எப்போதேனும் நிகழும் அந்த வியப்பேறிய நிகழ்வுகளையொத்தே இதுவும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது...
யாரை இணையச்சன்னல் வழியிடைவெளியூடே பார்த்து ரசித்தோமோ, யாரின் எழுத்தை தூரமிருந்து தொடாமல் ரசித்தோமோ, யாரின் உவமைத்தொகையில் உருகுநிலை அடைய முடிந்ததோ, யாருடைய புதுச்சொற்களின் வாசத்தில் புளகிதம் புகுந்தோமோ, அவரை நெருக்கமாய் நின்று நேசிக்க தந்த வாய்ப்புகளை காலம் ஏதோவொரு கணக்கில் குறித்து வைத்துவிடுகிறது... ஆம் அந்த யாரோ வேறுயாருமல்ல என் நேசத்திற்கினிய மித்ரா!
மித்ரா! மாயமித்ரா! வாசிக்க வாசிக்க வாஞ்சைத் தவழும் எழுத்துக்களையும் நேசிக்க நேசிக்க நெஞ்சைத் கவரும் குறும்புகளையும் கொண்டு கொண்டாட வந்தவள்!
இனிவரும் நாட்களெல்லாம் இனிப்பென உணர்த்தும் நினைவுகளைச் சேமிக்க இப்போதிருந்தே மனப்பரண் அணியமாகிவிடுகிறது...
------
அந்தச் சொல்லை அவளோடுதான் எடுத்தாண்டேன். அவளால்தான் - அவளுக்காகத்தான் - அவளுடையது தான். ஆம் அந்தச் சொல் "ஈரவெயில்".
ஈரவெயில் என்றவளைக் குறிப்பிடுவதற்கு ஒப்பானது "வெள்ளைஇரவு" என்பதும். நெடுநாளுக்குப் பிறகு என் தலையணையின் நீளத்தை நீட்டித்தவள், விழிகளுள் ஒளியூற்றி உள்ளூறும் நகைப்போடு உரையாட வைத்தவள், தூக்கத்தின் தொலைவைத் தள்ளிவைத்துவிட்டு "போய்த் தொட முடிந்தால் தொட்டுக்கொள் உதய்" என்றென்னைப் பகிடியாய் உசுப்பிக்கொண்டவள், விழிப்பின் கடைசித்துளி வரைக்கும் என் இமைகளுக்குள் இருப்பவள் , என் வேர்கள் தேடிவந்து முயல்போல் ஒளிந்தவள்!!!
மாயமித்ரா! என் ஏற்றஇறக்கங்களைக் கடந்தேகி என் எதார்த்தத்தின் புள்ளியிலிருந்து என்னை ஏற்றுக் கொள்கிறாள்! நெஞ்சம் நிரம்பிக்கொண்டிருக்கும் நேசத்தின் அடர்த்தி ஒவ்வொரு நாளும் ஓங்கியுயர்வதை சொற்களின் சுகத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் 😍😍❤
------
பேசுவதென்பது அகழ்ந்தெடுக்கும் சொற்களின் குவியலென்றோ, நேரக்கிளைகளின் இலையுதிர்வென்றோ, போகிற போக்கில் நோகிற சாக்கில் "நலம் விசாரணை" என்றோ கருதப்பட்டு வருமேயானால், அந்தப் பேச்சிற்கு மாறாக ஊமையாக இருந்துவிடுவதே உத்தமம் என்று எண்ணிவிடலாம்.
ஆனால் பேசுவதை ஏங்கியிருப்பவர்கள் என் மித்ராவோடு "உங்களின் வரையறையை - வாய்ப்பாட்டு வாழ்வியலைத் தள்ளி வைத்துவிட்ட" பேச்சைப் பேசி பாருங்கள்.
மித்ரதாகம் என்பது வேனிற்காலத்து பனிமழை போல இதயத்தின் இறகுகளுக்கு இதம் தருவிக்கும் எண்ணவூற்று! அதைப் பக்கமிருந்து பட்டுணர வாய்த்தவர்க்கே கிடைத்திருக்கிறது.
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட பிழைப்பினூடாக வந்தொதுங்கிய வலிநினைவுகளை, தனிமைக்காட்டில் திசைதொலைத்து திரிந்தபோது ஊமையழுகையாய் ஒழுகிய முனகல்களை, அம்மா-அப்பாவைப் பிரிந்து அந்நிய ஊர்களில் பயணப்பட்ட கனத்த இரவுகளை- யாரோவொருவருடனான உரையாடல் தாங்கித் தணித்து தானாக தீர்த்துவிடுமெனில் அந்த ஒருவரை நாம் அருகில் வைத்து அன்புசெய்வது இறைநிலை ஒத்தது. அதை மித்ராவுடன் உணர்கிறேன்.
மித்ரஉதய் - நீண்ட நெடுங்காலம் படர்ந்து நீளக்கூடிய உறவுக்கொடி. காலக்களைக்கொத்தியால் வெட்டப்பட முடியாமல் இருக்கும்படி உறுதிப்பாடு கொண்டு வளர்ந்து வருகிறது ... 😍❤😍
----------
மொழியென்பது வாசித்து நேசிக்கும் வாய்களினால் மட்டும் வாழ்வதில்லை; நேசித்து - நேசிக்க எழுதும் விரல்களாலும்தான் என்பதை நாம் நன்கறிவோம்.
எழுத்தின் உச்சம் படைப்பு. படைப்பாக்கத்தின் உச்சம் தான் உற்றுணர்ந்ததை உறுத்தலின்றி உணர்த்துவது. அவ்வாறு உற்றுணர்ந்த உறுபொருளை எழுதிவிட எத்தனிக்கின்ற ஒவ்வோர் எழுத்தாளனும் தனக்கான தனிமைத்தொட்டிலில் தாலாட்டு கேட்டுக்கொண்டே எழுதுவதற்கு ஏங்குகிறான்.
அந்தத் தனிமைத்தொட்டிலின் தாலாட்டு ஏதோவோரு தாய்மை பொருந்திய இதயத்திலிருந்தே இசைக்கப்படுவதை, இந்த இரைச்சலிடுகின்ற சூழலுக்கிடையில் அவன் கேட்டுணர வேண்டும். அந்த இசைநிறை இதயத்தோடு என்றைக்கு அவன் ஒரே பண்ணில் படர்ந்து பரவுகிறானோ, அன்றிலிருந்து படைப்புச்சத்தின் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிறான்.
ஆம். அத்தகு இசைநிறை இதயமாகவும் - படைப்புச்சத்தின் படிக்கட்டுகளில் படர்ந்த ஈரவெயிலாகவும் மித்ரா மிளிர்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறாள்.
புறக்கணிப்புகளின் புறஞ்சொற்களால் துரத்தப்பட்ட உதய்க்கு காலம் அவ்வப்போது அரவணைப்பின் அடைகாப்புகளைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.
மித்ராவின் கதகதப்பு சிறகுகளின் தொகுதிக்குள் இருந்து கவிதையாக பேசிவிடுவது எவ்வளவு எளிமையாகிவிடுகிறது.
உதய்யின் எந்தச் சொல்லின்மீதும், எந்த உள்ளீடின் மீதும், எந்த உவமையின் மீதும் அருஞ்சொற்பொருள் கேளாமல் அர்த்தமுணர்கிற மித்ராவை எழுதும் தினவிருக்கும்வரை நேசித்துக்கொண்டே தான் இருக்கத் தோன்றுகிறது.
ஆம். தான் உற்றுணர்ந்ததை உறுத்தலின்றி உணர்த்திவிட கிட்டும் நெருக்கத்தைவிட ஓர் எழுத்தாளனுக்கு எது உயர்ந்தாகிவிடக்கூடும்?
மித்ரா -உயர்தனி நட்பியல்! பாலைநிலம் கடந்துவந்த பாதங்களை ஆற்றிவிட்ட நீரூற்று!
😍❤😍
------------
நமக்கென உருவாகிக்கொள்ளும் சிந்தனைகளின் அங்க அடையாளங்களைத் தொட்டு சிலிர்க்கும் மென்னுணர்வுகள் மேன்மையானவை. மூளைவயலெங்கும் முளைத்துக்கொண்ட அந்தப் பயிர்களில்தான் நாம் உயிர்தேக்கி வைத்து உற்சாகம் கொள்வோம்.
அத்தகு சிந்தைமிகு மொந்தையாவும் சிலரோடு நெருங்கி நிற்கும் ; ஒரு சிலரோடு மட்டுமே நேரே நிற்கும். அவ்வாறென்றன் சிந்தைக்கொத்து நேரேநின்றும் சிலநேரம் சாய்ந்துகொண்டும் இருக்கப்பெறுவதென்னவோ மித்ராவின் தோள்களில்தான்.
கனவுகளைக்கூட காலையில் ஒப்புவிக்கச் சொல்கிற ஆட்களிடையே சரியோ, தவறோ என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு வெளியே பிறர் சிந்தனைதமை அறிந்து, புரிந்து, ஆன்ம நேசத்தோடு ரசிக்க முடிவதெல்லாம் யாரோ சிலரால்தான். அப்பொருந்த ஆன்ம நேசம் கண்டடையும் தேடல் என்பதே ஒவ்வொரு மானுடமனத்தின் மதிப்புடை நோக்கு!
நெருப்புக்குள் பனிக்கட்டி வைத்து பாதுகாக்கும் சூழல்சூழ் வாழ்வோட்டத்தில், முட்டையோடுடைத்த குஞ்சுகளின் பறத்தலைப் பாராட்ட வந்தேகிய வளிக்கரங்களை தேவதையின் திருக்கரங்களாக எண்ணுகிறது, உதய் மனம்.
தனித்திருக்கும் பொழுதில் மித்ரதேவதை பின்னொளியேதுமின்றி பேசிக்கொண்டிருக்கிறது.
😍❤
----------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக