பிடித்துவிடுவது இயல்பாகலாம். ஆம் நசியாவுக்கும் தேவிக்கும் உதய் என்றால் நிரம்ப பிடிக்கும்!
உதய் பள்ளிவிடுமுறைக்கு ஊருக்கு வருவானென்று கேள்விப்பட்டால் நசியாவுக்கும் தேவிக்கும் இருப்பு கொள்ளாது. சித்தி வீட்டுக்கு போவதென்றால் தாத்தாவிடம் அடம்பிடித்து திருவில்லிபுத்தூர் பால்கோவா வாங்கிக்கொண்டுதான் போவான். எல்லோருக்கும் பங்கு கொடுக்கும்படி நிறைய வாங்கச் சொல்லுவான்.
என் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு தேவியே பட்டுவர அப்துல்லா மாமா வீட்டுக்கு ஓடினாள். செகனும் குமாரும் பக்கத்து தெருவுக்குள் ஓட, ஆரிபா அக்கா சித்தி வீட்டுக்குள் ஓடினாள்.
நசியா என்னைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்க,
"என்கூட வாத்தா "
என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு என்னோடு ஓடிவரச் சொன்னேன்.
நசியாவின் சின்னஞ்சிறு உள்ளங்கையை மெல்ல அழுந்தப் பற்றிக்கொண்டு அவளை என்னோடு இழுத்துக்கொண்டு தேவி நடந்து செல்லும் திசையில் ஓடி, முன்னதாக பிரிந்த தெரு வழியே அழைத்துப் போனேன்.
"இந்தப் பக்கம் கூட்டுட்டு போற உதய்? "
"ஏங்கூட நம்பி வாத்தா! பத்தரமா கூட்டியாறன்த்தா "
"ம்ம்ம்ம்" என்ற அழுத்தம் அவள் என் கையைப் பற்றிக்கொண்டதிலும் தெரிந்தது.
அப்துல்லா மாமா வீட்டின் பின்னாலே போய் நின்றோம். தேவி அப்போது தான் வீட்டுத்தட்டியைத் தொட்டு கண்ணை மூடி எண்களை எண்ணத் தொடங்கினாள்.
நான் நசியாவைக் கூப்பிட்டு தேவிக்குத் தெரியாமல் அப்துல்லா மாமா வீட்டுக்குள் ஓடினேன். சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த பலகணி மேடையில் ஏறி ஒளிந்து நின்றுகொண்டு தேவியைப் பார்த்தோம்.
அப்போதுதான் இருபதை எண்ணிவிட்டு அவள் திரும்பினாள். நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.
அப்படியே நின்றிருந்த நாங்கள் கீழிறங்கி அந்த பலகணி அருகிலேயே உட்கார்ந்துகொண்டோம். அப்போது வீட்டுக்குள் ஏதோ உடைகிற ஒலி கேட்க,
இருவரும் எழுந்து உள்ளே எட்டிப் பார்த்தோம். வீட்டினுள்ளே அப்துல்லா மாமாவின் பெரிய மகன் நசீர் அத்தான் ஏதோ கண்ணாடி போத்தலை கையில் வைத்திருந்தான். அவன் எங்களைவிட இரண்டு வயது மூத்தவன். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.
கீழே ஒரு போத்தல் உடைந்து நொறுங்கிருந்தது. நசியா எட்டிப் பார்த்துவிட்டு என் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
"ஏய்ய்ய் சாராயப் பாட்டுலு ஒடஞ்சிப்போச்சி."
நான் எட்டிப் பார்த்தேன். அது பிராந்திப் போத்தலாக இருந்தது. அதை அவன் உரமூட்டைகளுக்குள் ஒளித்து வைத்திருந்திருக்கிறான். அம்மா வெளியே போனபின்பு, அப்பா மாடிவீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அதை எடுத்து குடிக்கலாமென எடுக்கும்போது கைதவறி விழுந்து உடைந்திருக்கிறது.
அவசரம் அவசரமாக அவற்றை அப்புறப்படுத்தும் போது நான் உள்ளே போகிறேன். என்னைப் பார்த்ததும் அவன் பதறுகிறான்.
"மாட்டிக்கிட்டீரா? இருங்க அத்தை வரோட்டும் சொல்லிடுதேன் "
அவன் பதறியபடி,
"ஏலாய் சொன்னேனு வச்சுக்க, ஒன்னைய செவுட்டிப்புடுவனன்லே! " என்று மருட்ட முயல்கிறான்.
"ஆங் செய்வீரு செய்வீரு, தோப்புக்கெணத்துல குளிச்சுட்டு ஒத்தையில வந்தப்ப லிப்ட் கேட்டேன்ல? கொடுத்தீரா? மாட்டிவுடுறேன் இரும் மச்சான் "
"ஏய்ய் வேணாலே ஆக்கங்கெட்ட கூவ. அறஞ்சுபோடுவன் போயிடு"
இவ்வாறு நாங்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க,
நசியா சொளவையும் விளக்குமாறையும் எடுத்துக்கொண்டு வந்து உடைந்து கிடந்த போத்தல் சில்லுகளைத் துப்புரவு செய்யத் தொடங்கினாள்.
"ஏத்தா நீ ஏன் இத செய்யுறவ? எழும்புத்தா "
"நசீரண்ணே! வாங்க இத கொண்டோய் கூளத்துல போட்டுட்டு வாங்கண்ணே "
அவன் அவளிடம் வாங்கிக்கொண்டு வெளியே போனான். நசியா என்னைப் பார்த்தாள்.
"அந்தச் சணல் சாக்க எடு உதய் "
"நான் மாட்டேன் போத்தா "
"என் பேச்ச கேப்பேல உதய்,? "
"ஆனா நசி அவனுக்காக? "
"எடுத்துக்கொடு "
எடுத்துக்கொடுத்தேன். வாங்கித் தண்ணீரைத் தெளித்து ஈரத்தைச் சாக்குப்பையால் துடைத்தெடுத்தாள்.
நசீர் உள்ளே வர,
"ண்ணே பயப்படாதீய! நாங்க சொல்லமாட்டம்."
" "
"ஆனா அண்ணே இதெல்லாம் வேணா வுட்ருங்கண்ணே! எங்க வாப்பாவ யாரோ குடிச்சுட்டு வண்டியோட்டிட்டு வந்துதான் ஏத்தி கொண்ணுட்டாவ "
" "
"இனிமே நீங்க குடிக்காதீய ப்ளீஸ் "
அவன் பதிலேதும் பேசாமல் அமைதியாக தலை குனிந்தபடி நின்றுகொண்டிருந்தான்.
நாங்களிருவரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். நான் அவளைப் பார்த்தேன். அதே மெல்லிய சிரிப்பு.!
"மாட்டிவிட்டா அண்ணன அடிப்பாவ. சித்தப்பா கோவத்துல படிப்ப நிப்பாட்டிடும். பாவம் ல உதய் ? "
"நீ நல்லவ தான்த்தா "
ஆம். பெண்பிள்ளைகள் சிறுபருவத்திலேயே பக்குவமடைந்து விடுகிறார்கள். எந்தச் சூழலையும் உள்வாங்கி அதை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அதை யாருக்கும் தீங்கிழைக்காதபடி சரிசெய்யவும் முனைகிறார்கள். அவர்களின் புரிதல் சொல்லிக்கொடுத்தெல்லாம் வருவதாகத் தெரியவில்லை. அஃது அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது.
அவர்களின் வாழ்வு மிக மென்மையானது. அதைப் புரிந்துகொண்டு வாழ்வதுதான் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை பயப்பது. ஆனால் இந்த அறிவிலிகளுக்கு அதெல்லாம் அகப்படுவதேயில்லை.
நசியா நல்லவள்!
தொடக்கத்தில் நசியாவைப் போல்தான் எல்லாப் பெண்பிள்ளைகளும்.
நசியாக்கள் எப்போதும் நல்லவளாகவே இருந்துவிட சமூகம்தான் சம்மதிப்பதில்லை.
(முற்றும்)

பதிலளிநீக்குபெரும்பாலும் எல்லோரிடத்திலும்
உண்மையாகப்பேசி,
உண்மையாக பழகுபவர்களுக்கு,
பயமற்ற நிம்மதியும், அமைதியும்
வாழ் நாள் பரிசாகிறது....!!!
நேர்மையும் சுதந்திரமுமே மானுட வாழ்வின் அமைதியைப் பரிசளிப்பவை.
நீக்குஅந்த நேர்மையும் கூட சுதந்திரத்தின் சுடரில் தெரிவதுதான்.
சிறுதைகள் மீதுபெரிய நாட்டமில்லாதவளைக்கூட ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது கதை... இளம் படைப்பாளி வாழ்க வளர்க... இவரால் தமிழ் செல்வம் மிக பெரும்... ஐயமில்லை!
பதிலளிநீக்குஅடைகாப்பு.....அருமையான சொல்லாடல்.தவிர கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்கள்.கதைமாந்தர்க்கு ஏற்ப சொல்வழக்கு.....நசியா நல்லவளா கூட இருக்கட்டும்.ஆனா அந்த குடிகார கதாபாத்திரம் அவள் நற்பண்புக்கு மதிப்பு கொடுக்குமா கொடுக்காதா என்பதுதான் இக்கால கட்டத்தில் கேள்விக்குறி.அருமையான கதைப்படலம்.வாழ்த்துக்கள் உதய்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉதய் யை மேகலைக்கும் நிரம்பப் பிடிக்குதாம்
பதிலளிநீக்கு